சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

வாழ்க்கை வாழ்வதற்கே


வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது? வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சிலாகிப்பு இது.வாழ்நாளைக் கடமையே எனக்கடத்திக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைபற்றிய பார்வை என்னவாக இருக்கும்.வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களையும்,அதன் மூலம் வாழ்க்கை பற்றிய வெவ்வேறான பார்வைகளையும் தருகிறது.மரணம் பூமியில் ஒவ்வொரு உயிருக்கும் உண்டு.ஏன் நிலம்,நீர் நிலைகள் அத்தனைக்கும் உண்டு.ஒரு காலத்தில் கடலாய் இருந்த நீர் நிலை,நிலப்பரப்பாகவும்,ஒரு காலத்தின் பெரு நகரங்கள் சிதிலமடைந்து,சிற்றூர்களாகவும் இருப்பதை வரலாறு சொல்கிறது.ஏன் பூமிக்கும்,சூரியனுக்கும் கூட மரணம் உண்டென் கிறது அறிவியல்.தோற்றம் என்று ஒன்றிருந்தால் அழிவென்பதும் கட்டாயம் உண்டு.ஆனால் அழிவை,மரணத்தைத் தானே வலிந்து தேடிக்கொள்வது இறைப்படைப்பில் மனிதன் மட்டுமே.ஆல்பட் ராஸ் மற்றும் மணிப்புறா தன் இணை இறந்தால் தானும் இறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அது விதிவிலக்கு.ஆனால் துன்பங்களை,இழப்புகளைத் தாங்க முடியாது உயிர் துறக்கும் மனிதர்களை நினைத்தால் ஒரு புறம் கோபமும்,மறுபுறம் வருத்தமும் பொங்குகிறது.நமது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை நமக்கில்லை.

அந்தமானில் தற்கொலை செய்துகொள்பவர்கள் நாடும் வழி தீக்குளிப்பது.சமைக்கும் போது கவனக்குறைவினால் விரலில் பட்டாலே எரியும் எரிச்சலில் ஊரைக்கூட்டும் நமக்கு உடலை உரித்துப்போடும் இந்த வன் கொடுமை புத்தியை,நாடி நரம்பை,குலைத்துப்போடும்.பள்ளிசிறுமியில் இருந்து குடும்பத்தலைவி வரை கையில் எடுக்கும் ஆயுதம் அது தான்.தலைக்கூந்தலில் ஆரம்பித்து,கால் நகம் வரை அலங்கரிக்கும் ஒரு பெண்,கூந்தலில் பூச்சூடி, விதவிதமாய்த் தன்னை வெளிப்படுத்தி மகிழும் ஒரு பெண் தன்னையே இழக்க எது காரணமாய் இருக்கக்கூடும்.அவளின் கவலைகளா,துன்பங்களில் இருந்து மீளத்தெரியாத அறியாமையா,தனக்கு மட்டுமே கஷ்டங்கள் என்ற எண்ணங்களில் மூழ்குவதா,தற்கொலை செய்து கொண்டால் இதிலிருந்து விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையா எது? சமீபத்தில் ஒரு பெண் தீக்குளித்த கொடுமை.தாய்,தந்தை இழந்து உறவினரின் அரவணைப்பில் வளர்ந்து,திருமணமாகி கணவனே சதமென்று வந்தவள்,கணவனின் குடிப்பழக்கமும்,அது தந்த மன உளைச்சலும் காரணமாக இந்த முடிவுக்குத் தள்ளப்பட்ட பேதை.தாய்,தந்தையை இழந்தும் உயிர் கொண்டு வளர்ந்தவள்,கணவனுக்காய் உயிர் துறந்தாள்.இப்படி நிறையப் பெண்கள் குடும்பம்,குழந்தைகள்,அக்கறையில் வயதான பெற்றொரை,உடன் பிறந்தோரைத்தவிக்கவிட்டு சொல்லாமல் விடைபெறும் கொடுமைகளை நேரில் காணும் போது தூக்கம் தொலைத்த இரவுகள் எத்தனை? இவர்களின் உயிர் துறப்பால் எவர் மாறினர். எது மாறியது.அவர்கள் புதுமாப்பிள்ளைகளாய் வலம் வர யாரோ மறுபடி தூண்டிலில்.யாருடைய இறப்பும் எதற்கும் தீர்வில்லை என்று இவர்களுக்கு யார் புரிய வைப்பது?

ஒவ்வொரு பிரச்சினைக்கும் மரணம் தான் முடிவு என்று மானுடம் முடிவெடுக்க ஆரம்பித்திருந்தால் அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அமல் படுத்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமா? குழந்தைகளை வளர்க்கும் போதே,கஷ்டங்களை,துன்பங்களை,பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பக்குவப்படுத்தாமல் கூண்டுக்கிளிகளாகவும்,தொட்டிச்செடிகளாகவும் வளர்ப்பது தான் முக்கிய காரணம்.பள்ளியில் ஆசிரியர் அடித்தால் மிரட்டி விட்டு வரும் நாம் தான் நம் குழந்தைகளை திசை மாற்றுகிறோம்.நமது இளமையில் பள்ளிக்காலங்களில் நமது பெற்றோர் ஆசிரியர்களிடம் அடி போடச்சொல்லி வளர்த்தனர்.ஒவ்வொரு பிரச்சினையையும் அம்மா,அப்பா வரை கொண்டு போகாமல் நாமே தீர்த்துக்கொண்ட நாட்கள் அவை.அந்தப்பழக்கம் தொடர்வதால் இன்றும் வாழ்க்கையை ரசிக்கிறோம்.இந்தப்பிரச்சினைகள் சர்வ சாதாரணம்,இதைக்கடந்து வருவது நமது சாதனை என்று எண்ணுகிறோம்.ஆனால் குழந்தைகள் தடுக்கி விழுந்தால் ஊரைக்கூட்டுகிறோம்.அவர்களுக்கு முன் நாம் துடிக்கிறோம்.இது தான் பாசம் என்று அவர்களை சிறைப்படுத்துகிறோம்.அவர்களை சுயமாய் இருக்க விடாது,அவ பயப்படுவா!,அவ தாங்க மாட்டா!,அவ துடிச்சுப்போய்டுவா! இப்படி ஒவ்வொரு கருத்தையும் திணித்து 'ஓ! இது தான் நாம்' என்று நாமே அவர்களுக்குள் அவர்கள் குறித்த பிம்பத்தை உருவாக்குகிறோம்.அந்த பிம்பம் வளர்ந்து அவர்களின் கற்பனைகள் ஏறுமாறாக ஆகும் போது இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.அவமானங்கள்,தோல்விகள்,மாறிப்போகும் எதிர்பார்ப்புகளோடு சமரசம் செய்து அவைகளையே வெற்றிப்படிகளாக ஆக்கி உயரச்சொல்லிக்கொடுப்பது அவசியம்.

பக்கத்து வீட்டுப்பெண்ணோடு சண்டை,கணவனோடு சண்டை,நாத்தனார் அவமதிப்பு இப்படி பெண்களும்,பள்ளியில் திருடியதாய்,கடிதமெழுதியதாய்,எதிர்ப்பாலினரோடு பேசியதை ஆசிரியர் கண்டித்ததால்,மதிப்பெண் குறைந்ததால் இப்படி பெண் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வதும்,நான்கு நாட்கள்,மிஞ்சிப்போனால் ஒரு வாரம் அது குறித்த பேச்சு,அதன் பின் சமூகம் மறக்கும்.உருவத்தை,சட்டம் போட்டு,பூச்சூட்டி வருடம் திரும்பியதும் குடும்பம் மறக்கும்.இது தான் யதார்த்தம்.மரணம் எதையும் மாற்றப்போகிறதா? வருங்காலத் தூண்களுக்கு இதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு துன்பம் வரும் போது அடுத்து இன்பம். ஒரு தோல்வி அடுத்து வெற்றி.இது தான் வாழ்க்கை என்று சொல்லிக்கொடுப்போம்.ஒவ்வொருவரின் தலைக்குமேல் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருக்குமாம்.அதன் ஆரக்கால்களில் இன்பம்,துன்பம்,வெற்றி,தோல்வி,அவமானம்,புகழ் இப்படி எழுதப்பட்டிருக்குமாம்.எந்த ஆரக்கால் நம் தலைக்கு நேரே,(அதாவது கடிகார முள் போல) வருகிறதோ,அப்போது நமக்கு அது கிட்டும்.ஒவ்வொரு முறை துன்பம் வரும்போதும் அடுத்த ஆரக்காலுக்காகக் காத்திருக்கிறேன் நான். நீங்கள்?

1 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

மனதை கசிய வைத்த பதிவு. ஏமாற்றத்தை, தோல்வியை பழக்கி கொண்டால், வாழ்க்கை நம்மை சரியான படி வாழ பழக்கி விடும்.