அந்தமானுக்கு வருகை தரும் முக்கிய பூமி அறிஞர் பெருமக்களை அந்தமான் அகில இந்திய வானொலியின் தமிழ்ப்பிரிவிற்கென நேர்முகம் காண்பதுண்டு. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த வெள்ளித்திரை இயக்குனரும், நடிகருமான திருமிகு. பா.சேரன் அவர்களை நேர்முகம் கண்டோம்.இயக்குனர் அவர்களின் மூன்று நாள் பயணத்தில் உள் தீவுகளில் இருக்கும் தமிழர்களை சந்திக்கவும், தீவில் சுற்றுலா செல்லவும் நேரம் போதாத அவரது குறுகிய காலத்தில் விடாமல் துரத்தி மூன்றாவது நாள் மாலை, அந்தமான் தமிழர் சங்கம் "மெகாபோட்" உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்தின் போது அந்த உணவகத்தின் வரவேற்பறையில் வைத்து நேர்முகம் கண்டோம். பிரபலங்கள் பலரும், நேர்முகம் என்ற பெயரில் ஒரே மாதிரியான கேள்விகளைச்சந்திக்க வேண்டி வரும். திரும்பத் திரும்ப அதே கேள்விகள் அதே பதில்கள். செக்கு மாட்டுத்தனமான தன்மை. பதில் சொல்ல ஆர்வமற்று இருக்கும்.இருந்தாலும் இயக்குனர் பா சேரன் அவர்கள் பொறுமையாய் பதில் கூறினார்கள்.
இணையத்தில் அவரைப்பற்றிய செய்திகளைச்சேகரித்து கேள்விகளைத் தயார் செய்திருந்தேன். திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் இல்லை. சேரன் அவர்களின் படங்களில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய்தவமிருந்து, மாயக்கண்ணாடி, பிரிவோம் சந்திப்போம் ஆகிய ஏழு படங்கள் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு வந்த படங்கள் பற்றிய ஞானம் இல்லை.அவரின் திரையுலகப்பயணம் பற்றியும் தெரியாது.
அப்படியும் நிறையக்கேள்விகள் தயார் செய்திருந்தேன். சட்டியில் இருந்தது அகப்பையில் வந்தது. ஆனாலும் முகம் சுளிக்காமல் எல்லாக்கேள்விகளுக்கும் சலிப்பில்லாமல் தொடர்ந்தார்.
அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி - உங்களின் பன்முகப்பட்ட ஆளுமையின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது?
அதற்கு சேரன் அவர்களின் பதில் - எதுவுமே இல்லை. நா கத்துக்கிட்டத அடுத்தவங்களுக்கு சொல்ல விரும்புறேன். நம்ம நினச்சு எதுவுமே நடக்கப்போறதில்ல.எனக்கு எந்த உள்நோக்கமும் இல்ல. இப்ப அந்தமானுக்கு நா வந்திருக்கேன். சுத்திப்பாக்குறேன். எனக்கு இந்த இயற்கை அழகு புடிச்சிருக்கு. அதே சமயத்துல அந்த பழங்குடி மக்கள் ஜரவாஸப்பாக்கையில மனசுல ஒரு வலி இருக்கு. இந்த மண்ண ஆண்ட அவுங்கள விரட்டிட்டு நீங்க இங்க ஆண்டுகிட்டு இருக்கீங்க. இலங்கைத்தமிழர்கிட்ட இருந்த பகுதிய சிங்களர்கள் புடிச்சுகிட்டு அவங்கள விரட்டிய மாதிரி. அவுங்க போற வர்ற வண்டிகள்ட்ட கையேந்திகிட்டுருக்கிற நிலமை
ஐயா! உங்களின் ஒப்பீடு முற்றிலும் தவறு. இலங்கை மண்ணைத் தாய் மண்ணாகக் கொண்ட நமது தமிழினம், அங்கே உழைத்தது. ரத்தம் சிந்தியது. இலங்கை என்ற சொர்க்க பூமியை உருவாக்கியது. வாழ்வாதாரங்களை இலங்கையைச்சுற்றியே உருவாக்கிக்கொண்டது. சுயநலம் பிடித்த சிங்கள இனம் அவர்களை வாழ்வாதாரங்களைப்பிடுங்கிக் கொண்டு வெளியேற்றியது மட்டுமல்லாது, அவர்களை மான பங்கப்ப்டுத்தி, ஊனப்படுத்தி, கட்டுக்கடங்காத கொடுமைகளுக்கு ஆளாக்கி அசுர வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், ஜரவா என்கிற ஆதிக்குடி, அவர்கள் பகுதியில் நுழையும் பொதுமக்களை விஷ அம்பு எய்து கொன்று விடுவார்கள். நம்மவர்களின் லீலைகளும் குறைவில்லை தான். அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தேன், சாம்பிராணி, அம்பர் போன்ற பொருட்களைக் களவாடி, அந்த இனச்சிறுவர்களின் கைக்கட்டை விரலை, அம்பு எய்ய விடாமல் வெட்டிவிடுவார்களாம். அது ஒரு காலம். ஆனால் இன்று மத்திய அரசின் ஆணைப்படி பழங்குடிகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு பழங்குடியினருக்கும் பாதுகாப்பகம், உணவு, ஆடை, மருத்துவம், கல்வி இப்படி வசதி செய்து கொடுத்திருக்கிறது தீவு நிர்வாகம். அவர்களின் இருப்பிடத்திற்கு காவலர் பாதுகாப்பு. எல்லாம் இலவசமாய்க் கிடைக்கவும் அந்த இனம் வேட்டை மறந்தது. உழைப்பற்று சோம்பேறியாய் சுற்றித்திரிகிறது. அவர்கள் இயற்கை உணவை உண்பவர்கள். நமது சமைத்த உணவு அவர்களுக்கு நோயை உண்டு பண்ணுகிறது. ஆகவே நமது உணவுப்பொருட்களை அவர்களுக்கு வழங்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆவல் மிகுதியால் கையேந்துகிறார்கள். அவர்களின் வசிப்பிடம் அடர்காடுகளேயன்றி, நாங்கள் உருவாக்கியுள்ள இந்த நாடல்ல. அவர்களின் பூமியை முக்கிய பூமியுடன் இணைத்து, காலத்தோடு ஒட்ட ஒழுகக் கற்றுத்தருகிறோமேயன்றி பூமியைப் பிடுங்கிக்கொண்டு அகதிகளாக்கவில்லை. அதற்கு தீவு நிர்வாகமும், தமிழர் மற்றும் தீவு வாழ் மக்களின் நெஞ்சமும் கண்டிப்பாக இடம் தராது.
இந்த அந்தமான் என்னும் தண்ணீர் தேசத்தை உருவாக்கியதில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. எங்கள் தீவுக்கவிஞர் மற்றும் கல்வித்துறையின் துணை இயக்குனர் தஞ்சை மா. அய்யா ராஜு அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் " தமிழன் இந்த தேசத்தின் பிரம்மா. அவன், இவன் என்பதெல்லாம் சும்மா" என்று. அந்தமானில் தமிழர்களை வரவழைத்து அவர்களுக்குத் தங்குமிடம் தந்து, வேலைக்கு ஏற்பாடு செய்து தந்த பேராளர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். தமிழ் மொழிக்காக, தமிழ் கல்விக்காக, தமிழர் சங்கத்தை தம் உழைப்பில் உருவாகிய எண்ணற்ற தமிழர்கள், மற்ற மாநிலத்தவருக்கும் உதவும் பண்பாளர்களால் இந்த பூமி செழிக்கிறது.இன்று அரிசி முதல் பருப்பு வரை அத்தனையும் முக்கிய பூமியின் தரத்திற்கும், பயன்பாட்டிற்கும் ஈடாய் கிடைக்கிறது என்றால் அது தமிழனின் முயற்சி.ஒவ்வொரு துறையிலும் சீரிய முறையில் பணியாற்றும் மக்களால் உருவானது இந்த பூமி.காடு அழித்து நாடாக்கியதும், கலாச்சாரம், பண்பாடு என்று வாழ்க்கையை சீரிய முறையில் வாழ மற்றோருக்கும் கற்றுக்கொடுத்தவர் தமிழர். இங்கே அனைத்து மாநில மக்களோடு, இலங்கை அகதிகள், பர்மா அகதிகள்,வங்காள தேச அகதிகள் உண்டு. எல்லோருடனும் தமிழர் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு இனம் தனது பசி தீர்க்க பிச்சை பெறலாம். ஆனால் வாழ்க்கையை பிச்சையாய்ப் பெற முடியாது. அது தன் முனைப்பாலும், சுய முயற்சியாலும், அதீத விழிப்புணர்வாலும் மட்டுமே பெற முடியும். வாழ்வாதாராங்களை உருவாக்க முடியாத, சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அறியாத ஒரு சமூகம் அடுத்தவர்களை சார்ந்திருப்பது தவிர்க்கமுடியாதது. இதில் ஆண்டான், அடிமை எங்கு வந்தது?. ஜரவா இன மக்கள் கொடூர குணத்தில் இருந்து இப்போது தான் திருந்தி இருக்கிறார்கள். அவர்களில் சில சிறுவர்கள் இன்று பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களின் மூலம் அந்த இனம் விழிப்புணர்வு பெறலாம். சிகரங்கள் தொடலாம். அவர்களிலும் உருவாகக்கூடும் ஒரு மகாத்மா! ஒரு விவேகானந்தர்! ஒரு பகத் சிங்! தன் இனத்தை ஒரு நல்ல தடத்தில் வழிநடத்தி செல்லலாம். நாங்கள் விரும்புவதெல்லாம் மற்ற பழங்குடியினரைப்போல நம்முடன் உறவு கொண்டாடும் உணர்வைத்தான். தீர்வு காலத்தின் கைகளில்!.