கோவையில் உலகத்தமிழர் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.உலகச்செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக, கோலாகலமாக தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு. உலகின் மூலை, முடுக்குகளில் இருந்து தமிழின ஆர்வலர்கள், தங்கள் பணிகளைத் தள்ளி வைத்து விட்டு, ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்தமான் தமிழர் சங்கத்தலைவர் திரு மிகு அ.க. போஜராஜன் ஐயா அவர்கள், அந்தமான் முரசு பத்திரிக்கை ஆசிரியர் திருமிகு . சுப.கரிகால் வளவன் அவர்கள் மற்றும் இலக்கியமன்றம் சார்பில் மூத்த தமிழாசிரியை. கவிஞர். திருமதி. கமலா தோத்தாத்திரி அம்மா அவர்களும் அந்தமான் தமிழர் சார்பில் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.மாநாட்டில் சுப.கரிகால் வளவன் அவர்கள் "அந்தமானும் தமிழர்களும்" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்கள்.
கோவையில் படிக்கும் மகளை சந்திக்கவென்று, மே மாதம் கோவை சென்ற போது, மாநாட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது நகரம். நகரம் முழுதும் தோண்டப்பட்டும், பாலங்கள், நடைபாதைகள், சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் நகரம் ரணகளமாகிக்கிடந்தது.நான் சிறு வயதில் பார்த்த கோவையின் குளுமை குறைந்து இன்று வெக்கை அதிகமாய் இருந்தது.கோவையில் அந்நகரத்திற்கே உரிய "டெக்ஸ்டைல்" துறை தனது அந்தஸ்தை இழந்து, கணினி மென்பொருள் துறை வளர்ந்திருப்பதாய் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். மின் துண்டிப்பு வேறு அந்தத் தொழில் நகரத்தை உண்டு, இல்லை என்று அடித்துக்கொண்டிருக்க,அதை விட, பணியாளர்கள் தங்களின் பணி நேரத்தை அதற்கேற்றார் போல் சரி செய்து கொள்ள, அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.ஆனால் இது எதிலும் தனக்கு சம்பந்தமில்லை என்பது போல அரசின் "டாஸ்மாக்" கடைகள் அனைத்திலும் கும்பல். அந்த கும்பலில் அனைவரும் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் உள்ளவர்கள் போல் தான் இருந்தனர். ஒளித்து மறைத்துக் குடித்த காலம் மலையேறி, குடிப்பது கௌரவமாகக் கருதப்படும் காலம் இதுவோ?. அதோடு, டாஸ்மாக் கடைகளும், அனைவரும் புழங்கும் இடங்களில், குளிர்பானக்கடைகளைப்போல, திறந்து வைக்கப்பட்டிருந்தது. (அந்தமானில் இப்படி இல்லை) கோவை என்று இல்லை, சென்னையிலும் அப்படியே!
தமிழ்நாட்டில் குடிமைப்பொருள்களின் விலை மிகக்குறைவான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது, பெரிய ஆச்சரியம். ஒரு கிலோ அரிசி ரூ.1/. ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.எண்ணெய், மளிகைப்பொருட்கள், சீனி, கோதுமை அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு, மிஞ்சிப்போனால் ரூ.200/ க்குள் அடங்கிவிடும். இது எப்படி சாத்தியம்? தமிழக கஜானா நிறைந்து வழிகிறதா? அல்லது தமிழக அரசு ஓட்டு வங்கிகளான மக்களுக்கு சலுகை அளித்து, தமிழக அரசின் பதவி நாற்காலியை, நிரந்தரமாக்கும் திட்டமா? (அந்தமானில் ஒரு கிலோ அரிசி விலை ரூ. 8.80. குடும்ப அட்டைகளுக்கு கோதுமை, அரிசி, சீனி ஆகியவை மட்டும் வழங்கப்படுகிறது. சமையல் வாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.) எப்படியோ மக்கள் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறார்கள்.வீட்டுக்கு வீடு இலவசத் தொலைக்காட்சி. சிலர் ஒரே வீட்டில் திருமணமானதும், தமது மனைவி, மக்களோடு, தனிக் குடும்ப அட்டை வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு குடும்பத்திற்கு நான்கு தொலைக்காட்சிப்பெட்டிகள் வரை கிடைத்துள்ளது. இது பொறாமையால் வரும் எழுத்தில்லை. ஒரு மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறதே என்ற ஆதங்கம் தான். உழைப்பு உயர்வு தருமெனில், இலவசம் என்ன தரும்?
இன்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் இவர்கள் தொலைக்காட்சி வழங்குகிறீர்கள் இலவசமாய். சரி. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளிலாவது, மக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்கலாமே! அந்த தொலைக்காட்சிகள் வழி தமிழ் வளர்க்கலாமே! லாப நோக்கோடு இயங்கும் இந்தத் தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்கும் மனோபாவமும் நம்மவர்களிடமில்லை என்கிற வருத்தம் மேலோங்கியுள்ள நிலையில் தான் இதை எழுதுகிறேன்.அடுத்து சமச்சீர் கல்வி என்ற பெயரில் புத்தகங்களில் பாட மாற்றம். தனியார் பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கட்டணங்களை கட்டணச்சீட்டு மூலமும், மீதியை வெள்ளைப் பேப்பரிலும் எழுதி வசூலிக்க, சட்டம் போட்டும் மக்கள் அதன் பயனை அடைய முடியாது மயங்கும் நிலை.கல்வி நிறுவனங்களைக் குறை கூறிப் பயனில்லை. அவர்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியம் தர வேண்டுமே! நிறையத் தனியார் பள்ளிகள் CBSE பாடத்திட்டத்திற்கு மாறப்போவதாய் அறிவித்துள்ளார்கள்.குழந்தைகள் இன்று இருக்கும் புத்திசாலித்தனத்திற்கு, அவர்களின் ஆற்றல், திறமைக்கேற்ற கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறமை வளர்க்கும் வாய்ப்பினை வழங்க வேண்டுமேயன்றி, பாடச்சுமைகளைக் குறைப்பது அவர்களின் அறிவை மழுங்கடிக்கும் அபாயம் உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.உலகமயமாக்கலில், வாணிப, மற்றும் தொழில் நுட்பத் துறையில் உலகைச்சுற்றும் நம் இளையோரை அதற்குத் தகுதியாக்க வேண்டுமேயன்றி, மக்களை திருப்திப்படுத்தவென செய்யப்படும் இது போன்ற செயல்பாடுகள் இளையோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்துப் பாடங்களை, நகராட்சிப்பள்ளிகளிலேயே படிக்கலாமே! "நாங்கள் LKG யில் கொடுக்கும் பாடம், சமச்சீர் கல்வியில் ஒன்றாம் வகுப்பில் இல்லை" என்று ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கூறுகிறார். நகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் கொடுக்கப்படும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கூட தனியார் பள்ளிகளில் தரப்படுவதில்லை. இது அனைவரும் அறிந்ததே! சம்பளத்தைக் கொட்டிக்கொடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றலாமே!
தமிழினத்தலைவர்களே! தமிழை உலகச்செம்மொழியாக்கி விழா எடுக்கும் இதே நேரத்தில், தமிழனின் வாழ்வையும் உயிர்ப்போடு மீட்டெடுங்கள்.அவர்களின் வாழ்வியல் ஆதாரங்களை மீட்டுக்கொடுங்கள். தமிழனின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, உழைப்பை, சிந்திக்கும் திறனை மீட்டெடுங்கள். தமிழன் வாழும் வரை தமிழ் வாழும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக