பதின்ம வயது தொடர் பதிவுக்கு அழைத்திருக்கும் தோழி தீபா நேஹாவிற்கு நன்றி.முதலில் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறில்லை.செட்டிநாட்டு கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் பதின்ம வயதில்,அதுவும் 1983 முதல் 1989 ம் வரையிலான காலகட்டத்தில் ஒரு ரொமான்ஸான டீன் ஏஜ் பதிவை எதிர்பார்த்தால் சாரி! என்னுடைய பதின்மப்பருவம் ரொம்பவே வித்தியாசமானது.எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள்,ஒரு பையன்.நான் தான் மூத்தவள்.குழந்தைப்பருவம் தங்கைகளுக்கும்,தம்பிக்கும் ஆயாவாக.அதனாலேயே பொறுப்பான பெண் என்று அப்பா,அம்மா,ஆயா,அப்பத்தா,ஐயா,சித்தப்பா,அத்தை இவர்களின் அன்புக்கு பாத்திரமானவள்.அதன் பிறகு காலை ஐந்து மணிக்கு எழுந்தால் பள்ளிக்குப்போகும் வரை வேலை தான்.மாட்டுத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி,குழாய் தண்ணீர் பிடித்து,சட்னி அம்மியில் அரைத்து,பாத்திரம் துலக்கி இப்படி நாங்கள் எல்லோருமே பரபரவென வேலை முடித்து பள்ளிக்கு ஓடுவோம்.மாலை திரும்ப வந்து அதே வேலைகளோடு,ஆட்டுக்கல்லில் மாவரைப்பதுடன் வேலை முடிக்க இரவு ஏழு மணி.அதன் பிறகு இஷ்டமிருந்தால் பாடம்.இல்லையென்றால் தங்கைகளோடும்,தம்பியோடும் விளையாட்டு.என் அப்பா "ஹார்டுவேர்" கடை வைத்திருந்ததால் பெரிய காம்பவுண்டிற்குள் சிறிதாக வீடு. அதனால் அக்கம்,பக்கம் வீடுகள்,நண்பர்கள் இல்லை.இரவு சிலோன் வானொலியில் பாட்டு,ஒலிச்சித்திரம் கேட்டபடி அம்மா பரிமாற அப்பாவோடு பேசி,சிரித்து சாப்பாடு.பள்ளிப்பருவத்தில் கறுப்பு நிறம் என்ற தாழ்வுமனப்பான்மையில் குறுகிக்கிடப்பேன்.சொன்னால் சிரிப்பீர்கள்.அழகான,சிவப்பான பெண்களைத்தான் மிகவும் பிடிக்கும்.காதலுக்கு அர்த்தம் புரியாது.குழாயடியில் சந்திக்கும் பையன் களை,ஐந்தாம் வகுப்பு வரை படித்த தோழர்களை சந்தித்தால், என்னடா!,டேய்!,எப்படியிருக்கடா! என்று ஏக வசனம் தான்.யாருக்கும் பயமோ,நாணமோ கிடையாது.அந்த வயதில் நடந்ததே கிடையாது.தரையில் கால் பாவாமல் ஒரே ஓட்டம் தான்.ட்யூசன் போனது கிடையாது.படிப்பு பற்றியெல்லாம் பெரிய சிந்தனை கிடையாது.கட்டுக்கதைகள்,பாடுவது,வீட்டில் திருடுவது என்று திரில் நிறைந்த பருவம் அது.பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் பார்த்த திரைப்படங்கள் முருகன் அடிமை,வருவான் வடிவேலன் இப்படி பக்திப்படங்கள் தான்.மற்ற படங்கள் கதையாகத்தோழியர் சொல்வர்.(பாவம்ப்பா! இவ சினிமாவுக்கே போறதில்ல.நாமளாச்சும் சொல்லுவம்) பள்ளியில் டான்ஸில் சேர்க்கமாட்டார்கள்,நிறத்தைக்காரணம் காட்டி.நாடகங்களில் தள்ளுப்பட்ட வேடம் தருவார்கள்.ஆனால் வீட்டில் அத்தனை டான்ஸையும் நானே பாடி,ஆடுவேன்.நாடகத்தில் அத்தனை பேரின் வசனமும் சரளமாக மோனோ ஆக்டிங் செய்வதுண்டு.அம்மா அசந்து அப்பாவிடம் சொல்லி நான் காலரைத்தூக்கிவிட்ட நாட்கள் பசுமையானவை.பதினொன்று,பன்னிரண்டாம் வகுப்பு இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி.எல்லா ஆண்களுடனும் சகஜமாகப்பேசுவதால் அண்ணன்,தம்பிகள் நிறைய.அப்பா கடைக்கு வரும் காம்ளிமென்ட் டையரியில் கவிதைகள் எழுத ஆரம்பித்தது இந்த வயதில் தான்.
அதன் பிறகு கல்லூரி.என்னைக்கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்று என் அப்பா,அம்மா,ஆயா ஆசைப்பட மற்ற என் உறவினர்கள்," வேணாம்.காலேஜ்லாம் படிச்சுச்சுக,சொல்றதக்கேக்காதுக.ஓடிப்போகுங்க! அந்த செலவ இன்னும் கொஞ்சம் ரெண்டு மூனு பவுனக்கூடப்போட்டு கட்டிக்குடுங்க!" என்று அறிவுரை கூற என் அப்பா,அம்மா அவர்களை அலட்சியப்படுத்தி என்னைக்கல்லூரியில் சேர்த்தனர்.அந்த வார்த்தைகளின் தாக்கமோ என்னவோ,அல்லது யாரும் ப்ரொபோஸ் பண்ணாத காரணமோ சலனங்கள் இல்லை.என் தோழியர் யாரைக்காண்பித்தாலும் சீ..அவனுக்கு மூக்கு சப்பை,இவனுக்கு பல்லு சரியில்ல,என்பதுண்டு.சிவப்பான ஆண்களை சீ வெள்ளுலுவக்குட்டி மாதிரி.ஆம்பிளையின்னா கறுப்பா இருக்கணும்.அது தான் கம்பீரம் என்பேன்.கனவுகள்,கற்பனைகள் எல்லாம் கவிதை புனையவும்,கல்லூரியில் பெரியாளாகக் காட்டிக்கொள்ளவும் தான்.காதலுக்கு எதிரியோ அன்றி அது கெட்ட வார்த்தை என்றோ இல்லை.அந்த மாதிரி சலனங்கள் தனிமை அதிகம் இருப்பவர்களுக்குத்தான் வருமோ? பாத்தவுடன பத்திக்கிற மாதிரி ஆளுகளப்பாக்கலையோ? பாலகுமாரனும்,ஜெயகாந்தனும் படிக்கும் போது கூட அழகான குடும்பம்தான் கற்பனை. வணிகவியல் இளங்கலை கல்லூரியிலும்,முதுகலை அஞ்சல் வழியிலும் முடித்து 21 வயதில் திருமணத்தின் போதும் என் அப்பா யாரைச்சொல்வார்களோ அவர்தான் என்ற முடிவு தான். என் அப்பாவும்,அம்மாவும் அரிதான புரிதல் உள்ளவர்கள்.அப்பா ரொம்பவே மென்மையானவர்கள்.அப்பா,அம்மா என்றால் போதும்.வெறித்தனமான பாசம்.அதனால் தான் அப்பாவை சீக்கிரமே பறிகொடுத்தோம்.என் தங்கைகள்,தம்பி இன்னும் கூட பெயர் சொல்லி அழைத்துக்கொள்வோம்.நல்ல நண்பர்களாக இருப்போம்.நண்பர்கள் வட்டம் பெரிது என்றாலும் கூட முதல் நட்பு வட்டம் என் குடும்பம் தான்.எல்லாவற்றையும் பேசிக்கொள்வோம்.நாங்கள் ஐந்து பேரும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் புரிந்து என் தம்பியை நீயாவது காதல் மணம் செய்ய வேண்டும் என்று கூற ," ம் அது சரி.என் மொகத்துல மக்குத்தனம் அவ்ள வடியுதா? இவளுகள்லாம் நிம்மதியா இருப்பாங்களாம். நா மட்டும் பிச்சுக்கிட்டு அலையவாம்.பொண்ணு பாத்து கட்டிவச்சாக் கல்யாணம்.உங்களுக்கு பட்டுப்புடவை.இல்ல ஆள விடுங்க! நா பிரம்மச்சாரி" என்று கூவ ஆறு பேரில் ஒருவரும் திருமணத்திற்கு முன் காதலிக்கவில்லை.திருமணத்திற்குப்பின்.........ஆனா ஒண்ணுங்க! காதலிச்சுத் தான் கல்யாணம்னா, என்ன மாதிரி ஆளுங்களுக்கு கல்யாணப் பிராப்தியே இருந்திருக்காதுங்க!
ஆங்! ஒண்ணு சொல்ல மறந்துட்டனே! பள்ளி,கல்லூரிகளில் அழகரசிகளாக இருந்தவர்கள் இப்போது தலை நரைத்து,ஆட்டுக்கல்,உரல் அளவிற்கு இருக்க,கறு......ப்பு என்று விமர்சிக்கப்பட்ட நான் இன்று அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறேன்.அட நிஜமாங்க! நம்புங்க! "18 வருஷத்துக்கு முன்னால பாத்தமாதிரியே இருக்கியே! " எப்புடி? என்று கேட்க ஒரு புன்னைகை தான் பதில்.ஆனா உங்ககிட்ட அந்த ரகசியத்த சொல்லணுமில்ல."கவலப்படாதீங்க! அதுனால முகத்துல முதுமை தான் வரும்.தன்னம்பிக்கை,தைரியம் முகத்துல ஒரு பொலிவையும் அழகையும் குடுக்கும்.அதோட எளிமையான அலங்காரம்,நமக்கேற்ற உடை,முகத்துல எப்பவும் ஒரு புன்னகை,யதார்த்தங்களை மனசளவுள ஏத்துக்குறது,சரியான உணவு,வீட்டு வேலைகள நாமே செய்யறது (இதுனால உடல் சீரா இருக்கும்),மந்தமா,சோம்பேறித்தனமில்லாம இருக்குறது,தந்திரமற்று,இயல்பாய் இருப்பது,பழைய உணவ ஃப்ரிஜ்ல வச்சு சாப்பிடறத தவிர்க்கிறது,காய்கறி,பழங்கள் அதிகமா உணவுல சேத்துக்கறது இப்புடியெல்லாம் செய்துகிட்டு வந்தா எப்பவும் இளமையா இருக்கலாம்.
11 கருத்துகள்:
அன்னிக்குமாதிரியே இப்பவும் துறுதுறுன்னு இருக்கிறதுக்கு வாழ்த்துக்கள் ;))
ரொம்ப ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது சாந்தி. உங்களை அழைத்ததற்கு.
மொத்தப் பதிவுமே அத்தனை அழகு.
ரொம்ப ரசித்த வரிகள்.
//நாடகத்தில் அத்தனை பேரின் வசனமும் சரளமாக மோனோ ஆக்டிங் செய்வதுண்டு.அம்மா அசந்து அப்பாவிடம் சொல்லி நான் காலரைத்தூக்கிவிட்ட நாட்கள் பசுமையானவை.//
அட!
//சிவப்பான ஆண்களை சீ வெள்ளுலுவக்குட்டி மாதிரி.ஆம்பிளையின்னா கறுப்பா இருக்கணும்.அது தான் கம்பீரம் என்பேன்.//
அதே அதே!
//நண்பர்கள் வட்டம் பெரிது என்றாலும் கூட முதல் நட்பு வட்டம் என் குடும்பம் தான்.//
ரொம்பக் கொடுத்து வைத்தவர் நீங்கள்.
//," ம் அது சரி.என் மொகத்துல மக்குத்தனம் அவ்ள வடியுதா? இவளுகள்லாம் நிம்மதியா இருப்பாங்களாம். நா மட்டும் பிச்சுக்கிட்டு அலையவாம்.பொண்ணு பாத்து கட்டிவச்சாக் கல்யாணம்.உங்களுக்கு பட்டுப்புடவை.இல்ல ஆள விடுங்க! நா பிரம்மச்சாரி"//
:-)))))))))
அப்பப்போ இந்த மாதிரி நினைச்சு பார்த்துக்க வேண்டியதுதான்
இன்னும் இளமையாக இருக்க வாழ்த்துக்கள். :-))
மிகவும் ரசித்தேன். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! 'நிலாக்கள் தூர தூரமாக' என்ற நாவல் வாசித்த நினைவு வந்தது!
பாசாங்கற்ற எளிமையான இனிமையான இடுகை. வாழ்த்துக்கள்
அந்த வயதிலியே, வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டு, மிகப் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்தமையால், வாழ்க்கை இன்றளவுக்கும் இனிக்கிறது. நல்ல பகிர்வு க.நா.சாந்தி லெட்சுமணன். .
நல்லா எழுதியிருக்கீங்க. இளமை ரகசியத்தை சொன்னதுக்கு நன்றி :-)
சூப்பர்... ஒரு முழுமையான பதிவு..
//பள்ளி,கல்லூரிகளில் அழகரசிகளாக இருந்தவர்கள் இப்போது தலை நரைத்து,ஆட்டுக்கல்,உரல் அளவிற்கு இருக்க,//
ஹஹஹ உண்மைதான். அழகு உடம்பிலோ, வெள்ளைத்தோலிலோ இல்லங்க... ஆனா நிரந்தரமற்ற உடல் அழகுக்கு பின்னாடிதான் உலகமே வாயைப்பொளந்துட்டு அலையுது.
என்னோட மொக்கைப்பதிவைல்லாம் யுத்புல் விகடன்ல லின்க் கொடுக்கறாயங்க... இந்தமாதிரி நல்ல பதிவுகளை கண்டுக்கமாட்டுறாயங்களே ஏன்?
your blog did not allow me to write in Tamil,though I know Tamil typing. Any how your plain thinking, deep thinking and exchanging your views with others keeps you always young.
எப்படிங்க இப்படி ஒரு ஃப்லோவில சரளலமா எழுதித் தள்ளுறீங்க :). பகிர்வு செமையா இருந்துச்சு. ஓடுற ஓட்டத்தில எவ்வளவு எதார்த்தமான உண்மைகள். மிகையே இல்ல.
//அதனால் தான் அப்பாவை சீக்கிரமே பறிகொடுத்தோம்.//
வாழ்வின் முரண் புரிகிறது, அங்கே!
கருத்துரையிடுக