சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், மார்ச் 16, 2010

தண்ணீர்,தண்ணீர்.


உலக தண்ணீர் தினம் அனுசரிப்பிற்காக இந்தப்பதிவு.

சந்தனமுல்லையின் தொடர் அழைப்பிற்கிணங்கி எழுதப்படும் பதிவு. முல்லை! அழைப்பிற்கு நன்றி!

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர்.இறைவன் அளித்த ஐம்பூதங்களும் பூமியின் உயிர்கள் இன்புற்று வாழவே.இந்த ஐம்பூதங்களில் ஒன்று தனது பவித்திரத்தை இழந்தாலும் அதன் விளைவுகளை பூமியின் உயிர்கள் அனுபவித்தே தீரவேண்டும்.எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுவோம் என்கிறது கீதை.ஆனால் இந்த ஐம்பூதங்களைப் பாழ்படுத்தும் விஷயத்தில் மட்டும்,கொடுப்பவரும்,சாட்சிகளும்,பார்வையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.ஆனால் அது பற்றி சிந்தனையின்றி ஓடிக்கொண்டிருக்கும் நாம்.பணமும் செல்வமும் ஒரே குறியாக யாரோ செலுத்தும் இயந்திரங்களாய் நாம்.சில நகை சேர்க்கும் பெண்கள்,சிக்கனத்தின் பேரால் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தமாட்டார்கள்.அந்த நகைகளை அணிய உடல் வேண்டுமே என்று யோசிப்பதில்லை.அப்படித்தான் இருக்கிறது ஐம்பூதங்களை சேதப்படுத்துவதும்.ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.வளியும்,வெளியும் சேதமுற்றால் நிலமும்,நீரும் திரியும் என்பது இயற்கையின் விதி,நாம் அனைவரும் அறிந்ததே!

எங்கள் ஊர்களில் வீட்டுக்கு வீடு கிணறு உண்டு.அதோடு குடிதண்ணீர் குழாய் இணைப்பு உண்டு.அதனால் தண்ணீர் பஞ்சமில்லை.ஆனால் சென்னையில்? முன்னாட்களில் சென்னையில் கிண்டி அம்பாள் நகர்,காந்தி நகர் பகுதியில் "மெட் ரோ தண்ணீர்" இணைப்பு இல்லை.அந்தந்த பகுதி இளைஞர்கள் காசு வசூலித்து பெரிய கொள்கலன் களை நிறுவி,அதில் தண்ணீர் நிரப்பி,பின் குடத்தை எண்ணி, எண்ணித் தண்ணீர் தருவார்கள்.இது குடிக்க லாயக்கற்றது.பிறகு குடி தண்ணீருக்கு வெகு தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வேண்டும்.குளிப்பது,கழிப்பறை உபயோகத்திற்கு,பாத்திரம் துலக்க,துணி துவைக்க,குடிக்க அளந்து,அளந்து....அப்பாடி சென்னை வாழ்க்கை நகர்ப்புற வளர்ப்பில் வந்தவர்களால் தான் முடியும்.நம்மால் முடியாது.அதன் பிறகு கப்பல் விட்டிறங்கி நேரே சொந்த ஊர்,பிறகு வரும்போது இரண்டு நாள் தங்குவதுண்டு,அதுவும் மனதில் சீ இது ஒரு ஊரா? என நொந்த படி.சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு பெருகும் மக்கள் தொகை ஒரு காரணம்.மேட்டுக்குடி மக்களின் பொறுப்பின்மை ஒரு காரணம்.சாதரண மக்களின் அலட்சியம் ஒரு காரணம்.கோடி கொடுத்தாலும் சென்னை வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம்.பழங்கஞ்சியும்,கந்தலாடையும் கிடைத்தால் போதும்.எந்த மன உளைச்சலும்,தாழ்வுமனப்பான்மையுமின்றி சந்தோசமாக வாழத்தயார்.

அந்தமானில் பெரும்பாலும் தண்ணீர் பஞ்சமில்லை.அந்தமான் நிகோபார்த்தீவுகள் தென் மேற்குப்பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை என இரண்டு பருவ மழையில் நனையும் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை. மே மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும்,நவம்பர் முதல் ஜனவரி வரை வடகிழக்குப்பருவமழையும் பொழியும்.வருடத்தில் சராசரியாக 3000 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும்.இந்தத் தீவுகளின் மொத்த நிலப்பரப்பான 8249 சதுரக்கிலோ மீட்டரில் 92% நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள்.இங்கு தீவுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய ஒரே ஒரு அணை (Dhanikkaari Dam) மட்டும் உள்ளது. இங்கு அடித்துப்பெய்யும் மழையில் ஒருசில நாட்களில் அணை நிறைந்து மீதமுள்ள தண்ணீர் கடலுக்குத்தான் போகும்.அதோடு இந்த அணை கட்டிய நாள் முதல் இன்றளவும் தூர் வாராமல் இருப்பதால் கொள்ளளவு குறைந்து,மக்கள் தொகை அதிகமாக பிரச்சினைகள் ஆரம்பம்.கோடை விடுமுறைக்கு தீவின் பெரும்பாலான மக்கள் முக்கிய பூமி செல்வதுண்டு.அப்போது தீவின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும்.கோடையில் தண்ணீர் பஞ்சத்தால்,  பள்ளிகளின் விடுமுறையை நீட்டிப்பதும் உண்டு இரண்டாவது பருவ மழை பொய்த்தால் தீவுகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.கிணறுகள் உண்டு என்றாலும் வாசலை விட்டிறங்காத மக்களின் நிலை? ஆனால் நகராட்சி தண்ணீர் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து தெருத்தெருவாக வினியோகம் செய்வார்கள்.

இந்த ஆண்டு இரண்டாவது பருவமழை பொய்க்க, வந்தேவிட்டது தண்ணீர் பஞ்சம்.வாரத்தில் இரண்டு முறை தான் இனி குழாய்த் தண்ணீர் கிடைக்கும்.அதற்கும் ஒரு வழியுண்டு.நாங்கள் குடியிருக்குமிடம் பெரியமனிதர்கள் இருக்கும் பகுதி.ஆகவே நகராட்சிப்பணியாளர்கள் மணிக்கணக்கில் தண்ணீர் திறந்து விடுவர். அண்டா,குண்டா,ட்ரம் இப்படித் தண்ணீரைப்பிடித்து நிரப்பி வைத்துகொள்வோம்.அப்படித்தான் 2004ம் ஆண்டில் சுனாமியின் போது ஒரு வாரம் தண்ணீர் வராத போது சமாளித்தோம்.அதோடு வாசலில் கிணறு இருக்கிறது.எட்டி முகர்க்கும் படி.அந்தவகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரிய மாசு என்று சொல்லும்படி ஒன்றுமில்லை என்றாலும் மழைக்காலத்தில் வைரஸ் நோய்கள் தண்ணீரால் வருவதுண்டு.தண்ணீரை அதன் அருமை புரியாது குடி நீரைக் கழிவு நீர்க்கால்வாயில் விடும் மக்கள் இங்கு தான் காணக்கிடைப்பார்கள்.சுற்றிலும் கடல்.ஆனால் அந்த நீர் ஒன்றுக்கும் உதவாமல் போனாலும் கவலைப்படுமளவு தீவு நிர்வாகம் விடுவதில்லை என்பதே மக்களின் அலட்சியத்திற்கு காரணம்.

அந்தமான் பொதுப்பணித்துறை வீடுகளின் கழிவு நீர் கால்வாய்களை இணைத்து கடலில் விடுவதால் சாலைகளில்,தெருக்களில்,சந்துகளில் சாக்கடை நீரையோ,மழை நீர் தேங்கியோ பார்க்கமுடியாது.கொஞ்சம் முயன்றால் தீவை சொர்க்கமாக,சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.நகராட்சி பணியாளர்கள் தெருக்களை சுத்தம் செய்து நகர,அடுத்த நிமிடம் குழந்தைகள்,பெண்களின் உபயோகித்த நாப்கின் கள்,கழிவுகள்,குப்பைகளை தங்கள் வீடுகளில் இருந்து வீசி எறிந்து அது கழிவு நீர்க்கால்வாயில் கலந்து கடலுக்குப்போகும்.சமயங்களில் அடைத்து சாலைகளில் நீர் பெருகும்.குப்பையை பொறுப்பற்றுப் போடும் பொதுமக்கள் தண்டிக்கப்பட்டால் சுத்தமாக பராமரிக்க இயலும்.நண்பர்கள் அனைவரும் எழுதி உள்ள அளவு உணர்ச்சி பொங்க எழுத முடியாமைக்கு இங்குள்ள நிலவரம் காரணம்.டில்லி தேசியத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தில் தண்ணீரைத் தெளித்து பாத்திரம் துடைப்பது,குளிப்பது,தண்ணீரை பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒளித்து வைப்பது பார்த்து இப்படியும் வருமா என்று யோசித்து அடுத்த கணமே அலட்சியமாய் கடந்து போவதுண்டு.கங்கையின் நிலவரம் தொலைக்காட்சியில் பார்த்து காசி போகும் ஆசையே வெறுத்தது.

தண்ணீர் நமது ஜீவாதாரம்.காடுகள் நமது வாழ்வாதாரம். தேடல் வாழ்வில் அவசியம் தான்.ஆனால் தேடல் மனிதனின் தேவைகளைப் பெருக்குகிறது.தேடித்தேடி அழிவை அழைத்து வருகிறோம்.மரண பயமும்,நோயும் மனிதனை பயமுறுத்தும் அளவு வேறெந்த உயிரினத்தையும் பயமுறுத்துவதில்லை.பூமியை அழிப்பதில் முழுமையான பங்கு வகிப்பவனும் மனிதனே.அந்தமானில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து வைத்த ஒரு நற்செயலை ஆசிரியர்கள் தொடர்கிறார்கள்.அது என்ன தெரியுமா? வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்ந்தவர்களிடம் சொல்லித் தோற்றவர்கள் பிஞ்சுகளிடம் ஒவ்வொரு வருடமும் ஒரு மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி,யார் நன்றாக வளர்க்கிறார்களோ அவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கின்றனர். அவர்களின் ஊக்கத்தைச்சொல்ல வேண்டுமா? அதோடு இங்கு மரம் வேண்டிய இடங்களில் வளர்ப்பதையும்,வேண்டாத இடங்களில் இருந்து நீக்குவதையும் பொதுப்பணித்துறை சிறப்பாகச்செய்கிறது.காடுகளை வனத்துறை பாதுகாக்கிறது.இந்தியாவில் தேசியமாகிப்போன லஞ்சலாவண்யங்களால் நடக்கும் முறைகேடுகளில் பெரிய மனிதர்,அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு கதவுகளாக,ஜன்னல்களாக,மரச்சாமான் களாக அந்தமான் தனது காட்டுவளத்தைத் தாரை வார்த்துக் கொண்டுதானிருக்கிறது.நடக்கட்டும்.நாங்கள் சாமான்யர்கள்.வேறென்ன செய்யப்போகிறோம்? பார்வையாளர்களாயும்,ஊமை சாட்சிகளாயும்இருப்பதைவிட்டு !.

வெள்ளி, மார்ச் 12, 2010

விளிப்பு


விளித்தல் என்பது அன்றாட வாழ்க்கையில், அவசர உலகில், மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்,சொல்லாடல் என்றாலும் கூட நாட்கள் கடந்தும் அந்த விளிப்பில் பிரதிபலித்த உணர்வுகளை மீட்டெடுக்கும் போது மனதை ஏதோ செய்யுமே அதை உணர்ந்ததுண்டா? (ஆமா! பதிவுக்கு தலைப்பு கிடைக்கலியா இன்னிக்கு?) ஒவ்வொரு மணித்துளியிலும் எங்கோ யாரோ யாரையோ, எதற்காகவோ விளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

.ஒரு தாய் தன் குழந்தையை செல்லப்பெயரில் அழைக்கும் விளிப்பிலிருந்து,ஒரு கணவன் தன் மனைவியின் பெயரை பாதி சுருக்கி பிரத்யேகமாக அழைக்கும் விளிப்பு,தன் கணவனை மனைவி அழைக்கும் விளிப்பு,உறவுகளின் விளிப்பு,முதலாளி தனது வேலைக்காரர்களை அழைக்கும்விளிப்பு,முகமறியாதவரை,நண்பர்களை,உறவுகளை,பேருந்திற்கோ,திரையரங்கிலோ காத்திருக்கும் போதோ,பேருந்து வழித்தடங்களில் நிறுத்தப்படும் தரிப்பிடங்களில் யாரோ யாரையோ விளிக்கும் போதோ, அந்த விளிப்பில் இருக்கும் அன்பு,அதிகாரம்,இறைஞ்சல்,குழைவு,அதட்டல்,அவசரம் போன்ற உணர்வுகளை நீங்கள் உணர்ந்ததோ அன்றி உங்களை வீடு வந்ததும் இம்சித்ததோ உண்டா?

பொதுவாக பெண்கள் கணவரை "என்னங்க" என்றழைப்பதை சௌகர்யமாகக் கருதுவார்கள்.ஒரு கேள்வி வார்த்தை எப்படி நம் பெண்களின் வாயில் மென்மையாய்,குழைவாய்,அதட்டலாய்,அவசரமாய்,பதட்டமாய் விதவிதமான நவரசங்களில் ஒலிக்கும் போது வியப்பாய் இருக்கும்.எப்படி இந்த வார்த்தை விளிப்பு வார்த்தையாய் ஆகியிருக்கும் என்று நான் பல நேரம் யோசிப்பதுண்டு.(ரொம்ப அவசியம்!).என் அம்மா,நான்,என் தங்கைகள் மற்றும் எங்கள் உறவினரெல்லாம் இப்படித்தான் அழைப்பது அருகில் இருக்கும் போது.கொஞ்சம் தொலைவில் இருந்தால் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அவர்களின் அப்பா என்று அழைப்பது வழக்கம்.என் அப்பாவை என் அம்மா நான் மூத்த குழந்தை என்பதால் "சாந்தி அப்பா" என்றழைக்க எனக்கு பெருமை பிடிபடாது.என் தங்கைகளோ ஆமா அவளுக்கு மட்டுந்தான் அப்பா எங்களையெல்லாம் தெருவில் கிடந்தா தூக்கி வந்தீர்கள் என்று முறைப்பார்கள்.அம்மாவின் பழக்கம் என்னையும் தொற்ற என் கணவரை என் மகளின் பெயரோடு அப்பா என்று சொல்லி அழைக்க அருகில் இருக்கும் மலையாளத்தோழி சண்டைக்கு வந்துவிட்டார்."எனக்குத்தெரிந்தவரை தமிழ்ப்பெண்கள் கணவரை அத்தான்,மாமா என்றழைக்கிறார்கள்.நீ தான் இப்படிக்கூப்பிடுகிறாய் அண்ணனை,இனிமேல் அண்ணனை அத்தான் என்றோ,மாமா என்றோதான் கூப்பிட வேண்டும்" என்று ஆணையிட என் கணவர் நெளிய ரசனையாய் இருந்தது.

மலையாளப்பெண்கள் கணவரை "சேட்டன்" என்கிறார்கள்.தெலுங்குப்பெண்கள் "பாவா" என்றும், வங்காளி மற்றும் இந்திப்பெண்கள் "சுனொஜி" என்பார்கள்.இந்த சுனொஜி என்பது கேளுங்க என்ற அர்த்தத்தில் வரும். கிட்டத்தட்ட நம்மூர் "என்னங்க" தான்.இப்போதெல்லாம் நம் பெண்கள் பெயர் சொல்லி,பெயரோடு 'டா' போட்டு அழைப்பது வழக்கமாகி விட்டது.இது அவர்களின் அந்தரங்கம்.(அப்புறம் நம்மளுக்கும் படுக்கையறையில காமிரா வச்சவுங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஹி,ஹி).

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களின் பக்கத்துக்கடை மாமா தன் சிப்பந்தியைக் கோபமாக "சைத்தானுக்குக் கொள்ளி வச்சவனே" என்றழைப்பார்.அர்த்தம் புரியாமல் இது என்ன புதுப்பெயர் என்று கேட்க அவரோ உன் அப்பாவிடம் கேள் மருமகளே என என் அப்பாவும் 'ம்ச்' என்று ஒரு வார்த்தையில் மறுதலிக்க என் அம்மாவிடம் அரித்ததில் என் அம்மா கூறினார்.எனக்குத் தெரிந்தவர் தன் மனைவியை "அடியே" என்றழைப்பார்.கோபம்,அன்பு,அதட்டல் அத்தனையும் நேரத்திற்கேற்றபடி அந்த "அடியே" ஒலிக்கும்.எழுத்தாளர் திருமதி.ரமணிச்சந்திரன் கதைகளில் கணவன் மனைவியை வித்தியாசமாக அழைப்பதை,அதை அவள் அனுபவித்து சிலிர்ப்பதை ஒரு அத்தியாயமாக்கியிருப்பார்.

நாம் நம் குழந்தைகளை மகளே என்றோ மகனே என்றோ அழைக்கிறோமா? பெரும்பாலும் மகளைப் பெயர்சொல்லி அல்லது செல்லப்பெயரில்.மகனை பெரும்பாலும் தம்பி என்கிறோம்.தம்பி என்பதும் ஒரு உறவு முறை.உடன் பிறந்த இளையவனைக் கூறும் உறவு முறையில் பெற்ற பிள்ளையை அழைப்பதை நாம் உணர்கிறோமா? பெரும்பாலும் மற்ற மாநில மக்கள் அவரவர் மொழியில் மகனே,மகளே என்றழைப்பதுடன் அடுத்தவர் குழந்தைகளையும் அப்படியே அழைக்கிறார்கள்.

எங்காவது,யாராவது தன் குழந்தையை,மனைவியை,நட்பை,சிப்பந்தியை அழைக்கும் போது நமது நினைவுகளைக் கிளறிவிட்டு அதில் மூழ்கி விடுவதும்,தற்போது என்னருகில் இல்லாதவர்களின் அன்பான விளிப்புகள் மனதில் தோன்றும் போது கண்ணீரும்,அதட்டலான,வசைபாடிய விளிப்புகள் கோபத்தையும் வரவழைக்கும்.ஆனால் பொது இடங்களில் பிச்சைக்குக் கை நீட்டும் முதியோர்,குழந்தைகள்,குழந்தையோடு ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் தீனமான விளிப்பும்,பாவமாய் தயங்கித்தயங்கி அடிக்குரலில்,தன் உடலைக்குறுக்கி உதவி கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர் குரலும் மட்டும் மனதை என்னவோ செய்யும்.தூக்கம் பிடிக்காது மனம் அரற்றும்.தூக்கத்தில் கனவில் கூட தீனமாய் ஒலிக்கும்.இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? வலியோர் மெலியோரை தரக்குறைவாய் அழைக்கும் வார்த்தைகள் மனதில் வலியேற்படுத்தும்.

 ஆமாம் நண்பர்களே! உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை எப்படி அழைப்பார்?நீங்கள் அவரை எப்படி அழைப்பீர்கள் சொல்லுங்களேன்.

புதன், மார்ச் 10, 2010

வாசல் திண்ணையில்.....

அவள்
வெடித்துப் பிளந்த வாசல் திண்ணையில்
கிழிந்த சேலையில் முடங்கிக்கிடக்க
சூரியனின் கதிர்களும்
மழையின் சாரல்களும்
காற்றின் கரங்களும்
கடும்புயல் சீற்றங்களும் மாற்றி மாற்றி
நலம் விசாரிக்கும்.

வாசல் தாண்டி உள் நுழைய
வரம் தரவில்லை வீட்டுச்சாமிகள்.
"கம்பு சுழற்றி,கடப்பாறை கையேந்தி
முதுகுச்சட்டைக்குள் மூன்றடி அரிவாள்
இடுப்பு சுற்றி இரும்புப்பொத்தான் வார் பார்த்து
எதிர் நிற்கும் பகை கூட விதிர்த்து விலகும்"
அவள் பெற்ற வீரமகன்
அன்னைக்கு அமுதிட மனைவியிடம் வரம் கேட்கிறான்.

ஒரு காலத்தில்
அந்த வீட்டுமனை வாங்க
தண்டட்டி,தாவாடம்,பொட்டு,அட்டிகை
பொட்டி நகை அத்தனையும் புன்னகையோடு தந்தவள்.
அடித்தளம் போட அப்பனிடம் கடன் வாங்கி
மேல்தளம் போட அண்ணணிடம் கடன் வாங்கி
சுவர்,தரை எல்லாம் தொட்டுத்தடவி
சொந்த வீட்டு சுகத்தில் இருந்தவளுக்கு
வயது முதிர்ந்ததும் வாசல் திண்ணையில்....

கைவளை திருகிவிட்டு
கனத்த நகை குலுங்க
காஞ்சிப்பட்டு சரசரக்க
மஞ்சள் மினுங்க தெருவிறங்கி நடந்தால்
ஸ்ரீதேவி என்ற மக்கள் எத்தனை?
காப்புத் திருகிவிட்டு
கண்களில் மையெழுதி
பொட்டு மினுங்க
பொன்னகையும் மின்ன வீதியில் நடந்தால்
கும்பிட்டுக்குழைந்த மக்கள் எத்தனை?

வாழ்ந்தவள் கெட்டு
வரையோடாய்க்கிடக்கும் இந்த நேரத்திலும்
அவளின் பஞ்சடைந்த விழிகளில் பளபளக்கிறது
மலரும் நினைவுகள்.
எங்காவது திண்ணைகளில் அவளைப்பார்த்தால்
"அந்தக்காலத்தில் நாங்கள்" என்று ஆரம்பிக்கும்
அவளின் மலரும் நினைவுகளுக்கு
பொறுமையாய் செவி கொடுங்கள் தயவு செய்து.
போதும் அவளுக்கு!

திங்கள், மார்ச் 08, 2010

பெண்ணே! நீ வாழி!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்கள் இறைந்து கிடக்க
சாத்தானின் ஆணையின்றி
தின்றுழலும் ஆதாமுக்கும்,ஏவாளுக்கும்
யுகயுகமாய் பிறந்து கொண்டிருக்கிறாள் பெண்
அசோகவனச்சீதையாய்,
பாவை பாடிய ஆண்டாளாய்
சிலம்புடைத்த கண்ணகியாய்
மணிமேகலை சுமந்த மாதவியாய்

இறைவனின் கை களிமண்ணில்
வெவ்வேறான விகிதங்களில்,கலவைகளில்...
அவநம்பிக்கை அழித்து
நம்பிக்கை தரும் தேவதையாய்,சாந்தரூபியாய்,
கொற்றவையாய்,காளியாய்...
அன்பின் விகிதங்களில்
அடக்குமுறை அளவுகளில் மாறுபடும் அவதாரங்கள்.

சில நேரங்களில்,
கடைவாயின் கோரப்பற்களும் கொம்பும் மறைத்து
மூக்கறுபட்ட சூர்ப்பனகையாய்
விஸ்வாமித்திரர் தவம் கலைத்த மேனகையாய்
அழிக்கும் அசுர சக்தியாய்...

எண்ணங்களின் விளிம்பில்
தளும்பி வழியும் சோகங்கள்
ஆயுதமாயும்,ஆயுதமாக்கப்பட்டும்
அலைக்கழிக்கப்படும் அவளின் அகக்குமுறல்கள்
அலட்சியப்படுத்தப்படும் அவளின் விருப்பு,வெறுப்புகள்
அத்தனையும் கடந்து நடக்கிறாள் நதியாய்
அவள் நடக்கும் வழியெங்கும் நட்புடன் சிரிக்கிறது பூக்கள்
புனைவுகள் தாண்டி
புராண,இதிகாச மேற்கோள்கள் கடந்து
வைகரை வானவில்லாய்
வண்ணங்களோடு அவள்.

அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
அரதப்பழைய ஆடைகள் களைந்து
புதுமை ஆபரணம் புனைந்து கொண்டாள்.
இனி அவள்....
பாவை பாடுவாள்,சிலம்புகள் அணிவாள்
அசோகவனங்களை அடிமை கொள்வாள்.
வானத்தைக்கடந்து எல்லைகள் அழிப்பாள்.
அச்சம் தவிர்த்து,ரௌத்திரம் பழகி
அன்பின் ஈரத்தில்
புதியதோர் உலகம் செய்வாள்.

திங்கள், மார்ச் 01, 2010

அந்தமானில் சத்துணவுத்திட்டம்


பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்கள்,அதனை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர் மக்கள் திலகம் அவர்கள், இன்று அதை வழிமொழிகிறார் கலைஞர் அவர்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம்.சத்துணவுத் திட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னோடியா என்பது தெரியாது.பள்ளிக்குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியோடு நிறுத்துவதைத் தடுப்பதற்கு மதிய உணவுத்திட்டம் ஒரு தீர்வு தான்.அந்தமான் நிகோபார் தீவுகளில் கல்வியறிவு பெற்றோர் கிட்டத்தட்ட 94% ஆகும்.இங்கு "அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி (Sarva Shiksha Abhiyan)" முழுவீச்சில் செயல் படுகிறது.ஆறு வயது முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்துக்குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி வசதி,இலவச சீருடை,இலவசப்புத்தகம்,இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.இங்குள்ள 36 தீவுகளில் கிட்டத்தட்ட 396 பள்ளிகள் இயங்குகின்றன.

மூன்று முதல் ஆறு வயதுள்ள பாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2/ மதிப்புள்ள தின்பண்டம் வழங்கப்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை,புத்தங்களோடு இலவச மதிய உணவும் வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டைப்போல மாணவர்களுக்கான மதிய உணவை பள்ளி வளாகத்தில் தயாரிப்பதில்லை.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தலா ரூ.5.58 வீதமும்,ஒரு குழந்தைக்கு ஒரு நாளுக்கு 100 கிராம் வீதம் அரிசியும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தலா ரூ.6.10 வீதமும்,150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில் தீவுகளின் கல்வித்துறையால் ஒப்பந்த ஏலம் விடப்படும். மகளீர் கூட்டுறவு அமைப்புகள், வேலை வாய்ப்பற்றோர், சுயதொழில் கூட்டுறவு அமைப்புகள்,சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் மட்டுமே இந்த ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ரூ.5000/க்கான வரைவோலை (Bank EMD), உணவு விநியோக உத்தரவு ( Food Licence),ஒப்பந்ததாரர் மதிய உணவை சமைப்பதற்கு தனியான சமையற்கூடம் வைத்திருப்பார் அதற்கான சுத்தமான சுற்றுப்புறத்திற்கான சுகாதாரத்துறையின் சான்றிதழ் (Sanitation Certificate) பணிபுரியும் பணியாளர்களுக்கான மருத்துவச்சான்றிதழ் (Medical Certificate) ஆகியனவற்றை ஒப்பந்தப்படிவத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.காய்கறி,பருப்பு யார் அதிக அளவு குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ஒரு வருட ஒப்பந்தம்.ஒப்பந்ததாரருக்கு பள்ளி நிர்வாகம் உணவு இனங்களின் பட்டியல் ஒன்றை (மெனு) தந்துவிடுவார்கள்.வாரம் முழுதும் அதன் படி விநியோகம் செய்யவேண்டும்.ஒரு நாள் 4 இட்லி,1 வடை,சட்னி,சாம்பார்-ஒரு நாள் சோறு,சாம்பார் + வெஞ்சனம் - ஒரு நாள் சோறு,பருப்பு + வெஞ்சனம் - ஒருநாள் கிச்சடி,அப்பளம்,ஊறுகாய் - ஒருநாள் புலவு சாதம்,காய்கறி சாலட்,பட்டாணி,கிழங்கு குருமா இப்படித் தருவதுண்டு.முன்னர் முட்டை வாரம் ஒரு நாள் கொடுக்கச்சொல்லி உத்தரவு இருந்தது.ஆனால் முக்கியபூமியிலிருந்து வரும் முட்டை சமயங்களில் கெட்டுப் போயிருக்க வாய்ப்புண்டு,அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் முட்டை வழ்ங்கும் திட்டம் கைவிடப்பட்டது.இவற்றைக் கண்காணிக்க பள்ளி அளவில் ஒரு ஆசிரியர் குழுவும்,பெற்றோர் குழுவும் உண்டு.அடிக்கடி கல்வித்துறையின் உணவு விநியோகத்திற்கென சிறப்புப் பணியாளர்கள் திடீர் சோதனைகளில் ஈடுபடுவதும் உண்டு.

மதிய உணவுத்திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் விடுவதால் பள்ளி நிர்வாகத்திற்கு சமையலறை,பணியாளர் தொந்தரவற்றுப்போவதுடன் மாணவர்களுக்கும் விதவிதமான உணவு வகைகள் கிடைக்கிறது.இன்று தீவில் மிகுந்த போட்டி நிலவும் தொழில் இது தான்.நாங்களும் கூட இதில் தான் ஈடுபட்டுள்ளோம்.இதனால் தீவில் வேலை வாய்ப்பற்றோருக்கு வேலையும்,தீவுநிர்வாகத்திற்கு ஒரு துறையை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டிய வேலையும் மிச்சம். என்ன கேட்குறீங்க? லஞ்சம் இல்லையான்னா? கடவுள் இல்லாத இடத்துல கூட அது இருக்குதுங்களே! யாரு வாங்குறாங்களா? உயர்ந்த ஆசிரியப்பணி செய்யும் ஆசிரியர்கள். போட்டுக்குடுத்துறாதீங்க பாஸ்!