சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, மார்ச் 12, 2010

விளிப்பு


விளித்தல் என்பது அன்றாட வாழ்க்கையில், அவசர உலகில், மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்,சொல்லாடல் என்றாலும் கூட நாட்கள் கடந்தும் அந்த விளிப்பில் பிரதிபலித்த உணர்வுகளை மீட்டெடுக்கும் போது மனதை ஏதோ செய்யுமே அதை உணர்ந்ததுண்டா? (ஆமா! பதிவுக்கு தலைப்பு கிடைக்கலியா இன்னிக்கு?) ஒவ்வொரு மணித்துளியிலும் எங்கோ யாரோ யாரையோ, எதற்காகவோ விளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

.ஒரு தாய் தன் குழந்தையை செல்லப்பெயரில் அழைக்கும் விளிப்பிலிருந்து,ஒரு கணவன் தன் மனைவியின் பெயரை பாதி சுருக்கி பிரத்யேகமாக அழைக்கும் விளிப்பு,தன் கணவனை மனைவி அழைக்கும் விளிப்பு,உறவுகளின் விளிப்பு,முதலாளி தனது வேலைக்காரர்களை அழைக்கும்விளிப்பு,முகமறியாதவரை,நண்பர்களை,உறவுகளை,பேருந்திற்கோ,திரையரங்கிலோ காத்திருக்கும் போதோ,பேருந்து வழித்தடங்களில் நிறுத்தப்படும் தரிப்பிடங்களில் யாரோ யாரையோ விளிக்கும் போதோ, அந்த விளிப்பில் இருக்கும் அன்பு,அதிகாரம்,இறைஞ்சல்,குழைவு,அதட்டல்,அவசரம் போன்ற உணர்வுகளை நீங்கள் உணர்ந்ததோ அன்றி உங்களை வீடு வந்ததும் இம்சித்ததோ உண்டா?

பொதுவாக பெண்கள் கணவரை "என்னங்க" என்றழைப்பதை சௌகர்யமாகக் கருதுவார்கள்.ஒரு கேள்வி வார்த்தை எப்படி நம் பெண்களின் வாயில் மென்மையாய்,குழைவாய்,அதட்டலாய்,அவசரமாய்,பதட்டமாய் விதவிதமான நவரசங்களில் ஒலிக்கும் போது வியப்பாய் இருக்கும்.எப்படி இந்த வார்த்தை விளிப்பு வார்த்தையாய் ஆகியிருக்கும் என்று நான் பல நேரம் யோசிப்பதுண்டு.(ரொம்ப அவசியம்!).என் அம்மா,நான்,என் தங்கைகள் மற்றும் எங்கள் உறவினரெல்லாம் இப்படித்தான் அழைப்பது அருகில் இருக்கும் போது.கொஞ்சம் தொலைவில் இருந்தால் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அவர்களின் அப்பா என்று அழைப்பது வழக்கம்.என் அப்பாவை என் அம்மா நான் மூத்த குழந்தை என்பதால் "சாந்தி அப்பா" என்றழைக்க எனக்கு பெருமை பிடிபடாது.என் தங்கைகளோ ஆமா அவளுக்கு மட்டுந்தான் அப்பா எங்களையெல்லாம் தெருவில் கிடந்தா தூக்கி வந்தீர்கள் என்று முறைப்பார்கள்.அம்மாவின் பழக்கம் என்னையும் தொற்ற என் கணவரை என் மகளின் பெயரோடு அப்பா என்று சொல்லி அழைக்க அருகில் இருக்கும் மலையாளத்தோழி சண்டைக்கு வந்துவிட்டார்."எனக்குத்தெரிந்தவரை தமிழ்ப்பெண்கள் கணவரை அத்தான்,மாமா என்றழைக்கிறார்கள்.நீ தான் இப்படிக்கூப்பிடுகிறாய் அண்ணனை,இனிமேல் அண்ணனை அத்தான் என்றோ,மாமா என்றோதான் கூப்பிட வேண்டும்" என்று ஆணையிட என் கணவர் நெளிய ரசனையாய் இருந்தது.

மலையாளப்பெண்கள் கணவரை "சேட்டன்" என்கிறார்கள்.தெலுங்குப்பெண்கள் "பாவா" என்றும், வங்காளி மற்றும் இந்திப்பெண்கள் "சுனொஜி" என்பார்கள்.இந்த சுனொஜி என்பது கேளுங்க என்ற அர்த்தத்தில் வரும். கிட்டத்தட்ட நம்மூர் "என்னங்க" தான்.இப்போதெல்லாம் நம் பெண்கள் பெயர் சொல்லி,பெயரோடு 'டா' போட்டு அழைப்பது வழக்கமாகி விட்டது.இது அவர்களின் அந்தரங்கம்.(அப்புறம் நம்மளுக்கும் படுக்கையறையில காமிரா வச்சவுங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஹி,ஹி).

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களின் பக்கத்துக்கடை மாமா தன் சிப்பந்தியைக் கோபமாக "சைத்தானுக்குக் கொள்ளி வச்சவனே" என்றழைப்பார்.அர்த்தம் புரியாமல் இது என்ன புதுப்பெயர் என்று கேட்க அவரோ உன் அப்பாவிடம் கேள் மருமகளே என என் அப்பாவும் 'ம்ச்' என்று ஒரு வார்த்தையில் மறுதலிக்க என் அம்மாவிடம் அரித்ததில் என் அம்மா கூறினார்.எனக்குத் தெரிந்தவர் தன் மனைவியை "அடியே" என்றழைப்பார்.கோபம்,அன்பு,அதட்டல் அத்தனையும் நேரத்திற்கேற்றபடி அந்த "அடியே" ஒலிக்கும்.எழுத்தாளர் திருமதி.ரமணிச்சந்திரன் கதைகளில் கணவன் மனைவியை வித்தியாசமாக அழைப்பதை,அதை அவள் அனுபவித்து சிலிர்ப்பதை ஒரு அத்தியாயமாக்கியிருப்பார்.

நாம் நம் குழந்தைகளை மகளே என்றோ மகனே என்றோ அழைக்கிறோமா? பெரும்பாலும் மகளைப் பெயர்சொல்லி அல்லது செல்லப்பெயரில்.மகனை பெரும்பாலும் தம்பி என்கிறோம்.தம்பி என்பதும் ஒரு உறவு முறை.உடன் பிறந்த இளையவனைக் கூறும் உறவு முறையில் பெற்ற பிள்ளையை அழைப்பதை நாம் உணர்கிறோமா? பெரும்பாலும் மற்ற மாநில மக்கள் அவரவர் மொழியில் மகனே,மகளே என்றழைப்பதுடன் அடுத்தவர் குழந்தைகளையும் அப்படியே அழைக்கிறார்கள்.

எங்காவது,யாராவது தன் குழந்தையை,மனைவியை,நட்பை,சிப்பந்தியை அழைக்கும் போது நமது நினைவுகளைக் கிளறிவிட்டு அதில் மூழ்கி விடுவதும்,தற்போது என்னருகில் இல்லாதவர்களின் அன்பான விளிப்புகள் மனதில் தோன்றும் போது கண்ணீரும்,அதட்டலான,வசைபாடிய விளிப்புகள் கோபத்தையும் வரவழைக்கும்.ஆனால் பொது இடங்களில் பிச்சைக்குக் கை நீட்டும் முதியோர்,குழந்தைகள்,குழந்தையோடு ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் தீனமான விளிப்பும்,பாவமாய் தயங்கித்தயங்கி அடிக்குரலில்,தன் உடலைக்குறுக்கி உதவி கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர் குரலும் மட்டும் மனதை என்னவோ செய்யும்.தூக்கம் பிடிக்காது மனம் அரற்றும்.தூக்கத்தில் கனவில் கூட தீனமாய் ஒலிக்கும்.இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? வலியோர் மெலியோரை தரக்குறைவாய் அழைக்கும் வார்த்தைகள் மனதில் வலியேற்படுத்தும்.

 ஆமாம் நண்பர்களே! உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை எப்படி அழைப்பார்?நீங்கள் அவரை எப்படி அழைப்பீர்கள் சொல்லுங்களேன்.

8 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

என்னங்க சொல்லுங்க இதெல்லாம் அப்போ
என்னடா சொல்லுடா இது இப்போ
ங்ககையை விட... டாவில் கிக் இருக்காம் சொல்றாங்க....

எங்க வீட்டு அம்மணி எப்பவும் என்னங்க்!

சுவாரஸ்யமானபதிவு

ஹுஸைனம்மா சொன்னது…

புதுப்பார்வை. யோசிக்காத கோணம்.

நாகர்கோவில்/ கேரளா பக்கம் “மோனே/ மோளே” என்றுதான் பிள்ளைகளை அழைப்பார்கள். அதுவும் நல்லாத்தான் இருக்கும்.

பெரிய பையனின் பெயரைக்கொண்டு “ஹுஸைனம்மா” என்று எனக்கு நான் வைத்துக் கொண்ட பெயரால் என் சின்னவனிடம் நான் படும்பாடு!!

//சைத்தானுக்குக் கொள்ளி வச்சவனே// அர்த்தம் சொல்லவே இல்லீங்களே நீங்க?

சந்தனமுல்லை சொன்னது…

அன்பு சாந்தி லட்சுமணன் அவர்களுக்கு,

தங்களை உலக தண்ணீர் தினத்துக்கான தொடர்பதிவில் அழைத்துள்ளேன். http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_15.html

நன்றி
முல்லை

thenammailakshmanan சொன்னது…

எப்பிடிக் கூப்பிட்டாலும் கோச்சுக்க போறோமா என்ன ஷாந்தி ஹிஹிஹி

ஜோதிஜி சொன்னது…

நீங்கள் வானொலி அறிவிப்பாளர் என்ற இந்த செய்தி புதியது. வலைச்சரம் வாழ்த்துகள்.

V.Radhakrishnan சொன்னது…

நான் அம்மா என்பேன், அவர் என்னை அப்பா என்பார்.

Thekkikattan|தெகா சொன்னது…

மாமா, அத்தான் என்ற அந்த விளிப்பு எல்லா 'மூட்' நிலையிலும் அழைக்க எத்தனித்தால் எரியும் தீயில் ஐஸ் கட்டிய தூக்கி போட்டது மாதிரியாகிடாது... நல்ல சிறு கருவை எடுத்து அழகா கோத்திருக்கீங்க...

//(அப்புறம் நம்மளுக்கும் படுக்கையறையில காமிரா வச்சவுங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஹி,ஹி)//

:))

அக்பர் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க மேடம்.