சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜூன் 29, 2012

சித்திரை விழா.
தமிழ் கூர் நல்லுலகிற்கு எமது இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

தை முதல் நாள் தான் வருடப்பிறப்பு என்ற முந்தைய தமிழக அரசின் அறிவிப்பு இருந்த போது அந்தமான் தமிழர் சங்கம் சித்திரை விழாக் கொண்டாடவில்லை. இன்றைய தமிழக அரசு சித்திரை முதல் நாள் தான் தமிழ் வருடப்பிறப்பு என்று அறிவித்ததும் தாய்த்தமிழகத்தோடு ஒன்றிணைந்து செல்லும் நோக்குடன் சித்திரை விழாக் கொண்டாடி மகிழ்கிறது. சித்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு சித்திரைக் கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை அரங்கேற உள்ளது. சித்திரைக்கவியரங்கிற்கு எனது கவிதை.

சங்கம் வளர்த்த தங்கத்தமிழ்த் தாயின்
தாமரைத்தாளினுக்கு என் முதல் வணக்கம்.
வங்கக்கடலலைகள் வாழ்த்துகின்ற
வண்ணத் தீவு வாழ் வளமார்ந்த தமிழருக்கும்,
தணடமிழ்க்கவியரங்கின் நவையற்ற தலைவருக்கும்
சித்திரைக்கவியரங்கின் முத்திரைக்கவிகளுக்கும்
சிரம் தாழ்ந்த பணிவன்பான வணக்கங்கள்.

எம் தமிழ் மக்கள் அனைவர்க்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் கோடி.
நந்தன ஆண்டு, நலமெலாம் தரவேண்டும்.
வந்தனம் கூறி வாழ்த்துப்பா பாடுவோம்.
பொங்கும் வளமும் பொலிவெலாம் தரவேண்டி
புத்தாண்டு நன்னாளில் இறையை வேண்டுவோம்.

நனவு கொஞ்சம் கனவு கொஞ்சமாய்
நகரும் இந்த இயந்திர வாழ்க்கையில்
இனிமை கூட்டுவதும் – நம்
தனிமை போக்குவதும் இத்திரு நாட்களே.
ஆவணியோ, தையோ அடுத்து வரும் சித்திரையோ
எதுவாகிலும் இருக்கட்டும் வருடப்பிறப்பு.
ஆருடங்களையும், ஆராய்ச்சிகளையும் ஒதுக்கிவிட்டு
ஆனந்தம் கொண்டாடுவோம் சித்திரை நாளில் இன்று.

எட்டுமாத மழையும்
இரண்டு மாதமாய் சுருங்கிப்போனது. – இனி
பத்து மாதமும் தண்ணீர் பஞ்சமாகும்.
அடர்வனக்காடுகளை அழித்து
அலங்காரமாக்கினோம் வீடுகளை
அலங்கோலமாகிப் போனது
அந்தமான் தீவுகள்
நகரமயமாக்கலில் நரகமாகிப் போகும் நம் வாழ்க்கையும்.


தீவு மங்கையின் ஆபரணங்கள் விலையுயர் மரங்கள்
அவள் ஆபரணங்களை சேர்த்து வைத்தாள்
அவள் மக்களுக்குக் கேடயங்களாய்…..
கேடயத்தையே வாள் கொண்டறுத்து
கேடுகளை வாங்கிக்கொண்ட மக்கள் நாம்
அழகிய வனங்களெல்லாம் பாலையாய்ப்போனால்
அடுத்த சந்ததி வாழ்வதெப்படி?
பாலையையும் சோலையாக்கும் வளைகுடா தேசங்கள் முன்
சோலை சிதைத்து பாலையாக்கும் வன்கொடுமை விலக்க,
சிந்திப்போம் சித்திரை திரு நாளில், சீர்பெருக்க சிந்திப்போம்.

விலை நிலமெல்லாம் வீடுகளாக்கினோம்.
வெள்ள நீர் தேக்கி விளைவிக்க இடமில்லை.
வாடகை ஆசையில் வளர்த்த மரம் வீழ்த்தி,
பணப்பை நிரப்பினோம்.
மனம் மட்டும் வெறுமையாக
மரத்தின் நிழலை நினைத்துக்கொண்டே…..

இங்கே
வீட்டு வாசலை கோலங்களைவிட
வாகனங்களே வழி மறித்து நிற்க
காற்று மண்டலமே கலங்கிக் கிடக்கிறது
கரிய மில வாயுவால்.

அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
அகழ, அகழ ஆடும்.
வன்முறையும் தீவிரவாதமும் மட்டும் தான் தேசத்துரோகங்களா?
வனமழித்து சூழல் கெடுப்பதும் தேசத்துரோகம் தான்!
வீட்டிற்கு ஒரு மரம் போதாது. இனி
தலைக்கு ஒரு மரம் வளர்ப்போம்
தழைக்கும் மரங்கள் மழை கூட்டி வளம் சேர்க்கட்டும்.

ஒருமைப்பாட்டிற்காய் உயிர் தந்த
உன்னத பூமி இது.
கற்காலமும் தற்காலமும்
கலந்து வாழும் கருணை தேசமிது.
இங்கும் தான் எத்தனை வேற்றுமைகள்
மாநிலத்தின் பெயரால் பிரிவினைகள்
மொழியின் பெயரால் பிரிவினைகள்
இனத்தின் பெயரால் பிரிவினைகள்
சாதியின் பெயரால் பிரிவினைகள்
இருப்போர், இல்லார் – கற்றோர் கல்லார் இப்படி
பிரிவினைக்கோடுகளால் பின்ன பின்னமாய் நாம்
ஒற்றுமைக்கேட்டிற்கு இன்னும் எத்தனை பாடம் படிப்பது?
பாலகர் போல் பாடங்கள் மறப்பதா?
கொலையும் கொள்ளையும் தான் மாபாதகமா?
பிரிவினை வளர்ப்பதும் பெரும் பாவம் தான்
சிந்திப்போம், சித்திரைத் திரு நாளில் சீர் பெருக்க சிந்திப்போம்
தமிழனாய் கை கோர்ப்போம் – மொழி வளர்ப்போம்,
புது இலக்கியம் செய்வோம்
     இந்தியனாய் ஒன்று கூடுவோம் – உழைப்பால் ஒளி கூட்டி
புதியதோர் உலகம் செய்வோம் நாம்
புதியதோர் உலகம் செய்வோம்.

பி.கு : எந்த ஆட்சி வந்து என்ன சட்டம் கொண்டு வந்தாலும் தங்கமணிகள் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடுவது சித்திரையில் தான். இந்தப்பதிவு தாமதமானதிற்கு காரணம் சொந்த ஊருக்குப் போனதாலும், இணையம் தகராறு செய்ததாலும்.

புதன், ஜூன் 27, 2012

ஷஹீத் திவஸ் – 23.03.12

அந்தமான் தீவுகளில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அன்று ஷஹீத் திவஸ் அதாவது நாட்டுக்காக உயிர் தந்த தியாகச் செம்மல்களின் தினம் என்று பொருளாம். பஞ்சாப் சிங்கம் பகத்சிங் மற்றும் அவர் நண்பர்கள் இருவரும் தூக்கிலிட்ட தினத்தை ஷஹீத் திவஸ் என்று அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் தீவுகளின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையினர், சர்வ பாஷா கவி சம்மேளன் – அனைத்து மொழிக் கவியரங்கம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இக்கவியரங்கில் தேசப்பற்று குறித்த கவிதைகள் இடம் பெற்றன. தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, நிக்கோபாரி, பெரு அந்தமானி ஆகிய மொழிக்கவிதைகள் இடம் பெற்றன. இந்தக் கவியரங்கின் சிறப்பு, முதல் முதலில்,தீவுகளின் பெரிய அந்தமானியர் என்ற ஆதிவாசி இனத்து இளைஞர் ஒருவர் அவர்களது மொழியில் கவிதை அரங்கேற்றினார்.
மொழி புரியாத போதும், கவிதை என்பது எல்லா மொழியிலுமே அழகானது சேமிப்புக்கலன் என்பது புரிந்தது. கவிதை என்பது மின்சாரம் போல, எல்லா மொழிக்கும் ஒளி கொடுத்து உயிர் கொடுக்கும் சமாச்சாரம்.
ஷஹீத் திவஸ் கவியரங்கில் தமிழ் மொழியில் கவிதை வழங்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. இதற்கு அ. & நி தீவுகளின் கல்வித்துறை துணை இயக்குநர் உயர்திரு ம. அய்யாராஜு அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
பசுமை வயல்களும் பரந்த வெளிகளும்
ஓடும் நதிகளும் உயர்ந்த மலைகளுமாய் அழகிய பாரதம்.
பண்பாடும் பாரம்பர்யமும், கலைகளும் கலாச்சாரமும்
அழகியலும், ஆன்மீகமும் செழித்த பாரதம்.
வளங்களும் செல்வங்களும் வறுமையற்ற வாழ்க்கை நெறிகளும்
பொன்னும், மணியும், முத்தும் கொழித்த பாரதம்
பழுத்த மரம் கண்டால் பரங்கியர் உள்ளம் பொறுக்காது.
நாடு பிடிக்கும் ஆசையில் வந்து காலைப்பிடித்து, வாலைப்பிடித்து
பின் கழுத்தைப் பிடித்து, பிரித்தாளும் சூழ்ச்சியில்
பாரதத்தைப் பிணைத்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம்.

ஒற்றுமையே பலம் என்பதை
உணராத இந்தியர்கள் பட்ட பாடுகள் எத்தனை?
மண்ணோடு மண்ணான மாநிலங்கள் எத்தனை?
சிதைந்து போன சிம்மாசனங்கள் எத்தனை?
அழிக்கப்பட்ட அடையாளங்கள் எத்தனை?
உடைக்கப்பட்ட கோவில்கள், கலைச்சின்னங்கள் எத்தனை?
அடிமையாய் உயிர் நீத்த அரசர்கள் எத்தனை?
வீரம் காட்டி போர்க்களத்தில் உயிர் தந்த உத்தமர்கள் எத்தனை?
பாழும் பரங்கியர் முன் அத்தனையும்
பலியானது போக வேறொன்றும் மிச்சமில்லை.

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழர்
வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன்
ஊமைத் துரை, மருது சகோதரர்கள்
மண்டியிட மறுத்தவரை பரங்கியன்
கொன்று பழி தீர்த்தான்.

சுடர் கவிதை கொண்டு
சுதந்திர கனல் பெருக்கிய சுப்ரமண்யபாரதி
புதுமைகள் சொல்லும்
புதுவைக்குயில் பாரதிதாசன்
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்
சிறைவாசப்பரிசாய், தொழு நோய் கண்ட சுப்ரமண்ய சிவா
கொடி காத்த குமரன், தில்லையாடி வள்ளியம்மை தாய் நாட்டு  
விடுதலைக்காய் தன்னையே தந்த வீர வாஞ்சி இவர்கள்
தமிழ் நாடு தந்த தியாகச்செம்மல்கள்

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் செய்த அண்ணல் காந்தி
அவர் வழி, தனி வழி அது அறவழி
அந்த வழி வந்தவர்கள் கோடி என்றால்
இள ரத்தம் கொதிக்க ஆயுதமே பதில் என்று
யுத்த வழி வந்தவர்கள் கோடி.
ரத்தம் சிந்தி மாண்டவரும் கோடி
ரத்தம் கொடு சுதந்திரம் தருகிறேன் என்ற சுபாஷ்
வீழ்ந்தவனல்ல நான் விதைக்கப்பட்டவன் என்று
தூக்கிலிடும் போதும்
தூக்குக்கயிறை முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்
இப்படி கோடானுகோடி சடலங்களின் மீது
எழுப்பப்பட்டது தான் இந்திய சுதந்திரக்கோட்டை
தியாகிகளின் எலும்புகளைக் கோர்த்து கம்பங்களாக்கி
உயரப்பறக்கிறது நமது தாயின் மணிக்கொடி

இங்கே
நீல நிறக்கடலும் கரு நீரானது கூட
எங்கள் சுதந்திரப்போராட்ட தியாகிகள் சிந்திய ரத்தத்தால்.
கூண்டுச்சிறையின் ஒவ்வொரு சுவரும்
கோடிக்கதைகள் சொல்லி நிற்கும்.
கசையடி பட்டோரின் கண்ணீரும் ரத்தமும் வலியும்
புழுத்த உணவில் உயிர் வளர்த்த கொடுமைகளும்
அந்த ஆலமரத்தின் வேர்களே அறியும்.
இனி வேண்டாம் இப்படி ஒரு கொடுமை
மானுடம் வாழும் எந்த மூலையிலும்

இருக்கட்டும் நமக்குள் எத்தனையோ வேற்றுமைகள்.
உடையில்,உணவில், மொழியில், மதத்தில், பண்பாட்டில்
இருக்கட்டும் நமக்குள் எத்தனையோ வேற்றுமைகள்
என்றும் வேண்டாம் வேற்றுமை
நாம் இந்தியர், நாம் இந்தியர் என்னும்  உணர்வில்
என்றும் வேண்டாம் வேற்றுமை
நாம் இந்தியர், நாம் இந்தியர் என்ற உணர்வில் மட்டும்
என்றும் வேண்டாம் வேற்றுமை.