இன்று எதிர்ப்படும் முகங்களை ஒரு நிமிடம் உற்றுப்பாருங்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு களைப்பு,ஒரு சோகம்,ஒரு சலிப்பு. யார் முகத்திலும் உற்சாகமில்லை.ஒவ்வொருவர் முகத்திலும்,மனதிலும் ஒளிந்திருக்கும் சஞ்சலங்களைக் கணக்கெடுத்தால் இந்த உலகம் கொள்ளாது. பேருந்திலோ,அலுவலங்களிலோ எங்கு போனாலும்,யாருடனும் அருகில் அமர்ந்து முகத்தை ஏறிட்டாலும் சோகக்கதைகள்.பெண்களுக்கு நிறம்,அழகு,புடவை,நகை,உறவுகள்,குழந்தைகள் படிப்பு,குண்டாகிப்போன உடல்,பொருந்தாத திருமணம் இப்படி நீண்டு............கொண்டே போகும் கவலைகள்.ஆண்களுக்கு,படிப்பு,வேலை,காதல்,அம்மாவிற்கும்,மனைவிக்கும் இடையிலான யுத்தம்,இப்படி நீளும் பிரச்சினைகள். யாருக்கும் பிரச்சினைகளின் வேர்களை,மூலங்களை அறிந்து அதிலிருந்து மீண்டு வரும் வழி பற்றியோ,அல்லது தன்னிடமிருக்கும் பலங்கள் பற்றிய விழிப்புணர்வோ கிடையாது.இருப்பதை மறந்து இல்லாததை நினைத்து ஏங்கும் சராசரி வாழ்க்கை வாழத்தெரிந்தவர்கள் தானா நாம்? தகுதி உள்ள உயிரினங்கள் தான் தம் இருப்பைத் தொடரும்.இருக்கும் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப்பொருத்தி வாழ்வது, அன்றி போராடி தமக்கேற்ற சூழ்நிலைகளை அமைத்து வாழும் தகுதியை வளர்த்துக்கொள்வது, இவை இரண்டும் தான் இறைவன் நமது இருப்பை நிலைப்படுத்த நமக்குத் தந்திருக்கும் வழிகள் என்று நினைக்கிறேன்.இதில் சூழ்நிலைக்கேற்ப பொருத்திக்கொண்டு வாழ்கிறவர்கள் வாழ்க்கை,ஒரு அமைதியான நீரோட்டம் போல இயல்பாய் ஓடிக்கொண்டிருக்க,தமக்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்பவர்களது வாழ்க்கை, போராட்டம் மிகுந்து,வலிகள் சுமந்து,காயம் பட்டு,கண்ணீரைக்கூட உறைய வைத்து, நெருப்புடன் வெந்து தணியும் வாழ்க்கையாய் இருக்கும்.ஆனால் அவர்களை, இந்த உலகம் உள்ளவரை ஞாபகம் வைத்திருக்கும்.
அப்படி என் உயிர் உள்ளவரை ஒருவர் ஞாபகம் இருப்பார் அவர் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள்.திருநங்கைகளை சிறு வயதில் மதுரை,திருச்சி போகும் போது பேருந்து நிலயங்களில் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான ஒப்பனைகள்.நான் திரும்பித்திரும்பி பார்த்தால் என் தாய் சட்டென தலையில் ஒரு குட்டுக்குட்டி அழைத்துச்செல்வார்கள். வீட்டிற்குப்போனதும் கேட்டால் அவர்கள் அப்படித்தான்.உனக்குப்புரியாது.ஆனால் அவர்களைக்கேலி செய்தாலோ அன்றி அவர்களுடன் சண்டையிட்டாலோ அவர்கள் சபித்துவிடுவார்கள் என்பார். அதன் பிறகு அவர்களைப்பற்றி பின்நாட்களில் அறிந்து கொண்டபோது மனம் மறுகும்.சர்வ யோக்கியதைகளுடன், கறுப்பாய்ப்பிறந்ததற்கே வருத்தப்பட்டுக்கொண்டிருந்த, தாழ்வுமனப்பான்மையில் சிக்கித்தவித்த எனக்கு இவர்களைப்பற்றிய ஆனந்த விகடன் கட்டுரைகள், எனக்குள் தாழ்வுமனப்பான்மையைத் தகர்த்து,தன்னம்பிக்கை விதைத்தது.
தற்செயலாக இன்று கிழக்குப்பதிப்பகத்தின் நூல் அறிமுகத்தில் வித்யா அவர்களின் நேர்முகம் கேட்க நேர்ந்தது.இரு பெண்குழந்தைகளுடன் ஒரே ஆண் குழந்தையாக செல்லமாகப் பிறந்து,சிறுவயதிலேயே தாயைப்பறிகொடுத்து, சிறிய தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து,சிறிய தாயாருக்கும் ஒரு பெண் குழந்தை.இதை அவர் சொல்லும் போதே எனக்கு விழிகளில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.காரணம் ஐந்து பெண்களில் மூத்த பெண்ணாகப்பிறந்து, தம்பிக்குத் தவமிருந்து,என் தம்பி பிறந்ததும் அவரைக் கொண்டாடும் எங்களுக்குத் தம்பியின் அருமை புரியும்.ஒரே நேரத்தில் வித்யாவாக,வித்யாவின் அக்காக்களாக,பழிக்கும் சமுதாயத்தின் முன் துவண்டு போன அவரது அப்பாவாக,அம்மாவாக,சித்தியாக அவதாரமெடுத்தேன். வலி தாங்கமுடியாது,நான் தேம்பியழ, வித்யாவோ ஒரு சிரிப்போடு கதை சொல்லும் பெண்ணின் இயல்போடு வாழ்க்கை வரலாற்றைச்சொல்லிக்கொண்டிருக்கிறார்.அவரது இளமை,அவர் அனுபவித்த கொடுமைகள்,குடும்பத்தினரின் அதிர்ச்சி,படிப்பு,பட்டம்,யாசகம் பெற்று ஆணிலிருந்து பெண்ணாய் மாறியது முதல் தற்போது திரைத்துறையில் இருப்பது வரை அவர் எந்தத் உணர்ச்சித் தளும்பலும் இன்றிக் கூறிமுடிக்கிறார்.அவரது வார்த்தைகளில் இருந்த அழுத்தம்,சிந்தனைத் தெளிவு,தனது தேடல்,தேவை பற்றிய வரையறை எல்லாவற்றையும் சொல்லிமுடிக்கும் போது,"இந்த சமூகம் எங்களை அங்கீகரிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினரை விமர்சனம் செய்யாமல்,அவர்களை சாதாரணமாக வாழவிடுங்கள்.எங்களை உங்களில் ஒருவராகப்பாருங்கள்" என்றார்.உண்மை.யாருடைய வாழ்க்கையையும் சிதைக்கும்,விமர்சிக்கும் உரிமை நமக்கு இல்லை.அவர்களது பிறப்புரிமையைக்கூட மறுப்பது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகுமல்ல.ஆணும் பெண்ணும் இணைந்த இறைக்கோலத்தை அர்த்தநாரீஸ்வரர் என்று போற்றி வழிபடும் நாம் நம் கண் முன் வாழும் இவர்களைப் போற்றாவிட்டாலும் அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கும் கொடுமைகளைச்செய்யாதிருக்கலாம் இல்லையா? இவரது லிவிங் ஸ்மைல் வலைப்பூவில் இவரது எழுத்துக்கள் வலிமையானவை.வலிகளை மறந்து,தன்னை திருநங்கையரின் பிரதிநிதியாக முன்னிறுத்தி,மொத்தமாய்ப் போராடும் வலிமை "சபாஷ் வித்யா!". அவரது வார்த்தைகள் விதைத்த கனம் மனதில் நிரந்தரமாக இருக்கும்.
எந்தக்குறையும் இல்லாத போது சிணுங்கிச்சிணுங்கி வாழும் நாமெங்கே? இது தான் வாழ்க்கை,இதற்கு நம்மை எப்படி தயார் செய்வது என்று யோசித்து படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வாழ்ந்து வருவதோடு, அறிவு மயங்கி இருந்த பிற திருநங்கையர்க்கும் நம்பிக்கை கொடுக்கும் வித்யா எங்கே? மானசீகமாக அண்ணாந்து பார்த்தேன்.என் தாயார் அடிக்கடி சொல்வது, ”அடுத்தவர்க்கு வரும் துன்பம் நம் வாசலுக்கு வர அதிக நேரமாகாது.எந்தத் துன்பம் யாருக்கு வந்தாலும் அதைத் தன்னோடு பொருத்திப்பார்த்தால் தான் அதன் வலி நமக்குத் தெரியும்” என்பார்கள்.ஆனால் வித்யாவின் வலிகளையும்,போராட்டங்களையும் என்னோடு பொருத்திப்பார்க்க மனம் பயம் கொள்கிறது.இனி ஒருவருக்கும் இந்த நிலை வேண்டாம் இறைவா! என்னும் பிரார்த்தனையை விட வேறென்ன செய்ய முடியும்?
4 கருத்துகள்:
அருமையான கருத்தை அழகாக எழுதிய உங்களுக்கும் ஒரு சபாஷ் சாந்தி அவர்களே....
அருமையான விமர்சனம். உண்மையில் படிக்கும்போதே மனம் அதிர்ந்தது இந்தப் புத்தகத்தில்தான்.. நாம் படும் துன்பமெல்லாம் வெறும் துறும்பு வித்யாவின் வாழ்க்கையைப் பார்க்கையில்..
"என் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்"
உங்களின் தன்னம்பிக்கை பிடிச்சுருக்கு
(எனக்கும் அந்தமானோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது)
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
//அடுத்தவர்க்கு வரும் துன்பம் நம் வாசலுக்கு வர அதிக நேரமாகாது.எந்தத் துன்பம் யாருக்கு வந்தாலும் அதைத் தன்னோடு பொருத்திப்பார்த்தால் தான் அதன் வலி நமக்குத் தெரியும்//
பசுமரத்தாணியாய் பதிய வேண்டிய வாசகங்கள்
கருத்துரையிடுக