சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், பிப்ரவரி 22, 2010

அவளின் அடையாளம்

அவளை
தொட்டிச்செடியாய்க் கொண்டு வந்து
தோட்டத்தில் நட்டுவைத்து
இது உன் இருப்பிடமென்றார்கள்.

அன்பாய் சில நேரம்
அதட்டலாய் சில நேரம்
மென்மையாய் சில நேரம்
வெந்தனலாய் சில நேரம்
நீர் வார்த்தார்கள் அவளின் வேர்களுக்கு
அவளும்
நெகிழ்ச்சி,மலர்ச்சியை
புதுபுது இலைகளின் பசுமையாய்
தளர்ச்சி,வெறுமையை
சருகுகளை உதிர்த்து மொட்டை மரமாய்.

வார்த்த நீரின் அன்பில் உருகி
பூமிக்குள் புழுங்கி
வேர்களை ஓட்டி ஸ்திரமானாள்.
புயலுக்கும்,மழைக்கும்
வெயிலுக்கும்,வேனலுக்கும் நிழலானாள்.
கிளைகளை விரித்தாள்.
பூக்களை முகிழ்த்தாள்.
நான்கு சுவர்களுக்குள் விரிந்த அவளின் கிளைகளில்
கூடு கட்டி,குஞ்சு பொரித்து
அவள் விளைவித்த பழங்களை உண்டு களித்து
வாரிசு வளர்த்து
சுற்றிச்சுற்றி வந்தன அன்றில்கள் பல.
பூக்களை முகிழ்த்தபோது
அவளின் கிளைகளில் அமர்ந்து தேன் பருகின
வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும்.
சிலிர்த்து,நெகிழ்ந்து,மகிழ்ந்து அவள்

வாழ்க்கையின் பருவங்கள் வரிசையாய்...
வசந்தங்கள் வந்த போதும்
இலையுதிர்த்து நின்ற போதும்
மீண்டு வந்த அவளால்
மீளவே முடியவில்லை
விழுதுகள் தன் வேர்களை மீட்டு
வேற்றிடம் பெயர்ந்த போது

வெறுமையாய் மக்கிபோன
வேர்களுடன் தனிமரமாக,
ஊருக்குள் அவளொரு அடையாளம்
மதுரையின் மொட்டைக்கோபுரத்து முனி போல.

7 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தாயை பற்றியதா? பாட்டியை பற்றியதா?

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

//தாயை பற்றியதா? பாட்டியை பற்றியதா//

ஒரு பெண்ணைப்பற்றியது வசந்த்
கருத்துரைக்கு நன்றி!

சந்தனமுல்லை சொன்னது…

மிக அருமை!!

Paleo God சொன்னது…

மீளவே முடியவில்லை
விழுதுகள் தன் வேர்களை மீட்டு
வேற்றிடம் பெயர்ந்த போது

வெறுமையாய் மக்கிபோன
வேர்களுடன் தனிமரமாக,
ஊருக்குள் அவளொரு அடையாளம்//

பிரிவின் வேதனை..!

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

முல்லை,சகோதரர் சங்கர் கருத்துரைக்கு நன்றி.உங்களின் கருத்துரைகள் தான் தூண்டுகோல்.

பெயரில்லா சொன்னது…

//வெறுமையாய் மக்கிபோன
வேர்களுடன் தனிமரமாக,
ஊருக்குள் அவளொரு அடையாளம்//

பெண்ணை நன்கறிந்து புரிந்து எழுதியிருக்கீங்க....

vidivelli சொன்னது…

ரொம்ப பிடிச்சிருக்கு.