சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, டிசம்பர் 18, 2010

அந்தமான் இலக்கிய மன்ற நிகழ்வு


நீண்ட நாள்களுக்குப் பிறகு வலையுலக நண்பர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நேரமின்மையால் எழுத இயலவில்லை. 
அந்தமான் தமிழர் சங்கத்தில் வாராவாரம் சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெறுகிறது. குழந்தைகளின் படிப்பு இன்ன பிற வேலைகளின் காரணமாக செல்ல முடிவதில்லை.4.12.10 அன்று மூத்த தமிழாசிரியை திருமதி. கமலா தோத்தாத்ரி அம்மாவை சந்திக்கவென்று அவர்களின் இல்லம் சென்ற போது அம்மா அவர்கள் அவர்களது இல்லத்தில் இல்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது,"நான் தமிழர் சங்கத்தில் இலக்கிய மன்றக் கூட்டத்தில் இருக்கிறேன். இங்கு வா! வரும் போதே நான் ரசித்த கவிதை என்ற தலைப்பில் யோசித்துக் கொண்டே வா. இலக்கிய மன்றத்தில் இன்றைய தலைப்பு இது தான்" என்றார்கள். போனதும் நினைவில் நின்றதைச் சொல்லிவிட்டு விடை பெறும் போது கமலா அம்மா அவர்கள் அடுத்த வாரம் இலக்கிய மன்றக்கூட்டத்திற்கு சாந்தி தான் தலைவி என்று அறிவித்தார்.( அட! நிஜமாங்க. நம்புங்க) அடுத்த வாரம் ஆளுக்கொரு தலைப்பில் கவிதை எழுதி வருவோம் என்று கூறி விடை பெற்றோம்.

11.12.10 அன்று கடுமையான மழை. அடாது மழையிலும் விடாது இலக்கிய மன்றத்திற்கு வந்தவர்கள் எட்டு பேர். யாருமே கவிதை எழுதி வரவில்லை. நண்பர் ஒருவர் இன்று தலைவரின் விருப்பம். ஆகவே நீங்கள் ஒரு தலைப்பு கொடுங்கள். இப்போது கவிதை எழுதுவோம் என்றார். முதியவர் ஒருவரை சாலை ஓரம் சாக்கில் சுற்றி வீசி விட்டுப் போன கொடூரம் நினைவில் வர முதுமை என்று தலைப்புக் கொடுக்க கவிஞர்கள் கவி மழை பொழிந்து விட்டனர். அந்தமான் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் உங்கள் பார்வைக்காக.

முதலில் உயர்திரு. தஞ்சை மா. அய்யாராஜு அவர்கள். - உதவி இயக்குநர், கல்வித்துறை.

முதுமை - அது பழமை, மூத்தமை - அதில்
முதிர்ச்சி இருக்கும். முதன்மையும் இருக்கும்.
இளமை - அது புதுமை. புது மை
அதில் வேகம் இருக்கும். விவேகம் இருக்காது.
இளமையின் முதிர்ச்சி தானே முதுமை.
அந்த முதுமையில்....
தன்மை,மென்மை,மேன்மை, சொல்வன்மை, வெண்மை
இப்படி இருக்கு மைகள் ஏராளம்.
அதில் ஏது புதுமை 
அதிலே இருக்கும் தனிமை....
அது தான் கொடுமை

அந்த முதுமையில் உடலைப் பற்றும்
தாளாமாய், இயலாமை, ஏழ்மை
இவை யாவும் முதுமையின் இழிமைகள்.
அத்தனையும்
முதுமையை அழித்து
முடிக்கிறது முதுமையை இல்லாமையாய்...

அதுவும் முதுமையில் வறுமை வந்து விட்டால்
அதை விடக்கொடுமை, இழிமை ஏதுளது?
ஒரு தாய் கேட்கிறாள் தன் மகனிடம்...
மகனே!
நீயிருக்க என் கருவறை இடம் தந்தது
நீ கண்ணயர என் தோள்கள் மடம் தந்தன.
நீ தவழ்ந்திட என் மடி தடம் தந்தது.
உன் நினைவுகளே என் மனதை நிரப்பிட இடம் தந்தது.
இத்தனை இடம் தந்த எனக்கு...
மகனே!
உன் மாளிகையின் ஒதுக்கில் கூட இடமில்லையா?
இடமின்மை 
மாளிகையில் மட்டும் தானா? இல்லை
உன் 
மனதிலும் கூடவா?

முதுமையை மதிக்காத இளமையே!
மறந்து விடாதே!
முதுமை எனக்கு மட்டுமல்ல.
ஓர் நாள் உனக்கும் தான்.

ஐயா அவர்கள் கவிதை வாசித்து முடிந்ததும் உறுப்பினர் ஒருவர் என்ன தலைக்கு மையடிக்கிறீங்களா? என்று கேட்க ஐயா அப்பாவியாய்த் தலையாட்ட அதான் கவிதை முழுசும் மை, மைன்னு எத்தன மையப்பா! என்று கலாட்டா செய்ய ஒரே கலகலா!

அடுத்து திருமதி. கமலா தோத்தாத்ரி.(மூத்த தமிழாசிரியை)

முதுமை - கடவுள் தந்த வரம்.
மனிதன் தொடும் சிகரம்

பல நேரங்களில் முதுமை இகழப்படுகிறது
பல நேரங்களில் முதுமை ஒதுக்கப்படுகிறது
பல நேரங்களில் முதுமை சபிக்கப்படுகிறது
சில நேரங்களில் மட்டுமே வணங்கப்படுகிறது

உண்மையில் முதுமை வாழ வழிகாட்டும்
உண்மையில் முதுமை வாழ்க்கைக்கு வழிகாட்டும்
இளமை நினைவுகளை அசை போட முதுமை
இளமைத் தவறுகளை உணரச்செய்ய முதுமை

முதுமை வந்ததன் அடையாளம் தலையில் நரை
அது காலமகள் வரைந்த வெள்ளைக் கோலம்
நாளை நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணா
காளை, கன்னியரின் விபரீத நடத்தையின் 
விளைவுகளே முதியோர் இல்லங்கள்
இவை நாட்டின் விதியை மாற்றிவிடும்
நாட்டின் பண்பாட்டை சீர்குலைக்கும்
வருகின்ற தலைமுறையைப் பதம் பார்க்கும்

முதுமை கண்டு அஞ்ச வேண்டாம்
முதுமை கண்டு தளர வேண்டாம்
முதுமையை எதிர்கொள்ள 
இன்றிலிருந்தே தயாராவோம்.
முதியோர்க்கு ஊன்று கோலாய்த் துணை நிற்போம்.
முதியோரை ஊன்றுகோலாய் துணை கொள்வோம்

முதுமையே முழுமையாகும்
முழுமையே நிறைவாகும்
நிறைவை நோக்கி நகர்ந்திடுவோம்
நிறை மதியாய் விகசிப்போம்.

அடுத்த கவிதை திரு சேது கபிலன், பொறியாளர், அந்தமான் பொதுப் பணித்துறை.

முதுமை தான் தவம்
பிறந்தவர்கள் பல கோடி என்றால்
முதுமையாம் வரம் தழுவியவர் அதில் பாதி தான்
பூமியை ஜெயித்து முளைத்த விதைகள் கூட
பல சமயங்களில் முதுமையைத் தொட முடிவதில்லை.
எனவே 
முதுமை ஒரு வரம் தான்
முதுமை ஒரு தரம் தான்.

பனி வாடை வீசும் காற்றும் கூட
அனுபவத்தின் முதிர்ச்சியினால்...
வீசும் போது அதற்கு தென்றல் என்று பெயர்

வாழ்ந்த வாழ்க்கையின் சாதனைகளுக்கு
முதுமை ஒரு நீதிமன்றம்
தளர்ந்து குந்தினால் நடுங்கும் உடலுக்கு
சுகமான ஞாபகங்கள் தான் சுடு நெருப்பு

சராசரி மனிதர்களுக்கு முதுமை ஒரு அசையும் தேர்.
சாதனையாளர்களுக்கு முதுமை தேரை செலுத்தும் குதிரை
பிறப்பு இறப்பு என்னும் வட்டத்தில்
முதுமை முடிவிற்கு திறவுகோல்

பிறப்பறுக்கும் பூட்டும் கூட முதுமை ஆகவேண்டுமெனில்
நாம் செய்கின்ற செயல்களால் தான்
எனவே கிழவனாகி விடை பெறும் வரை
நாம் அனைவரும் முதுமையை விரும்புவோம்.

செல்வி எம். முத்து லெக்ஷ்மி, ஆசிரியை

முதுமை - மனிதனின் ஆறாம் அறிவின் ஒளிச்சுடர்
முதுமை - மனிதகுலத்தின் சீர்திருத்த முதற்படி
முதுமை - தியாகத்தின் மெருகேறிய அஸ்திவாரம்
முதுமை இளமையின் கருவூலம்
முதுமை - தத்துத் தமிழாகிய இளமையின் முற்றுப்பெற்ற இலக்கணம்
முதுமை - பண்பட்ட பண்பாட்டின் பாற்சுவை.

அடுத்த கவிதை திருமதி. சாந்தி லெக்ஷ்மணன் (அடியேன் தான்)

சருகோலையைப் பார்த்து
குருத்தோலை சிரித்தது
சருகோலையும் புன்னகையோடு சொன்னது
அன்று உன்னைப் போல் நான்
நாளை என்னைப் போல் நீ

காலச்சக்கரம் ஒன்று தான்
வெவ்வேறு புள்ளிகளில் நாம்

பருவங்களில் இலையுதிர்காலம் போல்
முதுமை இயல்பானது.
முதுமை சுமையானது எப்போது?
முயலுக்கு சிங்கத்தின் குகை தேவைப்பட்ட போது...
புழுவிற்கு நாகம் போல் படமெடுக்கும் பேராசை வந்த போது...

வாழ்க்கையை வெற்றுத்தேவைகளால் நிரப்பி
விடை கொடுத்தோம் அன்பிற்கு...
விளைவு - முதுமை சுமையானது.
இன்று
முதியோர் கைகளைப் பிணைக்கும் விலங்குகளாய் 
முதியோர் வாழ்க்கைப்பாதையின் வேகத்தடைகளாய் 

முந்தி பிந்தி என்றாலும் கூட
அந்தி எல்லோருக்கும் உண்டு.
அறிவது எப்போது?

கவிதை நல்லாருக்கு. ஆனா தலைப்பு நீங்க தான் குடுத்தீங்க. வீட்டுல எழுதிக்கிட்டு வந்தீங்களோ? என்றார்கள். அங்க இங்க படிச்சத ஞாபகம் வச்சு நா எழுதப்பட்ட பாடு என்ன? இவங்களானா... 

திரு. பி.செண்பகராஜா, எழுத்தர், மாநில ஆணையர் அலுவலகம்.

காணக்கிடைக்காத அதிசயம்
கண்டு கொள்ளாத நிதர்சனம்
முதற்குடிகள் முதல் மூத்த குடிகள் வரை
முடங்காது முயல்வது முதுமை

முதுமை நெடுந்தூரப் பயணம்
வாழ்வின் நிதர்சனங்களை அலசிப்பார்க்கும் தருணம்
தியாகத்தோடு உழைத்திட்டவற்றை
திரும்பிப் பார்க்கும் சமயம்

அனுமதியின்றி நுழைவது - வாழ்விற்கு
அமைதியைக்கொடுப்பது
உல்லாசப்பயணம், ஓய்வு நாற்காலி
பேரக்குழந்தைகளோடு
பேரன்போடு கொஞ்சி விளையாடல்
இங்க்ங்க்னம் கழிந்தால் முதுமையும் இனிமை
முதுமைக் கூடங்களில்
முடங்கிக் கிடக்கும்
முன்னவர்களை நினைத்திட்டால்.....
முதுமை பெறும் துன்பம் தான்.

திரு.சுப. காளை ராஜன், தொலைத்தொடர்பு துறை

ஆலமரம் அழுவதுண்டோ?
வாழை மரம் வழுவியதோ?
கோழையோ நீ? கொடுங்கிழவா!
முதுமையிலும் இளமையாக 
முளைக்கும் போதே பாதையிடு.

இளமையிலே வளமையுண்டு
இயல்பினிலே வாலிபம் நீ
ஆலமரம் நிழல் போல 
ஆகவேண்டும் முதுமையிலே

இயற்கையை நீ பார்த்து நட
இயலாமல் நீ வாழ்ந்துவிட்டால்
கூனிக் குறுகும் நீ 
குனியத்தான் வேண்டுமையா!

காலங்கள் மாறிவரும்
களையெடுக்க மறந்திருப்பாய்
களைகளெல்லாம் நெல் முத்தாய்
நீ நினைத்தால் உன் தவறே!


செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நகராத வாழ்க்கை

பூக்களாய் இருக்கிறது வனமெங்கும்.
கன்னங்களில் விரல் பதித்து வியப்பை சிந்துகிறேன்.
பாதங்கள் பதிக்கும் ஒற்றையடிப்பாதையில் நெருஞ்சி முட்கள்
குதிகால் உயர்த்தியும்
முன் கால் ஊன்றியும் நடை பழகுகிறேன்.
வறட்டியும், வைக்கோலுமாய் வாழ்ந்த நாட்களில்
உடலின் ரத்தமெல்லாம் வியர்வையாய் வடிய
நாகரீகத்தொட்டில் நகரம் சென்றுவிட்டால்
தாலாட்டு இன்றி உறக்கம் தழுவும் கனவுகளோடு

இங்கோ
தலையணைக்கடியில் நெருஞ்சியும்
கனவுகளில் வனத்தின் பூக்களும்.

எதிரிகள் என்றால் முகம் திருப்பலாம்
நண்பர்கள் என்றால் கை குலுக்கலாம்
உறவுகள் என்றால் புன்னகை சிந்தலாம்.
ஒரு காலம் உறவாய் இருந்து
உணர்வுகளைப்பகிரும் நட்பாய் மாறி
எதிரியாய் நிறம் மாறியவருடன் என்ன செய்யலாம்?

நானும் கற்றுக்கொள்கிறேன்.
எதிரியின் முகம் பார்த்து
மௌனமாய்ப்புன்னகையும்
மனதில் குரோதமும் கொள்ள.

புரியாத நாகரீகங்கள்.
படியாத மனோபாவங்கள்
புது வாழ்க்கை கற்றுத்தரப்படுகிறது.
மனம் ஒன்றாத போதும்
உயிர் வாழ்தலுக்காய் சரிசெய்தலும் சமன் செய்தலுமாய்
வெறுமையாய் நாட்கள் நகர
வாழ்க்கை மட்டும் வறட்டியோடும் வைக்கோலோடும் நின்று போயிருந்தது.

புதன், ஆகஸ்ட் 25, 2010

அந்தமானும் உள்ளாட்சித்தேர்தலும்


அந்தமான், நிகோபார் தீவுகளில் அடுத்த மாதம் 19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 27ம் தேதி.இன்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அந்தமான் ஒரு குட்டி இந்தியா என்பதால் மாநிலக்கட்சிகள், தேசியக்கட்சிகள் இதோடு சுயேட்சை வேட்பாளர்கள் என்று ஒரு பெரிய பட்டியல். முன்னர் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது இவ்வளவு பிரபலமாக இருந்ததில்லை. தீவு மக்களும் முக்கிய பூமி மக்களைப் பார்த்து கற்றுக்கொண்டுவிட்டார்கள். கொடிகளும், தொடர் ஊர்வலம் போன ஊர்திகளும், கோஷங்களும், போக்குவரத்தை பாதித்தன.திறந்த வேனில் வேட்பாளர்கள் மாலையணிந்து கைகளைக்கூப்பியபடி. 19ம் தேதி வியாழன் அன்று காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான ஜோதி ஊர்வலத்தை ஒட்டி "குயின்'ஸ் பேட்டன் ரிலே" இருந்தது. ஒத்திகை ஒரு நாள், உண்மையில் ஒரு நாள் என்று பொதுமக்களை காவல் துறை இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என்று இரண்டு நாள் விரட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று மீண்டும் இப்படி. அமைதியான தீவுகள் என்று பெயர் வாங்கிய பகுதியில் இன்று தெய்வத்தின் பேரால், அரசியலின் பேரால் ஊர்வலங்களும், கோஷங்களும். எப்படியோ அமைதியை பாதிக்காமல் இருந்தால் சரி.


அந்தமானில் 69 பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சியில் 18 உறுப்பினர்களுக்குமான தேர்தல். போன முறை நகராட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தங்கள் பகுதி மக்களுக்கு வீடுவீடாகச்சென்று அன்பளிப்புகளை (லஞ்சம்?) வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வார்டில் அனைத்து வீட்டிலும் பெண்களுக்கு புடவை அன்பளிப்பாக வழங்கினார்கள்.சிலர் ஓட்டை துருப்புச்சீட்டாக வைத்து தனது வீடு வரை சிமெண்ட் சாலை போட்டுக்கொள்வது, சுவர் எழுப்பிக்கொள்வது,குடிநீர்க்குழாய் இணைப்பு, அலுவலகங்களில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது, மானியக்கடனுதவிகள் இப்படி காரியம் சாதித்துக்கொள்வதும் உண்டு.


பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் குடிதண்ணீர், நல்ல சாலை,போக்குவரத்து வசதி, அரசுக்கடனுதவி போன்றவற்றைத் தங்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் தீவு கிராமப்பகுதிகள் குறுகிய காலத்தில் விரைந்து முன்னேறியுள்ளது. அதுவரை பாராட்டலாம். எந்தக் கட்சியில் நின்று ஜெயித்தாலும் சரி கடைசியில் தமிழர்கள் என்ற புள்ளியில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் இவர்கள். எப்படியோ இவர்கள் தீவு முன்னேற உழைத்தால் நம் ஓட்டு தமிழருக்கே. ����

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

தென்மேற்கு பருவமழையும் அந்தமானும்அந்தமான், நிக்கோபார் தீவுகள், தென்மேற்குப் பருவமழையில் நனைந்து கொண்டிருக்கிறது.அந்தமான் மழையையும், அந்தமான் பெண்களையும் நம்ப முடியாது என்ற இந்த மொழி, மழைக்காலத்தில் நிறைய மக்களின் வாயில் புகுந்து புறப்பட்டு வரும். இந்த மொழியின் முதல் பாதியை ரசிக்க முடிந்த அளவு, மறுபாதியை ரசிக்க முடியாது.காலை கடும் வெயில் என்று குடையின்றி, கடைத்தெரு போனால் நனைந்து கொண்டே வீடு வரும்படி இருக்கும்.அடைமழை, காற்றுடன் நல்ல மழை பொழிந்தாலும், இது மலைப்பிரதேசம் என்பதால் வெள்ளப்பெருக்கு கிடையாது.சாலைகள் கழுவி விட்டது போல் சுத்தமாக இருக்கும். கோடையில் பட்டுக்கிடந்த மரம்,செடி,கொடிகள் பசேலென்று தளிர் விட்டு ஊரே பசுமையாய் இருக்கும். பனிபடர்ந்த மலைமுகடுகள் பார்வைக்கு சுகமாய் இருக்கும். மழை பழகிய மக்கள் பொழியும் மழையைப் பொருட்படுத்தாது தங்கள் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.


இந்த மழைக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு வைரஸ் காய்ச்சல் மக்களைப் படுத்தி எடுக்கும். தீவுகளில் டெங்கு மாதம், மலேரியா மாதம் என்று வரிசையாக அனுசரிக்கப்பட்டு இப்போது தான் கொஞ்சம் ஆசுவாசப்பெருமூச்சு விடுகிறோம். மழைக்காலத்தில் மஞ்சள் காமாலை சர்வ சாதாரணம்.மஞ்சள் காமாலைக்கு அரசு மருத்துவமனையில் நவீன மருந்துகள் காத்துக்கொண்டிருக்க, நம் மக்களோ மந்திரங்களை நம்பி அவர்களை சரணடைவார்கள். அரை லிட்டர் பாலையும், ஏதோ ஒரு வேரையும் வைத்து தலையில் தேய்க்க மஞ்சளாக வடியும். மூன்று நாள் தேய்த்து குணமாகிவிடும் என்று அனுப்புவார்கள்.சில புத்திசாலிகள் மருந்து, பால் தேய்ப்பது,கீழாநெல்லி அரைத்துக்குடிப்பது என்று அனைத்தையும் முயற்சிப்பார்கள். இங்கு மழைக்காலம் மக்களுக்கு சோதனைக்காலம் தான்.சிலருக்கு மாரிக்காலம், மலேரியாக்காலம் ஆகிவிடுகிறது. கைக்குழந்தைகள் வைத்திருப்போரின் பாடு இன்னும் அதிகம்.

சிக்குன் குனியா வந்து ஒரு சுற்று சுற்றிப் போய், திரும்பி வந்து, முதல் சுற்றில் தப்பித்தவர்களை இந்த முறை ஒரு கை பார்த்தது. ஒரு முறை சிக்குன் குனியா வந்தவர்களுக்கு மறுபடி வராது, அது தான் அவர்களுக்கு நோய்த்தடுப்பு என்று மருத்துவர்கள் கூற, சிக்குன் குனியா அறிகுறிகளுடன், இந்த முறை வேறு ஒரு காய்ச்சல் எங்களை வாட்டி எடுத்தது.சிலருக்கு மூக்கில் கருப்பு படர்ந்து, சிலருக்கு முகத்தில் கருப்பு விழுந்தது. மருத்துவர்கள் இதற்கு ,"பட்டர் ஃப்ளை ஸ்கேர்" என்றார்கள்.எனக்கு இடுப்பில் நெருப்பு பட்டது போல் எரிய, சிலருக்கு பட்டர் ஃப்ளை ஸ்கேர் இடுப்பு, முதுகிலும் வரலாமாம். சிக்குன் குனியா வைரஸானது, வேறு ஒரு வைரஸாக மாறி வந்திருக்கலாம் என்கிறார்கள்.இதைக்கேட்டதும் எனக்கு, மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் வைரஸ் குறித்துப்படித்தது தான் ஞாபகம் வந்தது." வைரஸ் தன்னை மாற்றிக்கொள்ளும் வேகம் சாதாரண செல்லை விட மிக அதிகம்.ஒரு செல் ரெட்டிப்பாகும் போது படியெடுப்பதில் நூறு கோடி முறைக்கு ஒரு தடவை தான் பிழை ஏற்படும். வைரஸ் கிருமியின் இரட்டிப்பில் இரண்டாயிரத்திற்கு ஒரு முறை பிழை ஏற்பட்டு புதிய வைரஸ் வந்து விடும். இதனால் மனித இனம் புதுபுது வைரஸ்களை சந்திக்க வேண்டியுள்ளது" ஆக அறிவியல் ஆயிரம் சொன்னாலும், வைரஸ் காய்ச்சல் ஒரு பாடு படுத்திப்போய்விட்டது.


சிதம்பரம் அண்ணாமலை கல்லூரியில் டீனாக பதவி உயர்வு பெற்று, அந்தமானில் தொலைத்தொடர்பு கல்வித்துறையை பார்வையிட வந்தவர், இப்படியான ஒரு காய்ச்சலில் சிக்க, அவரை சில பல லட்சங்கள் செலவழிப்பில் சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள்.அவர் எனது நெருங்கிய சினேகிதியின் சித்தப்பா. மன உளைச்சலில் சிக்கிய அவர்கள் குடும்பத்தினர் மீண்டு வந்தது தனிக்கதை.

கூரையில் வேய்ந்திருக்கும் தகரம் அதிர மழை பொழியும் போது கூரையில் குதிரைகளின் குழம்படிச்சத்தம்.நடு இரவிலும் மழை பொழியும் போது விழிப்பு வந்து விடும்.ஆனாலும் சுகமாயிருக்கும். அடை மழை பெய்தால், தமிழ்நாட்டில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமே அப்படி இங்கு கிடையாது. அடாது மழை விடாது பெய்தாலும் சின்னஞ்சிறார்களுக்கும் பள்ளி உண்டு.இப்போதெல்லாம் குஷி பட நாயகி பாணியில் யாராவது கைகளை விரித்து மழையில் நனைந்து மழையை ரசித்தால், ஐயோ பாவம் என்ன காய்ச்சல் வரப்போகுதோ என்று நினைத்தாலும் எனக்கு மழையில் நனையப்பிடிக்கும்.வைத்தியத்துக்கு காசா பணமா? இருக்கவே இருக்கு எங்க ஊர் ஜி.பி.பந்த் அரசு பொது மருத்துவமனை.���

திங்கள், ஜூலை 12, 2010

அந்தமானும் தமிழர்களும்


நண்பர்களே! அண்மையில் கோவையில் நடைபெற்ற, உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்ற, உலகச்செம்மொழி மாநாட்டில் அந்தமான் தமிழர்கள் சார்பில் பங்கேற்ற ”அந்தமான் முரசு” பத்திரிக்கை ஆசிரியர் திரு.சுப.கரிகால் வளவன் அவர்கள் மாநாட்டில் வாசித்தளித்த ஆராய்ச்சிக்கட்டுரை.
அந்தமானும் தமிழர்களும்
கட்டுரையாளர் : திரு.சுப. கரிகால்வளவன்.

வங்கக்கடலில் இயற்கை ஓவியனின் தூரிகை வரைந்த அழகு ஓவியம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். நீலக்கடலின் நடுவில் பசுமைத் தீவுகளான இந்த அந்தமான் - நிக்கோபார் தீவுகள் தாய் தமிழகத்திலிருந்து வடகிழக்கே 1200 கி.மீ. தொலைவில் இந்தியப்பெருங்கடலில் தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் இடையே வளைந்தும் நெளிந்தும் காணப்படுகிறது.. சுமார் 8249 சதுரக்கிலோமீட்டர் நிலப்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 572 தீவுக்கூட்டங்கள் இருந்தாலும் வளமிக்க இத்தீவுகளில் வெறும் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் குடியிருப்பு உள்ளது.

இத்தீவுகளுக்கு அந்தமான் நிக்கோபார் என்ற பெயர் வந்தது, 'அந்தோ மான் நிக்குது பார்' என்று கடல் வழி பயணித்த தமிழகத்து வணிகர்கள் கூறியதால் தானோ? உரோமானிய வரலாற்று அறிஞன். கிளாடியஸ் தாலமி கி.மு.2ம் நூற்றாண்டில் இத்தீவைக் கண்டறிந்து 'நல்வளம் கொண்ட தீவு' என்று குறிப்பிடுகிறார்.சீன மலேய நாட்டு வணிகர்கள் மற்றும் கடல் கொள்ளையர்கள் தமது தொழிலுக்கு ஆள் பிடிக்க வந்தனர்.'குரங்கு முகம் கொண்ட மக்களைக்கொண்ட தீவு' என்றும் 'ஹண்டுமான்' என்றும் கூறினர்.அதுவே அனுமான் என்றும் அந்தமான் என்றும் மருவியதாக கூறுகின்றனர் மலேய வரலாற்று ஆசிரியர்கள்.அதற்குப்பிறகு வந்த சீனர், அரேபியர் இத்தீவுகளைக் கொடியவர்களின் கொலுமண்டபம் என்றும் கரிய நிறம் கொண்ட மனிதர்கள் நிர்வாணமாக வாழும் தீவு என்றும் குறிப்பிடுகின்றனர்.கி.பி.10ம் நூற்றாண்டில் மலேசியமக்களின் இதழ்களில் 'மணிமேகலை' கதைப்பாடல்கள் களிநடம் புரிந்தன. 

சோழர்களின் தீவு.

தஞ்சைக்கல்வெட்டுகளிலும், மலேய நாட்டு கல்வெட்டுகளிலும் 'நக்காவரம்' என இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. ' தேனக்கவார் பொழில் மாநக்காவரம்' என்பது முதல் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தித்தொடராகும். மணிமேகலையில் நக்கசாரணர்,நாகர் வாழ் மலை என்று குறிப்பிடப்படும் பகுதியும் இதுவே ஆகும். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் (பழங்குடிகள்) அண்மைக்காலம் வரை அம்மணமாகவே வாழ்ந்தவராவர்.கி.பி.11ம் நூற்றாண்டில் இத்தீவுகள் முழுவதுமே சோழப்பேரரசின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன என்று வரலாற்று ஆசிரியரான டாக்டர்.கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகிறார்.பெரிய நிக்கோபார்த்தீவருகில் புலிக்கொடி பொறித்த கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.வரலாற்று நாவலாசிரியர் சாண்டில்யன் தமது 'கடல் புறா' நாவலில் இதனைக்குறிப்பிடும் போது, மலேசிய நாட்டிற்கு இராஜேந்திர சோழன் செல்லும் வழியில் 'காலத்தி' நதியோரம் ஓய்வெடுத்ததாக குறிப்பிடுகிறார்.

கி.பி.1050 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தஞ்சைக்கல்வெட்டுகளில் இத்தீவுகளின் பெயர் 'நக்காவரம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.கார் நிக்கோபார், பெரிய நிக்கோபார் ஆகிய தீவுகளை சோழர்கள்,'கார்த்தீபம், நாகதீபம்' என்று அழைத்திருக்கின்றனர். சோழர்களின் வணிகக்கப்பல்களும், போர்க்கப்பல்களும் அந்தமான் நிக்கோபார்த்தீவுகளுக்கு அடிக்கடி வந்து சென்றன. இங்கு மக்கள் தங்கிய காலகட்டத்தில் பலவகைக் கொடிய நோய்கள் ஏற்பட்டதால் பலர் உயிருக்கு பயந்து இத்தீவுகளில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் நிறுவிய சிறைத்தீவு
இந்திய நாட்டில் கொடுங்குற்றவாளிகளை சிறை வைக்க எண்ணிய ஆங்கிலேயன் 1858ல் கண்டெடுத்த தீவு இதுவாகும்.200 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு 04.03.1958 அன்று 'சமிரமீஸ்' கப்பல் சாத்தம் தீவிற்கு வந்து சேர்ந்தது. இதன் மூலம் ஆங்கிலேய அரசு இத்தீவைக்கைப்பற்றி ' கொடுங்குற்ற வாளிகளின்' சிறைத்தீவாக, பின்னர் சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் சிறைத்தீவாக மாற்றியது.
அரசிதழ்
1908ல் தான் அந்தமானில் முதன் முதலில் அரசிதழ் ஒன்று வெளியிடப்பட்டது. அதன் 13ம் பக்கத்தில் தஞ்சை கல்வெட்டுத் தொடர்ச்சி இத்தீவில் உள்ளதாகவும் இத்தீவை 'தங்கத்தீவு' என்றும் 'தீமைத்தீவு' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் கோவலனுடைய முன்னோர் கடலில் கலம் உடைந்து இத்தீவில் ஒதுங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'நக்க சாரணர், நாகர் வாழ் மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மையின் ஆயினன்' எனவும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பிராமணர்கள் 'நார்கொண்டம்' எரிமலையை பார்த்து நரககுண்டம் என்று கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு விளையும் நிக்கோபார் குறுந்தென்னை தஞ்சையின் சில பகுதிகளிலும் காணக்கிடைக்கிறது.அங்கு அதற்கு 'நக்காவரம் பிள்ளை' என்று பெயர். சௌரா தீவில் உள்ள நிக்கோபாரி பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் தொல் பழமையான பழக்கவழக்கங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்த உதயப்பூர் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த எல்.பி.மாத்தூர் அவர்கள் அப்பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள் பழம்பெரும் தென் இந்திய இன மக்களின் பழக்கவழக்கங்களை கொண்டது என தனது நூலில் குறிப்பிடுகிறார். அங்குள்ள மக்கள் 'மண்பானை' செய்யும் பழக்கத்தையும் அதில் சமைத்து உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். சமீபத்தில் அத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது பழமை வாய்ந்த 'முதுமக்கள் தாழிகள்' கிடைத்துள்ளதும் இதற்கு சான்று பகருகின்றன. 


தெரசா மக்களைப்பற்றி அவர் குறிப்பிடும் போது அவர்கள் இளம் கருத்த மேனி உடையோராகவும், ஒரு சிலர் குடுமி வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.இவர்களைப்பற்றி நிக்கோபார் மாவட்ட இணை ஆணையராக பணிபுரிந்த திரு.கௌஷல் குமார் மாத்தூர் அவர்கள் தமது நூலில் குறிப்பிடும் போது தெரசா மக்கள் தமிழகத்து வைதீக மக்களைப் போல தலை மயிரை முடிந்து குடுமி வைத்திருக்கிறார்கள். சோழர் காலத்தில் தமிழ் நாட்டினருடன் தொடர்பு கொண்டிருந்த போது இப்பழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

பெரிய நிக்கோபார்த்தீவின் உள்பகுதியில் வசிக்கும் 'சோம்பன்' இனத்தவரின் உடலமைப்பும், சில பழக்க வழக்கங்களும் தமிழரின் சாயலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 'சோம்பன்' என்ற வார்த்தைக்கு 'சிவபிரான்' என்று பொருள் உரைக்கிறது லிப்கோ தமிழ் - ஆங்கில அகராதி. ஒரு வேளை 'சாம்பன்' பழங்குடியினத்தவர்கள் சிவ வழிபாடு செய்பவர்கள் என்று பிரித்துக்காட்ட எடுத்துக்கொண்ட முயற்சியாகவும் சாம்பன் என்ற வார்த்தை பயன் பட்டிருக்கலாம். சிவ வாகனமான ரிஷப வழிபாடு - காளை வழிபாடு இந்தத் தீவில் நடைபெற்றதாக ஜெரினியின் புத்தகம் கூறுகிறது.

 "Fariar odoric tells us instead of Nichomeran that there is a king, the native go stark naked have faces like (cow) dog and worship the bull""
இதன் மூலம் சாம்பன் - சிவ வழிபாடு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.தமிழகத்தில் சாதி அமைப்புகளால் நசுக்கப்பட்ட சமூகம் ஒன்று ' சாம்பன் ' என்று அழைக்கப்படுகிறது. தமிழரின் சாயல் அவர்களில் தெரிகிறது. பெரிய நிக்கோபார் பழங்குடியினரான இந்த 'சாம்பன்' இனப்பெண்கள் தமிழ்நாட்டில் பழங்காலப்பெண்கள் காது வளர்த்து காதோலை அணிந்தது போல காதுகளில் பெரிய அளவிலான மரக்கட்டைகளை அணிகின்றனர்.

தமிழர்கள் கொடூரக்குற்றவாளிகளா?
10.12.1882ல் முத்துச்சாமி என்பவர் கொலைக்குற்றவாளியாகக் கொண்டுவரப்பட்டு பின், வைபர் தீவில் தூக்கிலிடப்பட்டார்.1889ல் நான்கு தமிழர்கள் குற்றவாளிகளாக அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்ப்பாதிரியாரின் தொண்டு
1895ல் அந்தமான் தீவுகளுக்கு வந்து சேர்ந்த தமிழகத்து பாதிரியார் வேதப்பன் சாலமன் அவர்கள் தம் மனைவியுடன் நிக்கோபாரில் உள்ள மூஸ் தீவில் கல்விக்கூடம் ஒன்றைத்தொடங்கினார். அதில் 12 இளைஞர்கள் கல்வி பயின்றனர். அவர்களில் நிக்கோபாரின் தந்தை என்றழைக்கப்படும் தீவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பிஷப் ஜான் ரிச்சர்டுசன் அவர்கள் முதன்மையானவர் ஆவார்.
அந்தமானும் வ. உ.சியும்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் தீரமுடன் போராடிய வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பல் முதன் முறையாக அந்தமான் தீவுகளுக்குத்தான் சென்று வந்தது.அவரின் கப்பல் சென்று வந்த அந்தமான் தீவுக்கே அவரைக் கைதியாக அனுப்ப வெள்ளைய ஏகாதிபத்தியம் திட்டமிட்டது. தேசத் துரோகக் குற்றத்தை சுமத்தி 40 ஆண்டு சிறைத்தண்டனையை அவருக்கு விதித்தது. ஆனால் மேல் நீதிமன்றம் அவரது தண்டனையைக் குறைத்ததின் காரணமாக அவர் அந்தமானுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், வ.உ.சி தப்பினாலும் அவரது தேச பக்திக்கனல் மூட்டப்பெற்ற இரு தமிழர்கள் பிரதிவாதி பயங்கரம் வேங்கடாச்சாரி மற்றும் டி. சச்சிதானந்த சிவா ஆகியோர் அந்தமான் கொடுஞ்சிறையில் வாடி வதங்கினார்கள். 

'பெருமாள்' என்ற ரெயில்வே தொழிலாளிக்கு ஆங்கில அரசு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் அந்தமான் சிறைக்கு அனுப்பபட்டதாக ராணி இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப்பிறகு படிப்படியாக மருத்துவர்களாக, கைதிகளாக, அரசு ஊழியர்களாக, தொழிலாளர்களாக தமிழர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர்.செல்லுலர் சிறையில் இருந்த தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது. இந்நிலையில் 1931ல் மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி இத்தீவுகளில் வாழ்ந்த தமிழ்மக்களின் எண்ணிக்கை 769 மட்டுமே.

நேதாஜி வருகையும், அந்தமானும்

இரண்டாவது உலகப்போர் காலத்தில் 1942 மார்ச் திங்கள் 13ம் நாள் ஜப்பானியப்படை அந்தமான் தீவுகளைக்கைப்பற்றியது. நேதாஜியின்,'இந்திய தேசியப்படை' உருவானதும் அந்தமானில் தற்காலிக இந்திய அரசாங்கம் அமைக்க உரிமை வழங்கப்பட்டது. நேதாஜி 1943 டிசம்பர் 29 முதல் 31 வரை இத்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் இங்கு அமைத்த தற்காலிக இந்திய அரசாங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் 'கர்னல் லோகநாதன்' எனும் தமிழராவார். ஜப்பானியர் காலத்தில் ஆங்கிலேயருக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட முத்துச்சாமி நாயுடு என்பவர் ஜப்பானியர்களின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள இயலாமையால் உயிரிழந்தார். 

அன்றையத் தலைநகர் ரூஸ் தீவு

ஆங்கிலேயர் குடியேற்றம் தொடங்கிய 1858 முதல் சாத்தம், வைப்பர், ரூஸ் ஆகிய மூன்று தீவுகளும் கைதிகளின் குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கைதிகளைக்கொண்டு ரூஸ் தீவை செதுக்கிய ஆங்கிலேயர் அங்கு தமக்காக சொகுசான குடியிருப்புகளை 1863ல் அமைத்தனர்.அங்கு அதிகாரிகளின் பங்களாக்கள், மின்னுற்பத்தி நிலையம், கேளிக்கை அரங்கம், அங்காடி வளாகம், அச்சகம், பேக்கரி, நீச்சல் குளம், சர்ச் மற்றும் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. அப்போது ஆங்கிலேய அதிகாரிகளின் சேவைகளுக்காக வீட்டுப்பணியாளர்களாக, சமையல்காரர்களாக, அரசுப்பணியாளர்களாக சென்ற தமிழர்கள் ஒன்றிணைந்து 1939ல் முருகன் கோவிலைக்கட்டி தமிழனின் விழாக்களை சிறப்பாகக்கொண்டாடினர்.1942 ல் இத்தீவில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு தலைநகர் போர்ட் பிளேயருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

நாடு விடுதலைக்குப்பின்

நாடு விடுதலை பெற்ற பிறகு தீவின் வளர்ச்சிப்பணிக்காக, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் இதர தமிழக மாவட்ட மக்கள் வரவழைக்கப்பட்டனர். இத்தீவுகளில் காடுகளை வெட்டி வீடு சமைத்த பெருமை நம் தமிழனையே சாரும்.அப்போது இத்தீவுகளுக்கு வந்த பொன்னுச்சாமி, மூர்த்தி, சுப.சுப்பிரமணியன் போன்றோர் 1950 -51 களில் தலைநகர் போர்ட் பிளேயரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு அருகில் வெள்ளைச்சாமி உணவு விடுதிக்கு மேல் தளத்தில் தமிழர் படிப்பகம் ஒன்றைத்தொடங்கினர். வார விடுமுறை நாட்களில் அங்கு கூடிப்பேசும் தமிழர்கள் தமிழகத்து செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.

அக்காலத்தில் 1500 கிழக்கு வங்க மக்களின் குடியிருப்புகள் இங்கு தொடங்கப்பட்டன. 1954ல் 5 பர்மியத் தமிழ்க்குடும்பங்கள் இங்கு கொண்டு வரப்ப்ட்டன. அதற்குப்பிறகு 1961 வரை குடியமர்த்தப்பட்ட தமிழ்க்குடும்பங்கள் எண்ணிக்கை 52 மட்டுமே. 1951ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இத்தீவுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 1874. 1961ல் 5765 ஆக உயர்ந்தது. சைத்தான் காடி என்ற இடத்தில் இரப்பர் தோட்டத்தில் பணிபுரிவதற்கென 37 பர்மா தமிழ் அகதிக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. 1971ல் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த அகதிப் புனர் வாழ்வுத்துறை அமைச்சர் திருமதி. சத்திய வாணி முத்து அவர்கள் 1000 இலங்கை அகதிக்குடும்பங்கள் 'கட்சால்' தீவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் அங்கு குடியமர்த்தப்பட்டதோ வெறும் 47 தமிழ்க்குடும்பங்கள் மட்டுமே. இவர்களுக்கு மட்டும் இது வரை எவ்வித சலுகைகளும் வழங்கப்படாமல் அகதிகளாகவே நடத்தப்படும் அவல நிலை இன்று வரை தொடர்கிறது.

1969 - 75 களில் தென் முனைத்தீவான பெரிய நிக்கோபாரில் மொத்தம் 238 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை மைய அரசு குடியமர்த்தியது. அதில் 45 தமிழ் குடும்பங்களும் அடங்கும். தீவில் வாழும் இனங்களில், மக்கள் தொகையில் இரண்டாவது இடம் பெறுவது தமிழினமாகும்.

தீவில் தமிழர் அமைப்புகள்

அந்தமான் தமிழர் சங்கம், உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கிய மன்றம் தீவில் தமிழர் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை எடுத்தியம்பும் பணியைச்செய்கின்றன. தவிர வடக்கே டிக்லிப்பூர் தமிழர் சங்கம், மாயா பந்தர் தமிழர் சங்கம், நடு அந்தமான் இரங்கத் அண்ணா படிப்பகம், கட்சால் தமிழர் படிப்பகம் ஆகிய சிறுசிறு தீவுகளில் கூட தமிழர் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆங்காங்கே, தமிழர்கள் பொங்கல் விழா, சித்திரை விழா, பாரதி - பாரதிதாசன் விழா கொண்டாடும் போது இயல், இசை, நாடகம் இணைந்த பண்பாட்டை கட்டிக் காக்கும் விதத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர்.தீவில் தமிழர்கள் உருவாக்கிய முருகன், வ்நாயகர், சிவன், அய்யனார்,அய்யப்பன்,மாரியம்மன், மற்றும் காளி கோவில் யாவும் உள்ளது. பாரம்பரிய ரீதியில் தமிழகத்து கலாச்சாரத்தைக் கட்டிக்காத்து வரும் தமிழர்கள் எடுக்கும் விழாக்களில் தமிழகத்து மண் வாசனை இருக்கும். அது போல தமிழக இசுலாமிய மறுமலர்ச்சி மன்றத்தினரின் நிகழ்ச்சிகளும், தமிழ் கத்தோலிக்க கிறித்துவர்களின் பொங்கல் விழா பிரபலமானவையாகும். 

தீவில் தேசியக்கட்சிகள் யாவும் இருப்பதுடன் தமிழகத்தின் தி.மு.க., அ.தி.மு.க., போன்ற முகாமையான இருபெரும் அரசியல் கட்சிகளும் இயங்கிவருகின்றன. 1981, ஆகஸ்ட் திங்கள் 3ம் நாளன்று தலைநகர் போர்ட் பிளேயரில்  தமிழ்க்கல்விப் பாதுகாப்புக்குழு சார்பில், தீவில் உயர்கல்வி மற்றும் தமிழர் தம் உரிமைகளை வலியுறுத்தி தலைவர்.தெய்வத்திரு.க.கந்தசாமி அவர்கள், பொதுச்செயலர் தெய்வத்திரு. சுப.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் கல்விக்காக 15 நாள் உண்ணாவிரதம் இருந்த தெய்வத்திரு சுப.சுப்ரமணியன் போன்ற சிலரின் உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போராட்டத்தின் விளைவாகத் தீவில் 7 உயர் நிலை பள்ளிகளும், 10 நடுநிலை பள்ளிகளும், 25 ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

தமிழர் சிலைகள்

15.09.1970 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை 'லாங் ஐலேண்ட்' என்னும் தீவில் நிறுவப்பட்டது. நடு அந்தமான் தீவில் ரங்கத் என்னுமிடத்தில் 02.04.1980 அன்று தி.மு.க பேச்சாளர் ஆசைத்தம்பி அவர்களின் சிலை நிறுவப்பட்டது. பெருந்தலைவர் காமராஜ் மன்றத்தின் சார்பில் 15.04.2003 அன்று பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் திரு உருவச்சிலை டெய்ரி ஃபார்ம் (பால் பண்ணை) என்னுமிடத்தின் சந்திப்பு முனையில் நிறுவப்பட்டது. பிறகு தமிழர் சங்க வளாகத்தில் 10.02.2003 அன்று ஒன்றும், 07.11.2009 அன்று மற்றொன்றுமாக, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் இரு திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டன.

வானொலியில் தமிழ்

தீவில் தமிழ் உட்பட 5 போதனா மொழி பள்ளிகள் உயர் வகுப்பு வரை போதிக்கப்படுகின்றன. அது போல் தமிழ் உட்பட 7 மொழிகளில் வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது இந்தியாவில் எங்குமே நடைமுறையில் இல்லாத ஒன்று.ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 6.15 முதல்  6.30 வரை தமிழில் பக்திப்பாடல்களுமாக தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழிதழ்கள்

தீவில் எத்தனையோ இதழ்கள் புற்றீசல் போல தோன்றி மறைந்தாலும் 1969ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாளன்று அன்றையத்தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடன் சுப.சுப்பிரமணியன் அவர்களால் தொடங்கப்பட்ட 'அந்தமான் முரசு' தங்கு தடையின்றி 41 ஆண்டுகளைக்கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தவிர அந்தமான் குரல் எனும் இதழும் அவ்வப்போது வெளிவருகிறது.

திரைப்படங்கள்

1977 ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த அந்தமான் காதலி முதல் 2009ல் ஜெகன் மோகினி வரை நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டன.பூப்பூவா பூத்திருக்கு, ராஜாளி, சிறைச்சாலை, பேசாத கண்ணும் பேசுமே, இயற்கை, சத்ரியன், கன்னத்தோடு கன்னம் வைத்து, உன்னை நினைத்து, என் மன வானில், என 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டன.எத்தனை அழகு நிறைந்தவை இந்தத்தீவுகள் என்பதை திரைகளில் காணும் போது இன்னும் வியப்பாகிறது.

2001ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழர்கள் 62,961 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 18 விழுக்காடு என்பதும், தலைநகர் போர்ட் பிளேயர் மற்றும் இதரத்தீவுகளில் வணிகம், ஒப்பந்தப்பணிகள் புரிவதில் முன்னிலை வகிப்போர் தமிழர்கள் தான் என்பதும் மிகப் பெருமையான, ஆறுதலான செய்தியாகும். இங்கு சட்ட மன்ற அமைப்பு இல்லை. மைய அரசின் நேரடிப்பார்வையில் துணை நிலை ஆளுநர் ஒருவரின் ஆட்சியே நடைபெறுகிறது. எனினும் உள்ளாட்சி மன்றங்களில் பொதுத்தேர்தலில் தேர்வு பெற்றவர்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 18 நகர மன்ற உறுப்பினர்களில் 9 பேர் தமிழர்கள்.

எத்தனையோ மொழியின மக்கள் வாழும் குட்டி இந்தியா என்று போற்றப்படும் இத்தீவுகளில் சாதிச்சங்கங்களுக்கு சிறப்பிடம் தரும் இனம், தமிழினமே!. தமிழக அரசியல் சூழ்நிலைகளும் அவ்வப்போது இங்குள்ள அரசியல் பிளவுகளுக்கும், அந்தமான தமிழர்களைப் பிரிக்கும் காரணியாகவும், இருந்து வருகிறது. ஒன்றுபட்ட சிந்தனையும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே அந்தமான் தமிழினத்தின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் வழி வகுக்கும்.

சனி, ஜூலை 10, 2010

குடும்பம்

ஒற்றை விரலால் கலைத்துப்போடும்
சிலந்தி வலையின் வன்மையை
சிக்கி உணவாகும் உயிர்கள் அறியும்

தொட்டதும் விரலில் படியும்
மென்மை நீரின் வன்மை
தீரா நதிகளில் நனைந்து, தேய்ந்து
வன்மை இழக்கும் பாறைகள் அறியும்.

 நீ
சிலந்தி வலையின் நூலெடுத்து
எனை சிறைப்படுத்தும் போதும்
கலைத்தெழ மனமின்றி கட்டுக்குள் நான்.
நதியலையால் தேய்த்து ஓடும் போதும்
விலக்கி விட மனமின்றி உனைத் தாங்கி நான்

கற்களால் சமைத்த சுவர்களை
வீடாக்கி
சின்ன அறையில் ஒரு உலகம் காட்டி
சிறைப்படுத்தி
இயல்பாய் எல்லாம் வெகு இயல்பாய்....

தீயாய்ப்பற்றும் நீயே,
அணைக்கும் நீராகி
என்னை
பரந்த வெளியின் சுதந்திரம் விட்டு,
உன்னில் சிறைப்படவே விரும்பும் கைதியாக்கி
தந்திரமாய் எல்லாம் வெகு தந்திரமாய்.....

சக்கரவாகத்திற்கு மழையாய்
பூக்களில் விலங்கிடும் உன்
அன்பின் வாசம்....


வெள்ளி, ஜூலை 09, 2010

இருவழிப்பாதை

நேசிப்பதை விட சுகமானது
நேசிக்கப்படுவது.
தனிமையான மனவெளியில் இன்றும்
என் கைகள் கோர்த்து துணைக்கு வருகிறது உன் நினைவு.

கூரையின் விளிம்பில்
வழியும் மழை நீர் அளாவுதல்
பனி படர்ந்த அதிகாலை
கனத்த போர்வையின் போர்த்தல்
சோர்ந்த போதுகளில்
சூடான தேனீர் அருந்தல்
பௌர்ணமி இரவில்
கடற்கரை வெளியில்
இப்படி
நான் வாழ்ந்த நிமிடங்களின் பட்டியலில்
கூடுதலானது உன்னோடான சந்திப்புகளும்

நீயற்ற பொழுதுகளை 
நீந்திக் கடக்க கட்டுமரங்களாயும்
முடிவற்ற நிலவெளியில்
நடந்து கடக்க கை கோர்த்து கதை சொல்லி நடப்பதுவும்
உன் நினைவுகள் 

பாதைகள் வேறு
பயணங்கள் வேறு என்ற போதிலும்
எனக்குத்தெரியும்
உன் மன ஆழத்தில் குமிழியிடும் என் நினைவுகள்
நேசமென்பது பெரும்பாலும் இருவழிப்பாதையாகிவிடுகிறது.


செவ்வாய், ஜூன் 29, 2010

வெளியில் தெரியாத வேஷங்கள்

உன் கோபங்களை பூக்களால்
எண்ணி எடுத்து
கூடையில் கொட்டிவைத்தேன்.
நீயோ
அதீதப்பிரியங்களின் எண்ணிக்கை என்றாய்.

உன் இதழ்கள் உதிர்த்த குறைகளை சோழிகளால்
எண்ணி எடுத்து
பல்லாங்குழிகளை நிறைத்து வைத்தேன்.
நீயோ
நிறைந்த அன்பின் அடையாளம் என்றாய்.

என் கொஞ்சலில் ஆரம்பிக்கும்
உன்னோடான என் உரையாடல்
ஒரு நாளும் முடிந்ததில்லை சுபமாய்.

எங்காவது கூட்டத்தில் பிரிந்து போனால்
எப்படி என்னை மீட்டெடுப்பாய்
என் முகமே பழக்கமற்ற நீ!

உன் புஜங்களைப் பற்றி
நிலவில் உலவி
நட்சத்திரங்களைத் தடவி
கண் மூடி கனவுகளில் சிறகடிக்க
உதறி எழும் உன் நிராகரிப்பில்
உலர்ந்து வெளிறும் என் கனவுகளின் வண்ணம்

இளமையைச் செலவழித்து
திரவியம் தேடும் உன் விழிகளில்
நரைத்துப் போயிருந்தது எனக்கான உன் அன்பு
உன் தேனிலவு அன்பின் தாக்கத்தில்
கானல் நதிக்குக் கரை கட்டிக் காத்திருக்கிறேன்.

என் வலிகளையும், வருத்தங்களையும்
உன் அன்பில் கரைக்கும் கனவுகளுடன் நான்.
மூளை அணுக்களில்,
ஞாபக மடிப்புகளில்,
கோடிகளைக் குறிவைத்து நீ
யாருமறியாத நமது வேறுபாடுகளை மறைத்து
அழுத்தமான அலங்காரங்களுடன் உன் பட்டத்து மகிஷியாய்....

ஞாயிறு, ஜூன் 27, 2010

தமிழுக்குத்திருவிழா இன்று! தமிழனுக்குத் திருவிழா என்று?


கோவையில் உலகத்தமிழர் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.உலகச்செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக, கோலாகலமாக தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு. உலகின் மூலை, முடுக்குகளில் இருந்து தமிழின ஆர்வலர்கள், தங்கள் பணிகளைத் தள்ளி வைத்து விட்டு, ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்தமான் தமிழர் சங்கத்தலைவர் திரு மிகு அ.க. போஜராஜன் ஐயா அவர்கள், அந்தமான் முரசு பத்திரிக்கை ஆசிரியர் திருமிகு . சுப.கரிகால் வளவன் அவர்கள் மற்றும்  இலக்கியமன்றம் சார்பில் மூத்த தமிழாசிரியை. கவிஞர். திருமதி. கமலா தோத்தாத்திரி அம்மா அவர்களும் அந்தமான் தமிழர் சார்பில் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.மாநாட்டில் சுப.கரிகால் வளவன் அவர்கள் "அந்தமானும் தமிழர்களும்" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்கள்.

கோவையில் படிக்கும் மகளை சந்திக்கவென்று, மே மாதம் கோவை சென்ற போது, மாநாட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது நகரம். நகரம் முழுதும் தோண்டப்பட்டும், பாலங்கள், நடைபாதைகள், சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் நகரம் ரணகளமாகிக்கிடந்தது.நான் சிறு வயதில் பார்த்த கோவையின் குளுமை குறைந்து இன்று வெக்கை அதிகமாய் இருந்தது.கோவையில் அந்நகரத்திற்கே உரிய "டெக்ஸ்டைல்" துறை தனது அந்தஸ்தை இழந்து, கணினி மென்பொருள் துறை வளர்ந்திருப்பதாய் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். மின் துண்டிப்பு வேறு அந்தத் தொழில் நகரத்தை உண்டு, இல்லை என்று அடித்துக்கொண்டிருக்க,அதை விட, பணியாளர்கள் தங்களின் பணி நேரத்தை அதற்கேற்றார் போல் சரி செய்து கொள்ள, அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.ஆனால் இது எதிலும் தனக்கு சம்பந்தமில்லை என்பது போல அரசின் "டாஸ்மாக்" கடைகள் அனைத்திலும் கும்பல். அந்த கும்பலில் அனைவரும் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் உள்ளவர்கள் போல் தான் இருந்தனர். ஒளித்து மறைத்துக் குடித்த காலம் மலையேறி, குடிப்பது கௌரவமாகக் கருதப்படும் காலம் இதுவோ?. அதோடு, டாஸ்மாக் கடைகளும், அனைவரும் புழங்கும் இடங்களில், குளிர்பானக்கடைகளைப்போல, திறந்து வைக்கப்பட்டிருந்தது. (அந்தமானில் இப்படி இல்லை) கோவை என்று இல்லை, சென்னையிலும் அப்படியே!

தமிழ்நாட்டில் குடிமைப்பொருள்களின் விலை மிகக்குறைவான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது, பெரிய ஆச்சரியம். ஒரு கிலோ அரிசி ரூ.1/. ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.எண்ணெய், மளிகைப்பொருட்கள், சீனி, கோதுமை அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு, மிஞ்சிப்போனால் ரூ.200/ க்குள் அடங்கிவிடும். இது எப்படி சாத்தியம்? தமிழக கஜானா நிறைந்து வழிகிறதா? அல்லது தமிழக அரசு ஓட்டு வங்கிகளான மக்களுக்கு சலுகை அளித்து, தமிழக அரசின் பதவி நாற்காலியை, நிரந்தரமாக்கும் திட்டமா? (அந்தமானில் ஒரு கிலோ அரிசி விலை ரூ. 8.80. குடும்ப அட்டைகளுக்கு கோதுமை, அரிசி, சீனி ஆகியவை மட்டும் வழங்கப்படுகிறது. சமையல் வாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.) எப்படியோ மக்கள் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறார்கள்.வீட்டுக்கு வீடு இலவசத் தொலைக்காட்சி. சிலர் ஒரே வீட்டில் திருமணமானதும், தமது மனைவி, மக்களோடு, தனிக் குடும்ப அட்டை வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு குடும்பத்திற்கு நான்கு தொலைக்காட்சிப்பெட்டிகள் வரை கிடைத்துள்ளது. இது பொறாமையால் வரும் எழுத்தில்லை. ஒரு மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறதே என்ற ஆதங்கம் தான். உழைப்பு உயர்வு தருமெனில், இலவசம் என்ன தரும்?

இன்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் இவர்கள் தொலைக்காட்சி வழங்குகிறீர்கள் இலவசமாய். சரி. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளிலாவது, மக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்கலாமே! அந்த தொலைக்காட்சிகள் வழி தமிழ் வளர்க்கலாமே! லாப நோக்கோடு இயங்கும் இந்தத் தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்கும் மனோபாவமும் நம்மவர்களிடமில்லை என்கிற வருத்தம் மேலோங்கியுள்ள நிலையில் தான் இதை எழுதுகிறேன்.அடுத்து சமச்சீர் கல்வி என்ற பெயரில் புத்தகங்களில் பாட மாற்றம். தனியார் பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கட்டணங்களை கட்டணச்சீட்டு மூலமும், மீதியை வெள்ளைப் பேப்பரிலும் எழுதி வசூலிக்க, சட்டம் போட்டும் மக்கள் அதன் பயனை அடைய முடியாது மயங்கும் நிலை.கல்வி நிறுவனங்களைக் குறை கூறிப் பயனில்லை. அவர்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியம் தர வேண்டுமே! நிறையத் தனியார் பள்ளிகள் CBSE பாடத்திட்டத்திற்கு மாறப்போவதாய் அறிவித்துள்ளார்கள்.குழந்தைகள் இன்று இருக்கும் புத்திசாலித்தனத்திற்கு, அவர்களின் ஆற்றல், திறமைக்கேற்ற கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறமை வளர்க்கும் வாய்ப்பினை வழங்க வேண்டுமேயன்றி, பாடச்சுமைகளைக் குறைப்பது அவர்களின் அறிவை மழுங்கடிக்கும் அபாயம் உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.உலகமயமாக்கலில், வாணிப, மற்றும் தொழில் நுட்பத் துறையில் உலகைச்சுற்றும் நம் இளையோரை அதற்குத் தகுதியாக்க வேண்டுமேயன்றி, மக்களை திருப்திப்படுத்தவென செய்யப்படும் இது போன்ற செயல்பாடுகள் இளையோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்துப் பாடங்களை, நகராட்சிப்பள்ளிகளிலேயே படிக்கலாமே! "நாங்கள் LKG யில் கொடுக்கும் பாடம், சமச்சீர் கல்வியில் ஒன்றாம் வகுப்பில் இல்லை" என்று ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கூறுகிறார். நகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் கொடுக்கப்படும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கூட தனியார் பள்ளிகளில் தரப்படுவதில்லை. இது அனைவரும் அறிந்ததே! சம்பளத்தைக் கொட்டிக்கொடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றலாமே!

தமிழினத்தலைவர்களே! தமிழை உலகச்செம்மொழியாக்கி விழா எடுக்கும் இதே நேரத்தில், தமிழனின் வாழ்வையும் உயிர்ப்போடு மீட்டெடுங்கள்.அவர்களின் வாழ்வியல் ஆதாரங்களை மீட்டுக்கொடுங்கள். தமிழனின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, உழைப்பை, சிந்திக்கும் திறனை மீட்டெடுங்கள். தமிழன் வாழும் வரை தமிழ் வாழும். 

ஞாயிறு, ஜூன் 20, 2010

அந்தமான் டு சென்னை

ஹாய்! ஹாய்! ஹாய்! நண்பரகளே! உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!.

வாழ்விடத்தை விட்டு, பிறந்த மண்ணிற்கு செல்லும் போது மனதில் இருக்கும் ஒரு வித சந்தோசம், உறவுகளை சந்திக்கப்போகும் ஆர்வம், பாசம், நேசம் பொங்க அவர்களை இருகரங்களில் ஆலிங்கனம் செய்யத்துடிக்கும் எண்ணம் இவற்றோடு, வாழ்விடத்தில் வீடு, மரம், செடிகள், வளர்ப்பு நாய்கள் இவற்றை விட்டுச்செல்லும் போது உண்டான மனக்கிலேசம் இப்படி ஒரு கலவையான உணர்வோடு கப்பல் ஏறினோம்.இந்த முறை சென்னை வரும் கப்பல் தாமதமானதால், விசாகப்பட்டினம் வரும் கப்பலில் வந்தோம். அமைதியான பயணம், வசதியான கேபின், சுவை குறைவான உணவு. விசாகப்பட்டினத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரசில் சென்னை வந்து, சென்னையிலிருந்து, சொந்த ஊர் செல்லத்திட்டமிட்டு, கோரமண்டல் எக்ஸ்பிரசிற்கு பயணச்சீட்டை, அந்தமானிலேயே முன்பதிவு செய்தோம். விதி! மூன்றாம் நாள் இரவு செல்ல வேண்டிய கப்பல், நான்காம் நாள் காலை ஏழு மணிக்குத் தான் துறைமுகத்தை சென்றடைந்தது. கோரமண்டலைத் தவறவிட்டோம். பயணச்சீடை ரத்து செய்து கழிவு போக, மேலும் பணம் கொடுத்து, காலை 9.30 மணிக்கு சென்னை செல்லும் ரயிலுக்கு, பயணச்சீட்டுப் பெற்று விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தோம். ரயில் தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த மலம், கெட்ட உணவுகள், அதைக் கொத்தித் தின்று கொண்டிருந்த பறவைகள்... சீ! இரண்டு மணி நேரம் காத்திருந்த நேரம் நரகம். அதோடு ரத்து செய்த பயணச்சீட்டின் தொகையில் நூறு ரூபாயை எங்களின் சம்மதம் இல்லாமலே எடுத்துக்கொண்டார் கவுண்டரில் இருந்தவர்.

முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டி ஏற்கனவே பிதுங்கி வழிய, மிகவும் கஷ்டப்பட்டு, எங்களின் பொருட்களை ஏற்றி, தரையில் உட்கார்ந்து கொண்டோம். ரயில் கிளம்பும் வரை சலனமற்று இருந்த சக பயணிகளில் சிலர், பாடிப் பிச்சை எடுக்க, சிலர் தங்களின் பொருட்களை விலை பேச, திடீரென கை தட்டும் சப்தம். சப்தம் வந்த திசையில், நல்ல ஆகிருதி, கவர்ச்சியான உடை, முழு முகப்பூச்சு அலங்காரங்களுடன் அரவாணியர். "நிக்கால்! பைசா நிக்கால்!"(பணத்தை எடு) என்ற மிரட்டல். ஒவ்வொரு ஆணிடமும் சென்று பணம் பெற்று, தராதவர்களிடம் அவர்களின் கன்னத்தில் அறைந்து, அவர்களின் முன் அசிங்கமான சேட்டைகள் செய்து பணம் பறித்தனர்.பணம் பறித்தவர்கள் அடுத்த நிலையத்தில் இறங்க, மறுபடி ஒரு புதுக்கும்பல். மறுபடி அதே கைதட்டல், மிரட்டல்.பலவந்தமாக பணத்தைப் பறித்துச்சென்றும் பயணிகள் வாளவிருந்தது ஆச்சர்யம். அவர்களும் தமிழர், தெலுங்கர்களிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ளாது, வட நாட்டில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் மக்களைத்தான் வேட்டையாடினர்.நம்மவர்களைப் பார்த்து  அக்கா! அண்ணா! சைடு ஓஜாவ்! (தள்ளிக்க) என்று சகஜமாய்க் கடந்து போனார்கள்.

 திருப்பூருக்கும், சென்னைக்கு கார்க்கம்பெனிகளுக்கும் வேலைக்கு வரும் வடநாட்டினர் அனைவரும் 14 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளவயதினர். ஒரிஸ்ஸாவில் ரயிலேறி, மூன்று நாட்கள் பயணம். வயிற்றுப்பிழைப்பிற்காக வரும் இவர்களிடம் இப்படி ஒரு அருவெறுப்பான தாக்குதல். காவல் துறையோ, பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. தமிழறியாத அவர்களிடம்," இந்த வயசுல அம்மா, அப்பாவ விட்டு சம்பாதிக்க வர்றீங்க! இத ஏன் அனுமதிக்கிறீங்க!. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து போட்டா பயப்படுவாங்கல்ல" என்ற போது, ஒரு புன்னகை தான் அவர்களின் பதில்.அரவாணியர் மதிக்கப்பட வேண்டியவர்கள். தமது திறமைகளை மேம்படுத்தி, உழைத்து முன்னேறி, எத்தனையோ அவமானங்களை சந்தித்து வாழும் திருநங்கையருக்குத் தலை வணங்கும் நாம், இப்படி அராஜகம் செய்யும் அரவாணியரைக்கண்டு அருவெறுப்படைந்தோம்.இவர்கள் ஒரு புறம்.

 தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பவர்கள் சிறிதும் லஜ்ஜையின்றி நம்மை மிதித்துக்கடந்து செல்வதும், வடநாட்டாரை இருக்கையை விட்டு எழுந்திருக்கச்சொல்லி மிரட்டி இருக்கையில் அமரும் அடாவடி மக்கள் சிலர். காலை 9.30 மணிக்கு ரயிலேறி, மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தடைந்தோம். சென்னை வரும் வரை உணவின்றி, கழிவறை வசதியின்றி அப்பப்பா! சென்னை ரயில் நிலையம் எத்தனை சுத்தம். எவ்வளவு அழகு. நான் இது வரை அனுபவித்த ரயில் பயணங்களில் மிகக்கொடுமையான பயணம் இது. இனிமேல் முன்பதிவு செய்யாத ரயில் பயணமா? மூச்!

ஞாயிறு, மே 02, 2010

விடுமுறை

நண்பர்களே! நாளை முதல் (03.05.2010) என் வலைப்பூக்களுக்கு விடுமுறை. ஜூன் மாதம் 16ம் தேதி வரை, பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

புதன், ஏப்ரல் 14, 2010

அந்தமானில் திரையரங்குகள்.திரை கடலோடியும் திரவியம் தேடச்சொன்ன தமிழர்களின் வழிவந்த நாம் திரையரங்கங்களில் திரவியம் தேடிய காலம் ஒன்றிருந்தது.இப்போது அந்தளவு ஒரு வெறியோ, ஆவலோ இன்றைய இளைய தலைமுறையினரிடம் உள்ளதா? தெரியவில்லை. திரைப்படத்துறை - ஒரு கனவுத்தொழிற்சாலை. காதலும், கற்பனையும்,சாகசங்களும் மூலதனங்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,நடிகர்கள் என ஒவ்வொருவரும்,ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொருவரும் விதவிதமாகத் திரித்து, பாணிகளை வகுத்து பணம் அள்ளும், தொலைக்கும் ஒரு சூதாட்டக்களம். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கவலைகள் மறக்கும் ஒரு களம். திரைகளில் தம்மைத் தொலைத்து, நிஜ வாழ்க்கை மறந்து, எதார்த்தங்களை ஏற்க மறுத்து கனவுகளிலும் கற்பனைகளிலும் மக்கள் தம் வாழ்க்கையைத் தொலைக்க வைத்த ஒரு ஊடகம். வெகு நாட்களாக மக்களின் பல்வேறு பொழுதுபோக்குகளில் சக்திவாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது.திரைப்படங்கள் நமது வாழ்க்கையில் இரண்டறக்கலந்து, நமது உணர்வுகளில், வெளிப்பாடுகளில், செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கலையாகக் காலத்திற்கேற்றபடியும், மக்களின் மனப்போக்குக்கும் ஏற்றபடி பரிணாம வளர்ச்சி பெற்று, புதிய பரிமானங்களைக்காட்டும் ஒரு தனி உலகம்.திரைப்படங்கள் நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஒன்றிப்போன ஒன்று.எந்த காலகட்டத்திலும் திரைத்துறை இளையதலைமுறையை அதிகம் வசீகரித்திருக்கிறது.

1980 களில் திரைப்படம் என்பது, வாரம் ஒரு முறை அசைவ உணவு, வாரம் ஒரு முறை சொந்த ஊர் பயணம், வாராவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் என்பது போல ஒரு கட்டாயமாக இருந்திருக்கிறது எங்களுக்கு. எந்தப்படம், யார் நடித்தது, என்ன கதை என்பது முக்கியமில்லை. திரையில் எதோ ஓடினால் சரி.மதியக்காட்சிக்கு சென்று திரையரங்கில் அனுமதிச்சீட்டு கிடைக்காமல் அங்கேயே இருந்து முதல் காட்சி பார்த்து விட்டு வந்து வீட்டில் அடிவாங்கிய கதை உண்டு எங்களின் குழந்தைப்பருவத்தில். இன்று மாலை திரைப்படம் போகலாமென்றால், பள்ளியிலிருந்து ஓடி, ஓடி வீடு வந்து வேலை முடித்து, கடைக்குட்டியின் வேலையைப் பகிர்ந்து, அவளை முன்னதாக சீட்டு வாங்க விரட்டி, நாங்கள் போகும் போது அவள் சீட்டோடு காத்திருக்க, அந்த நேர சந்தோசம், மனதில் பொங்கும் குதூகலம் அதை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அதன் பிறகு வீடு வந்து, அந்தப்பாடல்கள், வசனங்கள், கதாநாயகியின் உடையலங்காரம் குறித்த விமர்சனங்கள் சுழலும்.

யாருமற்ற என் தனிமைப்பொழுதுகளை திரைப்பாடல்கள் கொண்டு இட்டு நிரப்பிக்கொள்வேன். எத்தனை பேர் இருந்தாலும் கூட நமது மனதில் இருக்கும் வெற்றிடங்களை, எந்த உறவாலும் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தைக்கூட திரை இசை இட்டு நிரப்பி இருக்கிறது, நிரப்புகிறது.எப்போதும் எனக்குப்பிடித்த பாடல்களை சப்தமாகப் பாடிக்கொண்டும், சில வேளைகளில் முணுமுணுத்தும் பழகிப்போன எனக்கு திரை இசை இல்லையென்றால் என்ற ஒரு கற்பனையை நினைத்தும் பார்க்க முடியாது. நாற்று நடும், களையெடுக்கும், கதிரறுக்கும் பெண்கள், கட்டுமானப்பணிகளுக்கு செல்லும் சித்தாள் பெண்கள், குடும்ப வறுமையில் உழலும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் திரைப்படம் ஒரு சொர்க்கம். தமது கவலைகளையும், உழைப்பின் வலிகளையும், வறுமையின் தாக்கத்தையும் மறக்க வைக்கும் ஒரே மாமருந்தாக திரைப்படம் இருந்திருக்கிறது.இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி வந்ததும் தான் நிலை மாறியது.

8249 சதுரக்கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்தமானில் பெண்கள், குழந்தைகளுக்கு ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி.அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேயரில் ஐந்து திரையரங்குகளும், பம்பு பிளாட் எனப்படும் தீவில் ஒரு திரையரங்கும், கார் நிக்கோபாரில் ஒரு திரையரங்குமாக மொத்தம் ஏழு திரையரங்குகள் இருந்தன.இந்தி,ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.படப்பெட்டிகள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு திரையிடப்பட்டதாலும், மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாததாலும், வருமானம் போதியளவு இல்லாமையாலும் புதுப்படங்கள் பெரும்பாலும் திரையிடப்பட்டதில்லை.பெரும்பாலும் பெண்கள் திரையரங்குகளைத் தவிர்த்தார்கள். காரணம் தெரியவில்லை. ரூ. 5/ க்கு வீடியோ இழைகள் கிடைத்ததால் வேண்டுமட்டும் வீட்டிலேயே படம் பார்த்தனர். சனிக்கிழமை இரவு வெகு நேரம் படம் பார்த்துவிட்டு ஞாயிறு காலை தாமதமாக எழும் பழக்கம் நிறைய வீடுகளில் உண்டு. காலம் செல்லச்செல்ல மக்கள் முழுமையாக திரையரங்குகளைப் புறக்கணிக்க, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஒரு திரையரங்கு பெரிய நட்சத்திர தங்கும் விடுதியாக மாறியுள்ளது. குறுந்தகடுகள் புதுப்புதுப்படங்கள் மேற்சொன்ன நான்கு மொழிகளிலும் கிடைக்கிறது. இப்போது தீவுகளில் ஒரு திரையரங்கு கூட இல்லை.

எங்கள் வீடுகளில் பார்த்து முடித்ததும் நல்ல படங்களை சேமித்தும், பிடிக்காத படங்கள் மற்றும் பதிவு சரியில்லாத குறுந்தகடுகளை சுவர் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறேன்.வீட்டில் வேலை செய்தபடி, இன்று கொஞ்சம், நாளை கொஞ்சம் இப்படி கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து திரைப்படம் பார்த்துப் பழகிவிட்டதால், முக்கிய பூமி வந்தாலும் திரையரங்கம் சென்று படம் பார்ப்பதில்லை. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் இருந்து படம் பார்ப்பதாவது? சேச்சே! அந்த நேரம் ஒரு பதிவு போட்டால் எத்தனை பேரின் கழுத்தை வலிக்க அறுக்கலாம் என்ற புனிதமான எண்ணம் தோன்ற திரைப்படங்களைத் தவிர்த்து விடுகிறேன். நண்பர்களே! திரையரங்குகளே இல்லாத இந்தியாவின் ஒன்றியப்பகுதி எதுவென்று ஒரு பொது அறிவுக்கேள்வி உங்களின் நேர்முகத்தேர்விலோ, மற்றும் நுழைவுத்தேர்வுகளிலோ கேட்கப்படலாம். அதற்கான விடை : அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்று சொல்லுங்கள்,எழுதுங்கள். தேர்வு பெற்றவர்கள் எனக்கான பரிசை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அடுத்த மாதம் முக்கிய பூமி வரும் போது பெற்றுக் கொள்கிறேன்.சரி தானா?

( Photo by G Saravanan, Reporter,
  The New Indian Express)

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

டைட்டானிக் பயணங்கள்


எனது முதல் கப்பல் பயணம் சென்னையிலிருந்து அந்தமானுக்கு. அந்தமான் காதலி படம் பார்த்ததில்லை. அந்தமானைப்பற்றிய கற்பனை செய்வதற்கோ, கனவு காண்பதற்கோ அந்தமானைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு தீவு எப்படி இருக்கும் என்ற கற்பனை கூட கிடையாது.அந்தமானுக்கு பயணம் என்றதும் சிங்கப்பூருக்கு கப்பலில் பயணித்த என் சித்தப்பா," அந்தமான் வழியாத்தான் கப்பல் போச்சுப்பா! அந்தாத்தெரியுது பாருங்க அந்தமான் லைட் ஹவுஸ். இது தான் நம்ம நாட்டு எல்லையோட முடிவு அப்புடின்னு சொன்னாங்க. நீ ஒண்ணும் பயப்படாதப்பா! நா சிங்கப்பூர் போகையில ஏழு நாப்பயணம். மழையும் காத்தும். அதுனால வாந்தியும் மயக்கமும் பொரட்டிப்போட சாப்பிட முடியாம கஷ்டப்பட்டேன். அந்தமானுக்கு மூனு நாள் தானாம்" என்று தேற்ற சிங்கப்பூருக்கு ஓரிரு முறை மட்டும் கப்பலில் பயணித்த என் அத்தையோ, " கப்பல்ல சினிமாத்தியேட்டரு, நீச்சக்குளம்,ஹோட்டலு எல்லாம் இருக்கும். வீடு மாதிரி இருந்துக்கலாம்" என்றார்கள்.பேருந்து சாலையில் பயணிக்கிறது என்றால் கப்பல் கடலில். போ! பார்த்துவிடலாம் என்ற தைரியத்தில் கப்பல் ஏறியாகிவிட்டது.

அந்தமானில் பொருட்கள் விலை அதிகம் என்று அரிசி, பருப்பு,பலகாரங்கள் முதல் சமையல் பாத்திரங்கள்,துணிமணிகள் வரை பத்து அட்டைப்பெட்டிகள்.அதிலும் என் கணவரின் அண்ணி "முதமுதல்ல போறப்ப பத்தா கொண்டு போகாம பதினொண்ணாக்கொண்டு போ" என்று கூறி பொரியரிசி மாவு, புளியோதரை, பழங்கள் என்று ஒரு சுமை கூட நான்கு சக்கர வாடகை வாகனம் பிடித்து, சுமைகளை ஏற்றி, உறவுப்பட்டாளத்துடன் சென்னை துறைமுகம் வந்தால், "உவ்வே! சீ! இது தான் கப்பல் ஏறுற இடமா?" அசிங்கமாய்,குப்பையாய், வெற்றிலை எச்சிலும், சிகரட் மீதங்களும் இறைத்து காலணி அணிந்து நடக்கும் போதே அருவெறுப்பாய் இருந்தது. "நகை பத்திரம்! இறங்கும் போது சுமைகள எண்ணி இறக்கிக்கங்க! கப்பல்ல பாத்து இருந்துக்க! இப்படியான உறவுகளின் ஏக அறிவுரைகள் காதில் ஏறவில்லை.

1991ல் டைட்டானிக் படம் வந்துவிட்டதா தெரியவில்லை.ஆனால் எட்டாம் வகுப்பின் இலக்கணப்புத்தகத்தில் கடைசிப்பக்கத்தில் டைட்டானிக் கப்பலின், பயணம் முதல் விபத்துக்குள்ளானது வரை, பயணிகளின் கடைசி நேர உரையாடல்களைக் கண்ணீர் மல்க படித்த ஞாபகம் மனதில் சுழன்றது.கப்பல் ஏறியாகிவிட்டது. M.V.ஹர்ஷவர்த்தனா என்பது அந்தக்கப்பலின் பெயர்.கப்பலில் பங்க் வகுப்பு பயணச்சீட்டு. கணவருக்கு பணி நிரந்தரமாகவில்லை என்பதால் போக்குவரத்து செலவு அலுவலகத்தில் கிடைக்காது. ஆகவே மேல்வகுப்பில் பயணம் செய்ய இயலாது ரூ.114/ல் கடைசி வகுப்பில் பயணம் செய்தோம்.கப்பலில் இருந்து பார்த்த போது சென்னை மாநகரின் விளக்குகள் மின்ன, கப்பலின் வெளிப்புறத்தில் சமுத்திர அலைகள் சப்தமாய் அடித்துத் திரும்ப பழைய படத்தின் கதாநாயகி போல் கடலலைகள் என்னை வாழ்த்தி வழியனுப்புவதாய் கற்பனை செய்து கொண்டேன். பதினோரு மணி வரை கப்பலின் மேல் தளத்தில் காற்றுவாங்கி விட்டு வந்து படுக்கையில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கி கனவில் ஆழ்ந்த போது,இருக்கையை யாரோ இழுப்பது போன்ற உணர்வில் சட்டென விழிக்க, பக்கத்து இருக்கை கல்லூரி மாணவிகள், " கியாகுவா? (என்னாச்சு), ஜஹாஸ் சுட்தே சமய் ஹில்த்தா ஹை! (கப்பல் விடுற நேரம், ஆடும்!)" என்று கூற எனக்கு ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழிக்க அவர்கள் கொல்லென்று சிரிக்க எனது கணவர் புரியவைத்தார்.கப்பல் ஆட ஆட இலக்கணப்புத்தகத்தின் டைட்டானிக் கதை மனதில் விஸ்வரூபம் எடுத்தது.சிறு வயதில் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு ரயில் பயணம், வளர வளர அறந்தாங்கி முதல் காரைக்குடி வரை பேருந்துப்பயணம்.எப்போதோ சுற்றுலா போன போது கன்னியாகுமரியில் படகுப்பயணம். இப்படி இருந்த நம்மை இப்படி அந்தமானுக்கு சுருட்டி அனுப்பும் உறவுகளின் மீது கோபம், உறவுகளை விட்டு பிரிந்து போகும் துயரம் கண்ணீராய் வழிய விடிய விடிய தூக்கம் போனது. விடியலில் உறக்கம் வந்த போது குழந்தைகளின் ஆரவாரமும், ஊரிலிருந்து திரும்பும் பெண்மணிகள் தங்கள் மாமியார்- நாத்தனார்களைப்பற்றிக் கூறி தமது கணவரை இடித்துரைக்கும் பேச்சுக்கள் இவற்றை மிஞ்சும் வாந்தி எடுக்கும் சப்தங்கள்.பல் துலக்கி கப்பலின் மேல் தளத்திற்குப்போன போது வழியெங்கும் ஒரே புளித்த நாற்றம். வாந்தி, வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவின் மிச்சம் இறைத்துக்கிடக்க ஆயாசமாய் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்,கடல்,கடல் தான்.கடலலைகள் கப்பலின் சுற்றுச்சுவர்களை டொம் டொம் என்று அடிக்கும் ஒலி.உப்புக்காற்று. அங்கிருந்த இருக்கை ஒன்றில் சுருட்டிப்படுத்துக் கொண்டேன்.இப்படியாக மூன்று நாட்கள் கடந்து நான்காவது நாள் காலை சிறு சிறு தீவுகள் கண்ணில் பட, ஹை! ஊர் வந்திருச்சு! என்று குதூகலிக்க எழுந்து உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக நான்காவது நாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு அந்தமான் துறைமுகத்தில் வந்திறங்கிய போது கண்ணில் பட்ட தூரத்து பசும் தீவுகள், துறைமுகத்தின் சுத்தம் பார்த்த போது கையில் இருக்கும் சுமைகளைத் தூக்கி எறிந்து விட்டு கன்னங்களில் கைவைத்து இயற்கையை ரசிக்கத்தூண்டிய மனதை அடக்கி வீடு வந்தோம்.

அதன் பிறகு 1996ம் ஆண்டு டைட்டானிக் படம் பார்த்துவிட்டு கப்பல் பயணம் இன்னும் புளிகரைத்தது. காற்று அதிகம் இருக்கும் போது பட்டென அடிக்கும் சன்னல் கதவுகள், கப்பலின் ஆட்டம் மனம் படபடக்க ஆரம்பித்து விடும். நம் மக்களின் மிகுந்த பொறுப்புணர்வில் கப்பல் விட்டு இரண்டாம் நாள் குளியலறை தண்ணீர் பங்க் பகுதியில் புகுந்து விடும்.கப்பலில் ஓட்டையோ இவ்வளவு தண்ணீர் வந்து விட்டதே என்று மனம் திடுக்கிடும்.இரவெல்லாம் தூங்காமல் குழந்தைகளைத் தடவியபடி படுத்திருப்பேன்.அப்போது தான் என் கணவர், ”அட! நல்ல ஆளு நீ! அப்ப நிலமை வேற.இப்ப நம்ம கடற்படை கப்பல்லாம் ரொம்ப வேகம். ஏதாவதுன்னா பொருட்கள் போனாப்போகுமே தவிர உயிரிழப்பெல்லாம் கண்டிப்பா வராது” என்று சொன்ன பின் தான் மனம் சமாதானமடைந்தது. கப்பல் சிப்பந்திகள் பொறுப்பாய் சுத்தம் செய்யச்செய்ய நம்மவர்கள் அசுத்தம் செய்வதைத் தொடர்வார்கள்.கப்பல் துறையை தீவு நிர்வாகம் மானியத்தில் இயக்க மக்கள் பொறுப்பின்றி கப்பலில் கழற்ற முடிந்த பொருட்களையெல்லாம் கழற்றி எடுத்துச்செல்வார்கள்.எப்பேற்பட்ட சொர்க்கத்தையும் எப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவார்கள் நம்மவர்கள் என்பதற்கு அந்தமானுக்கு விடப்படும் கப்பல்கள் ஒரு உதாரணம். என் மகளோ sea sickகினால் கப்பல் ஏறி, கப்பலை விட்டு இறங்கும் வரை எச்சில் கூட விழுங்க மாட்டாள். சே! இனி மேல் கப்பலில் வரவே கூடாது. எப்படியாவது விமானத்தில் தான் வர வேண்டும் என்று உறுதி எடுக்க அது பிரசவ உறுதியானது. நமது ஆசைகளை நமது பொருளாதாரம் தானே நிர்ணயிக்கிறது.இன்று கப்பலில் பங்க் வகுப்பில் இருந்து காபின் வகுப்பில் பயணம்.கோடை விடுமுறைக்கு முக்கிய பூமி வரும் போது மழை காற்று இருக்காது. அதனால் கப்பல் பயணம் நன்றாக இருக்கும். ஜூன் மாதம் திரும்பும் போது பருவ மழை ஆரம்பித்துவிடுமென்பதால் கடலில் காற்றும் அலையும் அதிகமாக இருக்கும்.கப்பல் ஆடும். ஆகவே, திரும்பும் போது விமானப்பயணம்.இப்போதெல்லாம் கப்பல் பயணம் பயத்தையோ, அலுப்பையோ, சலிப்பையோ தருவதில்லை.மாறாக ரசிக்கிறேன். அந்தமான் மண்ணை நான் மிகவும் நேசிக்கிறேன். அந்தமானுக்குத் தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும் இந்தக்கப்பல்கள் என் வரை தேவதூதர்களைப்போல. அந்தமான் என்ற சொர்க்கபுரியை அடைய இந்த ஒரு சிரமம் கூட எடுக்கவில்லையென்றால் எப்படி?

ஞாயிறு, ஏப்ரல் 04, 2010

பிரதிகள்

ஆண்டாண்டு காலமாய்
அடங்கி ஒடுங்கி சுயமற்று சிதைந்து ஏவாளின் பிரதியாய் நான்
ஆதிகாலம் தொட்டு
ஆளுமையை ஆப்பிளாக்கித்தரும் ஆதாமின் பிரதியாய் நீ

அரண்மனைச்சாளரங்களினூடே
நட்சத்திரம் ரசித்த போதுகளில் தொடங்கி
அந்தப்புரத்தில் உறவாடிய அந்த நாட்களில்
உறவிற்கு வெற்றுப்பதுமையாய் நான்
போரில் நீ புறமுதுகிட்ட போது
அடிமையாய் அந்நியனின் கரங்களிலும்
அந்தப்புரத்தில் நெருப்பின் நாக்குகளிலும் நான்

அடுத்து வந்த நாட்களில்
அடுப்பூதும் பெண்களுக்குப்படிப்பெதற்கு என்று
எழுது கோல் மறுக்கப்பட்ட கரங்களில்
ஊதும் குழலும், குடமும்,குழந்தைகளும்
எச்சில் பணிக்கங்களும், முதியோரின் பணிவிடைகளுமாய் நான்

பட்டம்,அலுவலகம்,
சட்டம்,சம்பளம் சாதித்தும் கூட
அடுப்படியும், அனந்த சயனத்துடன் கூடி அலுவலகம்
ஓடி ஓடிக் களைத்து
எனக்கான முகங்களும், வேஷங்களும் எண்ணிக்கை கூடி
என்ன வாழ்க்கை இதுவென வெதும்பிக் களைத்து நான்.

எல்லைகள் விரிந்தாலும், யுகங்கள் கடந்தாலும்
அடிப்படைகளில் மாற்றமின்றி ஆதிமனிதனின் இயல்புகளில் நீ

இன்று
வெறுப்பு புதைத்து கரியாகி
சாது மிரண்டு வனமழிக்கும் நெருப்பாய்,
சாகசம், வன்மம், வேஷம்,
ஆதாமை அடிமையாக்கும் அனைத்து குணங்களுடன் நான்.

ஆதாமின் விலா எலும்புகளில் ஏவாள் என்பது கடந்து
அவனின் முதுகுத்தண்டை நிமிர்த்திப்பிடிக்கும்
ஏவாளாய் ஆசை கொண்டு,
ஒற்றைப்புள்ளியிலும் ஒன்றமுடியாத
உனக்கும் எனக்குமான
உறவின் நெருக்கத்தை நினைத்துப்பார்க்கிறேன்.
உன்னிடம் என்னை இழந்ததற்காகவோ
என்னிடம் உன்னை இழந்த
பரஸ்பர இழப்பின் காரணத்திற்கோ
ஒன்றிக்கிடக்கும் பழமைகளின் வேர்ப்பிணைப்புகளை உதறி
மரபணுக்களைத் திருத்தி
பெண்ணிற்கு வரைவிலக்கணம் சொல்லும் புராண, இதிகாசங்களை எரித்து
பொதுவெளிகளில் சுதந்திரமாய் நான்
ஆணென்றால் இப்படி
பெண்னென்றால் இப்படி என்னும் கற்பிதங்களைக்கடந்து
வன்மங்களோ, வன்முறைகளோ இன்றி நீ

பூமியெங்கும் நந்தவனங்கள் வாசம் பரப்ப
இனமழித்து, நிறமழித்து, உருவழித்து உயிர்களாய் உலாவர,
உன் கரங்களில் எனக்காக பூக்கள் மட்டும்
என் கண்களில் உனக்கே உனக்கான காதல் மட்டும்

செவ்வாய், மார்ச் 16, 2010

தண்ணீர்,தண்ணீர்.


உலக தண்ணீர் தினம் அனுசரிப்பிற்காக இந்தப்பதிவு.

சந்தனமுல்லையின் தொடர் அழைப்பிற்கிணங்கி எழுதப்படும் பதிவு. முல்லை! அழைப்பிற்கு நன்றி!

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர்.இறைவன் அளித்த ஐம்பூதங்களும் பூமியின் உயிர்கள் இன்புற்று வாழவே.இந்த ஐம்பூதங்களில் ஒன்று தனது பவித்திரத்தை இழந்தாலும் அதன் விளைவுகளை பூமியின் உயிர்கள் அனுபவித்தே தீரவேண்டும்.எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுவோம் என்கிறது கீதை.ஆனால் இந்த ஐம்பூதங்களைப் பாழ்படுத்தும் விஷயத்தில் மட்டும்,கொடுப்பவரும்,சாட்சிகளும்,பார்வையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.ஆனால் அது பற்றி சிந்தனையின்றி ஓடிக்கொண்டிருக்கும் நாம்.பணமும் செல்வமும் ஒரே குறியாக யாரோ செலுத்தும் இயந்திரங்களாய் நாம்.சில நகை சேர்க்கும் பெண்கள்,சிக்கனத்தின் பேரால் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தமாட்டார்கள்.அந்த நகைகளை அணிய உடல் வேண்டுமே என்று யோசிப்பதில்லை.அப்படித்தான் இருக்கிறது ஐம்பூதங்களை சேதப்படுத்துவதும்.ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.வளியும்,வெளியும் சேதமுற்றால் நிலமும்,நீரும் திரியும் என்பது இயற்கையின் விதி,நாம் அனைவரும் அறிந்ததே!

எங்கள் ஊர்களில் வீட்டுக்கு வீடு கிணறு உண்டு.அதோடு குடிதண்ணீர் குழாய் இணைப்பு உண்டு.அதனால் தண்ணீர் பஞ்சமில்லை.ஆனால் சென்னையில்? முன்னாட்களில் சென்னையில் கிண்டி அம்பாள் நகர்,காந்தி நகர் பகுதியில் "மெட் ரோ தண்ணீர்" இணைப்பு இல்லை.அந்தந்த பகுதி இளைஞர்கள் காசு வசூலித்து பெரிய கொள்கலன் களை நிறுவி,அதில் தண்ணீர் நிரப்பி,பின் குடத்தை எண்ணி, எண்ணித் தண்ணீர் தருவார்கள்.இது குடிக்க லாயக்கற்றது.பிறகு குடி தண்ணீருக்கு வெகு தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வேண்டும்.குளிப்பது,கழிப்பறை உபயோகத்திற்கு,பாத்திரம் துலக்க,துணி துவைக்க,குடிக்க அளந்து,அளந்து....அப்பாடி சென்னை வாழ்க்கை நகர்ப்புற வளர்ப்பில் வந்தவர்களால் தான் முடியும்.நம்மால் முடியாது.அதன் பிறகு கப்பல் விட்டிறங்கி நேரே சொந்த ஊர்,பிறகு வரும்போது இரண்டு நாள் தங்குவதுண்டு,அதுவும் மனதில் சீ இது ஒரு ஊரா? என நொந்த படி.சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு பெருகும் மக்கள் தொகை ஒரு காரணம்.மேட்டுக்குடி மக்களின் பொறுப்பின்மை ஒரு காரணம்.சாதரண மக்களின் அலட்சியம் ஒரு காரணம்.கோடி கொடுத்தாலும் சென்னை வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம்.பழங்கஞ்சியும்,கந்தலாடையும் கிடைத்தால் போதும்.எந்த மன உளைச்சலும்,தாழ்வுமனப்பான்மையுமின்றி சந்தோசமாக வாழத்தயார்.

அந்தமானில் பெரும்பாலும் தண்ணீர் பஞ்சமில்லை.அந்தமான் நிகோபார்த்தீவுகள் தென் மேற்குப்பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை என இரண்டு பருவ மழையில் நனையும் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை. மே மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும்,நவம்பர் முதல் ஜனவரி வரை வடகிழக்குப்பருவமழையும் பொழியும்.வருடத்தில் சராசரியாக 3000 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும்.இந்தத் தீவுகளின் மொத்த நிலப்பரப்பான 8249 சதுரக்கிலோ மீட்டரில் 92% நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள்.இங்கு தீவுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய ஒரே ஒரு அணை (Dhanikkaari Dam) மட்டும் உள்ளது. இங்கு அடித்துப்பெய்யும் மழையில் ஒருசில நாட்களில் அணை நிறைந்து மீதமுள்ள தண்ணீர் கடலுக்குத்தான் போகும்.அதோடு இந்த அணை கட்டிய நாள் முதல் இன்றளவும் தூர் வாராமல் இருப்பதால் கொள்ளளவு குறைந்து,மக்கள் தொகை அதிகமாக பிரச்சினைகள் ஆரம்பம்.கோடை விடுமுறைக்கு தீவின் பெரும்பாலான மக்கள் முக்கிய பூமி செல்வதுண்டு.அப்போது தீவின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும்.கோடையில் தண்ணீர் பஞ்சத்தால்,  பள்ளிகளின் விடுமுறையை நீட்டிப்பதும் உண்டு இரண்டாவது பருவ மழை பொய்த்தால் தீவுகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.கிணறுகள் உண்டு என்றாலும் வாசலை விட்டிறங்காத மக்களின் நிலை? ஆனால் நகராட்சி தண்ணீர் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து தெருத்தெருவாக வினியோகம் செய்வார்கள்.

இந்த ஆண்டு இரண்டாவது பருவமழை பொய்க்க, வந்தேவிட்டது தண்ணீர் பஞ்சம்.வாரத்தில் இரண்டு முறை தான் இனி குழாய்த் தண்ணீர் கிடைக்கும்.அதற்கும் ஒரு வழியுண்டு.நாங்கள் குடியிருக்குமிடம் பெரியமனிதர்கள் இருக்கும் பகுதி.ஆகவே நகராட்சிப்பணியாளர்கள் மணிக்கணக்கில் தண்ணீர் திறந்து விடுவர். அண்டா,குண்டா,ட்ரம் இப்படித் தண்ணீரைப்பிடித்து நிரப்பி வைத்துகொள்வோம்.அப்படித்தான் 2004ம் ஆண்டில் சுனாமியின் போது ஒரு வாரம் தண்ணீர் வராத போது சமாளித்தோம்.அதோடு வாசலில் கிணறு இருக்கிறது.எட்டி முகர்க்கும் படி.அந்தவகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரிய மாசு என்று சொல்லும்படி ஒன்றுமில்லை என்றாலும் மழைக்காலத்தில் வைரஸ் நோய்கள் தண்ணீரால் வருவதுண்டு.தண்ணீரை அதன் அருமை புரியாது குடி நீரைக் கழிவு நீர்க்கால்வாயில் விடும் மக்கள் இங்கு தான் காணக்கிடைப்பார்கள்.சுற்றிலும் கடல்.ஆனால் அந்த நீர் ஒன்றுக்கும் உதவாமல் போனாலும் கவலைப்படுமளவு தீவு நிர்வாகம் விடுவதில்லை என்பதே மக்களின் அலட்சியத்திற்கு காரணம்.

அந்தமான் பொதுப்பணித்துறை வீடுகளின் கழிவு நீர் கால்வாய்களை இணைத்து கடலில் விடுவதால் சாலைகளில்,தெருக்களில்,சந்துகளில் சாக்கடை நீரையோ,மழை நீர் தேங்கியோ பார்க்கமுடியாது.கொஞ்சம் முயன்றால் தீவை சொர்க்கமாக,சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.நகராட்சி பணியாளர்கள் தெருக்களை சுத்தம் செய்து நகர,அடுத்த நிமிடம் குழந்தைகள்,பெண்களின் உபயோகித்த நாப்கின் கள்,கழிவுகள்,குப்பைகளை தங்கள் வீடுகளில் இருந்து வீசி எறிந்து அது கழிவு நீர்க்கால்வாயில் கலந்து கடலுக்குப்போகும்.சமயங்களில் அடைத்து சாலைகளில் நீர் பெருகும்.குப்பையை பொறுப்பற்றுப் போடும் பொதுமக்கள் தண்டிக்கப்பட்டால் சுத்தமாக பராமரிக்க இயலும்.நண்பர்கள் அனைவரும் எழுதி உள்ள அளவு உணர்ச்சி பொங்க எழுத முடியாமைக்கு இங்குள்ள நிலவரம் காரணம்.டில்லி தேசியத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தில் தண்ணீரைத் தெளித்து பாத்திரம் துடைப்பது,குளிப்பது,தண்ணீரை பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒளித்து வைப்பது பார்த்து இப்படியும் வருமா என்று யோசித்து அடுத்த கணமே அலட்சியமாய் கடந்து போவதுண்டு.கங்கையின் நிலவரம் தொலைக்காட்சியில் பார்த்து காசி போகும் ஆசையே வெறுத்தது.

தண்ணீர் நமது ஜீவாதாரம்.காடுகள் நமது வாழ்வாதாரம். தேடல் வாழ்வில் அவசியம் தான்.ஆனால் தேடல் மனிதனின் தேவைகளைப் பெருக்குகிறது.தேடித்தேடி அழிவை அழைத்து வருகிறோம்.மரண பயமும்,நோயும் மனிதனை பயமுறுத்தும் அளவு வேறெந்த உயிரினத்தையும் பயமுறுத்துவதில்லை.பூமியை அழிப்பதில் முழுமையான பங்கு வகிப்பவனும் மனிதனே.அந்தமானில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து வைத்த ஒரு நற்செயலை ஆசிரியர்கள் தொடர்கிறார்கள்.அது என்ன தெரியுமா? வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்ந்தவர்களிடம் சொல்லித் தோற்றவர்கள் பிஞ்சுகளிடம் ஒவ்வொரு வருடமும் ஒரு மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி,யார் நன்றாக வளர்க்கிறார்களோ அவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கின்றனர். அவர்களின் ஊக்கத்தைச்சொல்ல வேண்டுமா? அதோடு இங்கு மரம் வேண்டிய இடங்களில் வளர்ப்பதையும்,வேண்டாத இடங்களில் இருந்து நீக்குவதையும் பொதுப்பணித்துறை சிறப்பாகச்செய்கிறது.காடுகளை வனத்துறை பாதுகாக்கிறது.இந்தியாவில் தேசியமாகிப்போன லஞ்சலாவண்யங்களால் நடக்கும் முறைகேடுகளில் பெரிய மனிதர்,அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு கதவுகளாக,ஜன்னல்களாக,மரச்சாமான் களாக அந்தமான் தனது காட்டுவளத்தைத் தாரை வார்த்துக் கொண்டுதானிருக்கிறது.நடக்கட்டும்.நாங்கள் சாமான்யர்கள்.வேறென்ன செய்யப்போகிறோம்? பார்வையாளர்களாயும்,ஊமை சாட்சிகளாயும்இருப்பதைவிட்டு !.

வெள்ளி, மார்ச் 12, 2010

விளிப்பு


விளித்தல் என்பது அன்றாட வாழ்க்கையில், அவசர உலகில், மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்,சொல்லாடல் என்றாலும் கூட நாட்கள் கடந்தும் அந்த விளிப்பில் பிரதிபலித்த உணர்வுகளை மீட்டெடுக்கும் போது மனதை ஏதோ செய்யுமே அதை உணர்ந்ததுண்டா? (ஆமா! பதிவுக்கு தலைப்பு கிடைக்கலியா இன்னிக்கு?) ஒவ்வொரு மணித்துளியிலும் எங்கோ யாரோ யாரையோ, எதற்காகவோ விளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

.ஒரு தாய் தன் குழந்தையை செல்லப்பெயரில் அழைக்கும் விளிப்பிலிருந்து,ஒரு கணவன் தன் மனைவியின் பெயரை பாதி சுருக்கி பிரத்யேகமாக அழைக்கும் விளிப்பு,தன் கணவனை மனைவி அழைக்கும் விளிப்பு,உறவுகளின் விளிப்பு,முதலாளி தனது வேலைக்காரர்களை அழைக்கும்விளிப்பு,முகமறியாதவரை,நண்பர்களை,உறவுகளை,பேருந்திற்கோ,திரையரங்கிலோ காத்திருக்கும் போதோ,பேருந்து வழித்தடங்களில் நிறுத்தப்படும் தரிப்பிடங்களில் யாரோ யாரையோ விளிக்கும் போதோ, அந்த விளிப்பில் இருக்கும் அன்பு,அதிகாரம்,இறைஞ்சல்,குழைவு,அதட்டல்,அவசரம் போன்ற உணர்வுகளை நீங்கள் உணர்ந்ததோ அன்றி உங்களை வீடு வந்ததும் இம்சித்ததோ உண்டா?

பொதுவாக பெண்கள் கணவரை "என்னங்க" என்றழைப்பதை சௌகர்யமாகக் கருதுவார்கள்.ஒரு கேள்வி வார்த்தை எப்படி நம் பெண்களின் வாயில் மென்மையாய்,குழைவாய்,அதட்டலாய்,அவசரமாய்,பதட்டமாய் விதவிதமான நவரசங்களில் ஒலிக்கும் போது வியப்பாய் இருக்கும்.எப்படி இந்த வார்த்தை விளிப்பு வார்த்தையாய் ஆகியிருக்கும் என்று நான் பல நேரம் யோசிப்பதுண்டு.(ரொம்ப அவசியம்!).என் அம்மா,நான்,என் தங்கைகள் மற்றும் எங்கள் உறவினரெல்லாம் இப்படித்தான் அழைப்பது அருகில் இருக்கும் போது.கொஞ்சம் தொலைவில் இருந்தால் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அவர்களின் அப்பா என்று அழைப்பது வழக்கம்.என் அப்பாவை என் அம்மா நான் மூத்த குழந்தை என்பதால் "சாந்தி அப்பா" என்றழைக்க எனக்கு பெருமை பிடிபடாது.என் தங்கைகளோ ஆமா அவளுக்கு மட்டுந்தான் அப்பா எங்களையெல்லாம் தெருவில் கிடந்தா தூக்கி வந்தீர்கள் என்று முறைப்பார்கள்.அம்மாவின் பழக்கம் என்னையும் தொற்ற என் கணவரை என் மகளின் பெயரோடு அப்பா என்று சொல்லி அழைக்க அருகில் இருக்கும் மலையாளத்தோழி சண்டைக்கு வந்துவிட்டார்."எனக்குத்தெரிந்தவரை தமிழ்ப்பெண்கள் கணவரை அத்தான்,மாமா என்றழைக்கிறார்கள்.நீ தான் இப்படிக்கூப்பிடுகிறாய் அண்ணனை,இனிமேல் அண்ணனை அத்தான் என்றோ,மாமா என்றோதான் கூப்பிட வேண்டும்" என்று ஆணையிட என் கணவர் நெளிய ரசனையாய் இருந்தது.

மலையாளப்பெண்கள் கணவரை "சேட்டன்" என்கிறார்கள்.தெலுங்குப்பெண்கள் "பாவா" என்றும், வங்காளி மற்றும் இந்திப்பெண்கள் "சுனொஜி" என்பார்கள்.இந்த சுனொஜி என்பது கேளுங்க என்ற அர்த்தத்தில் வரும். கிட்டத்தட்ட நம்மூர் "என்னங்க" தான்.இப்போதெல்லாம் நம் பெண்கள் பெயர் சொல்லி,பெயரோடு 'டா' போட்டு அழைப்பது வழக்கமாகி விட்டது.இது அவர்களின் அந்தரங்கம்.(அப்புறம் நம்மளுக்கும் படுக்கையறையில காமிரா வச்சவுங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஹி,ஹி).

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களின் பக்கத்துக்கடை மாமா தன் சிப்பந்தியைக் கோபமாக "சைத்தானுக்குக் கொள்ளி வச்சவனே" என்றழைப்பார்.அர்த்தம் புரியாமல் இது என்ன புதுப்பெயர் என்று கேட்க அவரோ உன் அப்பாவிடம் கேள் மருமகளே என என் அப்பாவும் 'ம்ச்' என்று ஒரு வார்த்தையில் மறுதலிக்க என் அம்மாவிடம் அரித்ததில் என் அம்மா கூறினார்.எனக்குத் தெரிந்தவர் தன் மனைவியை "அடியே" என்றழைப்பார்.கோபம்,அன்பு,அதட்டல் அத்தனையும் நேரத்திற்கேற்றபடி அந்த "அடியே" ஒலிக்கும்.எழுத்தாளர் திருமதி.ரமணிச்சந்திரன் கதைகளில் கணவன் மனைவியை வித்தியாசமாக அழைப்பதை,அதை அவள் அனுபவித்து சிலிர்ப்பதை ஒரு அத்தியாயமாக்கியிருப்பார்.

நாம் நம் குழந்தைகளை மகளே என்றோ மகனே என்றோ அழைக்கிறோமா? பெரும்பாலும் மகளைப் பெயர்சொல்லி அல்லது செல்லப்பெயரில்.மகனை பெரும்பாலும் தம்பி என்கிறோம்.தம்பி என்பதும் ஒரு உறவு முறை.உடன் பிறந்த இளையவனைக் கூறும் உறவு முறையில் பெற்ற பிள்ளையை அழைப்பதை நாம் உணர்கிறோமா? பெரும்பாலும் மற்ற மாநில மக்கள் அவரவர் மொழியில் மகனே,மகளே என்றழைப்பதுடன் அடுத்தவர் குழந்தைகளையும் அப்படியே அழைக்கிறார்கள்.

எங்காவது,யாராவது தன் குழந்தையை,மனைவியை,நட்பை,சிப்பந்தியை அழைக்கும் போது நமது நினைவுகளைக் கிளறிவிட்டு அதில் மூழ்கி விடுவதும்,தற்போது என்னருகில் இல்லாதவர்களின் அன்பான விளிப்புகள் மனதில் தோன்றும் போது கண்ணீரும்,அதட்டலான,வசைபாடிய விளிப்புகள் கோபத்தையும் வரவழைக்கும்.ஆனால் பொது இடங்களில் பிச்சைக்குக் கை நீட்டும் முதியோர்,குழந்தைகள்,குழந்தையோடு ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் தீனமான விளிப்பும்,பாவமாய் தயங்கித்தயங்கி அடிக்குரலில்,தன் உடலைக்குறுக்கி உதவி கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர் குரலும் மட்டும் மனதை என்னவோ செய்யும்.தூக்கம் பிடிக்காது மனம் அரற்றும்.தூக்கத்தில் கனவில் கூட தீனமாய் ஒலிக்கும்.இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? வலியோர் மெலியோரை தரக்குறைவாய் அழைக்கும் வார்த்தைகள் மனதில் வலியேற்படுத்தும்.

 ஆமாம் நண்பர்களே! உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை எப்படி அழைப்பார்?நீங்கள் அவரை எப்படி அழைப்பீர்கள் சொல்லுங்களேன்.

புதன், மார்ச் 10, 2010

வாசல் திண்ணையில்.....

அவள்
வெடித்துப் பிளந்த வாசல் திண்ணையில்
கிழிந்த சேலையில் முடங்கிக்கிடக்க
சூரியனின் கதிர்களும்
மழையின் சாரல்களும்
காற்றின் கரங்களும்
கடும்புயல் சீற்றங்களும் மாற்றி மாற்றி
நலம் விசாரிக்கும்.

வாசல் தாண்டி உள் நுழைய
வரம் தரவில்லை வீட்டுச்சாமிகள்.
"கம்பு சுழற்றி,கடப்பாறை கையேந்தி
முதுகுச்சட்டைக்குள் மூன்றடி அரிவாள்
இடுப்பு சுற்றி இரும்புப்பொத்தான் வார் பார்த்து
எதிர் நிற்கும் பகை கூட விதிர்த்து விலகும்"
அவள் பெற்ற வீரமகன்
அன்னைக்கு அமுதிட மனைவியிடம் வரம் கேட்கிறான்.

ஒரு காலத்தில்
அந்த வீட்டுமனை வாங்க
தண்டட்டி,தாவாடம்,பொட்டு,அட்டிகை
பொட்டி நகை அத்தனையும் புன்னகையோடு தந்தவள்.
அடித்தளம் போட அப்பனிடம் கடன் வாங்கி
மேல்தளம் போட அண்ணணிடம் கடன் வாங்கி
சுவர்,தரை எல்லாம் தொட்டுத்தடவி
சொந்த வீட்டு சுகத்தில் இருந்தவளுக்கு
வயது முதிர்ந்ததும் வாசல் திண்ணையில்....

கைவளை திருகிவிட்டு
கனத்த நகை குலுங்க
காஞ்சிப்பட்டு சரசரக்க
மஞ்சள் மினுங்க தெருவிறங்கி நடந்தால்
ஸ்ரீதேவி என்ற மக்கள் எத்தனை?
காப்புத் திருகிவிட்டு
கண்களில் மையெழுதி
பொட்டு மினுங்க
பொன்னகையும் மின்ன வீதியில் நடந்தால்
கும்பிட்டுக்குழைந்த மக்கள் எத்தனை?

வாழ்ந்தவள் கெட்டு
வரையோடாய்க்கிடக்கும் இந்த நேரத்திலும்
அவளின் பஞ்சடைந்த விழிகளில் பளபளக்கிறது
மலரும் நினைவுகள்.
எங்காவது திண்ணைகளில் அவளைப்பார்த்தால்
"அந்தக்காலத்தில் நாங்கள்" என்று ஆரம்பிக்கும்
அவளின் மலரும் நினைவுகளுக்கு
பொறுமையாய் செவி கொடுங்கள் தயவு செய்து.
போதும் அவளுக்கு!

திங்கள், மார்ச் 08, 2010

பெண்ணே! நீ வாழி!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்கள் இறைந்து கிடக்க
சாத்தானின் ஆணையின்றி
தின்றுழலும் ஆதாமுக்கும்,ஏவாளுக்கும்
யுகயுகமாய் பிறந்து கொண்டிருக்கிறாள் பெண்
அசோகவனச்சீதையாய்,
பாவை பாடிய ஆண்டாளாய்
சிலம்புடைத்த கண்ணகியாய்
மணிமேகலை சுமந்த மாதவியாய்

இறைவனின் கை களிமண்ணில்
வெவ்வேறான விகிதங்களில்,கலவைகளில்...
அவநம்பிக்கை அழித்து
நம்பிக்கை தரும் தேவதையாய்,சாந்தரூபியாய்,
கொற்றவையாய்,காளியாய்...
அன்பின் விகிதங்களில்
அடக்குமுறை அளவுகளில் மாறுபடும் அவதாரங்கள்.

சில நேரங்களில்,
கடைவாயின் கோரப்பற்களும் கொம்பும் மறைத்து
மூக்கறுபட்ட சூர்ப்பனகையாய்
விஸ்வாமித்திரர் தவம் கலைத்த மேனகையாய்
அழிக்கும் அசுர சக்தியாய்...

எண்ணங்களின் விளிம்பில்
தளும்பி வழியும் சோகங்கள்
ஆயுதமாயும்,ஆயுதமாக்கப்பட்டும்
அலைக்கழிக்கப்படும் அவளின் அகக்குமுறல்கள்
அலட்சியப்படுத்தப்படும் அவளின் விருப்பு,வெறுப்புகள்
அத்தனையும் கடந்து நடக்கிறாள் நதியாய்
அவள் நடக்கும் வழியெங்கும் நட்புடன் சிரிக்கிறது பூக்கள்
புனைவுகள் தாண்டி
புராண,இதிகாச மேற்கோள்கள் கடந்து
வைகரை வானவில்லாய்
வண்ணங்களோடு அவள்.

அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
அரதப்பழைய ஆடைகள் களைந்து
புதுமை ஆபரணம் புனைந்து கொண்டாள்.
இனி அவள்....
பாவை பாடுவாள்,சிலம்புகள் அணிவாள்
அசோகவனங்களை அடிமை கொள்வாள்.
வானத்தைக்கடந்து எல்லைகள் அழிப்பாள்.
அச்சம் தவிர்த்து,ரௌத்திரம் பழகி
அன்பின் ஈரத்தில்
புதியதோர் உலகம் செய்வாள்.

திங்கள், மார்ச் 01, 2010

அந்தமானில் சத்துணவுத்திட்டம்


பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்கள்,அதனை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர் மக்கள் திலகம் அவர்கள், இன்று அதை வழிமொழிகிறார் கலைஞர் அவர்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம்.சத்துணவுத் திட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னோடியா என்பது தெரியாது.பள்ளிக்குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியோடு நிறுத்துவதைத் தடுப்பதற்கு மதிய உணவுத்திட்டம் ஒரு தீர்வு தான்.அந்தமான் நிகோபார் தீவுகளில் கல்வியறிவு பெற்றோர் கிட்டத்தட்ட 94% ஆகும்.இங்கு "அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி (Sarva Shiksha Abhiyan)" முழுவீச்சில் செயல் படுகிறது.ஆறு வயது முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்துக்குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி வசதி,இலவச சீருடை,இலவசப்புத்தகம்,இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.இங்குள்ள 36 தீவுகளில் கிட்டத்தட்ட 396 பள்ளிகள் இயங்குகின்றன.

மூன்று முதல் ஆறு வயதுள்ள பாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2/ மதிப்புள்ள தின்பண்டம் வழங்கப்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை,புத்தங்களோடு இலவச மதிய உணவும் வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டைப்போல மாணவர்களுக்கான மதிய உணவை பள்ளி வளாகத்தில் தயாரிப்பதில்லை.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தலா ரூ.5.58 வீதமும்,ஒரு குழந்தைக்கு ஒரு நாளுக்கு 100 கிராம் வீதம் அரிசியும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தலா ரூ.6.10 வீதமும்,150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில் தீவுகளின் கல்வித்துறையால் ஒப்பந்த ஏலம் விடப்படும். மகளீர் கூட்டுறவு அமைப்புகள், வேலை வாய்ப்பற்றோர், சுயதொழில் கூட்டுறவு அமைப்புகள்,சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் மட்டுமே இந்த ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ரூ.5000/க்கான வரைவோலை (Bank EMD), உணவு விநியோக உத்தரவு ( Food Licence),ஒப்பந்ததாரர் மதிய உணவை சமைப்பதற்கு தனியான சமையற்கூடம் வைத்திருப்பார் அதற்கான சுத்தமான சுற்றுப்புறத்திற்கான சுகாதாரத்துறையின் சான்றிதழ் (Sanitation Certificate) பணிபுரியும் பணியாளர்களுக்கான மருத்துவச்சான்றிதழ் (Medical Certificate) ஆகியனவற்றை ஒப்பந்தப்படிவத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.காய்கறி,பருப்பு யார் அதிக அளவு குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ஒரு வருட ஒப்பந்தம்.ஒப்பந்ததாரருக்கு பள்ளி நிர்வாகம் உணவு இனங்களின் பட்டியல் ஒன்றை (மெனு) தந்துவிடுவார்கள்.வாரம் முழுதும் அதன் படி விநியோகம் செய்யவேண்டும்.ஒரு நாள் 4 இட்லி,1 வடை,சட்னி,சாம்பார்-ஒரு நாள் சோறு,சாம்பார் + வெஞ்சனம் - ஒரு நாள் சோறு,பருப்பு + வெஞ்சனம் - ஒருநாள் கிச்சடி,அப்பளம்,ஊறுகாய் - ஒருநாள் புலவு சாதம்,காய்கறி சாலட்,பட்டாணி,கிழங்கு குருமா இப்படித் தருவதுண்டு.முன்னர் முட்டை வாரம் ஒரு நாள் கொடுக்கச்சொல்லி உத்தரவு இருந்தது.ஆனால் முக்கியபூமியிலிருந்து வரும் முட்டை சமயங்களில் கெட்டுப் போயிருக்க வாய்ப்புண்டு,அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் முட்டை வழ்ங்கும் திட்டம் கைவிடப்பட்டது.இவற்றைக் கண்காணிக்க பள்ளி அளவில் ஒரு ஆசிரியர் குழுவும்,பெற்றோர் குழுவும் உண்டு.அடிக்கடி கல்வித்துறையின் உணவு விநியோகத்திற்கென சிறப்புப் பணியாளர்கள் திடீர் சோதனைகளில் ஈடுபடுவதும் உண்டு.

மதிய உணவுத்திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் விடுவதால் பள்ளி நிர்வாகத்திற்கு சமையலறை,பணியாளர் தொந்தரவற்றுப்போவதுடன் மாணவர்களுக்கும் விதவிதமான உணவு வகைகள் கிடைக்கிறது.இன்று தீவில் மிகுந்த போட்டி நிலவும் தொழில் இது தான்.நாங்களும் கூட இதில் தான் ஈடுபட்டுள்ளோம்.இதனால் தீவில் வேலை வாய்ப்பற்றோருக்கு வேலையும்,தீவுநிர்வாகத்திற்கு ஒரு துறையை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டிய வேலையும் மிச்சம். என்ன கேட்குறீங்க? லஞ்சம் இல்லையான்னா? கடவுள் இல்லாத இடத்துல கூட அது இருக்குதுங்களே! யாரு வாங்குறாங்களா? உயர்ந்த ஆசிரியப்பணி செய்யும் ஆசிரியர்கள். போட்டுக்குடுத்துறாதீங்க பாஸ்!

திங்கள், பிப்ரவரி 22, 2010

அந்தமான் கதம்பம்.


அன்பு நண்பர்களே! கதம்பம் என்றதும் பூவோடு சம்பந்தப்பட்டது என்று நினைத்தீர்களா? அந்தமானில்,"பூ" பற்றி மட்டும் பேசக்கூடாது.ஒரு முழம் பூ இருபது ரூபாய்.கதம்பம்,கனகாம்பரம்,மல்லி,வாசமில்லா முல்லை,அனைத்தும் ஒரே விலை.ஒற்றை ரோஜா பத்து ரூபாய். இதுவே ஆயுத பூஜை,கோவில் திருவிழா,பண்டிகைகள் இப்படி நல்ல நாட்களில் இன்னும் விலை கூடும் (அக்கா! அங்க கோயம்பேடுலயே பூக்கெடைக்கல.நீங்க இப்பதான் பேரம் பேசிக்கிட்டு) அப்படியே வாங்கினாலும் நாளும் கிழமையுமாக சாஸ்திரத்துக்கு சூடிக்கொள்வதோடு சரி.அவ்வளவு அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கும்.ஒரு இன்ச் விட்டு அடுத்த கண்ணி இருக்கும். அதனால் பூச்சுடும் ஆசை மறந்து பார்க்கும் ஆசையை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். (எப்புடி?).கடவுளர்களுக்காகவே செம்பரத்தையில் சிவப்பு,வெள்ளை,இளம் சிவப்பு,அடுக்கு செம்பரத்தை இப்படி இருக்கவே இருக்கிறது! அத விடுங்க! இப்ப நா சொல்ல வர்றது அந்தமான் குறித்த சில கதம்பத் தகவல்கள்.

அந்தமான் அச்சடினா நத்தை
அந்தமான் அச்சடினா நத்தைகள் கோடைகாலத்தில் உறங்கும்.மழைக்காலத்தில் விழித்தெழுந்து உலா வரும்.தெருவெங்கும் ஊறித்திரிந்து வண்டிகளிலும்,கால்களிலும் அடிபட்டு உயிர் விடும் இந்த நத்தைகள் 8 முதல் 9 செ.மீ வரையிலும் சில 20 செ.மீ. முதல் 30 செ.மீ வரை நீளம் இருக்கும்.ஆப்பிரிக்காவில் இந்த நத்தை தான் உணவாகப் பயன் படுகிறது என்கிறார்கள்.இந்நத்தைகளின் ஆயுட்காலம் சுமார் ஐந்து ஆண்டுகள்.அதற்குள் ஒரு நத்தை கிட்டத்தட்ட 1000 முட்டைகளை இட்டுவிடும்.

அந்தமான் திருட்டு நண்டு
"பர்கஸ் லாட் ரோ" என்ற ஒரு வகை. அடர்த்தியான நீல நிறத்திலிருக்கும் இந்த நண்டுகள் இரவினில் திருட்டு.பகலில் பதுங்கும். இரவு நேரத்தில் தேங்காய்களைத் திருடுகின்றன.Robber crabs என்று சொல்லப்படும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காயைப்பறித்துக் கீழே போட்டுவிட்டு,இறங்கித் தேடி எடுத்து உரித்து,அதன் தடித்த கால்களால் உடைத்து,தண்ணீரைக்குடித்து,பருப்பையும் சுரண்டித் தின்னும். இந்த வகை நண்டுகள் தென் சென்டினல் தீவில் வசிக்கிறது.தென்னையில் ஏறும் போது தலையை நிமிர்த்திக்கொண்டு ஏறி, இறங்கும் போது தலைகீழாக இறங்கும்.இந்த நண்டுகளால் சுமார் 28 கிலோ எடையை சுமக்கவும்,30 கிலோ எடையை இழுத்துச்செல்லவும் முடியும்.

அந்தமான் சிப்பிகள்,கிளிஞ்சல்கள்
அந்தமான் கடலில் முத்துப்போல் ஒளிரும் டர்போ,டிராகஸ் மற்றும் நாட்டிலஸ் கிளிஞ்சல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.ஆண்டு தோறும் பல நூற்றுக்கணக்கான டன் கிளிஞ்சல்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஒரு டன் கிளிஞ்சல்களை சுத்தம் செய்தால் 25 விழுக்காடு இறுதிப்பொருள் கிடைக்குமாம்.இந்த கிளிஞ்சல்களில் ஆபரணங்கள்,அழகுப்பொருட்கள் தயாரிக்கிறார்கள்.இதற்கான பயிற்சியினை அரசாங்கமே தருகிறது.மின்னும் இந்தக் கிளிஞ்சல்களை அழகாக வடிவமைத்து தங்கத்திலும் பதித்துக்கொள்ளலாம்.சங்குகள்,ராஜா கிளிஞ்சல்கள் இங்கு கிடைக்கும்.

நண்டு தின்னும் குரங்குகள்
குரங்குகள் பெரும்பாலும் தாவரப்பட்சினி தான்.ஆனால் அந்தமான்,நிகோபார்த் தீவுகளில் கட்சால்,கிரேட் நிகோபார் முதலிய தீவுகளில் ,"Macaque" எனப்படும் ஒரு வகைக்குரங்குகள் வாழ்கின்றன.இவை கடற்கரை ஓரங்களில் வாழும் கரு நிற நண்டுகளை (நம்மூர் வயல் நண்டு) பிடித்து உண்கிறது.

நர்கொண்டம் ஹார்ன்பிள்
அந்தமான் தீவுகளில் ஒன்றான நர்கொண்டம் தீவில் காணப்படும் இந்தப் பறவை உருவில் பெரியது.மாட்டுக்கொம்பு போன்ற பெரிய அலகு உள்ளதால் கொம்பு மூக்கன் என்ற பெயருமுண்டு.மரப்பொந்துகளுக்குள் கூடுகட்டி வாழும் இந்தப்பறவையில் தாய்ப்பறவை குஞ்சுகளுடன் வாழ ஆண் பறவை வெளியில் சென்று உணவு தேடிவரும்.அப்படி வெளியே செல்லும் போது களிமண்ணால் மரப்பொந்தின் வாயை அடைத்து விட்டுச்செல்லுமாம்.

உலகின் நீண்ட நாள் சிறைவாசி
உலகில் நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் முகாய்சிங் அவர்கள்.1857ம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டு மூர் என்ற ஆங்கில நீதிபதி ஒருவர் மற்றும் இரு ஐரோப்பியரையும் கொலை செய்த குற்றத்திற்காக அந்தமான் கூண்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.1907ம் ஆண்டு வரை சிறையில் இருந்து தமது 71வது வயதில் சிறையிலேயே காலமானார்.மொத்தம் 47 ஆண்டுகள் சிறையிலிருந்த இவரது சிறைவாசம் ஒரு உலகசாதனையாகும்.

மஜார் பகார்டு
மஜார் பகார்டு மசூதி ஒரு வழிப்பாட்டுத்தலம்.இஸ்லாம் சகோதரர்கள் மட்டுமல்ல.இந்து மக்களும் வழிபடும் சக்தியுள்ள ஒரு தலம்.இங்கு ஆடு வெட்டி,பொது மக்களுக்கு அன்னதானம் செய்வார்கள்.மொகலாயப்பேரரசரின் அவையில் தலைமை நீதிபதியாக இருந்த பாசல் ஹக் ஐதராபாதி மற்றும் படைத்தளபதியாக இருந்தவர் மௌலானா லியாகத் அலி என்ற இவ்விரு அறிஞர்களும் விடுதலைப்போராட்ட தியாகிகள்.1857ம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் கலந்து கொண்டு,அந்தமான் கூண்டுச்சிறைக்கு வந்து 1861ம் ஆண்டு தம் தண்டனை காலத்திலேயே இறந்து விட்டனர்.அவர்களை அடக்கம் செய்து எழுப்பப்பட்ட கல்லறைகள் இன்று வழிபாட்டு மையமாக மாறியிருக்கிறது.

சிறையில் துஞ்சிய சிற்றரசர்கள்.
அந்தமான் கூண்டுச்சிறையில் இந்திய மாகாணச்சிற்றரசர்கள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.1879ம் ஆண்டு ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஜெகன்னாத் பூரியின் சிற்றரசர் பிரிஜ் கிஷோர் சிங் தேவ்,1891 ம் ஆண்டு மணிப்பூர் மன்னர் குலச்சந்திரா, அவரது இளவல் அங்குசானா, சம்பல் பூரின் ஹத்தே சிங் ஆகியோர் கூண்டுச்சிறையில் அடைக்கப்பட்டு,மரணதண்டனை பெற்றனர்.அவர்களது உடல் இங்குள்ள தண்டுஸ் முனை என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆமைகளின் அந்தப்புரம் அந்தமான்.
தென் சென்டினல் தீவில் பச்சை ஆமைகள் ஏராளமாக வசிக்கிறது.ஒவ்வொன்றும் 450 முதல் 750 கிலோ வரை எடை உள்ளது.சுமார் 150 முட்டைகள் இடும்.கடலில் இருந்து கரைக்கு வந்து குழிகளைத் தோண்டி முட்டைகளை இட்டுவிடும்.வெளிநாடுகளில் ஆமை சூப்,ஆமை முட்டை ஆம்லெட் என்று உண்டாலும் நம்மவர்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்.சமயத்தில் கடலில் snorkeling செய்யும் போது ஆமைகளின் தரிசனம் கிடைக்கும்.

திமிங்கிலம்
அந்தமான் கடலில் கொழுப்பைத் தலையில் சேமித்து வைத்திருக்கும் திமிங்கிலங்கள் அதிகமாக வாழ்கின்றன.இக்கொழுப்புத்திமிங்கிலங்கள் 900 அடி ஆழத்தில் வாழ்கின்றன.இத்திமிங்கிலத்தின் குடல் பாதையில் ,"அம்பர் கிரீஸ்" என்ற சிறிய சாம்பல் நிறமான கோந்து போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.திமிங்கிலம் உண்ணும் ராட்ஷச ஸ்குவிட் மீன்களின் கூர்மையான அலகு பாய்ந்து விடாமல் தன்னைக்காத்துக்கொள்ள இந்த அம்பர்கிரீஸ் பயன்படுகிறது.அவ்வப்போது திமிங்கிலம் வெளியிடும் இந்த அம்பர் கிரீஸ் கடலில் மிதந்து வந்து கரை சேரும்.இது வாணிப முக்கியத்துவம் வாய்ந்த விலையுயர்ந்த பொருள்.இதிலிருந்து தரமான வாசனைப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்டுகிறதாம்.

அந்தமான் பறவைகள்
அந்தமானில் மொத்தம் 246 வகைப்பறவைகள் உள்ளன. இதில் 39 வகை அழிவின் விளிம்பில் இருக்கிறதாம். அந்தமானின் தேசியப்பறவை "wood pigeon" எனப்படும் பறவை.இந்தப்பறவை சாதாரண புறாவைப்போல தோற்றமிருந்தாலும் இதன் வால் நீளம்.இதன் கழுத்தில் கட்டம் கட்டமான அமைப்பும்,தலை வெண்மை நிறமாகவும்,இறக்கைகள் அடர் அரக்கு நிறத்திலும் இருக்கும்.மெகா போட்,ஹார்ன்பிள்,அந்தமான் டீல்,நிகோபார் புறா ஆகியன குறிப்பிடத்தக்கவை.இது போக இடப்பெயர்ச்சி அடைந்து வரும் பறவைகள் நீரில் நடக்கும் பறவை,நீர் காக்கை,குயில்,நீள் சிறை ஆகியன.

அந்தமானின் சில்லறை தகவல்கள்.
அந்தமான் தீவுகளில் சுமார் 600 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் ரப்பர் தோட்டமும்,சுமார் 2400 ஹெக்டேர் நிலப்பரப்பில் செம்பனைத் தோட்டமும்(பாமாயில்) உள்ளது.இங்கு பர்மாவின் கரேன் மக்கள்,இலங்கை மற்றும் பங்களா தேஷ் அகதிகளும் வசிக்கிறார்கள்.அந்தமானில் பசுமை மாறாக்காடுகள்,இலையுதிர்க்காடுகள்,மலைச்சரிவுக்காடுகள்,மாங்குரோவ் காடுகள்,கடலோரக்காடுகள் என ஐந்து பெரும் காடுகள் தீவுகளெங்கும் நிறைந்துள்ளன.அந்தமான் காடுகளில் 110 வகையான மலர்கள்,நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்துள்ளது.இங்கு குட்டிப்பாம்பு அளவில் காட்டுப்பூரான்கள் இருக்கிறது(அது கடித்த கதை தனிப்பதிவில்)அந்தமான் கடல் வளங்களைக்கொள்ளையடிக்கும் வெளிநாட்டவர்களை கடலோரக்காவல் படையினர் பிடித்து அவர்களின் கப்பல்,படகுகளைப்பறிமுதல் செய்வதும் நடக்கிறது.பெரும்பாலானவர்கள்இலங்கை,பர்மா,இந்தோனேஷியா,தாய்லாந்து நாட்டவர்கள்.இவர்களைக் கைது செய்து தண்டனை முடிந்ததும் அவர்களது அரசு விடுவித்து அழைத்துச்செல்லும் வரை அந்தமானில் தங்குவதற்கும்,இலவச உணவிற்கும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இத்துடன் கதம்பச்செய்திகள் நிறைவு பெறுகிறது.மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் நேயர்களே! அட! பழக்க தோஷங்க!