சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், அக்டோபர் 19, 2011

குருவே சரணம்.


கல்வி மனிதனை மாமனிதன் ஆக்குகிறது. வையத்தலைமை கொள்ள கல்வி ஒரு கருவி என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட கல்வி போதிப்பவரை நமது முன்னோர்கள் தெய்வத்திற்கும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர். குருகுலக்கல்வி, திண்ணைப் பள்ளிக்கூடம் என்பவற்றைக் கடந்து கல்வி நிறுவனங்கள் அரசாலேயே தோற்றுவிக்கப்பட்டு, இலவசக்கல்வி போதிக்கும் காலம் வந்துவிட்டது. இருப்பினும், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வைத்தால் தான் கல்வி உயர்ந்ததாக இருக்கும் என்ற உணர்வு பெற்றோரிடம் பரவி வருகிறது. இன்று கல்வி குறித்த அதீத விழிப்புணர்வு பெற்றோர்களிடம் வளர்ந்துவிட்டது.

 நாடு முழுவதிலும் அரசுப் பள்ளிகளில் தன்னலமற்ற தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வருடம் தோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தீவுகளில் தன்னலமற்ற தொண்டாற்றிய தமிழ் ஆசிரியப்பெருமக்களில், பெரும்பாலானோர், இந்த தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றுள்ளார்கள். எனக்குத்தெரிந்து திரு. சி. சக்திவேல் அவர்கள், திரு லெட்சுமி நாராயணன் அவர்கள், திருமதி சாந்தா அவர்கள், திரு வேம்பையன் அவர்கள். அந்த வரிசையில் 2010ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது தீவுகளின் இரண்டு ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்கப்பெற்றுள்ளது. ஒருவர் திருமதி கமலா தோத்தாத்ரி அவர்கள். நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இன்னொருவர் நிக்கோபார் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு. ஹில்லாரி அவர்கள். இவர் உள் தீவுகளில் ஒன்றான கட்சால் என்னுமிடத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்.


கடந்த செப். மாதம் 5ம் நாள் ஆசிரியர் தினத்தன்று இந்தியக்குடியரசுத்தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீல் அவர்களது திருக்கரத்தில் விருது பெற்று திரும்பியிருக்கிறார்கள்.

திருமதி. கமலா அம்மா அவர்களிடம் அந்தமான் அகில இந்திய வானொலியின் தமிழ்ப்பிரிவிற்கென நேர்முகம் கண்டோம்.

சாந்தி: வணக்கம் மேடம். தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு தமிழமுதம் குடும்பத்தார் மற்றும் தீவு வாழ் தமிழ்ப்பெருமக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களை இந்த நிலைக்கு உயர்த்தியது எது? யார்? என்பதைக் கொஞ்சம் நமது நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.

திருமதி கமலா அம்மா: வணக்கம். எல்லோருக்கும் மிக்க நன்றி! எனது இந்த விருதிற்கு முக்கிய காரணம் நான் பணிபுரிந்த பள்ளி முதல்வர்கள், என்னுடன் பணிபுரிந்த சகாக்கள், மாணவக்கண்மணிகள் ஆகியோர் மற்றும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள்.

என் மாணவர்களை படிப்பில் அதிக கவனம் எடுப்பதுடன் மற்ற செயல்பாடுகளிலும் ஈடுபாடு காட்டச்செய்வேன். எழுத்தில் பிழை இருப்பின் மறு பிழை திருத்தம் செய்து பிழையின்றி எழுதும் வரை விடமாட்டேன். கவிதை, கட்டுரை எழுதவும் ஊக்கப்படுத்தி, போட்டிகளில் ஈடுபடச்செய்வேன். அதனால் என் மாணவர்கள் என்னை மேடம் என்று அழைப்பதைவிட, அம்மா என்று அழைப்பதையே விரும்புவார்கள். எந்த வேலை தந்தாலும் என்னால் முடியாது என்று ஒரு போதும் சொல்லமாட்டேன். என் மாணவர்களை வல்லவர்களாக இருப்பதை விட நல்லவர்களாக இருங்கள் என்று கூறுவேன். 

எந்த வேலையும் கிடைக்காமல் இந்தப்பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து எனக்கு ஆசிரியை ஆகவேண்டும் என்ற ஆசை எனக்குள் கனன்றூ கொண்டிருந்தது. எனது 33 வருட ஆசிரிய சேவையில் என்னிடம் பயின்ற மாணவக்கண்மணிகள்,  இன்று இந்தத் தீவு முழுதும்  பெரிய பதவிகளில் இருப்பது பெருமைக்குரிய விசயம். இவையெல்லாம் காரணிகளாக இருக்கலாம்.

சாந்தி: விருது பெறூம் போது இருந்த உங்களது மன நிலை, அந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

திருமதி கமலா அம்மா : எங்களை தலை நகர் புது தில்லியின் ஒரு அருமையான தங்கும் விடுதியில் தங்க (ராயல் பேலஸ்) ஏற்பாடு செய்திருந்தார்கள். உண்மையிலேயே ராஜ உபச்சாரம்.  நான் பெருமையாக உணர்ந்த உன்னத தருணம் அது. என்னுடன் என் கணவரும் வந்திருந்தார். மறு நாள் காலை பிரதமர் இல்லத்தில் காலை சிற்றுண்டி. பின் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியின் ஒத்திகை இருந்தது. அன்று மாண்பு மிகு அமைச்சர் கபில் சிபல் அவர்களுடன் மதிய உணவு விருந்து உண்டோம். மறு நாள் விருது வழங்கும் நிகழ்ச்சி. ஏக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் வந்து ஒரு அழைப்பிதழை என்னிடம் நீட்டினார். அது நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் பெருமக்கள் அனைவரையும் கௌரவப்படுத்தும் விழா ஒன்றை டெல்லி தமிழ்ச்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்ததற்கான அழைப்பிதழ் அது. எப்படி ஐயா இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குமிடையிலும் உள்ளே நுழைய முடிந்தது உங்களால்? என்று வியப்புடன் கேட்ட போது அது தான் டெல்லி தமிழ்ச்சங்கம் என்று புன்னகைத்தார். அதன் பிறகு  நமது அருமையான குடியரசுத்தலைவர் மாண்பு மிகு திருமதி பிரதீபா பாட்டில் அவர்கள் விருது வழங்க பெற்றுக்கொண்ட போது ஜென்ம சாபல்யமாக, எனது வாழ் நாள் சாதனையாக உணர்ந்தேன். அன்று மதியம் நமது குடியரசு தலைவர் அவர்களுடன் குடியரசு தலைவர் மாளிகையில் அருமையான விருந்து உண்டோம்.




சாந்தி: சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்ப்பர் தமிழர் என்பதற்கு டெல்லி தமிழ்ச்சங்கமும் சான்று நீங்கள் ஒரு நல்ல ஆசிரியையாக நிரூபித்துள்ளீர்கள் பொதுவாக நமது சமூகத்தில் பெண் என்பவள் ஒரு  நல்ல மனைவியாக,  நல்ல தாயாக, நல்ல இல்லத்தரசியாக, இருக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த அத்தனை பொறுப்பையும் நீங்கள் எப்படி சமன் செய்து, முன்னெடுத்து செல்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். உங்களின் பதில் இளைய தலைமுறை பெண்கள் பலருக்கும் உதவியாக இருக்கும்.

திருமதி கமலா அம்மா: என் குழந்தைகள் சொல்வார்கள். நீங்கள் நல்ல ஆசிரியை. ஆனால் நல்ல அம்மா இல்லை என்று. பள்ளி வேலைகள், வீட்டு வேலைகள் இவற்றை செய்து முடித்ததும் களைப்பில் அவர்கள் ஏதாவது கேட்டால் எரிந்து விழுந்திருக்கிறேன். அது தவறு என்று இன்று உணர்கிறேன். இளைய தலைமுறையினர் இந்த தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.கூடுதலாக உழையுங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். பொறுமையாய் இருங்கள். முக்கியமாக குடும்பத்தினரிடமும், குழந்தைகளிடமும்.

சாந்தி: நன்றி மேடம். தங்களது நேர்முகம் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. கேட்கும் மகளீருக்கு தன்னம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. இன்னும் பல விருதுகள் பெற்று நீடு வாழ பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

திருமதி கமலா அம்மா: மிக்க நன்றி.

திருமதி கமலா அம்மா அவர்களின் கணவர் திரு. தோத்தாத்ரி அவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் தூத்துக்குடி கிளை மூத்த மேலாளர். மகள், மாப்பிள்ளை ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்றனர். மகன் பால் பதனிடும் தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்று மேற்படிப்பிற்காக நியுசிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். தீவுகளில் பணியின் பொருட்டு தங்கியிருக்கும் இவர் தமிழர் சங்கத்தின் இலக்கியமன்ற செயல் பாடுகளில் துணை நிற்கும் உறுப்பினர், பேச்சாளர், தமிழர் சங்கத்தின் “மதியொளி” விருது பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, செப்டம்பர் 24, 2011

சொர்க்கத்தில் என் காதலி – கவிதை நூல் வெளியீடு


அந்தமான் வாழ் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் கவிதை நூல்களின் ஆக்கிரமிப்பு தான். என்றோ ஒரு சிறுகதைத்தொகுப்பு, என்றாவது ஒரு கட்டுரைத்தொகுப்பு இப்படித் தேட வேண்டும். இங்கும் உண்டு தமிழுக்கான போராட்டங்கள், தீக்குளிப்புகள். சுதந்திரத்திற்குப் பின் தீர்ந்து போகும் நாட்டுப்பற்றைப்போல் கிடைத்ததும் தீர்ந்து போகும் தமிழ்ப்பற்று. அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பில் உயிர் பெறும் நாட்டுப்பற்றைப்போல், தமிழ்ப்பற்றும், மீட்சி பெறும் தமிழுக்கு சோதனை வரும் தருணங்களில். இப்படியாக தமிழ் இங்கு ஆட்சி செய்கிறது.

இளைஞர்களிடம் தமிழ்ப்பற்றை வளர்க்க அந்தமான் தமிழர் சங்கமும் மற்றும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் முயன்று வருகிறது. வாராவாரம் சனிக்கிழமை மாலை பயிற்சிப்பட்டறை உண்டு. இளைஞர்களின் வரவு தான் குறைவு. படைப்பாளிகளுக்கு அந்தமான் தீவில் குறைவில்லை. தங்கள் படைப்புகளை புத்தக வடிவில் வெளிடத் தயக்கம் காட்டுவது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று நமது புத்தகங்கள் விலை போகுமா? முந்தைய படைப்பாளிகளின் அனுபவங்களில் இருந்து பெற்ற படிப்பினை. இரண்டாவது அசிரத்தை, நேரமின்மை மற்றும் தன்னடக்கம். நாமெல்லாம் புத்தகம் போட்டு ஆகப்போவது என்ன? எவ்வளவோ பெரியோர்கள் இருக்கும் போது நமக்கேன் இந்த வேண்டாத வேலை என்கிற எண்ணம். இந்தப்பிரிவில் நானும் அடக்கம்.

தற்போது அந்தமான் தமிழ் இலக்கியப்படைப்பில் புதிதாக ஒரு கவிதை நூல் இடம் பெற்றிருக்கிறது.. எழுதியவர். சகோதரர் தமிழ் சத்யன். இவரது இயற்பெயர் பூமி நாதன். 26 வயது துடிப்பு மிக்க இளைஞர். இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பான ”சொர்க்கத்தில் என் காதலி” என்ற கவிதை நூல் வெளியீடு கடந்த மாதம் எளிய முறையில் நடைபெற்றது. கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்கும் பொருட்டு அடியேனும் அழைக்கப்பட்டிருந்தேன். இவரது எட்டு நூலும் காதல் கவிதைத் தொகுப்புகள் தான். இவரது ஏழாவது நூல் “ காதல் கேளாய் தோழி” என்ற நூல் வெளியீட்டில் எல்லோரும் புன்னகையுடன் குறிப்பிட்டது ‘வயதுக்கோளாறு’. எட்டாவது நூல் சொர்க்கத்தில் என் காதலி என்ற கவிதைத் தொகுப்பு இறந்து போன காதலியுடன் காதலன் பேசுவதான நடையில் அவலச்சுவையுடன் எழுதப்பட்ட நூல்.கற்பகம் புத்தகாலயம் பதிப்பித்த அழகான வடிவமைப்புடன் கூடிய நூல்.

நூல் எழுதி, வெளியிட்டு கையைச்சுட்டுக்கொண்டவர்கள் கேட்ட முதல் கேள்வி, “எப்படி வருடத்திற்கு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட முடிகிறது?” அதற்கு அவர்  ”பதிப்பகத்தார் என்னைக் காதல் கவிதைகளை எழுதப்பணிக்கிறார்கள். அது தான் இப்போது நல்ல விதமாக விற்பனையாகிறது என்கிறார்கள். என்னுடைய ஒரு கவிதைத்தொகுப்பு நான்காவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நானும் சமுதாய மேம்பாட்டிற்கு வழிகோலும் கவிதைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். காலம் வரும் போது வெளியிடுவேன்” என்றார். மிகுந்த மகிழ்ச்சி! தீவின் இளைய கவியின் ஒரு கவிதை நூல், ஆயிரக்கணக்கான மைல் தாண்டி முக்கிய பூமியில் நான்காம் பதிப்பு காண்கிறது என்றால் தீவு வாசியான நாங்கள் தமிழர் என்ற முறையில் பெருமை கொள்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தீவில் தனது கவிதை நூல்களை தனக்குத் தெரிந்தவர்களுக்கு படித்துப்பாருங்கள் என்று இலவசமாகத் தருகிறார். இங்கு வெளியிடப்படும் எல்லா நூலுக்கும் இது தான் கதி. தீவில் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த என்னதான் தமிழர் சங்கமும், தமிழ் இலக்கிய மன்றமும் முயன்றாலும் ஒவ்வொரு தமிழரும், தமிழ்ப் படைப்புகளை வாங்க முன் வந்தால் இன்னும் பல படைப்பாளிகள் உருவாக ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும்.பொருளாதார சிக்கல் தன்னைப் பாதிக்கும் போது எந்தப் படைப்பாளனும் தனது படைப்புகளை வெளியிட முன் வர மாட்டார்கள். இது இயல்பு.


நல்ல படைப்புகளை, நல்ல படைப்பாளிகளை உருவாக்க களம் அமைத்துக்கொடுக்க தமிழர் சங்கமும், தமிழ் இலக்கிய மன்றமும் பெருந்துணை புரிகிறது. காத்துக்கொண்டிருக்கிறது. அவர்களோடு கரங்கள் இணைத்து தீவின் தமிழரும் ஒத்துழைப்புக் கொடுத்தால் நல்ல தமிழ்ப்படைப்புகளை, முக்கிய பூமிப்படைப்பாளர்களுக்கு இணையான படைப்புகளை உருவாக்க தீவுத் தமிழ் படைப்பாளர்களால் முடியும்.

கவிதை நூலில் இருந்து சில வரிகள்.

பிரியும் போது கூட
பிரியம் தானே உரைத்தாய்
கண்களால் அழக் கற்றுத்தரவில்லையே!

உன்
மரணத்தைப்பார்த்த
எல்லாக்கண்களும்
என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது.

தினமும் பூமிக்கும்
வானத்திற்குமுள்ள தொடர்பை
விஞ்ஞானம் கண்டு சொல்கிறதோ இல்லையோ?
நம் காதல் கண்டு சொல்கிறது.

என்னை எட்டிப்பார்த்து விடலாம் என்று
சொர்க்கத்தின் வாசலை விட்டு
வெளியே வந்து விடாதே.
தவறிப்போய்
பூமியில் விழுந்து விடுவாய்

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

சொற்களின் வலிமை


கண்ணகி உடைத்த சிலம்பின்
மாணிக்கப்பரல்களாய்
சிதறிக்கிடக்கிறது சொற்கள்
என் அறையின் வெளியெங்கும்

சில சொற்கள் தீயாய்
சில சொற்கள் பனியாய்
வெயிலாய், மழையாய், நோயாய், மருந்தாய்
நொய்மையாய், வலுவாய்
சொற்கள் சொற்கள்.

.தூங்காத இரவொன்றில்,
எனைக்கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் விருப்பமான
சொற்களை வசமாய்க் கோர்க்கும் வேளையில்,
பிணங்கிச்சிணுங்குகிறது நான் தீண்டாத சொற்கள்.
சொற்களுக்குத் தெரியாது அதன் வலிமை.
எனக்குத்தெரியும்
எரிகணைச்சொற்களின் தாக்கமும்
நம்பிக்கை வார்த்தைகளின் ஆக்கமும்

எறியப்படும் சொற்கள் பூக்களாக இல்லாவிடினும்
முட்களாகிவிடக்கூடாதே என்ற கவனத்தில் நான்…

வியாழன், செப்டம்பர் 08, 2011

குழந்தையும், பொம்மையும்




அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது
சலசலவெனும் நீரோடையைப்போலவும்
சருகுகள் மீது பெய்யும் அடர் மழையைப்போலவும்
அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது

கண்களில் இருந்த கனவுகளின் வெளிச்சம்
கன்னங்களில் பிரதிபலிக்க
அந்தக்குழந்தை பேசிக்கொண்டிருந்தது
அதன் பேச்சுக்குத்தலையாட்டும் ஒருவர்
போதுமானதாய் இருந்தது இந்த கணத்தில்.
கேட்பதற்கு யாருமில்லா தனிமையில்
அதன் உலகில் அதுவும் அதன் குழந்தைபொம்மையும்

பொய்ப்பால் புகட்டி
பொய்யாய்த்தூங்கப்பண்ணி
தட்டிக்கொடுத்தபடி தானும் தூங்கிப்போகும்
அதன் கனவுகளில்
உயிர் பெற்று விளையாடுகிறது பொம்மை.

பரிணாமம்




வேற்றுமை நிறைந்த போர்க்குண பூமியில்
பிரளயம் பசியதொரு அசுரனைப்போல

அன்பு நடமாடும் இல்லங்கள்
சுயநலமறுத்த உள்ளங்கள்
நோவாவின் கப்பலாய்…

வானுக்கும் பூமிக்கும் நீர்த்திரையிட்டு
போர்க்கருவிகளையும்,
தீய குணங்களையும் தின்று செரித்து,
கசடுகளையும் கழிவுகளையும் கழுவிப்போட்டு
எஞ்சியவற்றை
யுகங்களையெல்லாம் வயிற்றில் நிரப்பிய
சமுத்திரத்தில் சேர்த்து
விடைபெற்றது பிரளயம்.

நிலவரம் அறிய புறாவாய் நான்
பூமியின் வெளிகளில்.
அன்பின் வெளிச்சத்தில்
பூரித்துக்கிடக்கிறது பசுமை
தாய்மையின் விகசிப்பில் சுரக்கும் முலைப்பாலாய்
பசுமையின் வேர்களில் பாய்கிறது நீரோடைகள்
தென்றலாய்த்தழுவி
நலம் விசாரிக்கிறது காற்று.

எனது, உனது என்ற கோடுகளற்று
நமதாக விரிந்து கிடக்கிறது நிலப்பரப்பு.
இரவில் இறங்கி வந்து
இருளைக்கிழிக்கும் நட்சத்திரங்கள்
ஜொலித்துக்கொண்டிருக்கிறது பூமி
இன்னொரு சொர்க்கத்தைப்போல.

” எவரின் உள்ளத்தில்
எனதென்ற எண்ணம் தோன்றுமோ
அவரின் உடல் சுக்கு நூறாய்ச்சிதறும்”
விக்ரமாதித்தனின் வேதாளமாய் சொல்லிச்சென்றது
வெள்ளுடை தேவதை ஒன்று.


தேவைகளற்ற மனங்களோடு,
எனதென்ற எண்ணங்களற்று,
கடவுள் பாதி மிருகம் பாதி மனிதன் என்றது போய்
மிருகம் அழித்து கடவுள் வளர்த்து பரிணாமம் பெற்றது மானுடம்.
அப்போது சிறகுகள் முளைத்தது.

வியாழன், செப்டம்பர் 01, 2011

அந்தமான் தமிழர் சங்கமும், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய பல்சுவை நிகழ்ச்சி.


அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் 31.08.11 அன்று கலைமாமணி முனைவர். வாசவன் அவர்கள் தலைமையில், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் சுமார் 70 தமிழ்ப்படைப்பாளிகள் குழுவினர் வந்திருந்தனர்.

29.08.11 அன்று ஸ்வராஜ் தீப் கப்பலில் வந்திறங்கிய குழுவினர், 30.08.11 அன்று தீவுகளின் சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ்ந்தனர். 31.08.11 அன்று அந்தமான் தமிழர் சங்கத்தில் உள்ளூர் படைப்பாளிகளுடன் இணைந்து பட்டிமன்றம், கவியரங்கம், திருக்குறள் விளக்க விளக்கு நடனம், திரைப்பாடல்களுக்கு நடனம் என கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்து படைத்தனர்.
நிகழ்ச்சியில் முதலில் பேராசிரியர் திருமதி. பூங்கொடி பாலு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு. வாசவன் ஐயா அவர்கள், அந்தமான் தமிழர் சங்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் திரு. கு.ராஜ் மோகன் அவர்கள் மற்றும் பலர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

முதல் நிகழ்ச்சியாக கவியரங்கம் அரங்கேறியது. கவியரங்கத்திற்கு தலைமை தாங்கியவர் சிவகங்கை மாவட்ட உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.அய்க்கண் அவர்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் மூன்று நிமிடங்கள் கால அவகாசமாக வழங்கப்பட்டது. ஆறு கவி்ஞர்கள் பங்கேற்றனர். கவியரங்கில் நானும் பங்கேற்றேன்.

நிகழ்ச்சியில் அடுத்து “இன்றைய இளைஞர்களின் தேடல் -  பணமே! பாசமே!” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ’பணமே’ என்ற அணியில் அரிமா. அனகை. நா.சிவன் அவர்கள், திரு.கரடிப்பட்டி பொன்னுசாமி அவர்கள், மற்றும் திரு. பி.செண்பகராஜா அவர்கள் ஆகியோரும், ’பாசமே’ என்ற அணியில் திரு கருமலைத் தமிழாளன் அவர்கள், திரு ந. நாகராஜன் அவர்கள் மற்றும் திரு ந.ஜெயராமன் அவர்கள் ஆகியோர் வாதிட்டனர். வாதி, பிரதிவாதிகளில் திரு.பி.செண்பகராஜா அவர்களும், திரு. ந. ஜெயராமன் அவர்களும் தீவின் தமிழ்ப்படைப்பாளர்கள். பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்தவர் தீவின் கல்வித்துறைத் துணைத்தலைவர் முனைவர் திரு தஞ்சை மா.அய்யாராஜு அவர்கள். பட்டிமன்றத்தின் நிறைவில் நடுவர் அவர்கள் ’பாசமே’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

அடுத்து உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் தமது புத்தகங்களை வெளியிட்டனர். அனைவரும் தமது புத்தகங்களின் பிரதிகளை அந்தமான் தமிழர் சங்கத்தின் நூலகம் “பாரதி படிப்பகத்திற்கு” வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் கவியரங்கம், பட்டிமன்றம், கப்பலில் நடைபெற்ற கவிதைப்போட்டி, சொல்லாடல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு, உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வாசவன் ஐயா அவர்கள் தமது திருக்கரத்தால் பரிசு  வழங்கினார்கள்.

கவியரங்கில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. வாசவன் ஐயா அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றது எனது பாக்கியம்.

கவியரங்கில் பரிசு பெற்ற எனது கவிதை.

காற்றிலும் உப்பிடும் கன்னித்தீவு வாழ் தமிழ்ப்பெருமக்களுக்கும்
எழுத்தாளர் பெருமக்களுக்கும்
பாலைய நாட்டின் பைந்தமிழ் படைப்பாளர் எங்கள் கவியரங்கத்தலைவர் அவர்களுக்கும்
கொஞ்சு தமிழ் கவிதையிலே நெஞ்சங்களை அள்ள வந்திருக்கும் கவிகளுக்கும் என் பொன் மாலை வணக்கம்.

இருந்தமிழே! இருந்தேன் உன்னால்
இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்னும்
இளையவள் நான்
இந்த மன்றினிலே வடிக்கும் கவிதை
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன.

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நா வறண்டு
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், தொலைக்காட்சி வட்டுகளுமாய் எங்கள் கிராமங்கள்
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்..
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

வீதியின் அகன்ற முச்சந்திகளில்
உழுதுகிடக்கும் புழுதியின் படிமங்கள்
முழங்கால் வரையிலும்.

வீதிச்சண்டையை வீதியில் தொலைத்து
காயும்,பழமும் நூறு முறை.

விருந்துகள் வரவறிந்தால்
கைவிரித்தோடி எதிர்கொண்டு
கைச்சுமை பகிர்ந்து
கண்களில் சிரிக்கும் பிரியமும் பாசமும்.

வறுமையும்,வெறுமையும் அறியா எனது
குழந்தைமையின் காலங்கள்
கடுகு போட்டிசைக்கும் ஒற்றை பலூனில்
எனக்கான உலகம்

இன்று
ஒற்றைக் குழந்தைக்காய்
உலகின் நவீனங்கள்
ஒட்டு மொத்தமாய் வீட்டிற்குள்.

வாரா விருந்து வலிய வந்தாலும்
சாளரத் திரையகற்றி சின்னதாய்
உதடு விரிப்பார்.

வானவியலும்,வடிவியலும்
வசமான அளவு
வசமாகவில்லை கூடி விளையாடுவது

தனித்தனி தீவுகளாய்
சமுதாய சமுத்திரத்தில் குழந்தைகள்
அடித்து,அடிவாங்கி,
சண்டையிட்டு சமரசம் செய்து
இப்படி எதுவுமே இல்லாத பால்ய காலம்.
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

இன்று
ஒரே தாயிடம் சூல் கொள்கிறார்கள்
பாண்டவரும்,கௌரவரும்.

பாஞ்சாலிகள் வரும் வரை
பாண்டவர்கள் தான்.
பாசத்தையும், நேசத்தையும் மட்டுமே
பகிர்ந்து கொண்டவர்கள்
பாஞ்சாலிகளின் வருகைக்குப்பின்
பங்கீட்டை மட்டும் விவாதிக்கிறார்கள்.

முகப்பு, வளவிலிருந்து அடுப்படி வரை
பாகம் பிரித்து கோடு போட்டு
பங்காளிகளாய் அண்ணன் தம்பிகள்
ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட
வேற்றுமை விதைகளின் விஷம்
வேர்வழி ஊடோடி விழுதுகளுக்கும்.

குருஷேத்திர சீற்றம்
பிடரி சிலிர்த்த சிங்கமென மனங்களில் புரண்டு
சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்க.

கோடுகள் அழியும்
நாட்களுக்காய்க் காத்துக்கிடக்கும்
நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்...
எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
அழும் மனதை ஆற்றுப்படுத்துகிறது அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் மிளிர்கின்றன!.

பி.கு.: என்ன இந்தக்கவிதைகள் எல்லாமே எங்கோ படித்தது போல் இருக்கிறதா?
சரிதான். எனது வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் சிறு மாற்றங்கள் செய்து வழங்கினேன். நடுவர் அவர்கள் எனது கவிதை குறித்து கூறுகையில் அருமையான ”உருவகக்கவிதை” என்று பாராட்டினார்கள்.


அந்தமான் முரசு–தீவுகளின் முதல் தமிழ் செய்தி ஏட்டின் 43வது ஆண்டு விழா



வலையுலக உறவுகளுக்கு வணக்கம். 

அந்தமான் நிகோபார் தீவுகளின் முதல் தமிழ் செய்தி ஏடான ”அந்தமான் முரசு” தனது 43 வது ஆண்டு விழாவைக் கடந்த 30.08.11 அன்று கொண்டாடியது. தினசரி செய்தி ஏடாக வெளிவந்த ”அந்தமான் முரசு” நிர்வாகக் காரணங்களால் வார இதழாக மாற்றம் பெற்றது. இந்த அந்தமான் முரசு செய்தி ஏடு தெய்வத்திரு. சுப. சுப்ரமணியன் அவர்களால் தொடங்கப்பெற்று தற்போது அவரது திருமகனார் திரு. சுப. கரிகால்வளவன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.தெய்வத்திரு சுப. சுப்பிரமணியன் அவர்கள் தீவுகளில் தமிழர் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் தம் உரிமைகளை மீட்டெடுக்கவும் போராட்டங்கள் பல புரிந்தவர். இன்று தீவுகளில் தமிழர்கள் உன்னத நிலையில் இருப்பதற்கும், வாணிபம், அரசுப்பணிகளில் வெற்றியுடன் உலாவருவதற்கும் துணை புரிந்த பெருமக்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.தந்தை விட்டுச்சென்ற பணியினை தமையன் செவ்வனே செய்துவருகிறார். தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்.
 தீவுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 3,79,000. இவர்களில் தமிழர்கள் சுமார் 1,00,000 பேர். மொத்தத்தமிழர்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இந்த செய்தித்தாளை அந்தமான் முரசு ஆசிரியர் திறம்பட செயல் படுத்த இயலும். மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு தமிழ் வழிக்கல்வி இருக்கிறது. முக்கிய பூமியில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவில் தமிழர்கள் இந்தியர் என்ற உணர்வுடன்,ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வந்தாலும், தாய்த்தமிழை தமிழன் என்ற உணர்வோடு பேணுவதும் அவசியமாகிறது. தமிழ் இதழ்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நம்து தார்மீகக்கடமையாகிறது. அதோடு மட்டுமல்லாது தமிழர் மேம்பாட்டிற்காக உழைத்த அன்னார் தெய்வத்திரு.சுப.சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியும் ஆகும் என்பது எனது தனிப்பட்ட, தாழ்மையான கருத்து.

அந்தமான் முரசு செய்தித்தாள் இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட வேண்டுமென வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

வெள்ளி, ஜனவரி 21, 2011

இது தான் வாழ்க்கை

புறக்கணித்தலின் வலிகளும்
அரவணைத்தலின் சுகங்களும்
கலந்த நாட்கள் எனது கடந்த காலம்.

கடந்த காலத்தை கவிதையில் சேமித்து
நிகழ்காலத்தை நெஞ்சில் சுமந்து
எதிர்காலத்தை கனவுகளில் சேமித்து
விடியும் பொழுதுகள் எனக்கானதாய்
காலத்தின் கரங்களில் வரங்களை யாசித்து.

வாழ்க்கைப்பாதையை திசை திருப்பிய மரணங்கள்,
பஞ்சம்,நோய், அவலங்கள்,
அழுகையும், சிரிப்புமாய் தொடரும் வாழ்நாட்கள்
புத்தனின் போதனைகள் புரிந்தும்
போதிமரம் தேடி போகக் கூடவில்லை.
தேடிக்கொண்டே இருக்கிறேன்
தேடும் பொருள் தெரியவில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இலக்கு எது புரியவில்லை.

ஒவ்வொரு மணித்துளியிலும்
ஒவ்வொரு நிறம் காட்டும் மனப்பச்சோந்தி.
உதடுகள் பேசும் உன்னதங்களை
உதறித் தள்ளும் உளப்போக்கு.
உடலின் அழுக்கை கூட்டி
உள்ளத்தில் கொட்டி மூடி
புன்னகையால் பூசி மறைத்து
புனிதமாய்க் காட்டிகொள்கிறேன்.

ஊருக்கு உபதேசம் செய்யும்
தத்துவ வியாபாரிகளிடம் கேட்டேன்
"ஏன் இப்படியெல்லாம் நான்?"
அவர்கள் சொன்னார்கள்
"இது தான் வாழ்க்கை"

வியாழன், ஜனவரி 20, 2011

கையேந்துகிறதா அந்தமான் பழங்குடி ஜரவா?


அந்தமானுக்கு வருகை தரும் முக்கிய பூமி அறிஞர் பெருமக்களை அந்தமான் அகில இந்திய வானொலியின் தமிழ்ப்பிரிவிற்கென நேர்முகம் காண்பதுண்டு. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த வெள்ளித்திரை இயக்குனரும், நடிகருமான திருமிகு. பா.சேரன் அவர்களை நேர்முகம் கண்டோம்.இயக்குனர் அவர்களின் மூன்று நாள் பயணத்தில் உள் தீவுகளில் இருக்கும் தமிழர்களை சந்திக்கவும், தீவில் சுற்றுலா செல்லவும் நேரம் போதாத அவரது குறுகிய காலத்தில் விடாமல் துரத்தி மூன்றாவது நாள் மாலை, அந்தமான் தமிழர் சங்கம் "மெகாபோட்" உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்தின் போது அந்த உணவகத்தின் வரவேற்பறையில் வைத்து நேர்முகம் கண்டோம். பிரபலங்கள் பலரும், நேர்முகம் என்ற பெயரில் ஒரே மாதிரியான கேள்விகளைச்சந்திக்க வேண்டி வரும். திரும்பத் திரும்ப அதே கேள்விகள் அதே பதில்கள். செக்கு மாட்டுத்தனமான தன்மை. பதில் சொல்ல ஆர்வமற்று இருக்கும்.இருந்தாலும் இயக்குனர் பா சேரன் அவர்கள் பொறுமையாய் பதில் கூறினார்கள்.

இணையத்தில் அவரைப்பற்றிய செய்திகளைச்சேகரித்து கேள்விகளைத் தயார் செய்திருந்தேன். திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் இல்லை. சேரன் அவர்களின் படங்களில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய்தவமிருந்து, மாயக்கண்ணாடி, பிரிவோம் சந்திப்போம் ஆகிய ஏழு படங்கள் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு வந்த படங்கள் பற்றிய ஞானம் இல்லை.அவரின் திரையுலகப்பயணம் பற்றியும் தெரியாது.

அப்படியும் நிறையக்கேள்விகள் தயார் செய்திருந்தேன். சட்டியில் இருந்தது அகப்பையில் வந்தது. ஆனாலும் முகம் சுளிக்காமல் எல்லாக்கேள்விகளுக்கும் சலிப்பில்லாமல் தொடர்ந்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி - உங்களின் பன்முகப்பட்ட ஆளுமையின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது?

அதற்கு சேரன் அவர்களின் பதில் - எதுவுமே இல்லை. நா கத்துக்கிட்டத அடுத்தவங்களுக்கு சொல்ல விரும்புறேன். நம்ம நினச்சு எதுவுமே நடக்கப்போறதில்ல.எனக்கு எந்த உள்நோக்கமும் இல்ல. இப்ப அந்தமானுக்கு நா வந்திருக்கேன். சுத்திப்பாக்குறேன். எனக்கு இந்த இயற்கை அழகு புடிச்சிருக்கு. அதே சமயத்துல அந்த பழங்குடி மக்கள் ஜரவாஸப்பாக்கையில மனசுல ஒரு வலி இருக்கு. இந்த மண்ண ஆண்ட அவுங்கள விரட்டிட்டு நீங்க இங்க ஆண்டுகிட்டு இருக்கீங்க. இலங்கைத்தமிழர்கிட்ட இருந்த பகுதிய சிங்களர்கள் புடிச்சுகிட்டு அவங்கள விரட்டிய மாதிரி. அவுங்க போற வர்ற வண்டிகள்ட்ட கையேந்திகிட்டுருக்கிற நிலமை

ஐயா! உங்களின் ஒப்பீடு முற்றிலும் தவறு. இலங்கை மண்ணைத் தாய் மண்ணாகக் கொண்ட நமது தமிழினம், அங்கே உழைத்தது. ரத்தம் சிந்தியது. இலங்கை என்ற சொர்க்க பூமியை உருவாக்கியது. வாழ்வாதாரங்களை இலங்கையைச்சுற்றியே உருவாக்கிக்கொண்டது. சுயநலம் பிடித்த சிங்கள இனம் அவர்களை வாழ்வாதாரங்களைப்பிடுங்கிக் கொண்டு வெளியேற்றியது மட்டுமல்லாது, அவர்களை மான பங்கப்ப்டுத்தி, ஊனப்படுத்தி, கட்டுக்கடங்காத கொடுமைகளுக்கு ஆளாக்கி அசுர வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், ஜரவா என்கிற ஆதிக்குடி, அவர்கள் பகுதியில் நுழையும் பொதுமக்களை விஷ அம்பு எய்து கொன்று விடுவார்கள். நம்மவர்களின் லீலைகளும் குறைவில்லை தான். அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தேன், சாம்பிராணி, அம்பர் போன்ற பொருட்களைக் களவாடி, அந்த இனச்சிறுவர்களின் கைக்கட்டை விரலை, அம்பு எய்ய விடாமல் வெட்டிவிடுவார்களாம். அது ஒரு காலம். ஆனால் இன்று மத்திய அரசின் ஆணைப்படி பழங்குடிகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு பழங்குடியினருக்கும் பாதுகாப்பகம், உணவு, ஆடை, மருத்துவம், கல்வி இப்படி வசதி செய்து கொடுத்திருக்கிறது தீவு நிர்வாகம். அவர்களின் இருப்பிடத்திற்கு காவலர் பாதுகாப்பு. எல்லாம் இலவசமாய்க் கிடைக்கவும் அந்த இனம் வேட்டை மறந்தது. உழைப்பற்று சோம்பேறியாய் சுற்றித்திரிகிறது. அவர்கள் இயற்கை உணவை உண்பவர்கள். நமது சமைத்த உணவு அவர்களுக்கு நோயை உண்டு பண்ணுகிறது. ஆகவே நமது உணவுப்பொருட்களை அவர்களுக்கு வழங்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆவல் மிகுதியால் கையேந்துகிறார்கள். அவர்களின் வசிப்பிடம் அடர்காடுகளேயன்றி, நாங்கள் உருவாக்கியுள்ள இந்த நாடல்ல. அவர்களின் பூமியை முக்கிய பூமியுடன் இணைத்து, காலத்தோடு ஒட்ட ஒழுகக் கற்றுத்தருகிறோமேயன்றி பூமியைப் பிடுங்கிக்கொண்டு அகதிகளாக்கவில்லை. அதற்கு தீவு நிர்வாகமும், தமிழர் மற்றும் தீவு வாழ் மக்களின் நெஞ்சமும் கண்டிப்பாக இடம் தராது.

இந்த அந்தமான் என்னும் தண்ணீர் தேசத்தை உருவாக்கியதில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. எங்கள் தீவுக்கவிஞர் மற்றும் கல்வித்துறையின் துணை இயக்குனர் தஞ்சை மா. அய்யா ராஜு அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் " தமிழன் இந்த தேசத்தின் பிரம்மா. அவன், இவன் என்பதெல்லாம் சும்மா" என்று. அந்தமானில் தமிழர்களை வரவழைத்து அவர்களுக்குத் தங்குமிடம் தந்து, வேலைக்கு ஏற்பாடு செய்து தந்த பேராளர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். தமிழ் மொழிக்காக, தமிழ் கல்விக்காக, தமிழர் சங்கத்தை தம் உழைப்பில் உருவாகிய எண்ணற்ற தமிழர்கள், மற்ற மாநிலத்தவருக்கும் உதவும் பண்பாளர்களால் இந்த பூமி செழிக்கிறது.இன்று அரிசி முதல் பருப்பு வரை அத்தனையும் முக்கிய பூமியின் தரத்திற்கும், பயன்பாட்டிற்கும் ஈடாய் கிடைக்கிறது என்றால் அது தமிழனின் முயற்சி.ஒவ்வொரு துறையிலும் சீரிய முறையில் பணியாற்றும் மக்களால் உருவானது இந்த பூமி.காடு அழித்து நாடாக்கியதும், கலாச்சாரம், பண்பாடு என்று வாழ்க்கையை சீரிய முறையில் வாழ மற்றோருக்கும் கற்றுக்கொடுத்தவர் தமிழர். இங்கே அனைத்து மாநில மக்களோடு, இலங்கை அகதிகள், பர்மா அகதிகள்,வங்காள தேச அகதிகள் உண்டு. எல்லோருடனும் தமிழர் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு இனம் தனது பசி தீர்க்க பிச்சை பெறலாம். ஆனால் வாழ்க்கையை பிச்சையாய்ப் பெற முடியாது. அது தன் முனைப்பாலும், சுய முயற்சியாலும், அதீத விழிப்புணர்வாலும் மட்டுமே பெற முடியும். வாழ்வாதாராங்களை உருவாக்க முடியாத, சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அறியாத ஒரு சமூகம் அடுத்தவர்களை சார்ந்திருப்பது தவிர்க்கமுடியாதது. இதில் ஆண்டான், அடிமை எங்கு வந்தது?. ஜரவா இன மக்கள் கொடூர குணத்தில் இருந்து இப்போது தான் திருந்தி இருக்கிறார்கள். அவர்களில் சில சிறுவர்கள் இன்று பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களின் மூலம் அந்த இனம் விழிப்புணர்வு பெறலாம். சிகரங்கள் தொடலாம். அவர்களிலும் உருவாகக்கூடும் ஒரு மகாத்மா! ஒரு விவேகானந்தர்! ஒரு பகத் சிங்! தன் இனத்தை ஒரு நல்ல தடத்தில் வழிநடத்தி செல்லலாம். நாங்கள் விரும்புவதெல்லாம் மற்ற பழங்குடியினரைப்போல நம்முடன் உறவு கொண்டாடும் உணர்வைத்தான். தீர்வு காலத்தின் கைகளில்!.

சனி, ஜனவரி 15, 2011

அந்தமானில் பொங்கல் விழா


அந்தமானில் பொங்கல் திருநாள் உண்மையிலேயே தமிழர் அனைவரும், இன வேறுபாடு இன்றி கொண்டாடும் ஒரு திருநாள். இதற்கு முக்கிய காரணம் அந்தமான் தமிழர் சங்கம். ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் முக்கிய பூமியின் பிரமுகர்களில் ஒருவரை அழைத்து, தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் நடிகரும், இயக்குனருமான திரு மிகு சேரன் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அந்தமானில் இந்த வருடம் வெல்லம் ரூ.58, கரும்பு ரூ.30, வெங்காயம் ரூ.70 என்று உயர் விலைப்பொங்கலாக (costly?) இருந்தாலும் கூட திரைத்துறை சார்ந்த ஒருவரின் வருகை எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டது. அந்தமான் தமிழர் சங்கம் போகி அன்று எளிய மக்களுக்கு பொங்கல் பை வழங்கினர். பொங்கல் பை வாங்கிய மகளிரில் பெரும்பான்மையானோர் தெலுங்கர்கள். பொங்கல் அன்று அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் காரணியாக இயக்குனர் சேரன் இருந்தார் என்றால் மிகையில்லை. அவரின் எதார்த்தமான, எளிமையான, அலங்காரமற்ற, இயல்பான பேச்சு, பேச்சில் தொனித்த உண்மை,கோபம், தாய் மொழி பற்று எல்லாம் அனைத்து தமிழ் மக்களையும் கவர்ந்தது. அவரின் ஆடம்பரமற்ற தோற்றம், நம்மவர் என்ற உணர்வைத் தந்தது.

திரு சேரன் அவர்களுக்கு, இந்த ஊரும், இங்கு எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர்கள் என்பது குறித்து மிகுந்த ஆச்சர்யம் கொண்டு பேசிய அவரின் அப்பா, 1960களில் இங்குள்ள குருசாமி & சன்ஸ் என்கிற பெரிய வணிக நிறுவனத்தில் பணி புரிந்ததாகக் குறிப்பிட்டார். அதோடு அந்தமான் தமிழர் சங்கத்தின் பொருளாளர் திரு. ராமையா ஐயா அவர்களைத் தனது சித்தப்பா என்றும் மேடையிலேயே குறிப்பிட்டார்."தமிழர்கள் தமிழிலேயே பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழை பேச, படிக்கக் கற்றுக்கொடுங்கள். வயதானதும் உங்களின் கடைசிக்காலத்தில் உங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுங்கள். ஒரு மனிதன் எவ்வளவு வள்ர்ந்தாலும் அவனின் கடைசி மணித்துளிகள் அவனின் சொந்த ஊரில் தான் இருக்க வேண்டும். சொந்த ஊரில் தான் மடிய வேண்டும்.நான் சென்னையில் வீடு வாங்கவில்லை. எனது சொந்த ஊரான பழையூர் பட்டியில் தான் பெரும் செலவில் கட்டியுள்ளேன். அப்படியிருந்தால் தான் என் மனைவி, மக்கள் எனது சொந்த ஊருக்குப் போகவேண்டுமென நினைப்பார்கள்.

எதிர் காலத்தில் விவசாய பூமி கூட இருக்கும். ஆனால் விவசாயம் தெரிந்தவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். எனது திரை வாழ்க்கை இன்னும் ஐந்து, அல்லது பத்து வருடங்கள் இருக்கலாம். அதன் பிறகு எங்கள் ஊருக்குச்சென்று நானும் விவசாயத்தில் ஈடுபடுவேன்.உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் இருப்பதைப்போல எனக்குத் தொழில் திரைப்படம். திரைப்படத்தில் என்னைப்பார்த்து உங்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கிறது. எனக்குப்படித்து பதவிகளில் இருப்பதைப் பார்த்து பிரமிப்பாய் இருக்கிறது" என்று பேசினார்.

எவ்வளவொ அறிஞர்கள் இலக்கியச்சொற்பொழிவு ஆற்றிய சங்க மேடையில் சேரன் அவர்களின் இயல்பான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. நடைமுறை  வாழ்க்கைக்கு இயைந்ததான அவரின் பேச்சு மனதுக்கு இதமாக இருந்தது. மனதளவில் அவர் இன்னும் பழையூர் பட்டி வாசி என்பதை அவரின் பேச்சு சொன்னது. மக்கள் கூட்டம் அவரின் கையெழுத்து வேட்டைக்கு அலை மோத மேடையை விட்டு இறங்கி வந்து "உங்கள் அனைவருக்கும் கை கொடுக்கிறேன். கையெழுத்துப் போடுவது இயலாது" என்று கை கொடுத்தார்.

இயக்குனர் சேரன், நடிகர் சேரன் என்ற இந்த முகங்களை விட இயல்பான, எளிமையான, நல்ல மனிதர் சேரன் என்ற இந்த முகம் தான் எனக்குப்பிடித்திருந்தது.

சனி, ஜனவரி 08, 2011

அந்தமானில் தீவுச்சுற்றுலா விழா


வலையுலக உடன் பிறப்புகள் அனைவருக்கும் (தாமதமான) 2011ம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரும் புத்தாண்டில் நிறைய சபதம் எடுப்பார்கள். குறிக்கோள், இலக்குகள் குறிப்பார்கள்.எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது இது வரை.ஆனால் இந்த வருடம், வலைத்தளத்தில் முடிந்தவரை அடிக்கடி பதிவுகள் இடவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறேன்.வேலை பளு அதிகரித்ததன் விளைவு வலையுலகத் தொடர்பு கிட்டத்தட்ட அற்றுப்போய் விட்டது.இந்த வருடம் வலையுலகச்சொந்தங்களை மீட்டெடுக்க வேண்டும். புதிப்பித்து தொடர வேண்டும்.சரி!

அந்தமான் தலை நகர் போர்ட் பிளேயரில் கடந்த 5 ம் தேதி தீவுச் சுற்றுலா விழா,
தீவுச்சுற்றுலா விழாத் திடலில் தொடங்கியது.அந்தமான், நிகோபார் தீவுகளின் துணை ஆளுனர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) பூபேந்தர் சிங் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.இந்த சுற்றுலா விழாவை முன்னிட்டு, முக்கிய பூமியில் இருந்து பல மாநிலக் கலைஞர்கள் வந்துள்ளனர்.இந்த வருடம் காஷ்மீர் மாநில நாட்டுப்புறக் கலைஞர்களும் வந்துள்ளனர்.விழாத் திடலிலும், தீவின் பல்வேறு பகுதிகளிலும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னர் இந்த விழாவில் பல மாநிலங்களிலிருந்தும் கைவினைப் பொருட்கள் மற்றும் நுகர் பொருட்கள் அங்காடிகள் இடம்பெறும். இப்போதெல்லாம் கொல்கத்தா நகர் அங்காடிகள் ஒன்றிரண்டு இடம்பெறுவதோடு உள்ளூர் கடைகளே மிகுதி. காரணம் மக்களின் வாங்கும் திறன் மற்றும் விற்பனையாளர்களின் குறைந்த லாபமும் காரணமாயிருக்கலாம். அந்தமான் தீவின் அனைத்து அரசுத் துறைகளும் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

பொழுது போக்கிற்கு திரை அரங்குகளோ, கூடிக்களிக்க உறவுகள் அருகில் இல்லாத குறையும் உள்ள எங்களுக்கு, இது போன்ற விழாக்கள் மிக அரிய வடிகால். தமிழ் நாட்டிலிருந்து கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டக்கலைஞர்கள் வருகை தந்து, தமது கலைத் திறனால் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள்.இவர்களோடு உள்ளூர் கலைஞர்களும் தமது கலைத் திறனைக்காட்டிவருகிறாகள். இங்கு, தூர்தர்ஷன் தொலைக்காட்சி, மாலை நேர கலை நிகழ்ச்சிகளை நேரடி ஒலி- ஒளி பரப்பு செய்து வருகிறது.

தீவுச்சுற்றுலா விழாவில் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் தமது தொகுப்புரையில், "காஷ்மீரக்கலைஞர்கள் தாங்கள் இந்தத் தீவுக்கு வருகை தருவதற்கு முன் எங்கள் மாநிலம் மட்டும் தான் இயற்கை அழகு நிறைந்தது என்று எண்ணியிருந்தோம். இந்தத் தீவுகளைப் பார்த்ததும் எங்களை மறந்தோம் என்றார்கள்" என்றார்.

காஷ்மீர் உடன்பிறப்புகளே! உங்களுக்கு ஒரு வார்த்தை. அந்தமான் தீவில் பனி இல்லை. உயிரை உறைய வைக்கும் குளிரில்லை. உயிரை நடுங்க வைக்கும் வன்முறை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தீவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கிறது. செந்தமிழ் மணக்கிறது. அமைதி மலர்ந்து, அலை ஓசை மட்டும் தாலாட்டுகிறது.சமயத்தில் நிலமே தொட்டிலாய் ஆடும். ஆனாலும் ஆபத்தில்லை.

என்ன? அடுத்த பயணம் அந்தமானுக்கா? நல்வரவு!!!