அந்தமான் வாழ் தமிழ் படைப்பாளிகளின்
படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் கவிதை நூல்களின் ஆக்கிரமிப்பு தான். என்றோ ஒரு சிறுகதைத்தொகுப்பு, என்றாவது ஒரு கட்டுரைத்தொகுப்பு இப்படித் தேட வேண்டும். இங்கும்
உண்டு தமிழுக்கான போராட்டங்கள், தீக்குளிப்புகள். சுதந்திரத்திற்குப் பின் தீர்ந்து
போகும் நாட்டுப்பற்றைப்போல் கிடைத்ததும் தீர்ந்து போகும் தமிழ்ப்பற்று. அண்டை நாடுகளின்
ஆக்கிரமிப்பில் உயிர் பெறும் நாட்டுப்பற்றைப்போல், தமிழ்ப்பற்றும், மீட்சி பெறும் தமிழுக்கு
சோதனை வரும் தருணங்களில். இப்படியாக தமிழ் இங்கு ஆட்சி செய்கிறது.
இளைஞர்களிடம் தமிழ்ப்பற்றை வளர்க்க
அந்தமான் தமிழர் சங்கமும் மற்றும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் முயன்று வருகிறது.
வாராவாரம் சனிக்கிழமை மாலை பயிற்சிப்பட்டறை உண்டு. இளைஞர்களின் வரவு தான் குறைவு. படைப்பாளிகளுக்கு
அந்தமான் தீவில் குறைவில்லை. தங்கள் படைப்புகளை புத்தக வடிவில் வெளிடத் தயக்கம் காட்டுவது
இரண்டு காரணங்களுக்காக. ஒன்று நமது புத்தகங்கள் விலை போகுமா? முந்தைய படைப்பாளிகளின்
அனுபவங்களில் இருந்து பெற்ற படிப்பினை. இரண்டாவது அசிரத்தை, நேரமின்மை மற்றும் தன்னடக்கம்.
நாமெல்லாம் புத்தகம் போட்டு ஆகப்போவது என்ன? எவ்வளவோ பெரியோர்கள் இருக்கும் போது நமக்கேன்
இந்த வேண்டாத வேலை என்கிற எண்ணம். இந்தப்பிரிவில் நானும் அடக்கம்.
தற்போது அந்தமான் தமிழ் இலக்கியப்படைப்பில்
புதிதாக ஒரு கவிதை நூல் இடம் பெற்றிருக்கிறது.. எழுதியவர். சகோதரர் தமிழ் சத்யன். இவரது
இயற்பெயர் பூமி நாதன். 26 வயது துடிப்பு மிக்க இளைஞர். இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பான
”சொர்க்கத்தில் என் காதலி” என்ற கவிதை நூல் வெளியீடு கடந்த மாதம் எளிய முறையில் நடைபெற்றது.
கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்கும் பொருட்டு அடியேனும் அழைக்கப்பட்டிருந்தேன். இவரது
எட்டு நூலும் காதல் கவிதைத் தொகுப்புகள் தான். இவரது ஏழாவது நூல் “ காதல் கேளாய் தோழி”
என்ற நூல் வெளியீட்டில் எல்லோரும் புன்னகையுடன் குறிப்பிட்டது ‘வயதுக்கோளாறு’. எட்டாவது
நூல் சொர்க்கத்தில் என் காதலி என்ற கவிதைத் தொகுப்பு இறந்து போன காதலியுடன் காதலன்
பேசுவதான நடையில் அவலச்சுவையுடன் எழுதப்பட்ட நூல்.கற்பகம் புத்தகாலயம் பதிப்பித்த அழகான
வடிவமைப்புடன் கூடிய நூல்.
நூல் எழுதி, வெளியிட்டு கையைச்சுட்டுக்கொண்டவர்கள்
கேட்ட முதல் கேள்வி, “எப்படி வருடத்திற்கு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட முடிகிறது?” அதற்கு அவர் ”பதிப்பகத்தார் என்னைக் காதல் கவிதைகளை எழுதப்பணிக்கிறார்கள். அது
தான் இப்போது நல்ல விதமாக விற்பனையாகிறது என்கிறார்கள். என்னுடைய ஒரு கவிதைத்தொகுப்பு
நான்காவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நானும் சமுதாய மேம்பாட்டிற்கு வழிகோலும் கவிதைகள்
நிறைய எழுதி வைத்துள்ளேன். காலம் வரும் போது வெளியிடுவேன்” என்றார். மிகுந்த மகிழ்ச்சி! தீவின்
இளைய கவியின் ஒரு கவிதை நூல், ஆயிரக்கணக்கான மைல் தாண்டி முக்கிய பூமியில் நான்காம்
பதிப்பு காண்கிறது என்றால் தீவு வாசியான நாங்கள் தமிழர் என்ற முறையில் பெருமை கொள்கிறோம்.
ஆனால் அதே சமயத்தில் தீவில் தனது கவிதை நூல்களை தனக்குத் தெரிந்தவர்களுக்கு படித்துப்பாருங்கள்
என்று இலவசமாகத் தருகிறார். இங்கு வெளியிடப்படும் எல்லா நூலுக்கும் இது தான் கதி. தீவில்
தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த என்னதான் தமிழர் சங்கமும், தமிழ் இலக்கிய மன்றமும்
முயன்றாலும் ஒவ்வொரு தமிழரும், தமிழ்ப் படைப்புகளை வாங்க முன் வந்தால் இன்னும் பல படைப்பாளிகள்
உருவாக ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும்.பொருளாதார சிக்கல் தன்னைப் பாதிக்கும் போது எந்தப்
படைப்பாளனும் தனது படைப்புகளை வெளியிட முன் வர மாட்டார்கள். இது இயல்பு.
நல்ல படைப்புகளை, நல்ல படைப்பாளிகளை
உருவாக்க களம் அமைத்துக்கொடுக்க தமிழர் சங்கமும், தமிழ் இலக்கிய மன்றமும் பெருந்துணை
புரிகிறது. காத்துக்கொண்டிருக்கிறது. அவர்களோடு கரங்கள் இணைத்து தீவின் தமிழரும் ஒத்துழைப்புக்
கொடுத்தால் நல்ல தமிழ்ப்படைப்புகளை, முக்கிய பூமிப்படைப்பாளர்களுக்கு இணையான படைப்புகளை
உருவாக்க தீவுத் தமிழ் படைப்பாளர்களால் முடியும்.
கவிதை நூலில் இருந்து சில வரிகள்.
பிரியும்
போது கூட
பிரியம்
தானே உரைத்தாய்
கண்களால்
அழக் கற்றுத்தரவில்லையே!
உன்
மரணத்தைப்பார்த்த
எல்லாக்கண்களும்
என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறது.
தினமும்
பூமிக்கும்
வானத்திற்குமுள்ள
தொடர்பை
விஞ்ஞானம்
கண்டு சொல்கிறதோ இல்லையோ?
நம்
காதல் கண்டு சொல்கிறது.
என்னை
எட்டிப்பார்த்து விடலாம் என்று
சொர்க்கத்தின்
வாசலை விட்டு
வெளியே
வந்து விடாதே.
தவறிப்போய்
பூமியில்
விழுந்து விடுவாய்
2 கருத்துகள்:
''என்னை எட்டிப்பார்த்து விடலாம் என்று
சொர்க்கத்தின் வாசலை விட்டு
வெளியே வந்து விடாதே.
தவறிப்போய்
பூமியில் விழுந்து விடுவாய்''
என்ற வரிகள் என்னைக் கவர்ந்தன. கவிதையை நாங்கள் அறியச் செய்த அரிய கட்டுரை
அருமை அருமை
உங்கள் கவிதையை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்கும் அனுப்பிவைக்கலாமே
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
கருத்துரையிடுக