சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், மார்ச் 08, 2010

பெண்ணே! நீ வாழி!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்கள் இறைந்து கிடக்க
சாத்தானின் ஆணையின்றி
தின்றுழலும் ஆதாமுக்கும்,ஏவாளுக்கும்
யுகயுகமாய் பிறந்து கொண்டிருக்கிறாள் பெண்
அசோகவனச்சீதையாய்,
பாவை பாடிய ஆண்டாளாய்
சிலம்புடைத்த கண்ணகியாய்
மணிமேகலை சுமந்த மாதவியாய்

இறைவனின் கை களிமண்ணில்
வெவ்வேறான விகிதங்களில்,கலவைகளில்...
அவநம்பிக்கை அழித்து
நம்பிக்கை தரும் தேவதையாய்,சாந்தரூபியாய்,
கொற்றவையாய்,காளியாய்...
அன்பின் விகிதங்களில்
அடக்குமுறை அளவுகளில் மாறுபடும் அவதாரங்கள்.

சில நேரங்களில்,
கடைவாயின் கோரப்பற்களும் கொம்பும் மறைத்து
மூக்கறுபட்ட சூர்ப்பனகையாய்
விஸ்வாமித்திரர் தவம் கலைத்த மேனகையாய்
அழிக்கும் அசுர சக்தியாய்...

எண்ணங்களின் விளிம்பில்
தளும்பி வழியும் சோகங்கள்
ஆயுதமாயும்,ஆயுதமாக்கப்பட்டும்
அலைக்கழிக்கப்படும் அவளின் அகக்குமுறல்கள்
அலட்சியப்படுத்தப்படும் அவளின் விருப்பு,வெறுப்புகள்
அத்தனையும் கடந்து நடக்கிறாள் நதியாய்
அவள் நடக்கும் வழியெங்கும் நட்புடன் சிரிக்கிறது பூக்கள்
புனைவுகள் தாண்டி
புராண,இதிகாச மேற்கோள்கள் கடந்து
வைகரை வானவில்லாய்
வண்ணங்களோடு அவள்.

அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
அரதப்பழைய ஆடைகள் களைந்து
புதுமை ஆபரணம் புனைந்து கொண்டாள்.
இனி அவள்....
பாவை பாடுவாள்,சிலம்புகள் அணிவாள்
அசோகவனங்களை அடிமை கொள்வாள்.
வானத்தைக்கடந்து எல்லைகள் அழிப்பாள்.
அச்சம் தவிர்த்து,ரௌத்திரம் பழகி
அன்பின் ஈரத்தில்
புதியதோர் உலகம் செய்வாள்.

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

vaasithom makilnthom

Thenammai Lakshmanan சொன்னது…

உங்கள் அன்பின் ஈரம் எங்கள் மீதும் சாந்தி நன்றி

வாழ்த்துக்கள் யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த இடுகைக்கு

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

மகளீர் தின நல் வாழ்த்துக்கள்

vidivelli சொன்னது…

very nice...........

please you may come my blogspot...
i am expect..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கவிதை யதார்த்தமாக உள்ளது,

மகளிர் தின வாழ்த்துகள்.

virutcham சொன்னது…

அரதப்பழைய ஆடைகள் 'கலைந்து'

களைந்து என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

விருட்சம்

ஜோதிஜி சொன்னது…

இதற்கு முன் கவிதை எழுதி இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் எந்த குறையும் காணாத அளவிற்கு மிகவும் பிடித்து இருந்தது.