சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, பிப்ரவரி 09, 2013

யாதுமாகி நின்றவள்


 (போர்ட்பிளேயர் வானொலியின் மகளிர் மட்டும் நிகழ்ச்சிக்காக (05.02.13) எழுதி வழங்கியது)

ஆதியில்
பெண்ணைப் படைக்க பிரமன்
பெரு முயற்சி செய்தான்.
நட்சத்திரங்களைக் கண்களாக
சூரியனைத் திலகமாக
மின்னல் கொடியை உடலாக
ரசித்து ரசித்து ஆதிசக்தியின் அம்சமெனப்படைத்தான்
இவள்
அன்பின் நதியானவள், அழிக்கும் கடலாவாள்
உயிர் வளர்க்கும் தென்றலானவள், சீறும் புயலாவாள்
தீப ஒளியானவள், பெரு நெருப்பாவாள் – எச்சரித்து
சிறகுகள் தந்து தேவதையாய் உலவ விட்டான்.

குளிர் மலராய், உயர் மலையாய், சிறுமை கண்டு
குமுறும் எரிமலையாய், குலவும் பல்லுயிர் பெருக்கி
இங்கு யாதுமாகி நின்றாள்

உயிர்ப்பால் தரும் நீரானவள்
நம்மைச்சுமக்கும் நிலமானவள்
சுவாசம் தரும் காற்றானவள்
குடை நிழலில் காக்கும் ஆகாயப்பெருவெளியாகி
இல்லம் உள்ளம் இரண்டின் இருளகற்றும் ஒளியானவள்
பஞ்சபூதம் அவளாகி
மானுடம் வளர்க்கும் விதையாகி
தாயாகி, தாய்க்கும் தாயாகி யாதுமாகி நின்றாள்

கற்புடைப்பெண் முன்னால்
மும்மூர்த்திகளும் மதலைகள்
ஆக்கலும் பெண், அழித்தலும் பெண்ணாகி, தவறான
மோகம் வளர்த்ததால் கல்லாய்க் கிடந்ததும் பெண்
உயர்வுக்கும் பெண், தாழ்வுக்கும் பெண்ணாகி
குலம் தழைக்க, கிளை பெருக்கி யாதுமாகி நின்றாள்

மண் மலையாகி, மலை கடலாகி
கடல் நிலமாகி யுகங்கள் மாறிய பொழுதொன்றில்
அழிக்க, அழிக்கப் பெருகிய அசுரப்படைகள்
அதர்மம் பெருக்கும் ஆதிக்கவாதிகள்
அவளின் இறக்கைகளைப் பிய்த்தெறிந்து
நட்சத்திரங்களைப் பறித்துக்கொண்டார்கள்
மானுட விருட்சத்தின் ஆணிவேரானவளை
சிறையில் அடைத்து புழுங்கித் தவிக்கவிட
அக்கினிக்குஞ்சுகள் அவளை மீட்டன.
அவளின் சக்திகளை நினைவூட்டி பெண்மை வாழ்கவென கூத்தாடின
வாசல் திறந்து பொது வெளிகாட்டி
எங்கெங்கும் சக்தியென எழுச்சிக்கவி பாடின
அடுக்களை விட்டு அரங்கம் பல கண்டு
புது யுகம் காணப்புறப்பட்டாள்
புது யுகம் காணப் புறப்பட்ட அவளை
வன்கொடுமை பயம் காட்டி
வெஞ்சிறை அடைக்க சூழ்ச்சி நடந்தால்…….
அவள்
அதர்மம் அழிக்கும் அந்தமில் துர்க்கையாவாள்
கொங்கை திருகி எரிந்த கண்ணகியின் சினம்
மதுரையை எரித்தது போதும்
அவளின் தாய்மையின் அங்கத்தில் சுரக்கும் உயிர்ப்பால்
வயிறுகளை மட்டுமல்ல
வறண்ட மனங்களையும் ஈரமாக்கட்டும்
இல்லையெனில்
பெண்ணை மதிக்காத இங்கே
பெரும் பிரளயம் உருவாகும்.

செவ்வாய், ஜனவரி 15, 2013

சூழ்நிலைக் கைதிகள்



பால் நிலவின் ஒளி ஒரு ஓடையைப்போல்
பூமியை நனைத்துக்கொண்டிருக்க
நாய்கள் குரைக்கும் நடுநிசிப்பொழுதில்
தீனமாய் முனகத்தொடங்குகிறது என் ஒரு யுக மௌனம்

என் மௌனம் அலறத்துவங்கும் முன்
ஒரு அழுத்தமான இமை அசைவில் அடக்கிவைக்கிறாய்.
என் மௌனங்களை மொழிபெயர்த்தால்
வெளிப்படும் உன் அன்பின் முரண்பாடுகள்.

கண்ணுக்குத்தெரியாத கட்டுகளுடன்
நடனமாட விடுகிறாய் சுதந்திர மேடையில்.
என் இடை கோர்த்து நடமாடும் உன் கரங்களை
உதறித்துறக்க முடியா என் கௌரவம்.

கட்டுகள் தெறிக்காமல் ஆடும் கவனத்தில்
களைத்து விழும் பொழுதில்
தாங்கிப்பிடிக்கும் உன் அணைப்பு
என்னால் அவிழ்த்தெறிய முடியா அடிமைச்சங்கிலி.

பொங்கல் விழா – வானொலிக் கவியரங்கிற்காக எழுதி வழங்கியது (14.01.13)



தமிழமுதம் நேயர்களுக்கு வணக்கப்பூக்களையும்
தமிழர் திருநாள் வாழ்த்துப்பூக்களையும்
வானலைகளில் வாரி வழங்கி
வளமே சேர்க்க வரவேற்போம் தை மகளை.

ஆடியில் விதைத்து, ஆவணியில் நடவு செய்து
ஐப்பசியில் களையெடுத்து, மார்கழியில் மணிக்கதிர் களம் சேர்த்து
தெருவெங்கும் கோலமிட்டு
வீடெங்கும் நெல் பரப்பும் தை மாதம்.
உழைத்துக்களைத்து, அயர்ந்து அலுத்து,
அரை உயிர் போக்கி
வயல் நெல் வீடு வந்து, குதிர் நிரப்பி
நெஞ்சு நிமிர்த்தி, நெட்டுயிர்த்து
போன உயிர் வளர்க்கும் உழவனின் அறுவடைத் திருவிழா

புதுப்பானைக் கோலமிட்டு
பொன்மஞ்சள் கொத்தும் கட்டி
புத்தரிசி உலையிலிட்டு
தித்திக்கும் வெல்லம் கூட்டி
பசுந்தோகைச்செங்கரும்புடன்
பகலவனை வணங்கும் பெரு விழா

இன்று எம் தாயகத்தில்
பொங்கி உலையிலிட புத்தரிசி இல்லை
பசுந்தோகைச் செங்கரும்பில் இனிப்பும் இல்லை.
வாய்க்கால், வயலெல்லாம் வழிந்தோடும் நீரில்லை.
சேற்று வயலாடி நாற்று நடும் வேலை இல்லை
ஆடு, மாடு மேய்வதற்கு பசும்புல் இல்லை.

ஆடு, மாடு, கோழி வளர்த்து குடி பெருக்கும்
குடியானவன் குடி தாழ்ந்து
தரிசாய்ப்போன நிலங்களுடன் வெறுமையாய்க்கிடக்கும் கிராமங்கள்.
ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்- போற்றினோம்
திங்கள் போற்றுதும், திங்கள் போற்றுதும் – போற்றினோம்
சூலுற்ற மேகங்கள்
மழையைப்பிரசவிக்க மரங்களைப் போற்றினோமா?
மரங்களைப்போற்ற மறந்ததால்
மாரியும் பொய்த்தது.
வாரி வழங்கும் இயற்கையின் கரங்கள் முடமாய்ப்போனது.

இயற்கைக்குத்திரும்புங்கள் என
வளர்ந்த நாடுகள் பழமைக்குப்பயணிக்க
புதுமையின் மோகத்தில்
செயற்கையின் சிகரத்தில் மூச்சு முட்டி நாம்….

விளை நிலங்களை விலையாக்கி
விலையரிசி உலையிலிட்டு
கான்கிரீட் காடுகளாம் நகரங்களில்
குக்கர் பொங்கலிலும் குதூகலம் பொங்க,
முப்போகம் விளைக்கும் கிராமங்கள் செழிக்க வேண்டும்.
நந்தன வருடத்தின் இந்தப்பொங்கலை,
கறுப்புப்பொங்கலென
கண்கள் கசியும் எங்கள் உழவர் சிறக்க வேண்டும்

உழவும் தொழிலும் தமிழனின் அடையாளம்
மலைத்தலைய கடற் காவிரி, வைகை, பாலாறு
புனல் பரந்து பொன் கொழிக்கும் தமிழகம்.
கலை, ஞானம், மானம், வீரம், வாணிபம்,படைத்தொழில்,
தானம், தவம், நல்வண்மை படைத்தவர் தமிழர்.
திரைகடலோடி, திரவியம் தேடும் இடமெலாம்
தமிழுக்கு அரியணையும், தம் பண்பாட்டிற்கு
தனியிடமும் தருபவர் தமிழர்.

இயற்கையே நம் அன்னை
இயறகையே நம் ஆசான்
இயற்கையே நம் ஆண்டவன்
இயற்கையை வழிபட்டு, பசுமையை மீட்டெடுப்போம்
எதிர் வரும் பொங்கலெல்லாம் திகட்ட, திகட்டத் தித்திக்க
இறைவனை வேண்டி
நன்றி மலர்களை வாரி வழங்கி விடை பெறுகிறேன்.