காதல் - யுகயுகமாகப் பேசப்படும் இந்த உன்னத உணர்விற்கு வைரமுத்துவின் வரிகளில் வரைவிலக்கணம் சொல்வதென்றால் "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவை" தருவது காதல்.ஆண்டாண்டு காலமாய் பேசப்பட்டாலும்,பாடப்பட்டாலும் காதலின் மொழிமட்டும் அட்சயப்பாத்திரம்.காதலைப்பாடும்,எழுதும் ஒரு படைப்பாளியின் எழுதுகோலுக்கு இறக்கை முளைத்துவிடுவதை,அவனின் படைப்பிலக்கியங்களின் மொழி வீச்சிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.திரைப்பாடல்கள் எல்லாமும் காதலைச்சொல்லும் போது மட்டும் இலக்கியத்தரம் பெற்றுவிடுகின்றன.ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது காதலைக்கடந்து வருகிறோம். அவரவர் வசதி,ப்ராப்தத்திற்கேற்றபடி,புத்திசாலித்தனம்,போராடும் குணம் இவற்றைப்பொறுத்து,கல்யாணத்திற்கு முன் அன்றி கல்யாணத்திற்குப்பின் காதலின் உன்னதத்தை அனுபவிக்கிறோம்.காதல் என்பது மூளையில், "நியோ கார்டெக்ஸ்" இருப்பதாலும்,ஹார்மோன் களின் வேலை,மூளையின் வேதியியல் மாற்றங்கள் என்று அறிவியல் சொன்னாலும் காதல் தரும் ஊக்கமும் ஆக்கமும் வேறு எதுவும் தரமுடியாது.நாம் ஒருவரால் விரும்பப்படுகிறோம் என்பதே மிகவும் சுகமானது.ஆனால் எது காதல் என்பதில் தெளிவும்,காதலிக்கும் போது இருக்கும் வேகம் வாழ்க்கை முழுதும் தொடரும் படியான இறுக்கமும் இருக்கும் போது தான் காலமெல்லாம் காதல் வாழும்.
மேல் நாடுகளில் பிப்ரவரி மாதம் 14ம் தேதியைக்காதலர் தினமாகக் கொண்டாடிவர,உலகமயமாக்கலின் போது இந்தக்காதலர் தினமும் இந்தியாவிற்கு இறக்குமதியானது போலும்.இந்தியாவைப்பொறுத்தவரை காதலர்களுக்கு தினம்தினம் கொண்டாட்டம் தான்.அதென்ன? பிப்ரவரி 14ம் தேதி மட்டும் காதலர் தினம்.பிறகு காதலர்கள் நண்பர்களாகி விடுவார்களா? சுத்த அபத்தம்.அன்னையர்,தந்தையர் தினம் வைத்து அன்றுமட்டும் அவர்களைக்கொண்டாடுவது மேல்நாட்டு நாகரீகம். வருடத்தில் ஒரு முறை கொண்டாடிவிட்டு மற்ற நாட்கள் கண்டுகொள்ளாது இருப்பதா? ரோம் நகரில் கிளாடியஸ் என்னும் கொடுங்கோல் மன்னன், படைவீரர்கள் திருமணம் செய்யக்கூடாது.அது அவர்களின் போர்த்திறமையைப்பாதிக்கும் என்று கி.பி.267ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வர,காதல் வயப்பட்ட பல படைவீரர்களின் திருமணத்தை ரகசியமாக செய்துவைத்தவர் வாலெண்டைன் என்கிற இளம் பாதிரியார்.இந்த விஷயம் கிளாடியசுக்குத்தெரியவர பாதிரியாரின் தலை சீவப்பட்டது என்றும்,அவரின் நினைவாகத்தான் காதலர் தினம் கொண்டாடப்படுகிறதென்று ஒரு கருத்துண்டு.அந்தக்காலத்தில் ரோம் நகரில் நம்ம ஊர் இந்திர விழா போன்று,"லூபர்கேலியா" என்று ஒரு விழா பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட்டு வந்தது.வசந்தகாலத்தை காதலர்கள் வரவேற்கும் ஒரு உற்சாக விழா.அந்த விழாதான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தமானில் பிபரவரி 13ம் தேதியே வண்ண வண்ண ரோஜாக்கள்,அழகாக காகிதம் சுற்றப்பட்டு, வந்து இறங்கிவிடும்.பள்ளிச்சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் கைகளில் விளையாடும்.வெறும் இனக்கவர்ச்சிக்கும்,காதலுக்கும் வேறுபாடறியா பிஞ்சுமனங்கள் ஏதோ ஒரு உந்துதலினாலும்,ஊடகங்களின் தாக்கத்தாலும் காதலைக் கண்டதே கோலமாகக் கையாளும்.பரிமாறப்படும் ரோஜாக்களையும்,பரிசுகளையும் பகிரங்கப்படுத்தமுடியாது பெண்குழந்தைகள் குழம்பும்.அடுத்த காதலர் தினத்தின் போதும் அதே ரோஜாக்கள்.அதே பரிசுகள்.கொடுக்கும் கரங்களும்,பெறும் கரங்களும் மாறுபடுகிறது.புரிதலில்லை.காதலில் ஆழமில்லை.உணர்வு வழி ஆரம்பித்து உணர்வு வழி முடிந்து விட,காதலின் வேகம் திசை மாறிவிடுகிறது.எங்கோ சிலர் உணர்வு வழி ஆரம்பித்து அறிவு வழி முடித்து நல்வாழ்வு வாழ, பலரின் காதல் பிசுபிசுத்துப்போகிறது.
Love before wedding இருக்கிறதே, அது LBW கொஞ்சம் தடுமாறினாலும் நம்மைக் களத்தினின்று வெளியேற்றிவிடும்.காலத்திற்கும் குற்ற உணர்வை விதைத்துவிடும்.ஆனால்,Love after Wedding இது தான் LAW நமது சட்டம்.திருமணத்திற்குப்பின் காதல் - பாதுகாப்பு,சமூக மதிப்பீடு,பெற்றோர் மற்றும் உறவுகளின் ஆதரவு,சந்ததியினரின் நலவாழ்வு இப்படி நன்மைகள் ஆயிரம்.திருமணத்திற்கு முன் காதல் - தெளிவு,போராடும் குணம்,விடாமுயற்சி,உலகே எதிர்த்து நின்றாலும் தனது நிலைப்பாட்டில் உறுதி இப்படித் தன்னை உணர்ந்து செயல்படும் சிலருக்கே வாய்க்கிறது.மற்றோருக்கு வானவில்லாய் வர்ணஜாலம் காட்டிப்போகிறதோடல்லாமல்,மனதில் தீராத வடுக்களை விட்டுச்செல்கிறது.பிரச்சினைகள்,விவாகரத்துக்கள் இரு திருமணங்களிலும் உண்டு என்றாலும்,காதல் திருமணங்களின் தோல்வி காதலைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.காதல் தோற்று விடுவதில்லை.காதலர் தோற்று விடுகின்றனர்.காதலைக்கேவலப்படுத்திவிடுகின்றனர்.காதலின் பெயரால் ஓடிப்போவது,தோல்வி என்று தாடி வளர்த்து கவிஞனாவது,இவையெல்லாம் தவிர்த்து, அறிவின் பாற்பட்டு,ஒரு முதிர்ந்த மனநிலையில் உருவாகும் காதல் தான் சமூகத்தில் வரவேற்கப்படும்.
காதலர்களுக்குத்தான் காலமும் பொழுதும்.காதலுக்கேது தினமும்,பொழுதும்.காதல் சர்வ வியாபி.சூரியனிடம் கொண்ட காதலால் தான் பூமி பூ பூக்கிறது.இயற்கையின் படைப்புகள் காதலின் விளைவுகள். ஆனால் மனிதனைப்போல் மற்றெதுவும் காதலைத்தவறாகப் பயன்படுத்துவதில்லை.காதலின் பெயரால் துணையை ஏமாற்றுவதில்லை.அதனால் தான் காதல் சாதரணமானவர்களைப் பயமுறுத்திவிடுகிறது.கண்டதும் காதல்,காணாமல் காதல்,தொலைபேசிக்காதல்,சொல்லாமல் காதல் இப்படிப் பல காதல்களைச்சொல்லும் திரைக்குக்காதல் -கதை. கவிஞனுக்கு காதல் - பாடுபொருள்.சாதாரண மனிதர்க்குக் காதல், வாழ்க்கை.அதனால் காதல் துணையைத்தேடும் போது கணக்குப்போட்டு, தனக்குப்பொருத்தமான (மனம்,உடல் இரு பொருத்தமும்) துணை தேடுவதில் தவறில்லை.

இளையோரே!
செல்வத்தைச்சேமியுங்கள் - வருங்கால நலனுக்கு.
செல்வத்தைச்சேமியுங்கள் - வருங்கால நலனுக்கு.
கனவுகளைச்சேமியுங்கள் - வருங்கால வளர்ச்சிக்கு.
காதலை மட்டும் செலவழித்துக்கொண்டேயிருங்கள் - மனித வளர்ச்சிக்கு. ஏனென்றால் மனிதம் வளர்க்கும் சக்தி காதலுக்கு மட்டும் தான் உண்டு. உண்மைக்காதலுக்கு மட்டும் தான் உண்டு..
காதலை மட்டும் செலவழித்துக்கொண்டேயிருங்கள் - மனித வளர்ச்சிக்கு. ஏனென்றால் மனிதம் வளர்க்கும் சக்தி காதலுக்கு மட்டும் தான் உண்டு. உண்மைக்காதலுக்கு மட்டும் தான் உண்டு..
அனைத்துக் காதலர்களுக்கும் (தம்பதியர் உட்பட) காதலர் தின நல்வாழ்த்துகள்
3 கருத்துகள்:
வாழ்த்துகள்..
LBW / LAW Super..:)
வாங்க நாளைக்கு ஸ்பெசல் பதிவு..:))
செல்வத்தைச்சேமியுங்கள் - வருங்கால நலனுக்கு.
கனவுகளைச்சேமியுங்கள் - வருங்கால வளர்ச்சிக்கு.
காதலை மட்டும் செலவழித்துக்கொண்டேயிருங்கள் - மனித வளர்ச்சிக்கு. \\\\\\\
மூணே வரிகள்ல எல்லாத்தையும் சொல்லிட்டீங்க.
LBW / LAW - வித்தியாசமான விளக்கம் :-)
கருத்துரையிடுக