திரை கடலோடியும் திரவியம் தேடச்சொன்ன தமிழர்களின் வழிவந்த நாம் திரையரங்கங்களில் திரவியம் தேடிய காலம் ஒன்றிருந்தது.இப்போது அந்தளவு ஒரு வெறியோ, ஆவலோ இன்றைய இளைய தலைமுறையினரிடம் உள்ளதா? தெரியவில்லை. திரைப்படத்துறை - ஒரு கனவுத்தொழிற்சாலை. காதலும், கற்பனையும்,சாகசங்களும் மூலதனங்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,நடிகர்கள் என ஒவ்வொருவரும்,ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொருவரும் விதவிதமாகத் திரித்து, பாணிகளை வகுத்து பணம் அள்ளும், தொலைக்கும் ஒரு சூதாட்டக்களம். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கவலைகள் மறக்கும் ஒரு களம். திரைகளில் தம்மைத் தொலைத்து, நிஜ வாழ்க்கை மறந்து, எதார்த்தங்களை ஏற்க மறுத்து கனவுகளிலும் கற்பனைகளிலும் மக்கள் தம் வாழ்க்கையைத் தொலைக்க வைத்த ஒரு ஊடகம். வெகு நாட்களாக மக்களின் பல்வேறு பொழுதுபோக்குகளில் சக்திவாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது.திரைப்படங்கள் நமது வாழ்க்கையில் இரண்டறக்கலந்து, நமது உணர்வுகளில், வெளிப்பாடுகளில், செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கலையாகக் காலத்திற்கேற்றபடியும், மக்களின் மனப்போக்குக்கும் ஏற்றபடி பரிணாம வளர்ச்சி பெற்று, புதிய பரிமானங்களைக்காட்டும் ஒரு தனி உலகம்.திரைப்படங்கள் நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஒன்றிப்போன ஒன்று.எந்த காலகட்டத்திலும் திரைத்துறை இளையதலைமுறையை அதிகம் வசீகரித்திருக்கிறது.
1980 களில் திரைப்படம் என்பது, வாரம் ஒரு முறை அசைவ உணவு, வாரம் ஒரு முறை சொந்த ஊர் பயணம், வாராவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் என்பது போல ஒரு கட்டாயமாக இருந்திருக்கிறது எங்களுக்கு. எந்தப்படம், யார் நடித்தது, என்ன கதை என்பது முக்கியமில்லை. திரையில் எதோ ஓடினால் சரி.மதியக்காட்சிக்கு சென்று திரையரங்கில் அனுமதிச்சீட்டு கிடைக்காமல் அங்கேயே இருந்து முதல் காட்சி பார்த்து விட்டு வந்து வீட்டில் அடிவாங்கிய கதை உண்டு எங்களின் குழந்தைப்பருவத்தில். இன்று மாலை திரைப்படம் போகலாமென்றால், பள்ளியிலிருந்து ஓடி, ஓடி வீடு வந்து வேலை முடித்து, கடைக்குட்டியின் வேலையைப் பகிர்ந்து, அவளை முன்னதாக சீட்டு வாங்க விரட்டி, நாங்கள் போகும் போது அவள் சீட்டோடு காத்திருக்க, அந்த நேர சந்தோசம், மனதில் பொங்கும் குதூகலம் அதை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அதன் பிறகு வீடு வந்து, அந்தப்பாடல்கள், வசனங்கள், கதாநாயகியின் உடையலங்காரம் குறித்த விமர்சனங்கள் சுழலும்.
யாருமற்ற என் தனிமைப்பொழுதுகளை திரைப்பாடல்கள் கொண்டு இட்டு நிரப்பிக்கொள்வேன். எத்தனை பேர் இருந்தாலும் கூட நமது மனதில் இருக்கும் வெற்றிடங்களை, எந்த உறவாலும் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தைக்கூட திரை இசை இட்டு நிரப்பி இருக்கிறது, நிரப்புகிறது.எப்போதும் எனக்குப்பிடித்த பாடல்களை சப்தமாகப் பாடிக்கொண்டும், சில வேளைகளில் முணுமுணுத்தும் பழகிப்போன எனக்கு திரை இசை இல்லையென்றால் என்ற ஒரு கற்பனையை நினைத்தும் பார்க்க முடியாது. நாற்று நடும், களையெடுக்கும், கதிரறுக்கும் பெண்கள், கட்டுமானப்பணிகளுக்கு செல்லும் சித்தாள் பெண்கள், குடும்ப வறுமையில் உழலும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் திரைப்படம் ஒரு சொர்க்கம். தமது கவலைகளையும், உழைப்பின் வலிகளையும், வறுமையின் தாக்கத்தையும் மறக்க வைக்கும் ஒரே மாமருந்தாக திரைப்படம் இருந்திருக்கிறது.இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி வந்ததும் தான் நிலை மாறியது.
8249 சதுரக்கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்தமானில் பெண்கள், குழந்தைகளுக்கு ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி.அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேயரில் ஐந்து திரையரங்குகளும், பம்பு பிளாட் எனப்படும் தீவில் ஒரு திரையரங்கும், கார் நிக்கோபாரில் ஒரு திரையரங்குமாக மொத்தம் ஏழு திரையரங்குகள் இருந்தன.இந்தி,ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.படப்பெட்டிகள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு திரையிடப்பட்டதாலும், மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாததாலும், வருமானம் போதியளவு இல்லாமையாலும் புதுப்படங்கள் பெரும்பாலும் திரையிடப்பட்டதில்லை.பெரும்பாலும் பெண்கள் திரையரங்குகளைத் தவிர்த்தார்கள். காரணம் தெரியவில்லை. ரூ. 5/ க்கு வீடியோ இழைகள் கிடைத்ததால் வேண்டுமட்டும் வீட்டிலேயே படம் பார்த்தனர். சனிக்கிழமை இரவு வெகு நேரம் படம் பார்த்துவிட்டு ஞாயிறு காலை தாமதமாக எழும் பழக்கம் நிறைய வீடுகளில் உண்டு. காலம் செல்லச்செல்ல மக்கள் முழுமையாக திரையரங்குகளைப் புறக்கணிக்க, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஒரு திரையரங்கு பெரிய நட்சத்திர தங்கும் விடுதியாக மாறியுள்ளது. குறுந்தகடுகள் புதுப்புதுப்படங்கள் மேற்சொன்ன நான்கு மொழிகளிலும் கிடைக்கிறது. இப்போது தீவுகளில் ஒரு திரையரங்கு கூட இல்லை.
எங்கள் வீடுகளில் பார்த்து முடித்ததும் நல்ல படங்களை சேமித்தும், பிடிக்காத படங்கள் மற்றும் பதிவு சரியில்லாத குறுந்தகடுகளை சுவர் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறேன்.வீட்டில் வேலை செய்தபடி, இன்று கொஞ்சம், நாளை கொஞ்சம் இப்படி கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து திரைப்படம் பார்த்துப் பழகிவிட்டதால், முக்கிய பூமி வந்தாலும் திரையரங்கம் சென்று படம் பார்ப்பதில்லை. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் இருந்து படம் பார்ப்பதாவது? சேச்சே! அந்த நேரம் ஒரு பதிவு போட்டால் எத்தனை பேரின் கழுத்தை வலிக்க அறுக்கலாம் என்ற புனிதமான எண்ணம் தோன்ற திரைப்படங்களைத் தவிர்த்து விடுகிறேன். நண்பர்களே! திரையரங்குகளே இல்லாத இந்தியாவின் ஒன்றியப்பகுதி எதுவென்று ஒரு பொது அறிவுக்கேள்வி உங்களின் நேர்முகத்தேர்விலோ, மற்றும் நுழைவுத்தேர்வுகளிலோ கேட்கப்படலாம். அதற்கான விடை : அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்று சொல்லுங்கள்,எழுதுங்கள். தேர்வு பெற்றவர்கள் எனக்கான பரிசை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அடுத்த மாதம் முக்கிய பூமி வரும் போது பெற்றுக் கொள்கிறேன்.சரி தானா?
( Photo by G Saravanan, Reporter,
The New Indian Express)
( Photo by G Saravanan, Reporter,
The New Indian Express)