சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், ஜூன் 29, 2010

வெளியில் தெரியாத வேஷங்கள்

உன் கோபங்களை பூக்களால்
எண்ணி எடுத்து
கூடையில் கொட்டிவைத்தேன்.
நீயோ
அதீதப்பிரியங்களின் எண்ணிக்கை என்றாய்.

உன் இதழ்கள் உதிர்த்த குறைகளை சோழிகளால்
எண்ணி எடுத்து
பல்லாங்குழிகளை நிறைத்து வைத்தேன்.
நீயோ
நிறைந்த அன்பின் அடையாளம் என்றாய்.

என் கொஞ்சலில் ஆரம்பிக்கும்
உன்னோடான என் உரையாடல்
ஒரு நாளும் முடிந்ததில்லை சுபமாய்.

எங்காவது கூட்டத்தில் பிரிந்து போனால்
எப்படி என்னை மீட்டெடுப்பாய்
என் முகமே பழக்கமற்ற நீ!

உன் புஜங்களைப் பற்றி
நிலவில் உலவி
நட்சத்திரங்களைத் தடவி
கண் மூடி கனவுகளில் சிறகடிக்க
உதறி எழும் உன் நிராகரிப்பில்
உலர்ந்து வெளிறும் என் கனவுகளின் வண்ணம்

இளமையைச் செலவழித்து
திரவியம் தேடும் உன் விழிகளில்
நரைத்துப் போயிருந்தது எனக்கான உன் அன்பு
உன் தேனிலவு அன்பின் தாக்கத்தில்
கானல் நதிக்குக் கரை கட்டிக் காத்திருக்கிறேன்.

என் வலிகளையும், வருத்தங்களையும்
உன் அன்பில் கரைக்கும் கனவுகளுடன் நான்.
மூளை அணுக்களில்,
ஞாபக மடிப்புகளில்,
கோடிகளைக் குறிவைத்து நீ
யாருமறியாத நமது வேறுபாடுகளை மறைத்து
அழுத்தமான அலங்காரங்களுடன் உன் பட்டத்து மகிஷியாய்....

ஞாயிறு, ஜூன் 27, 2010

தமிழுக்குத்திருவிழா இன்று! தமிழனுக்குத் திருவிழா என்று?


கோவையில் உலகத்தமிழர் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.உலகச்செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக, கோலாகலமாக தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு. உலகின் மூலை, முடுக்குகளில் இருந்து தமிழின ஆர்வலர்கள், தங்கள் பணிகளைத் தள்ளி வைத்து விட்டு, ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்தமான் தமிழர் சங்கத்தலைவர் திரு மிகு அ.க. போஜராஜன் ஐயா அவர்கள், அந்தமான் முரசு பத்திரிக்கை ஆசிரியர் திருமிகு . சுப.கரிகால் வளவன் அவர்கள் மற்றும்  இலக்கியமன்றம் சார்பில் மூத்த தமிழாசிரியை. கவிஞர். திருமதி. கமலா தோத்தாத்திரி அம்மா அவர்களும் அந்தமான் தமிழர் சார்பில் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.மாநாட்டில் சுப.கரிகால் வளவன் அவர்கள் "அந்தமானும் தமிழர்களும்" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்கள்.

கோவையில் படிக்கும் மகளை சந்திக்கவென்று, மே மாதம் கோவை சென்ற போது, மாநாட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது நகரம். நகரம் முழுதும் தோண்டப்பட்டும், பாலங்கள், நடைபாதைகள், சாலைகள் புதுப்பிக்கப்பட்டும் நகரம் ரணகளமாகிக்கிடந்தது.நான் சிறு வயதில் பார்த்த கோவையின் குளுமை குறைந்து இன்று வெக்கை அதிகமாய் இருந்தது.கோவையில் அந்நகரத்திற்கே உரிய "டெக்ஸ்டைல்" துறை தனது அந்தஸ்தை இழந்து, கணினி மென்பொருள் துறை வளர்ந்திருப்பதாய் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். மின் துண்டிப்பு வேறு அந்தத் தொழில் நகரத்தை உண்டு, இல்லை என்று அடித்துக்கொண்டிருக்க,அதை விட, பணியாளர்கள் தங்களின் பணி நேரத்தை அதற்கேற்றார் போல் சரி செய்து கொள்ள, அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.ஆனால் இது எதிலும் தனக்கு சம்பந்தமில்லை என்பது போல அரசின் "டாஸ்மாக்" கடைகள் அனைத்திலும் கும்பல். அந்த கும்பலில் அனைவரும் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் உள்ளவர்கள் போல் தான் இருந்தனர். ஒளித்து மறைத்துக் குடித்த காலம் மலையேறி, குடிப்பது கௌரவமாகக் கருதப்படும் காலம் இதுவோ?. அதோடு, டாஸ்மாக் கடைகளும், அனைவரும் புழங்கும் இடங்களில், குளிர்பானக்கடைகளைப்போல, திறந்து வைக்கப்பட்டிருந்தது. (அந்தமானில் இப்படி இல்லை) கோவை என்று இல்லை, சென்னையிலும் அப்படியே!

தமிழ்நாட்டில் குடிமைப்பொருள்களின் விலை மிகக்குறைவான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது, பெரிய ஆச்சரியம். ஒரு கிலோ அரிசி ரூ.1/. ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.எண்ணெய், மளிகைப்பொருட்கள், சீனி, கோதுமை அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு, மிஞ்சிப்போனால் ரூ.200/ க்குள் அடங்கிவிடும். இது எப்படி சாத்தியம்? தமிழக கஜானா நிறைந்து வழிகிறதா? அல்லது தமிழக அரசு ஓட்டு வங்கிகளான மக்களுக்கு சலுகை அளித்து, தமிழக அரசின் பதவி நாற்காலியை, நிரந்தரமாக்கும் திட்டமா? (அந்தமானில் ஒரு கிலோ அரிசி விலை ரூ. 8.80. குடும்ப அட்டைகளுக்கு கோதுமை, அரிசி, சீனி ஆகியவை மட்டும் வழங்கப்படுகிறது. சமையல் வாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.) எப்படியோ மக்கள் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறார்கள்.வீட்டுக்கு வீடு இலவசத் தொலைக்காட்சி. சிலர் ஒரே வீட்டில் திருமணமானதும், தமது மனைவி, மக்களோடு, தனிக் குடும்ப அட்டை வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு குடும்பத்திற்கு நான்கு தொலைக்காட்சிப்பெட்டிகள் வரை கிடைத்துள்ளது. இது பொறாமையால் வரும் எழுத்தில்லை. ஒரு மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறதே என்ற ஆதங்கம் தான். உழைப்பு உயர்வு தருமெனில், இலவசம் என்ன தரும்?

இன்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் இவர்கள் தொலைக்காட்சி வழங்குகிறீர்கள் இலவசமாய். சரி. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளிலாவது, மக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்கலாமே! அந்த தொலைக்காட்சிகள் வழி தமிழ் வளர்க்கலாமே! லாப நோக்கோடு இயங்கும் இந்தத் தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்கும் மனோபாவமும் நம்மவர்களிடமில்லை என்கிற வருத்தம் மேலோங்கியுள்ள நிலையில் தான் இதை எழுதுகிறேன்.அடுத்து சமச்சீர் கல்வி என்ற பெயரில் புத்தகங்களில் பாட மாற்றம். தனியார் பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கட்டணங்களை கட்டணச்சீட்டு மூலமும், மீதியை வெள்ளைப் பேப்பரிலும் எழுதி வசூலிக்க, சட்டம் போட்டும் மக்கள் அதன் பயனை அடைய முடியாது மயங்கும் நிலை.கல்வி நிறுவனங்களைக் குறை கூறிப் பயனில்லை. அவர்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியம் தர வேண்டுமே! நிறையத் தனியார் பள்ளிகள் CBSE பாடத்திட்டத்திற்கு மாறப்போவதாய் அறிவித்துள்ளார்கள்.குழந்தைகள் இன்று இருக்கும் புத்திசாலித்தனத்திற்கு, அவர்களின் ஆற்றல், திறமைக்கேற்ற கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறமை வளர்க்கும் வாய்ப்பினை வழங்க வேண்டுமேயன்றி, பாடச்சுமைகளைக் குறைப்பது அவர்களின் அறிவை மழுங்கடிக்கும் அபாயம் உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.உலகமயமாக்கலில், வாணிப, மற்றும் தொழில் நுட்பத் துறையில் உலகைச்சுற்றும் நம் இளையோரை அதற்குத் தகுதியாக்க வேண்டுமேயன்றி, மக்களை திருப்திப்படுத்தவென செய்யப்படும் இது போன்ற செயல்பாடுகள் இளையோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்துப் பாடங்களை, நகராட்சிப்பள்ளிகளிலேயே படிக்கலாமே! "நாங்கள் LKG யில் கொடுக்கும் பாடம், சமச்சீர் கல்வியில் ஒன்றாம் வகுப்பில் இல்லை" என்று ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கூறுகிறார். நகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் கொடுக்கப்படும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கூட தனியார் பள்ளிகளில் தரப்படுவதில்லை. இது அனைவரும் அறிந்ததே! சம்பளத்தைக் கொட்டிக்கொடுக்கும் அரசு, அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றலாமே!

தமிழினத்தலைவர்களே! தமிழை உலகச்செம்மொழியாக்கி விழா எடுக்கும் இதே நேரத்தில், தமிழனின் வாழ்வையும் உயிர்ப்போடு மீட்டெடுங்கள்.அவர்களின் வாழ்வியல் ஆதாரங்களை மீட்டுக்கொடுங்கள். தமிழனின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, உழைப்பை, சிந்திக்கும் திறனை மீட்டெடுங்கள். தமிழன் வாழும் வரை தமிழ் வாழும். 

ஞாயிறு, ஜூன் 20, 2010

அந்தமான் டு சென்னை

ஹாய்! ஹாய்! ஹாய்! நண்பரகளே! உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!.

வாழ்விடத்தை விட்டு, பிறந்த மண்ணிற்கு செல்லும் போது மனதில் இருக்கும் ஒரு வித சந்தோசம், உறவுகளை சந்திக்கப்போகும் ஆர்வம், பாசம், நேசம் பொங்க அவர்களை இருகரங்களில் ஆலிங்கனம் செய்யத்துடிக்கும் எண்ணம் இவற்றோடு, வாழ்விடத்தில் வீடு, மரம், செடிகள், வளர்ப்பு நாய்கள் இவற்றை விட்டுச்செல்லும் போது உண்டான மனக்கிலேசம் இப்படி ஒரு கலவையான உணர்வோடு கப்பல் ஏறினோம்.இந்த முறை சென்னை வரும் கப்பல் தாமதமானதால், விசாகப்பட்டினம் வரும் கப்பலில் வந்தோம். அமைதியான பயணம், வசதியான கேபின், சுவை குறைவான உணவு. விசாகப்பட்டினத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரசில் சென்னை வந்து, சென்னையிலிருந்து, சொந்த ஊர் செல்லத்திட்டமிட்டு, கோரமண்டல் எக்ஸ்பிரசிற்கு பயணச்சீட்டை, அந்தமானிலேயே முன்பதிவு செய்தோம். விதி! மூன்றாம் நாள் இரவு செல்ல வேண்டிய கப்பல், நான்காம் நாள் காலை ஏழு மணிக்குத் தான் துறைமுகத்தை சென்றடைந்தது. கோரமண்டலைத் தவறவிட்டோம். பயணச்சீடை ரத்து செய்து கழிவு போக, மேலும் பணம் கொடுத்து, காலை 9.30 மணிக்கு சென்னை செல்லும் ரயிலுக்கு, பயணச்சீட்டுப் பெற்று விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தோம். ரயில் தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த மலம், கெட்ட உணவுகள், அதைக் கொத்தித் தின்று கொண்டிருந்த பறவைகள்... சீ! இரண்டு மணி நேரம் காத்திருந்த நேரம் நரகம். அதோடு ரத்து செய்த பயணச்சீட்டின் தொகையில் நூறு ரூபாயை எங்களின் சம்மதம் இல்லாமலே எடுத்துக்கொண்டார் கவுண்டரில் இருந்தவர்.

முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டி ஏற்கனவே பிதுங்கி வழிய, மிகவும் கஷ்டப்பட்டு, எங்களின் பொருட்களை ஏற்றி, தரையில் உட்கார்ந்து கொண்டோம். ரயில் கிளம்பும் வரை சலனமற்று இருந்த சக பயணிகளில் சிலர், பாடிப் பிச்சை எடுக்க, சிலர் தங்களின் பொருட்களை விலை பேச, திடீரென கை தட்டும் சப்தம். சப்தம் வந்த திசையில், நல்ல ஆகிருதி, கவர்ச்சியான உடை, முழு முகப்பூச்சு அலங்காரங்களுடன் அரவாணியர். "நிக்கால்! பைசா நிக்கால்!"(பணத்தை எடு) என்ற மிரட்டல். ஒவ்வொரு ஆணிடமும் சென்று பணம் பெற்று, தராதவர்களிடம் அவர்களின் கன்னத்தில் அறைந்து, அவர்களின் முன் அசிங்கமான சேட்டைகள் செய்து பணம் பறித்தனர்.பணம் பறித்தவர்கள் அடுத்த நிலையத்தில் இறங்க, மறுபடி ஒரு புதுக்கும்பல். மறுபடி அதே கைதட்டல், மிரட்டல்.பலவந்தமாக பணத்தைப் பறித்துச்சென்றும் பயணிகள் வாளவிருந்தது ஆச்சர்யம். அவர்களும் தமிழர், தெலுங்கர்களிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ளாது, வட நாட்டில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் மக்களைத்தான் வேட்டையாடினர்.நம்மவர்களைப் பார்த்து  அக்கா! அண்ணா! சைடு ஓஜாவ்! (தள்ளிக்க) என்று சகஜமாய்க் கடந்து போனார்கள்.

 திருப்பூருக்கும், சென்னைக்கு கார்க்கம்பெனிகளுக்கும் வேலைக்கு வரும் வடநாட்டினர் அனைவரும் 14 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளவயதினர். ஒரிஸ்ஸாவில் ரயிலேறி, மூன்று நாட்கள் பயணம். வயிற்றுப்பிழைப்பிற்காக வரும் இவர்களிடம் இப்படி ஒரு அருவெறுப்பான தாக்குதல். காவல் துறையோ, பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. தமிழறியாத அவர்களிடம்," இந்த வயசுல அம்மா, அப்பாவ விட்டு சம்பாதிக்க வர்றீங்க! இத ஏன் அனுமதிக்கிறீங்க!. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து போட்டா பயப்படுவாங்கல்ல" என்ற போது, ஒரு புன்னகை தான் அவர்களின் பதில்.அரவாணியர் மதிக்கப்பட வேண்டியவர்கள். தமது திறமைகளை மேம்படுத்தி, உழைத்து முன்னேறி, எத்தனையோ அவமானங்களை சந்தித்து வாழும் திருநங்கையருக்குத் தலை வணங்கும் நாம், இப்படி அராஜகம் செய்யும் அரவாணியரைக்கண்டு அருவெறுப்படைந்தோம்.இவர்கள் ஒரு புறம்.

 தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பவர்கள் சிறிதும் லஜ்ஜையின்றி நம்மை மிதித்துக்கடந்து செல்வதும், வடநாட்டாரை இருக்கையை விட்டு எழுந்திருக்கச்சொல்லி மிரட்டி இருக்கையில் அமரும் அடாவடி மக்கள் சிலர். காலை 9.30 மணிக்கு ரயிலேறி, மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தடைந்தோம். சென்னை வரும் வரை உணவின்றி, கழிவறை வசதியின்றி அப்பப்பா! சென்னை ரயில் நிலையம் எத்தனை சுத்தம். எவ்வளவு அழகு. நான் இது வரை அனுபவித்த ரயில் பயணங்களில் மிகக்கொடுமையான பயணம் இது. இனிமேல் முன்பதிவு செய்யாத ரயில் பயணமா? மூச்!