அந்தமானுக்கு சுற்றுலா வர்றீங்களா? கட்டுரையைப்படித்துவிட்டு நிறைய நண்பர்கள் அந்தமான் வருவதற்கு விருப்பம் கொண்டுள்ளார்கள் என்பது கருத்துரை வாயிலாகவும்,தமிலிஷில் ஓட்டுப்பதிவு மூலமும்,விகடனில் குட் பிளாகில் சேர்ந்துள்ளதையும் வைத்து அறிந்துகொள்ளமுடிகிறது. (எப்புடி பந்தா!) அந்தமான் தமிழோசை வலையில் பழைய கட்டுரைகளைப்பார்த்தால் தங்களுக்கான விடைகள் கிடைக்குமென்றபோதிலும் மீண்டும் தங்கள் அனைவருக்கும் தீவுகள் ஒரு அறிமுகம்.அந்தமான்,நிகோபார்த்தீவுகள் இந்தியாவின் ஒன்றியப்பகுதிகளில் ஒன்று.அந்தமான் நிகோபார்த்தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் மக்கள் வசிக்கும் தீவுகள் 36.நீலக்கடலில்,பச்சை நிறத்தீவுகள் இது என்பதால் இதனை "எமரால்டு" தீவுகள் என்றும் அழைக்கின்றனர்.தென்னையும்,கமுகும்,வானுயர்ந்த அடர் காடுகளும் கொண்ட மழை வளமும்,மண்வளமும் மிக்க தீவுகள்.உயர்ந்தமலைகளும்,தூரத்துதீவுகளும்,சதாஉலவும் கப்பல்களும்,படகுகளும்,அமைதியான சூழலும் கொண்டு,சுற்றுலாப்பயணிகளைத் தன்னை மறந்து,நான்,நீ என்பதும் மறந்து,இயற்கையோடு இயற்கையாய் ஒன்ற வைத்து,நம்மை வசியப்படுத்தும் அழகி.அந்தமான்,நிகோபார்த்தீவுகளை சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து நீர் மற்றும் வான்வழியாகவும்,விசாகப்பட்டினத்திலிருந்து நீர்வழியாகவும் அடைய முடியும்.தாயகத்திலிருந்து கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த அந்தமான் தீவுகளில் எல்ல மாநில மக்களும் வசிக்கிறார்கள் என்றபோதிலும் இந்தி மொழிதான் ஆட்சிமொழியாக உள்ளது.ஆனாலும் தமிழ் எங்கும் உள்ளது.இந்தத்தீவின் மக்கள் தொகையில் இரண்டாவது இடம் தமிழர்களுக்கு.அதனால் மொழி குறித்த பயம்,கவலை தேவையற்றது.அதோடு இங்கு ஏமாற்றுவது கிடையாது.வருபவர்கள் தீவுமக்களை ஏமாற்றினால் தான் உண்டு.தீவுகளில் சுற்றூலாக்காலம் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை.
கப்பலில் வர பயண நேரம் 3 நாட்களும்,விமானப்பயணம் சுமார் இரண்டு மணி நேரமும் ஆகும்.அவரவர் விருப்பப்படி பயணத்தைத் தேர்வு செய்யலாம்.தீவுகளுக்கு வருவதற்கு கப்பல் பயணச்சீட்டு நான்காம் வகுப்பு ரூ.1960/,அத்தோடு சாப்பாட்டுச்செலவு தனி.வான்வழிப்பயணம் எனில் மூன்று மாதத்திற்கு முன் முன்பதிவு செய்துகொண்டால் குறைவான கட்டணத்தில் பதிவு செய்யலாம்.(ரூ.4000/ க்குள்)இங்கு தென்னக மற்றும் வங்காள,பஞ்சாபி உணவு வகைகள் கிடைக்கும்.உணவுப்பிரச்சினை இருக்காது.இங்கு வருடம் முழுதும் பருத்தியாடை அணியலாம்.
இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் - 1.கூண்டுச்சிறை 2.ரூஸ் தீவு (முன்னாள் தலைநகர்) 3.மெரினாபூங்கா 4. நீர் விளையாட்டரங்கம் 5. அபர்தீன் போர் நினைவுச்சின்னம் 6.நீர்வாழ் உயிர்க்காட்சியகம் 7. காந்தி பூங்கா 8. மானுடவியல் அருங்காட்சியகம் 9. சாமுதிரிகா 10. அந்தமான் வனத்துறை காட்சியகம், 11.குறு விலங்ககம்,12 சாத்தம் மர ஆலை (ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை,13.சுண்ணாம்புக்குகை மற்றும் மண் எரிமலை (பாராடாங்), 14.வண்டூர் கடற்கரை, 15.ஜாலி பாய் மற்றும் ரெட் ஸ்கின் (இங்கு கடலுக்கடியில் பவளப்பாறை மற்றும் snorkeling),16.மவுண்ட் ஹாரியட் (உயரமான மலைச்சிகரம்),17.நார்த் பே இதோட வைப்பர் தீவு,சிடியா டாப்பு,கார்பின்ஸ் கோவ்,சிங்க் தீவு, கொலின்பூர்,சிப்பிகாட் பண்ணை,மதுபன்,நீல்,ஹேவ் லாக் தீவுகள் மற்றும் உள்தீவுகள்.இங்கு பாரன் தீவில் உயிரூள்ள எரிமலை ஒன்றும் உள்ளது.
அது ஒரு பெரிய பட்டியலே இருக்குங்க.நமக்கு இருக்குற நேரத்தையும்,கையிருப்பையும் கணக்குப்போட்டு சுத்தலாம்.இல்ல ஏதாவது ஒரு கட்சி சார்ந்து வந்தா அரசு கஜானாவுக்கு ஆப்பு வைக்கலாம். சென்னைத் துறைமுகத்தப்பாத்தா கப்பல் பயணமே வெறுத்துப்போய்டுமே! இங்க வந்து பாருங்க.உள்தீவுத் துறைமுகங்கள்,தாயகத்துறைமுகம்லாம் எவ்வள சுத்தமா இருக்குன்னு.கப்பல்,படகு சலிக்க,சலிக்க சுத்தலாம்.அலைகடல்,அமைதியான கடல் இப்படிக் கடலோட எல்லா முகத்தையும் இங்க தரிசிக்கலாம்.கடலாடலாம்.தனிமை வேண்டுமா? தனிமையான கடற்கரைகள் உண்டு.தங்குமிடம் மற்ற அனைத்து விபரங்களுக்கும் www.and.nic.in இந்தத் தளத்தில் பார்த்து உங்க வருகையைத் திட்டமிடுங்க.உங்க வாழ்க்கையில மறக்க முடியாத இன்பச்சுற்றுலாவாக அந்தமான் சுற்றூலா இருக்கும்ங்க! என்ன இவங்களுக்கு ஏதும் கமிஷன் இருக்குமோன்னு யாருங்க இப்ப சொன்னது? யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். சுற்றுலாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லங்க! மேலதிக விபரங்களுக்கு எங்களை இந்த வலைப்பூவின் கருத்துரை மூலம் தொடர்பு கொண்டால் கண்டிப்பாக இயன்ற உதவிகள் செய்யக் காத்திருக்கிறோம்.(விருந்தோம்பல் தமிழனுடைய குணமில்லையா? நான் பச்சத்தமிழச்சிங்க!)
14 கருத்துகள்:
ஸ்கூல் படிக்கும்போது அந்தமான் போகணும்னு நச்சரிச்சுக்கிட்டே இருந்தோம்..ஐலேண்ட் எப்படி இருக்கும்னு பாக்கணும்னு..இப்போ போகலாம்..அந்த லீவு இந்த லீவுன்னு இப்பொ வரைக்கும்..இழுத்துக்கிட்டு இருக்கு..பப்பு கொஞ்சம் வளர்ந்ததும்..சான்ஸ் இருக்குனுநினைக்கறேன்! :-)
விருந்தோம்பல் தமிழனுடைய குணமில்லையா? நான் பச்சத்தமிழச்சிங்க!//
மாட்டிகிட்டீங்களா??:))
உண்மையில் அருமையான பதிவு. ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடலாம் உங்க ஊர்ல..::))
விபரங்களும் விளக்கங்களும் அருமை ..! நன்றி ..!
அந்தமானை குறித்து என் உறவினர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் கூடிய விரைவிலேயே செல்ல வேண்டிய ஆர்வம் இருக்கதான் செய்கிறது என்ன பொருளாதர பிரச்சினைதான் முடிவுகளை தள்ளி போட வைக்கிறது
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct to May is the tourist season
ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்? பருவமழைக்காலம் தொடங்கிவிடுமா?
ஒருவர் எந்தவோரு முன்பதிவும் இல்லாமல், வந்தால், அவர் விமானனிலயம், அல்லது துறைமுகத்திலிருந்து நேராக எங்கு செல்ல வேண்டும் தங்குமிடங்களத்தேட?
பார்க்குமிடங்கள் என்று நிறையச்சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. எனினும், அவற்றை ஆங்கிலத்திலும் எழுதினால் குழப்பமில்லாமல் தெரிய்லாம். எடுத்துக்காட்டாக: குறு விலங்ககம்; சாமுதிர்கா;
உணவுச்சாலைகளில் பண்டங்களின் விலை சென்னை போலிருக்குமா?
அ.நி. தீவுகளில் விலைவாசி ஏற்றமானது என்றே கேட்டதுண்டு.
தகவல்களுக்கு மிக்க நன்றி
"இங்கு பாரன் தீவில் உயிரூள்ள எரிமலை ஒன்றும் உள்ளது."
இன்னாங்க நீங்க கடைசியில பீதியை கிளப்பிட்டிங்க
:-(((
உயிரூள்ள எரிமலை போல இருக்கும்
ஆனா எரிமலை பொங்காது
வரும் ஆனா வாராது போல இருக்கு
:-))))
அந்தமானுக்கு அழைப்பு விட்டு விட்டீர்கள்.கட்டாயம் வந்து விட வேண்டியது தான்.அருமையான அழைப்பு.
தமிழ்நாட்டை விட வெளியில் வாழுந்தமிழர்களிடம் தமிழார்வம் பொங்கி வழிகிறது.
வாழ்க தமிழ். வளர்க தமிழர்.
(அப்படியாவது தமிழ்நாட்டில் தமிழர்கள் கோபங்கொண்டு தமிழ் வளர்த்தால் சரி.)
விரிவான தகவல்கள்.
(விருந்தோம்பல் தமிழனுடைய குணமில்லையா? நான் பச்சத்தமிழச்சிங்க!) வாழ்த்துக்கள்.
அந்த மானைப்பாருங்கள் அழகு என்ற பாடல்வரிகள் என்னைப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது அந்நாளைய திரைப்படத்தில் அந்த மானின் பெருமையை அழகாய் உலகுக்கு எடுத்தியம்பிய வரிகள் அவை, மற்றும் அந்தமானைப்பற்றி கேள்விபடாதவர்களுக்கும் அந்தமானுக்கு ஒரு அந்தமாதிரியான அருமையான அறிமுகப்படலமாக அமைந்திருந்தது அந்த அறிமுகம் என்றால் மிகையாகாது.
என் பள்ளி நாட்கள் முடிந்து ஓரளவிற்கு வெளியுலகம் தெரிய ஆரம்பித்து நான் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் சென்றுகாண விரும்பிய இடத்தில் மிக முக்கியமானது அந்தமான்தான். ஆனால் அது இன்று வரை எங்கள் நண்பர்கள் யாருக்கும் அதைக்காண வாய்ப்பு வாய்க்க வில்லை.
நான் கடல்கடந்து நாடுகள் பல கண்டிருந்தபோதிலும் சொந்த நாட்டைச்சேர்ந்த அந்தமானைக்காண்பதென்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதென்பெது
மனதில் என்றும் ஒரு ஓரத்தில் உள்ள வருத்நதம்தான், பார்க்கலாம் என்று தீரும் அந்த வருத்ததமென்று.
உங்கள் பதிவு அந்தமானைப்பற்றி என்னுடைய ஏங்கங்களை அதிகப்படுத்திவிட்டது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
சாந்தி உங்க அன்புக்கு நன்றி
என் கணவருக்கு வரணும்னு எண்ணம் இருக்கு
அப்போ உங்களை தொடர்பு கொள்கிறேன் மா ...
உங்க வலைத்தளத்தில் பின் தொடர்பவர்கள் வசதி செய்தீங்கன்னா உடனுக்குடன் பின் தொடர்ந்து படிக்க வசதியா இருக்கும்
தங்கள் பதிவுக்கும்,வரவேற்புக்கும் நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
தங்களின் இடுகையைப் படித்தபின் அந்தமான் கட்டாயம் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விட்டு விட்டது.
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை.
கருத்துரையிடுக