நண்பர்களே! நாளை முதல் (03.05.2010) என் வலைப்பூக்களுக்கு விடுமுறை. ஜூன் மாதம் 16ம் தேதி வரை, பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
ஞாயிறு, மே 02, 2010
புதன், ஏப்ரல் 14, 2010
அந்தமானில் திரையரங்குகள்.
திரை கடலோடியும் திரவியம் தேடச்சொன்ன தமிழர்களின் வழிவந்த நாம் திரையரங்கங்களில் திரவியம் தேடிய காலம் ஒன்றிருந்தது.இப்போது அந்தளவு ஒரு வெறியோ, ஆவலோ இன்றைய இளைய தலைமுறையினரிடம் உள்ளதா? தெரியவில்லை. திரைப்படத்துறை - ஒரு கனவுத்தொழிற்சாலை. காதலும், கற்பனையும்,சாகசங்களும் மூலதனங்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,நடிகர்கள் என ஒவ்வொருவரும்,ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொருவரும் விதவிதமாகத் திரித்து, பாணிகளை வகுத்து பணம் அள்ளும், தொலைக்கும் ஒரு சூதாட்டக்களம். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கவலைகள் மறக்கும் ஒரு களம். திரைகளில் தம்மைத் தொலைத்து, நிஜ வாழ்க்கை மறந்து, எதார்த்தங்களை ஏற்க மறுத்து கனவுகளிலும் கற்பனைகளிலும் மக்கள் தம் வாழ்க்கையைத் தொலைக்க வைத்த ஒரு ஊடகம். வெகு நாட்களாக மக்களின் பல்வேறு பொழுதுபோக்குகளில் சக்திவாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது.திரைப்படங்கள் நமது வாழ்க்கையில் இரண்டறக்கலந்து, நமது உணர்வுகளில், வெளிப்பாடுகளில், செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கலையாகக் காலத்திற்கேற்றபடியும், மக்களின் மனப்போக்குக்கும் ஏற்றபடி பரிணாம வளர்ச்சி பெற்று, புதிய பரிமானங்களைக்காட்டும் ஒரு தனி உலகம்.திரைப்படங்கள் நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஒன்றிப்போன ஒன்று.எந்த காலகட்டத்திலும் திரைத்துறை இளையதலைமுறையை அதிகம் வசீகரித்திருக்கிறது.
1980 களில் திரைப்படம் என்பது, வாரம் ஒரு முறை அசைவ உணவு, வாரம் ஒரு முறை சொந்த ஊர் பயணம், வாராவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் என்பது போல ஒரு கட்டாயமாக இருந்திருக்கிறது எங்களுக்கு. எந்தப்படம், யார் நடித்தது, என்ன கதை என்பது முக்கியமில்லை. திரையில் எதோ ஓடினால் சரி.மதியக்காட்சிக்கு சென்று திரையரங்கில் அனுமதிச்சீட்டு கிடைக்காமல் அங்கேயே இருந்து முதல் காட்சி பார்த்து விட்டு வந்து வீட்டில் அடிவாங்கிய கதை உண்டு எங்களின் குழந்தைப்பருவத்தில். இன்று மாலை திரைப்படம் போகலாமென்றால், பள்ளியிலிருந்து ஓடி, ஓடி வீடு வந்து வேலை முடித்து, கடைக்குட்டியின் வேலையைப் பகிர்ந்து, அவளை முன்னதாக சீட்டு வாங்க விரட்டி, நாங்கள் போகும் போது அவள் சீட்டோடு காத்திருக்க, அந்த நேர சந்தோசம், மனதில் பொங்கும் குதூகலம் அதை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அதன் பிறகு வீடு வந்து, அந்தப்பாடல்கள், வசனங்கள், கதாநாயகியின் உடையலங்காரம் குறித்த விமர்சனங்கள் சுழலும்.
யாருமற்ற என் தனிமைப்பொழுதுகளை திரைப்பாடல்கள் கொண்டு இட்டு நிரப்பிக்கொள்வேன். எத்தனை பேர் இருந்தாலும் கூட நமது மனதில் இருக்கும் வெற்றிடங்களை, எந்த உறவாலும் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தைக்கூட திரை இசை இட்டு நிரப்பி இருக்கிறது, நிரப்புகிறது.எப்போதும் எனக்குப்பிடித்த பாடல்களை சப்தமாகப் பாடிக்கொண்டும், சில வேளைகளில் முணுமுணுத்தும் பழகிப்போன எனக்கு திரை இசை இல்லையென்றால் என்ற ஒரு கற்பனையை நினைத்தும் பார்க்க முடியாது. நாற்று நடும், களையெடுக்கும், கதிரறுக்கும் பெண்கள், கட்டுமானப்பணிகளுக்கு செல்லும் சித்தாள் பெண்கள், குடும்ப வறுமையில் உழலும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் திரைப்படம் ஒரு சொர்க்கம். தமது கவலைகளையும், உழைப்பின் வலிகளையும், வறுமையின் தாக்கத்தையும் மறக்க வைக்கும் ஒரே மாமருந்தாக திரைப்படம் இருந்திருக்கிறது.இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி வந்ததும் தான் நிலை மாறியது.
8249 சதுரக்கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்தமானில் பெண்கள், குழந்தைகளுக்கு ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி.அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேயரில் ஐந்து திரையரங்குகளும், பம்பு பிளாட் எனப்படும் தீவில் ஒரு திரையரங்கும், கார் நிக்கோபாரில் ஒரு திரையரங்குமாக மொத்தம் ஏழு திரையரங்குகள் இருந்தன.இந்தி,ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.படப்பெட்டிகள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு திரையிடப்பட்டதாலும், மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாததாலும், வருமானம் போதியளவு இல்லாமையாலும் புதுப்படங்கள் பெரும்பாலும் திரையிடப்பட்டதில்லை.பெரும்பாலும் பெண்கள் திரையரங்குகளைத் தவிர்த்தார்கள். காரணம் தெரியவில்லை. ரூ. 5/ க்கு வீடியோ இழைகள் கிடைத்ததால் வேண்டுமட்டும் வீட்டிலேயே படம் பார்த்தனர். சனிக்கிழமை இரவு வெகு நேரம் படம் பார்த்துவிட்டு ஞாயிறு காலை தாமதமாக எழும் பழக்கம் நிறைய வீடுகளில் உண்டு. காலம் செல்லச்செல்ல மக்கள் முழுமையாக திரையரங்குகளைப் புறக்கணிக்க, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஒரு திரையரங்கு பெரிய நட்சத்திர தங்கும் விடுதியாக மாறியுள்ளது. குறுந்தகடுகள் புதுப்புதுப்படங்கள் மேற்சொன்ன நான்கு மொழிகளிலும் கிடைக்கிறது. இப்போது தீவுகளில் ஒரு திரையரங்கு கூட இல்லை.
எங்கள் வீடுகளில் பார்த்து முடித்ததும் நல்ல படங்களை சேமித்தும், பிடிக்காத படங்கள் மற்றும் பதிவு சரியில்லாத குறுந்தகடுகளை சுவர் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறேன்.வீட்டில் வேலை செய்தபடி, இன்று கொஞ்சம், நாளை கொஞ்சம் இப்படி கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து திரைப்படம் பார்த்துப் பழகிவிட்டதால், முக்கிய பூமி வந்தாலும் திரையரங்கம் சென்று படம் பார்ப்பதில்லை. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் இருந்து படம் பார்ப்பதாவது? சேச்சே! அந்த நேரம் ஒரு பதிவு போட்டால் எத்தனை பேரின் கழுத்தை வலிக்க அறுக்கலாம் என்ற புனிதமான எண்ணம் தோன்ற திரைப்படங்களைத் தவிர்த்து விடுகிறேன். நண்பர்களே! திரையரங்குகளே இல்லாத இந்தியாவின் ஒன்றியப்பகுதி எதுவென்று ஒரு பொது அறிவுக்கேள்வி உங்களின் நேர்முகத்தேர்விலோ, மற்றும் நுழைவுத்தேர்வுகளிலோ கேட்கப்படலாம். அதற்கான விடை : அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்று சொல்லுங்கள்,எழுதுங்கள். தேர்வு பெற்றவர்கள் எனக்கான பரிசை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அடுத்த மாதம் முக்கிய பூமி வரும் போது பெற்றுக் கொள்கிறேன்.சரி தானா?
( Photo by G Saravanan, Reporter,
The New Indian Express)
( Photo by G Saravanan, Reporter,
The New Indian Express)
வெள்ளி, ஏப்ரல் 09, 2010
டைட்டானிக் பயணங்கள்
எனது முதல் கப்பல் பயணம் சென்னையிலிருந்து அந்தமானுக்கு. அந்தமான் காதலி படம் பார்த்ததில்லை. அந்தமானைப்பற்றிய கற்பனை செய்வதற்கோ, கனவு காண்பதற்கோ அந்தமானைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு தீவு எப்படி இருக்கும் என்ற கற்பனை கூட கிடையாது.அந்தமானுக்கு பயணம் என்றதும் சிங்கப்பூருக்கு கப்பலில் பயணித்த என் சித்தப்பா," அந்தமான் வழியாத்தான் கப்பல் போச்சுப்பா! அந்தாத்தெரியுது பாருங்க அந்தமான் லைட் ஹவுஸ். இது தான் நம்ம நாட்டு எல்லையோட முடிவு அப்புடின்னு சொன்னாங்க. நீ ஒண்ணும் பயப்படாதப்பா! நா சிங்கப்பூர் போகையில ஏழு நாப்பயணம். மழையும் காத்தும். அதுனால வாந்தியும் மயக்கமும் பொரட்டிப்போட சாப்பிட முடியாம கஷ்டப்பட்டேன். அந்தமானுக்கு மூனு நாள் தானாம்" என்று தேற்ற சிங்கப்பூருக்கு ஓரிரு முறை மட்டும் கப்பலில் பயணித்த என் அத்தையோ, " கப்பல்ல சினிமாத்தியேட்டரு, நீச்சக்குளம்,ஹோட்டலு எல்லாம் இருக்கும். வீடு மாதிரி இருந்துக்கலாம்" என்றார்கள்.பேருந்து சாலையில் பயணிக்கிறது என்றால் கப்பல் கடலில். போ! பார்த்துவிடலாம் என்ற தைரியத்தில் கப்பல் ஏறியாகிவிட்டது.
அந்தமானில் பொருட்கள் விலை அதிகம் என்று அரிசி, பருப்பு,பலகாரங்கள் முதல் சமையல் பாத்திரங்கள்,துணிமணிகள் வரை பத்து அட்டைப்பெட்டிகள்.அதிலும் என் கணவரின் அண்ணி "முதமுதல்ல போறப்ப பத்தா கொண்டு போகாம பதினொண்ணாக்கொண்டு போ" என்று கூறி பொரியரிசி மாவு, புளியோதரை, பழங்கள் என்று ஒரு சுமை கூட நான்கு சக்கர வாடகை வாகனம் பிடித்து, சுமைகளை ஏற்றி, உறவுப்பட்டாளத்துடன் சென்னை துறைமுகம் வந்தால், "உவ்வே! சீ! இது தான் கப்பல் ஏறுற இடமா?" அசிங்கமாய்,குப்பையாய், வெற்றிலை எச்சிலும், சிகரட் மீதங்களும் இறைத்து காலணி அணிந்து நடக்கும் போதே அருவெறுப்பாய் இருந்தது. "நகை பத்திரம்! இறங்கும் போது சுமைகள எண்ணி இறக்கிக்கங்க! கப்பல்ல பாத்து இருந்துக்க! இப்படியான உறவுகளின் ஏக அறிவுரைகள் காதில் ஏறவில்லை.
1991ல் டைட்டானிக் படம் வந்துவிட்டதா தெரியவில்லை.ஆனால் எட்டாம் வகுப்பின் இலக்கணப்புத்தகத்தில் கடைசிப்பக்கத்தில் டைட்டானிக் கப்பலின், பயணம் முதல் விபத்துக்குள்ளானது வரை, பயணிகளின் கடைசி நேர உரையாடல்களைக் கண்ணீர் மல்க படித்த ஞாபகம் மனதில் சுழன்றது.கப்பல் ஏறியாகிவிட்டது. M.V.ஹர்ஷவர்த்தனா என்பது அந்தக்கப்பலின் பெயர்.கப்பலில் பங்க் வகுப்பு பயணச்சீட்டு. கணவருக்கு பணி நிரந்தரமாகவில்லை என்பதால் போக்குவரத்து செலவு அலுவலகத்தில் கிடைக்காது. ஆகவே மேல்வகுப்பில் பயணம் செய்ய இயலாது ரூ.114/ல் கடைசி வகுப்பில் பயணம் செய்தோம்.கப்பலில் இருந்து பார்த்த போது சென்னை மாநகரின் விளக்குகள் மின்ன, கப்பலின் வெளிப்புறத்தில் சமுத்திர அலைகள் சப்தமாய் அடித்துத் திரும்ப பழைய படத்தின் கதாநாயகி போல் கடலலைகள் என்னை வாழ்த்தி வழியனுப்புவதாய் கற்பனை செய்து கொண்டேன். பதினோரு மணி வரை கப்பலின் மேல் தளத்தில் காற்றுவாங்கி விட்டு வந்து படுக்கையில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கி கனவில் ஆழ்ந்த போது,இருக்கையை யாரோ இழுப்பது போன்ற உணர்வில் சட்டென விழிக்க, பக்கத்து இருக்கை கல்லூரி மாணவிகள், " கியாகுவா? (என்னாச்சு), ஜஹாஸ் சுட்தே சமய் ஹில்த்தா ஹை! (கப்பல் விடுற நேரம், ஆடும்!)" என்று கூற எனக்கு ஒன்றும் புரியாது மலங்க மலங்க விழிக்க அவர்கள் கொல்லென்று சிரிக்க எனது கணவர் புரியவைத்தார்.கப்பல் ஆட ஆட இலக்கணப்புத்தகத்தின் டைட்டானிக் கதை மனதில் விஸ்வரூபம் எடுத்தது.சிறு வயதில் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு ரயில் பயணம், வளர வளர அறந்தாங்கி முதல் காரைக்குடி வரை பேருந்துப்பயணம்.எப்போதோ சுற்றுலா போன போது கன்னியாகுமரியில் படகுப்பயணம். இப்படி இருந்த நம்மை இப்படி அந்தமானுக்கு சுருட்டி அனுப்பும் உறவுகளின் மீது கோபம், உறவுகளை விட்டு பிரிந்து போகும் துயரம் கண்ணீராய் வழிய விடிய விடிய தூக்கம் போனது. விடியலில் உறக்கம் வந்த போது குழந்தைகளின் ஆரவாரமும், ஊரிலிருந்து திரும்பும் பெண்மணிகள் தங்கள் மாமியார்- நாத்தனார்களைப்பற்றிக் கூறி தமது கணவரை இடித்துரைக்கும் பேச்சுக்கள் இவற்றை மிஞ்சும் வாந்தி எடுக்கும் சப்தங்கள்.பல் துலக்கி கப்பலின் மேல் தளத்திற்குப்போன போது வழியெங்கும் ஒரே புளித்த நாற்றம். வாந்தி, வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவின் மிச்சம் இறைத்துக்கிடக்க ஆயாசமாய் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்,கடல்,கடல் தான்.கடலலைகள் கப்பலின் சுற்றுச்சுவர்களை டொம் டொம் என்று அடிக்கும் ஒலி.உப்புக்காற்று. அங்கிருந்த இருக்கை ஒன்றில் சுருட்டிப்படுத்துக் கொண்டேன்.இப்படியாக மூன்று நாட்கள் கடந்து நான்காவது நாள் காலை சிறு சிறு தீவுகள் கண்ணில் பட, ஹை! ஊர் வந்திருச்சு! என்று குதூகலிக்க எழுந்து உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக நான்காவது நாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு அந்தமான் துறைமுகத்தில் வந்திறங்கிய போது கண்ணில் பட்ட தூரத்து பசும் தீவுகள், துறைமுகத்தின் சுத்தம் பார்த்த போது கையில் இருக்கும் சுமைகளைத் தூக்கி எறிந்து விட்டு கன்னங்களில் கைவைத்து இயற்கையை ரசிக்கத்தூண்டிய மனதை அடக்கி வீடு வந்தோம்.
அதன் பிறகு 1996ம் ஆண்டு டைட்டானிக் படம் பார்த்துவிட்டு கப்பல் பயணம் இன்னும் புளிகரைத்தது. காற்று அதிகம் இருக்கும் போது பட்டென அடிக்கும் சன்னல் கதவுகள், கப்பலின் ஆட்டம் மனம் படபடக்க ஆரம்பித்து விடும். நம் மக்களின் மிகுந்த பொறுப்புணர்வில் கப்பல் விட்டு இரண்டாம் நாள் குளியலறை தண்ணீர் பங்க் பகுதியில் புகுந்து விடும்.கப்பலில் ஓட்டையோ இவ்வளவு தண்ணீர் வந்து விட்டதே என்று மனம் திடுக்கிடும்.இரவெல்லாம் தூங்காமல் குழந்தைகளைத் தடவியபடி படுத்திருப்பேன்.அப்போது தான் என் கணவர், ”அட! நல்ல ஆளு நீ! அப்ப நிலமை வேற.இப்ப நம்ம கடற்படை கப்பல்லாம் ரொம்ப வேகம். ஏதாவதுன்னா பொருட்கள் போனாப்போகுமே தவிர உயிரிழப்பெல்லாம் கண்டிப்பா வராது” என்று சொன்ன பின் தான் மனம் சமாதானமடைந்தது. கப்பல் சிப்பந்திகள் பொறுப்பாய் சுத்தம் செய்யச்செய்ய நம்மவர்கள் அசுத்தம் செய்வதைத் தொடர்வார்கள்.கப்பல் துறையை தீவு நிர்வாகம் மானியத்தில் இயக்க மக்கள் பொறுப்பின்றி கப்பலில் கழற்ற முடிந்த பொருட்களையெல்லாம் கழற்றி எடுத்துச்செல்வார்கள்.எப்பேற்பட்ட சொர்க்கத்தையும் எப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவார்கள் நம்மவர்கள் என்பதற்கு அந்தமானுக்கு விடப்படும் கப்பல்கள் ஒரு உதாரணம். என் மகளோ sea sickகினால் கப்பல் ஏறி, கப்பலை விட்டு இறங்கும் வரை எச்சில் கூட விழுங்க மாட்டாள். சே! இனி மேல் கப்பலில் வரவே கூடாது. எப்படியாவது விமானத்தில் தான் வர வேண்டும் என்று உறுதி எடுக்க அது பிரசவ உறுதியானது. நமது ஆசைகளை நமது பொருளாதாரம் தானே நிர்ணயிக்கிறது.இன்று கப்பலில் பங்க் வகுப்பில் இருந்து காபின் வகுப்பில் பயணம்.கோடை விடுமுறைக்கு முக்கிய பூமி வரும் போது மழை காற்று இருக்காது. அதனால் கப்பல் பயணம் நன்றாக இருக்கும். ஜூன் மாதம் திரும்பும் போது பருவ மழை ஆரம்பித்துவிடுமென்பதால் கடலில் காற்றும் அலையும் அதிகமாக இருக்கும்.கப்பல் ஆடும். ஆகவே, திரும்பும் போது விமானப்பயணம்.இப்போதெல்லாம் கப்பல் பயணம் பயத்தையோ, அலுப்பையோ, சலிப்பையோ தருவதில்லை.மாறாக ரசிக்கிறேன். அந்தமான் மண்ணை நான் மிகவும் நேசிக்கிறேன். அந்தமானுக்குத் தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும் இந்தக்கப்பல்கள் என் வரை தேவதூதர்களைப்போல. அந்தமான் என்ற சொர்க்கபுரியை அடைய இந்த ஒரு சிரமம் கூட எடுக்கவில்லையென்றால் எப்படி?
ஞாயிறு, ஏப்ரல் 04, 2010
பிரதிகள்
ஆண்டாண்டு காலமாய்
அடங்கி ஒடுங்கி சுயமற்று சிதைந்து ஏவாளின் பிரதியாய் நான்
ஆதிகாலம் தொட்டு
ஆளுமையை ஆப்பிளாக்கித்தரும் ஆதாமின் பிரதியாய் நீ
அரண்மனைச்சாளரங்களினூடே
நட்சத்திரம் ரசித்த போதுகளில் தொடங்கி
அந்தப்புரத்தில் உறவாடிய அந்த நாட்களில்
உறவிற்கு வெற்றுப்பதுமையாய் நான்
போரில் நீ புறமுதுகிட்ட போது
அடிமையாய் அந்நியனின் கரங்களிலும்
அந்தப்புரத்தில் நெருப்பின் நாக்குகளிலும் நான்
அடுத்து வந்த நாட்களில்
அடுப்பூதும் பெண்களுக்குப்படிப்பெதற்கு என்று
எழுது கோல் மறுக்கப்பட்ட கரங்களில்
ஊதும் குழலும், குடமும்,குழந்தைகளும்
எச்சில் பணிக்கங்களும், முதியோரின் பணிவிடைகளுமாய் நான்
பட்டம்,அலுவலகம்,
சட்டம்,சம்பளம் சாதித்தும் கூட
அடுப்படியும், அனந்த சயனத்துடன் கூடி அலுவலகம்
ஓடி ஓடிக் களைத்து
எனக்கான முகங்களும், வேஷங்களும் எண்ணிக்கை கூடி
என்ன வாழ்க்கை இதுவென வெதும்பிக் களைத்து நான்.
எல்லைகள் விரிந்தாலும், யுகங்கள் கடந்தாலும்
அடிப்படைகளில் மாற்றமின்றி ஆதிமனிதனின் இயல்புகளில் நீ
இன்று
வெறுப்பு புதைத்து கரியாகி
சாது மிரண்டு வனமழிக்கும் நெருப்பாய்,
சாகசம், வன்மம், வேஷம்,
ஆதாமை அடிமையாக்கும் அனைத்து குணங்களுடன் நான்.
ஆதாமின் விலா எலும்புகளில் ஏவாள் என்பது கடந்து
அவனின் முதுகுத்தண்டை நிமிர்த்திப்பிடிக்கும்
ஏவாளாய் ஆசை கொண்டு,
ஒற்றைப்புள்ளியிலும் ஒன்றமுடியாத
உனக்கும் எனக்குமான
உறவின் நெருக்கத்தை நினைத்துப்பார்க்கிறேன்.
உன்னிடம் என்னை இழந்ததற்காகவோ
என்னிடம் உன்னை இழந்த
பரஸ்பர இழப்பின் காரணத்திற்கோ
ஒன்றிக்கிடக்கும் பழமைகளின் வேர்ப்பிணைப்புகளை உதறி
மரபணுக்களைத் திருத்தி
பெண்ணிற்கு வரைவிலக்கணம் சொல்லும் புராண, இதிகாசங்களை எரித்து
பொதுவெளிகளில் சுதந்திரமாய் நான்
ஆணென்றால் இப்படி
பெண்னென்றால் இப்படி என்னும் கற்பிதங்களைக்கடந்து
வன்மங்களோ, வன்முறைகளோ இன்றி நீ
பூமியெங்கும் நந்தவனங்கள் வாசம் பரப்ப
இனமழித்து, நிறமழித்து, உருவழித்து உயிர்களாய் உலாவர,
உன் கரங்களில் எனக்காக பூக்கள் மட்டும்
என் கண்களில் உனக்கே உனக்கான காதல் மட்டும்
அடங்கி ஒடுங்கி சுயமற்று சிதைந்து ஏவாளின் பிரதியாய் நான்
ஆதிகாலம் தொட்டு
ஆளுமையை ஆப்பிளாக்கித்தரும் ஆதாமின் பிரதியாய் நீ
அரண்மனைச்சாளரங்களினூடே
நட்சத்திரம் ரசித்த போதுகளில் தொடங்கி
அந்தப்புரத்தில் உறவாடிய அந்த நாட்களில்
உறவிற்கு வெற்றுப்பதுமையாய் நான்
போரில் நீ புறமுதுகிட்ட போது
அடிமையாய் அந்நியனின் கரங்களிலும்
அந்தப்புரத்தில் நெருப்பின் நாக்குகளிலும் நான்
அடுத்து வந்த நாட்களில்
அடுப்பூதும் பெண்களுக்குப்படிப்பெதற்கு என்று
எழுது கோல் மறுக்கப்பட்ட கரங்களில்
ஊதும் குழலும், குடமும்,குழந்தைகளும்
எச்சில் பணிக்கங்களும், முதியோரின் பணிவிடைகளுமாய் நான்
பட்டம்,அலுவலகம்,
சட்டம்,சம்பளம் சாதித்தும் கூட
அடுப்படியும், அனந்த சயனத்துடன் கூடி அலுவலகம்
ஓடி ஓடிக் களைத்து
எனக்கான முகங்களும், வேஷங்களும் எண்ணிக்கை கூடி
என்ன வாழ்க்கை இதுவென வெதும்பிக் களைத்து நான்.
எல்லைகள் விரிந்தாலும், யுகங்கள் கடந்தாலும்
அடிப்படைகளில் மாற்றமின்றி ஆதிமனிதனின் இயல்புகளில் நீ
இன்று
வெறுப்பு புதைத்து கரியாகி
சாது மிரண்டு வனமழிக்கும் நெருப்பாய்,
சாகசம், வன்மம், வேஷம்,
ஆதாமை அடிமையாக்கும் அனைத்து குணங்களுடன் நான்.
ஆதாமின் விலா எலும்புகளில் ஏவாள் என்பது கடந்து
அவனின் முதுகுத்தண்டை நிமிர்த்திப்பிடிக்கும்
ஏவாளாய் ஆசை கொண்டு,
ஒற்றைப்புள்ளியிலும் ஒன்றமுடியாத
உனக்கும் எனக்குமான
உறவின் நெருக்கத்தை நினைத்துப்பார்க்கிறேன்.
உன்னிடம் என்னை இழந்ததற்காகவோ
என்னிடம் உன்னை இழந்த
பரஸ்பர இழப்பின் காரணத்திற்கோ
ஒன்றிக்கிடக்கும் பழமைகளின் வேர்ப்பிணைப்புகளை உதறி
மரபணுக்களைத் திருத்தி
பெண்ணிற்கு வரைவிலக்கணம் சொல்லும் புராண, இதிகாசங்களை எரித்து
பொதுவெளிகளில் சுதந்திரமாய் நான்
ஆணென்றால் இப்படி
பெண்னென்றால் இப்படி என்னும் கற்பிதங்களைக்கடந்து
வன்மங்களோ, வன்முறைகளோ இன்றி நீ
பூமியெங்கும் நந்தவனங்கள் வாசம் பரப்ப
இனமழித்து, நிறமழித்து, உருவழித்து உயிர்களாய் உலாவர,
உன் கரங்களில் எனக்காக பூக்கள் மட்டும்
என் கண்களில் உனக்கே உனக்கான காதல் மட்டும்
செவ்வாய், மார்ச் 16, 2010
தண்ணீர்,தண்ணீர்.
உலக தண்ணீர் தினம் அனுசரிப்பிற்காக இந்தப்பதிவு.
சந்தனமுல்லையின் தொடர் அழைப்பிற்கிணங்கி எழுதப்படும் பதிவு. முல்லை! அழைப்பிற்கு நன்றி!
"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர்.இறைவன் அளித்த ஐம்பூதங்களும் பூமியின் உயிர்கள் இன்புற்று வாழவே.இந்த ஐம்பூதங்களில் ஒன்று தனது பவித்திரத்தை இழந்தாலும் அதன் விளைவுகளை பூமியின் உயிர்கள் அனுபவித்தே தீரவேண்டும்.எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுவோம் என்கிறது கீதை.ஆனால் இந்த ஐம்பூதங்களைப் பாழ்படுத்தும் விஷயத்தில் மட்டும்,கொடுப்பவரும்,சாட்சிகளும்,பார்வையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.ஆனால் அது பற்றி சிந்தனையின்றி ஓடிக்கொண்டிருக்கும் நாம்.பணமும் செல்வமும் ஒரே குறியாக யாரோ செலுத்தும் இயந்திரங்களாய் நாம்.சில நகை சேர்க்கும் பெண்கள்,சிக்கனத்தின் பேரால் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தமாட்டார்கள்.அந்த நகைகளை அணிய உடல் வேண்டுமே என்று யோசிப்பதில்லை.அப்படித்தான் இருக்கிறது ஐம்பூதங்களை சேதப்படுத்துவதும்.ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.வளியும்,வெளியும் சேதமுற்றால் நிலமும்,நீரும் திரியும் என்பது இயற்கையின் விதி,நாம் அனைவரும் அறிந்ததே!
எங்கள் ஊர்களில் வீட்டுக்கு வீடு கிணறு உண்டு.அதோடு குடிதண்ணீர் குழாய் இணைப்பு உண்டு.அதனால் தண்ணீர் பஞ்சமில்லை.ஆனால் சென்னையில்? முன்னாட்களில் சென்னையில் கிண்டி அம்பாள் நகர்,காந்தி நகர் பகுதியில் "மெட் ரோ தண்ணீர்" இணைப்பு இல்லை.அந்தந்த பகுதி இளைஞர்கள் காசு வசூலித்து பெரிய கொள்கலன் களை நிறுவி,அதில் தண்ணீர் நிரப்பி,பின் குடத்தை எண்ணி, எண்ணித் தண்ணீர் தருவார்கள்.இது குடிக்க லாயக்கற்றது.பிறகு குடி தண்ணீருக்கு வெகு தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வேண்டும்.குளிப்பது,கழிப்பறை உபயோகத்திற்கு,பாத்திரம் துலக்க,துணி துவைக்க,குடிக்க அளந்து,அளந்து....அப்பாடி சென்னை வாழ்க்கை நகர்ப்புற வளர்ப்பில் வந்தவர்களால் தான் முடியும்.நம்மால் முடியாது.அதன் பிறகு கப்பல் விட்டிறங்கி நேரே சொந்த ஊர்,பிறகு வரும்போது இரண்டு நாள் தங்குவதுண்டு,அதுவும் மனதில் சீ இது ஒரு ஊரா? என நொந்த படி.சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு பெருகும் மக்கள் தொகை ஒரு காரணம்.மேட்டுக்குடி மக்களின் பொறுப்பின்மை ஒரு காரணம்.சாதரண மக்களின் அலட்சியம் ஒரு காரணம்.கோடி கொடுத்தாலும் சென்னை வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம்.பழங்கஞ்சியும்,கந்தலாடையும் கிடைத்தால் போதும்.எந்த மன உளைச்சலும்,தாழ்வுமனப்பான்மையுமின்றி சந்தோசமாக வாழத்தயார்.
அந்தமானில் பெரும்பாலும் தண்ணீர் பஞ்சமில்லை.அந்தமான் நிகோபார்த்தீவுகள் தென் மேற்குப்பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை என இரண்டு பருவ மழையில் நனையும் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை. மே மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும்,நவம்பர் முதல் ஜனவரி வரை வடகிழக்குப்பருவமழையும் பொழியும்.வருடத்தில் சராசரியாக 3000 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும்.இந்தத் தீவுகளின் மொத்த நிலப்பரப்பான 8249 சதுரக்கிலோ மீட்டரில் 92% நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள்.இங்கு தீவுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய ஒரே ஒரு அணை (Dhanikkaari Dam) மட்டும் உள்ளது. இங்கு அடித்துப்பெய்யும் மழையில் ஒருசில நாட்களில் அணை நிறைந்து மீதமுள்ள தண்ணீர் கடலுக்குத்தான் போகும்.அதோடு இந்த அணை கட்டிய நாள் முதல் இன்றளவும் தூர் வாராமல் இருப்பதால் கொள்ளளவு குறைந்து,மக்கள் தொகை அதிகமாக பிரச்சினைகள் ஆரம்பம்.கோடை விடுமுறைக்கு தீவின் பெரும்பாலான மக்கள் முக்கிய பூமி செல்வதுண்டு.அப்போது தீவின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும்.கோடையில் தண்ணீர் பஞ்சத்தால், பள்ளிகளின் விடுமுறையை நீட்டிப்பதும் உண்டு இரண்டாவது பருவ மழை பொய்த்தால் தீவுகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.கிணறுகள் உண்டு என்றாலும் வாசலை விட்டிறங்காத மக்களின் நிலை? ஆனால் நகராட்சி தண்ணீர் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து தெருத்தெருவாக வினியோகம் செய்வார்கள்.
இந்த ஆண்டு இரண்டாவது பருவமழை பொய்க்க, வந்தேவிட்டது தண்ணீர் பஞ்சம்.வாரத்தில் இரண்டு முறை தான் இனி குழாய்த் தண்ணீர் கிடைக்கும்.அதற்கும் ஒரு வழியுண்டு.நாங்கள் குடியிருக்குமிடம் பெரியமனிதர்கள் இருக்கும் பகுதி.ஆகவே நகராட்சிப்பணியாளர்கள் மணிக்கணக்கில் தண்ணீர் திறந்து விடுவர். அண்டா,குண்டா,ட்ரம் இப்படித் தண்ணீரைப்பிடித்து நிரப்பி வைத்துகொள்வோம்.அப்படித்தான் 2004ம் ஆண்டில் சுனாமியின் போது ஒரு வாரம் தண்ணீர் வராத போது சமாளித்தோம்.அதோடு வாசலில் கிணறு இருக்கிறது.எட்டி முகர்க்கும் படி.அந்தவகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரிய மாசு என்று சொல்லும்படி ஒன்றுமில்லை என்றாலும் மழைக்காலத்தில் வைரஸ் நோய்கள் தண்ணீரால் வருவதுண்டு.தண்ணீரை அதன் அருமை புரியாது குடி நீரைக் கழிவு நீர்க்கால்வாயில் விடும் மக்கள் இங்கு தான் காணக்கிடைப்பார்கள்.சுற்றிலும் கடல்.ஆனால் அந்த நீர் ஒன்றுக்கும் உதவாமல் போனாலும் கவலைப்படுமளவு தீவு நிர்வாகம் விடுவதில்லை என்பதே மக்களின் அலட்சியத்திற்கு காரணம்.
அந்தமான் பொதுப்பணித்துறை வீடுகளின் கழிவு நீர் கால்வாய்களை இணைத்து கடலில் விடுவதால் சாலைகளில்,தெருக்களில்,சந்துகளில் சாக்கடை நீரையோ,மழை நீர் தேங்கியோ பார்க்கமுடியாது.கொஞ்சம் முயன்றால் தீவை சொர்க்கமாக,சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.நகராட்சி பணியாளர்கள் தெருக்களை சுத்தம் செய்து நகர,அடுத்த நிமிடம் குழந்தைகள்,பெண்களின் உபயோகித்த நாப்கின் கள்,கழிவுகள்,குப்பைகளை தங்கள் வீடுகளில் இருந்து வீசி எறிந்து அது கழிவு நீர்க்கால்வாயில் கலந்து கடலுக்குப்போகும்.சமயங்களில் அடைத்து சாலைகளில் நீர் பெருகும்.குப்பையை பொறுப்பற்றுப் போடும் பொதுமக்கள் தண்டிக்கப்பட்டால் சுத்தமாக பராமரிக்க இயலும்.நண்பர்கள் அனைவரும் எழுதி உள்ள அளவு உணர்ச்சி பொங்க எழுத முடியாமைக்கு இங்குள்ள நிலவரம் காரணம்.டில்லி தேசியத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தில் தண்ணீரைத் தெளித்து பாத்திரம் துடைப்பது,குளிப்பது,தண்ணீரை பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒளித்து வைப்பது பார்த்து இப்படியும் வருமா என்று யோசித்து அடுத்த கணமே அலட்சியமாய் கடந்து போவதுண்டு.கங்கையின் நிலவரம் தொலைக்காட்சியில் பார்த்து காசி போகும் ஆசையே வெறுத்தது.
தண்ணீர் நமது ஜீவாதாரம்.காடுகள் நமது வாழ்வாதாரம். தேடல் வாழ்வில் அவசியம் தான்.ஆனால் தேடல் மனிதனின் தேவைகளைப் பெருக்குகிறது.தேடித்தேடி அழிவை அழைத்து வருகிறோம்.மரண பயமும்,நோயும் மனிதனை பயமுறுத்தும் அளவு வேறெந்த உயிரினத்தையும் பயமுறுத்துவதில்லை.பூமியை அழிப்பதில் முழுமையான பங்கு வகிப்பவனும் மனிதனே.அந்தமானில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து வைத்த ஒரு நற்செயலை ஆசிரியர்கள் தொடர்கிறார்கள்.அது என்ன தெரியுமா? வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்ந்தவர்களிடம் சொல்லித் தோற்றவர்கள் பிஞ்சுகளிடம் ஒவ்வொரு வருடமும் ஒரு மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி,யார் நன்றாக வளர்க்கிறார்களோ அவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கின்றனர். அவர்களின் ஊக்கத்தைச்சொல்ல வேண்டுமா? அதோடு இங்கு மரம் வேண்டிய இடங்களில் வளர்ப்பதையும்,வேண்டாத இடங்களில் இருந்து நீக்குவதையும் பொதுப்பணித்துறை சிறப்பாகச்செய்கிறது.காடுகளை வனத்துறை பாதுகாக்கிறது.இந்தியாவில் தேசியமாகிப்போன லஞ்சலாவண்யங்களால் நடக்கும் முறைகேடுகளில் பெரிய மனிதர்,அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு கதவுகளாக,ஜன்னல்களாக,மரச்சாமான் களாக அந்தமான் தனது காட்டுவளத்தைத் தாரை வார்த்துக் கொண்டுதானிருக்கிறது.நடக்கட்டும்.நாங்கள் சாமான்யர்கள்.வேறென்ன செய்யப்போகிறோம்? பார்வையாளர்களாயும்,ஊமை சாட்சிகளாயும்இருப்பதைவிட்டு !.
வெள்ளி, மார்ச் 12, 2010
விளிப்பு
விளித்தல் என்பது அன்றாட வாழ்க்கையில், அவசர உலகில், மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்,சொல்லாடல் என்றாலும் கூட நாட்கள் கடந்தும் அந்த விளிப்பில் பிரதிபலித்த உணர்வுகளை மீட்டெடுக்கும் போது மனதை ஏதோ செய்யுமே அதை உணர்ந்ததுண்டா? (ஆமா! பதிவுக்கு தலைப்பு கிடைக்கலியா இன்னிக்கு?) ஒவ்வொரு மணித்துளியிலும் எங்கோ யாரோ யாரையோ, எதற்காகவோ விளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
.ஒரு தாய் தன் குழந்தையை செல்லப்பெயரில் அழைக்கும் விளிப்பிலிருந்து,ஒரு கணவன் தன் மனைவியின் பெயரை பாதி சுருக்கி பிரத்யேகமாக அழைக்கும் விளிப்பு,தன் கணவனை மனைவி அழைக்கும் விளிப்பு,உறவுகளின் விளிப்பு,முதலாளி தனது வேலைக்காரர்களை அழைக்கும்விளிப்பு,முகமறியாதவரை,நண்பர்களை,உறவுகளை,பேருந்திற்கோ,திரையரங்கிலோ காத்திருக்கும் போதோ,பேருந்து வழித்தடங்களில் நிறுத்தப்படும் தரிப்பிடங்களில் யாரோ யாரையோ விளிக்கும் போதோ, அந்த விளிப்பில் இருக்கும் அன்பு,அதிகாரம்,இறைஞ்சல்,குழைவு,அதட்டல்,அவசரம் போன்ற உணர்வுகளை நீங்கள் உணர்ந்ததோ அன்றி உங்களை வீடு வந்ததும் இம்சித்ததோ உண்டா?
பொதுவாக பெண்கள் கணவரை "என்னங்க" என்றழைப்பதை சௌகர்யமாகக் கருதுவார்கள்.ஒரு கேள்வி வார்த்தை எப்படி நம் பெண்களின் வாயில் மென்மையாய்,குழைவாய்,அதட்டலாய்,அவசரமாய்,பதட்டமாய் விதவிதமான நவரசங்களில் ஒலிக்கும் போது வியப்பாய் இருக்கும்.எப்படி இந்த வார்த்தை விளிப்பு வார்த்தையாய் ஆகியிருக்கும் என்று நான் பல நேரம் யோசிப்பதுண்டு.(ரொம்ப அவசியம்!).என் அம்மா,நான்,என் தங்கைகள் மற்றும் எங்கள் உறவினரெல்லாம் இப்படித்தான் அழைப்பது அருகில் இருக்கும் போது.கொஞ்சம் தொலைவில் இருந்தால் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அவர்களின் அப்பா என்று அழைப்பது வழக்கம்.என் அப்பாவை என் அம்மா நான் மூத்த குழந்தை என்பதால் "சாந்தி அப்பா" என்றழைக்க எனக்கு பெருமை பிடிபடாது.என் தங்கைகளோ ஆமா அவளுக்கு மட்டுந்தான் அப்பா எங்களையெல்லாம் தெருவில் கிடந்தா தூக்கி வந்தீர்கள் என்று முறைப்பார்கள்.அம்மாவின் பழக்கம் என்னையும் தொற்ற என் கணவரை என் மகளின் பெயரோடு அப்பா என்று சொல்லி அழைக்க அருகில் இருக்கும் மலையாளத்தோழி சண்டைக்கு வந்துவிட்டார்."எனக்குத்தெரிந்தவரை தமிழ்ப்பெண்கள் கணவரை அத்தான்,மாமா என்றழைக்கிறார்கள்.நீ தான் இப்படிக்கூப்பிடுகிறாய் அண்ணனை,இனிமேல் அண்ணனை அத்தான் என்றோ,மாமா என்றோதான் கூப்பிட வேண்டும்" என்று ஆணையிட என் கணவர் நெளிய ரசனையாய் இருந்தது.
மலையாளப்பெண்கள் கணவரை "சேட்டன்" என்கிறார்கள்.தெலுங்குப்பெண்கள் "பாவா" என்றும், வங்காளி மற்றும் இந்திப்பெண்கள் "சுனொஜி" என்பார்கள்.இந்த சுனொஜி என்பது கேளுங்க என்ற அர்த்தத்தில் வரும். கிட்டத்தட்ட நம்மூர் "என்னங்க" தான்.இப்போதெல்லாம் நம் பெண்கள் பெயர் சொல்லி,பெயரோடு 'டா' போட்டு அழைப்பது வழக்கமாகி விட்டது.இது அவர்களின் அந்தரங்கம்.(அப்புறம் நம்மளுக்கும் படுக்கையறையில காமிரா வச்சவுங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஹி,ஹி).
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களின் பக்கத்துக்கடை மாமா தன் சிப்பந்தியைக் கோபமாக "சைத்தானுக்குக் கொள்ளி வச்சவனே" என்றழைப்பார்.அர்த்தம் புரியாமல் இது என்ன புதுப்பெயர் என்று கேட்க அவரோ உன் அப்பாவிடம் கேள் மருமகளே என என் அப்பாவும் 'ம்ச்' என்று ஒரு வார்த்தையில் மறுதலிக்க என் அம்மாவிடம் அரித்ததில் என் அம்மா கூறினார்.எனக்குத் தெரிந்தவர் தன் மனைவியை "அடியே" என்றழைப்பார்.கோபம்,அன்பு,அதட்டல் அத்தனையும் நேரத்திற்கேற்றபடி அந்த "அடியே" ஒலிக்கும்.எழுத்தாளர் திருமதி.ரமணிச்சந்திரன் கதைகளில் கணவன் மனைவியை வித்தியாசமாக அழைப்பதை,அதை அவள் அனுபவித்து சிலிர்ப்பதை ஒரு அத்தியாயமாக்கியிருப்பார்.
நாம் நம் குழந்தைகளை மகளே என்றோ மகனே என்றோ அழைக்கிறோமா? பெரும்பாலும் மகளைப் பெயர்சொல்லி அல்லது செல்லப்பெயரில்.மகனை பெரும்பாலும் தம்பி என்கிறோம்.தம்பி என்பதும் ஒரு உறவு முறை.உடன் பிறந்த இளையவனைக் கூறும் உறவு முறையில் பெற்ற பிள்ளையை அழைப்பதை நாம் உணர்கிறோமா? பெரும்பாலும் மற்ற மாநில மக்கள் அவரவர் மொழியில் மகனே,மகளே என்றழைப்பதுடன் அடுத்தவர் குழந்தைகளையும் அப்படியே அழைக்கிறார்கள்.
எங்காவது,யாராவது தன் குழந்தையை,மனைவியை,நட்பை,சிப்பந்தியை அழைக்கும் போது நமது நினைவுகளைக் கிளறிவிட்டு அதில் மூழ்கி விடுவதும்,தற்போது என்னருகில் இல்லாதவர்களின் அன்பான விளிப்புகள் மனதில் தோன்றும் போது கண்ணீரும்,அதட்டலான,வசைபாடிய விளிப்புகள் கோபத்தையும் வரவழைக்கும்.ஆனால் பொது இடங்களில் பிச்சைக்குக் கை நீட்டும் முதியோர்,குழந்தைகள்,குழந்தையோடு ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் தீனமான விளிப்பும்,பாவமாய் தயங்கித்தயங்கி அடிக்குரலில்,தன் உடலைக்குறுக்கி உதவி கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர் குரலும் மட்டும் மனதை என்னவோ செய்யும்.தூக்கம் பிடிக்காது மனம் அரற்றும்.தூக்கத்தில் கனவில் கூட தீனமாய் ஒலிக்கும்.இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? வலியோர் மெலியோரை தரக்குறைவாய் அழைக்கும் வார்த்தைகள் மனதில் வலியேற்படுத்தும்.
ஆமாம் நண்பர்களே! உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை எப்படி அழைப்பார்?நீங்கள் அவரை எப்படி அழைப்பீர்கள் சொல்லுங்களேன்.
ஆமாம் நண்பர்களே! உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை எப்படி அழைப்பார்?நீங்கள் அவரை எப்படி அழைப்பீர்கள் சொல்லுங்களேன்.
புதன், மார்ச் 10, 2010
வாசல் திண்ணையில்.....
அவள்
வெடித்துப் பிளந்த வாசல் திண்ணையில்
கிழிந்த சேலையில் முடங்கிக்கிடக்க
சூரியனின் கதிர்களும்
மழையின் சாரல்களும்
காற்றின் கரங்களும்
கடும்புயல் சீற்றங்களும் மாற்றி மாற்றி
நலம் விசாரிக்கும்.
வாசல் தாண்டி உள் நுழைய
வரம் தரவில்லை வீட்டுச்சாமிகள்.
"கம்பு சுழற்றி,கடப்பாறை கையேந்தி
முதுகுச்சட்டைக்குள் மூன்றடி அரிவாள்
இடுப்பு சுற்றி இரும்புப்பொத்தான் வார் பார்த்து
எதிர் நிற்கும் பகை கூட விதிர்த்து விலகும்"
அவள் பெற்ற வீரமகன்
அன்னைக்கு அமுதிட மனைவியிடம் வரம் கேட்கிறான்.
ஒரு காலத்தில்
அந்த வீட்டுமனை வாங்க
தண்டட்டி,தாவாடம்,பொட்டு,அட்டிகை
பொட்டி நகை அத்தனையும் புன்னகையோடு தந்தவள்.
அடித்தளம் போட அப்பனிடம் கடன் வாங்கி
மேல்தளம் போட அண்ணணிடம் கடன் வாங்கி
சுவர்,தரை எல்லாம் தொட்டுத்தடவி
சொந்த வீட்டு சுகத்தில் இருந்தவளுக்கு
வயது முதிர்ந்ததும் வாசல் திண்ணையில்....
கைவளை திருகிவிட்டு
கனத்த நகை குலுங்க
காஞ்சிப்பட்டு சரசரக்க
மஞ்சள் மினுங்க தெருவிறங்கி நடந்தால்
ஸ்ரீதேவி என்ற மக்கள் எத்தனை?
காப்புத் திருகிவிட்டு
கண்களில் மையெழுதி
பொட்டு மினுங்க
பொன்னகையும் மின்ன வீதியில் நடந்தால்
கும்பிட்டுக்குழைந்த மக்கள் எத்தனை?
வாழ்ந்தவள் கெட்டு
வரையோடாய்க்கிடக்கும் இந்த நேரத்திலும்
அவளின் பஞ்சடைந்த விழிகளில் பளபளக்கிறது
மலரும் நினைவுகள்.
எங்காவது திண்ணைகளில் அவளைப்பார்த்தால்
"அந்தக்காலத்தில் நாங்கள்" என்று ஆரம்பிக்கும்
அவளின் மலரும் நினைவுகளுக்கு
பொறுமையாய் செவி கொடுங்கள் தயவு செய்து.
போதும் அவளுக்கு!
வெடித்துப் பிளந்த வாசல் திண்ணையில்
கிழிந்த சேலையில் முடங்கிக்கிடக்க
சூரியனின் கதிர்களும்
மழையின் சாரல்களும்
காற்றின் கரங்களும்
கடும்புயல் சீற்றங்களும் மாற்றி மாற்றி
நலம் விசாரிக்கும்.
வாசல் தாண்டி உள் நுழைய
வரம் தரவில்லை வீட்டுச்சாமிகள்.
"கம்பு சுழற்றி,கடப்பாறை கையேந்தி
முதுகுச்சட்டைக்குள் மூன்றடி அரிவாள்
இடுப்பு சுற்றி இரும்புப்பொத்தான் வார் பார்த்து
எதிர் நிற்கும் பகை கூட விதிர்த்து விலகும்"
அவள் பெற்ற வீரமகன்
அன்னைக்கு அமுதிட மனைவியிடம் வரம் கேட்கிறான்.
ஒரு காலத்தில்
அந்த வீட்டுமனை வாங்க
தண்டட்டி,தாவாடம்,பொட்டு,அட்டிகை
பொட்டி நகை அத்தனையும் புன்னகையோடு தந்தவள்.
அடித்தளம் போட அப்பனிடம் கடன் வாங்கி
மேல்தளம் போட அண்ணணிடம் கடன் வாங்கி
சுவர்,தரை எல்லாம் தொட்டுத்தடவி
சொந்த வீட்டு சுகத்தில் இருந்தவளுக்கு
வயது முதிர்ந்ததும் வாசல் திண்ணையில்....
கைவளை திருகிவிட்டு
கனத்த நகை குலுங்க
காஞ்சிப்பட்டு சரசரக்க
மஞ்சள் மினுங்க தெருவிறங்கி நடந்தால்
ஸ்ரீதேவி என்ற மக்கள் எத்தனை?
காப்புத் திருகிவிட்டு
கண்களில் மையெழுதி
பொட்டு மினுங்க
பொன்னகையும் மின்ன வீதியில் நடந்தால்
கும்பிட்டுக்குழைந்த மக்கள் எத்தனை?
வாழ்ந்தவள் கெட்டு
வரையோடாய்க்கிடக்கும் இந்த நேரத்திலும்
அவளின் பஞ்சடைந்த விழிகளில் பளபளக்கிறது
மலரும் நினைவுகள்.
எங்காவது திண்ணைகளில் அவளைப்பார்த்தால்
"அந்தக்காலத்தில் நாங்கள்" என்று ஆரம்பிக்கும்
அவளின் மலரும் நினைவுகளுக்கு
பொறுமையாய் செவி கொடுங்கள் தயவு செய்து.
போதும் அவளுக்கு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
