சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

டைட்டானிக் பயணங்கள்


எனது முதல் கப்பல் பயணம் சென்னையிலிருந்து அந்தமானுக்கு. அந்தமான் காதலி படம் பார்த்ததில்லை. அந்தமானைப்பற்றிய கற்பனை செய்வதற்கோ, கனவு காண்பதற்கோ அந்தமானைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு தீவு எப்படி இருக்கும் என்ற கற்பனை கூட கிடையாது.அந்தமானுக்கு பயணம் என்றதும் சிங்கப்பூருக்கு கப்பலில் பயணித்த என் சித்தப்பா," அந்தமான் வழியாத்தான் கப்பல் போச்சுப்பா! அந்தாத்தெரியுது பாருங்க அந்தமான் லைட் ஹவுஸ். இது தான் நம்ம நாட்டு எல்லையோட முடிவு அப்புடின்னு சொன்னாங்க. நீ ஒண்ணும் பயப்படாதப்பா! நா சிங்கப்பூர் போகையில ஏழு நாப்பயணம். மழையும் காத்தும். அதுனால வாந்தியும் மயக்கமும் பொரட்டிப்போட சாப்பிட முடியாம கஷ்டப்பட்டேன். அந்தமானுக்கு மூனு நாள் தானாம்" என்று தேற்ற சிங்கப்பூருக்கு ஓரிரு முறை மட்டும் கப்பலில் பயணித்த என் அத்தையோ, " கப்பல்ல சினிமாத்தியேட்டரு, நீச்சக்குளம்,ஹோட்டலு எல்லாம் இருக்கும். வீடு மாதிரி இருந்துக்கலாம்" என்றார்கள்.பேருந்து சாலையில் பயணிக்கிறது என்றால் கப்பல் கடலில். போ! பார்த்துவிடலாம் என்ற தைரியத்தில் கப்பல் ஏறியாகிவிட்டது.

அந்தமானில் பொருட்கள் விலை அதிகம் என்று அரிசி, பருப்பு,பலகாரங்கள் முதல் சமையல் பாத்திரங்கள்,துணிமணிகள் வரை பத்து அட்டைப்பெட்டிகள்.அதிலும் என் கணவரின் அண்ணி "முதமுதல்ல போறப்ப பத்தா கொண்டு போகாம பதினொண்ணாக்கொண்டு போ" என்று கூறி பொரியரிசி மாவு, புளியோதரை, பழங்கள் என்று ஒரு சுமை கூட நான்கு சக்கர வாடகை வாகனம் பிடித்து, சுமைகளை ஏற்றி, உறவுப்பட்டாளத்துடன் சென்னை துறைமுகம் வந்தால், "உவ்வே! சீ! இது தான் கப்பல் ஏறுற இடமா?" அசிங்கமாய்,குப்பையாய், வெற்றிலை எச்சிலும், சிகரட் மீதங்களும் இறைத்து காலணி அணிந்து நடக்கும் போதே அருவெறுப்பாய் இருந்தது. "நகை பத்திரம்! இறங்கும் போது சுமைகள எண்ணி இறக்கிக்கங்க! கப்பல்ல பாத்து இருந்துக்க! இப்படியான உறவுகளின் ஏக அறிவுரைகள் காதில் ஏறவில்லை.

1991ல் டைட்டானிக் படம் வந்துவிட்டதா தெரியவில்லை.ஆனால் எட்டாம் வகுப்பின் இலக்கணப்புத்தகத்தில் கடைசிப்பக்கத்தில் டைட்டானிக் கப்பலின், பயணம் முதல் விபத்துக்குள்ளானது வரை, பயணிகளின் கடைசி நேர உரையாடல்களைக் கண்ணீர் மல்க படித்த ஞாபகம் மனதில் சுழன்றது.கப்பல் ஏறியாகிவிட்டது. M.V.ஹர்ஷவர்த்தனா என்பது அந்தக்கப்பலின் பெயர்.கப்பலில் பங்க் வகுப்பு பயணச்சீட்டு. கணவருக்கு பணி நிரந்தரமாகவில்லை என்பதால் போக்குவரத்து செலவு அலுவலகத்தில் கிடைக்காது. ஆகவே மேல்வகுப்பில் பயணம் செய்ய இயலாது ரூ.114/ல் கடைசி வகுப்பில் பயணம் செய்தோம்.கப்பலில் இருந்து பார்த்த போது சென்னை மாநகரின் விளக்குகள் மின்ன, கப்பலின் வெளிப்புறத்தில் சமுத்திர அலைகள் சப்தமாய் அடித்துத் திரும்ப பழைய படத்தின் கதாநாயகி போல் கடலலைகள் என்னை வாழ்த்தி வழியனுப்புவதாய் கற்பனை செய்து கொண்டேன். பதினோரு மணி வரை கப்பலின் மேல் தளத்தில் காற்றுவாங்கி விட்டு வந்து படுக்கையில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கி கனவில் ஆழ்ந்த போது,இருக்கையை யாரோ இழுப்பது போன்ற உணர்வில் சட்டென விழிக்க, பக்கத்து இருக்கை கல்லூரி மாணவிகள், " கியாகுவா? (என்னாச்சு), ஜஹாஸ் சுட்தே சமய் ஹில்த்தா ஹை! (கப்பல் விடுற நேரம், ஆடும்!)" என்று கூற எனக்கு ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழிக்க அவர்கள் கொல்லென்று சிரிக்க எனது கணவர் புரியவைத்தார்.கப்பல் ஆட ஆட இலக்கணப்புத்தகத்தின் டைட்டானிக் கதை மனதில் விஸ்வரூபம் எடுத்தது.சிறு வயதில் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு ரயில் பயணம், வளர வளர அறந்தாங்கி முதல் காரைக்குடி வரை பேருந்துப்பயணம்.எப்போதோ சுற்றுலா போன போது கன்னியாகுமரியில் படகுப்பயணம். இப்படி இருந்த நம்மை இப்படி அந்தமானுக்கு சுருட்டி அனுப்பும் உறவுகளின் மீது கோபம், உறவுகளை விட்டு பிரிந்து போகும் துயரம் கண்ணீராய் வழிய விடிய விடிய தூக்கம் போனது. விடியலில் உறக்கம் வந்த போது குழந்தைகளின் ஆரவாரமும், ஊரிலிருந்து திரும்பும் பெண்மணிகள் தங்கள் மாமியார்- நாத்தனார்களைப்பற்றிக் கூறி தமது கணவரை இடித்துரைக்கும் பேச்சுக்கள் இவற்றை மிஞ்சும் வாந்தி எடுக்கும் சப்தங்கள்.பல் துலக்கி கப்பலின் மேல் தளத்திற்குப்போன போது வழியெங்கும் ஒரே புளித்த நாற்றம். வாந்தி, வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவின் மிச்சம் இறைத்துக்கிடக்க ஆயாசமாய் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்,கடல்,கடல் தான்.கடலலைகள் கப்பலின் சுற்றுச்சுவர்களை டொம் டொம் என்று அடிக்கும் ஒலி.உப்புக்காற்று. அங்கிருந்த இருக்கை ஒன்றில் சுருட்டிப்படுத்துக் கொண்டேன்.இப்படியாக மூன்று நாட்கள் கடந்து நான்காவது நாள் காலை சிறு சிறு தீவுகள் கண்ணில் பட, ஹை! ஊர் வந்திருச்சு! என்று குதூகலிக்க எழுந்து உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக நான்காவது நாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு அந்தமான் துறைமுகத்தில் வந்திறங்கிய போது கண்ணில் பட்ட தூரத்து பசும் தீவுகள், துறைமுகத்தின் சுத்தம் பார்த்த போது கையில் இருக்கும் சுமைகளைத் தூக்கி எறிந்து விட்டு கன்னங்களில் கைவைத்து இயற்கையை ரசிக்கத்தூண்டிய மனதை அடக்கி வீடு வந்தோம்.

அதன் பிறகு 1996ம் ஆண்டு டைட்டானிக் படம் பார்த்துவிட்டு கப்பல் பயணம் இன்னும் புளிகரைத்தது. காற்று அதிகம் இருக்கும் போது பட்டென அடிக்கும் சன்னல் கதவுகள், கப்பலின் ஆட்டம் மனம் படபடக்க ஆரம்பித்து விடும். நம் மக்களின் மிகுந்த பொறுப்புணர்வில் கப்பல் விட்டு இரண்டாம் நாள் குளியலறை தண்ணீர் பங்க் பகுதியில் புகுந்து விடும்.கப்பலில் ஓட்டையோ இவ்வளவு தண்ணீர் வந்து விட்டதே என்று மனம் திடுக்கிடும்.இரவெல்லாம் தூங்காமல் குழந்தைகளைத் தடவியபடி படுத்திருப்பேன்.அப்போது தான் என் கணவர், ”அட! நல்ல ஆளு நீ! அப்ப நிலமை வேற.இப்ப நம்ம கடற்படை கப்பல்லாம் ரொம்ப வேகம். ஏதாவதுன்னா பொருட்கள் போனாப்போகுமே தவிர உயிரிழப்பெல்லாம் கண்டிப்பா வராது” என்று சொன்ன பின் தான் மனம் சமாதானமடைந்தது. கப்பல் சிப்பந்திகள் பொறுப்பாய் சுத்தம் செய்யச்செய்ய நம்மவர்கள் அசுத்தம் செய்வதைத் தொடர்வார்கள்.கப்பல் துறையை தீவு நிர்வாகம் மானியத்தில் இயக்க மக்கள் பொறுப்பின்றி கப்பலில் கழற்ற முடிந்த பொருட்களையெல்லாம் கழற்றி எடுத்துச்செல்வார்கள்.எப்பேற்பட்ட சொர்க்கத்தையும் எப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவார்கள் நம்மவர்கள் என்பதற்கு அந்தமானுக்கு விடப்படும் கப்பல்கள் ஒரு உதாரணம். என் மகளோ sea sickகினால் கப்பல் ஏறி, கப்பலை விட்டு இறங்கும் வரை எச்சில் கூட விழுங்க மாட்டாள். சே! இனி மேல் கப்பலில் வரவே கூடாது. எப்படியாவது விமானத்தில் தான் வர வேண்டும் என்று உறுதி எடுக்க அது பிரசவ உறுதியானது. நமது ஆசைகளை நமது பொருளாதாரம் தானே நிர்ணயிக்கிறது.இன்று கப்பலில் பங்க் வகுப்பில் இருந்து காபின் வகுப்பில் பயணம்.கோடை விடுமுறைக்கு முக்கிய பூமி வரும் போது மழை காற்று இருக்காது. அதனால் கப்பல் பயணம் நன்றாக இருக்கும். ஜூன் மாதம் திரும்பும் போது பருவ மழை ஆரம்பித்துவிடுமென்பதால் கடலில் காற்றும் அலையும் அதிகமாக இருக்கும்.கப்பல் ஆடும். ஆகவே, திரும்பும் போது விமானப்பயணம்.இப்போதெல்லாம் கப்பல் பயணம் பயத்தையோ, அலுப்பையோ, சலிப்பையோ தருவதில்லை.மாறாக ரசிக்கிறேன். அந்தமான் மண்ணை நான் மிகவும் நேசிக்கிறேன். அந்தமானுக்குத் தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும் இந்தக்கப்பல்கள் என் வரை தேவதூதர்களைப்போல. அந்தமான் என்ற சொர்க்கபுரியை அடைய இந்த ஒரு சிரமம் கூட எடுக்கவில்லையென்றால் எப்படி?

9 கருத்துகள்:

தீபக் வாசுதேவன் சொன்னது…

சிறிது சிரமங்கள் இருந்தாலும் கப்பல் பயணம் நாம் போன்று எழுத்தாளர்/பதிவர்களுக்கு மிகவும் நல்லது.

அமைதியாக சிந்தனை செய்தி எழுதுவதர்க்கு ஏற்ற நேரம் கிடைக்குமல்லவா?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

வாவ்..!

அருமையா எழுதி இருக்கீங்க.
--
நானும் துரைமுகத்துல அந்தமான் போறவங்க கஷ்டத்த பார்த்திருக்கேன். கூடவே அவர்கள் சுமக்கும் பொருட்களையும்.
--
ஹும்ம் அப்ப கப்பல்ல வரக்கூடாதுன்றீங்க.:)

ஜீவன்(தமிழ் அமுதன் ) சொன்னது…

அருமையான கப்பல் பயண அனுபவம்...!

தமிழினி சொன்னது…

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

தங்களின், அனைத்து கட்டுரைகளும் அருமை,
நீண்ட நாட்களாக கப்பலில் பயணம் செய்து அந்தமான் சென்று,
சுற்றிப்பார்த்துவிட்டு விமானத்தில் திரும்ப வேண்டும் என்பது
எங்களின் நீண்டநாள் ஆசை. அந்தமானைப்பற்றி மேலும் இதே நடையில் எழுதுங்கள்

Thks & Rgds,

J.Arul Mani

A LL W O R L D T R A D E
2401/02, New Bombay Market,
Umarwada, Surat - 395010, India

ஹுஸைனம்மா சொன்னது…

வித்தியாசமான பயணக்கட்டுரை; வழக்கமா விமானம்/பஸ்/ரயில் பயணங்கள் குறித்து எழுதுற இடத்துல, கப்பல் பயணம்!! நல்லாருக்கு.

ஆனா, கப்பலின் அமைப்பு எல்லாருக்கும் பழக்கமில்லை; அதனால பங்க் பகுதி, காபின் பகுதி -- இந்த மாதிரி வார்த்தைகள் சில புரியவில்லை.

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

எனக்கு அந்தமானின் ஞாபகத்தை ஏற்படுத்திட்டீங்க சகோதரி....உங்கள் அனுபவகட்டுரை அருமை

பெயரில்லா சொன்னது…

அந்தமான் வந்த நாங்கள் அருகில் இருந்த தீவுக்கு மூன்று மணி நேரம் பயணித்தோம்.புதிய கப்பல்.எங்களுக்கு எந்த வகையான அச்சத்தையும் கப்பல் பயணம் ஏற்படுத்தவில்லை.தனியாருக்கு உரிமையான கப்பல்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.
தங்கள் பட்டறிவு எங்களுக்குப் புதியது.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

PPattian : புபட்டியன் சொன்னது…

வாழ்க்கையில் எப்போதாவது கப்பல் பயணம் வாய்க்காதா என்று ஏங்கும் என் போன்றவர்களுக்கான அழகிய கட்டுரை.. நன்றி.