சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜனவரி 16, 2010

கொத்தடிமைகள்

கண்ணாடிப்பாத்திரமாயும்
மண்பாத்திரமாயும் வர்ணிக்கப்பட்ட நான்
சிகரங்களை நோக்கி
பயணப்படும் போதெல்லாம்
உடைந்துவிடுவேனென்று ஒளித்துவைக்கபட்டேன்.
சிட்டுக்குருவியாய்
சிறகசைக்கத் துடித்தபோதெல்லாம்
என் வானமே மறைக்கப்பட்டது.

மண்ணுக்குள் புதைத்த
மரம் கரியாகும் இயற்கை மாற்றம் போல்
என்னை நொறுக்கி
எண்ணம் திருத்தி
புடம் போட்டு புடம் போட்டு
இரும்பாய் என்னை வடித்துக்கொள்ள
உறுக்கி வடிக்க உலையாய்த் தேடி ஒப்புக்கொடுக்க
உள்ளே இரும்பாய் வெளியே பூவாய்..

நீரருவியாயிருந்த
என் பிரவாகங்களை அணைகட்டி
துடிக்கும் கன்றாய்த் துள்ளிய என்
திமிறல்களை இறுக்கி அடக்கி
மூக்கணாங்கயிறால் முறுக்கிப் பிணைத்து
மதம் கொண்ட பிடியாய் முறித்துக்கிளம்ப
அங்குசமிட்டு அடக்கி
உத்தரவுகளுக்கு பணித்து
தும்பிக்கை நீட்டி யாசகம் கேட்டு நான்...
இன்றும்
என் சக்தி நினைவு வரும்போதெல்லாம்
குடும்பம் என்ற சங்கிலியும்
குழந்தை என்ற சொடுக்குதலும்...

3 கருத்துகள்:

Paleo God சொன்னது…

ஹும்ம் ஒரே வேதனதான் வேற வேற மாதிரி வெளிப்படுது..:))

கவிதைகள் எனக்கு பிடித்த காரணமே இதுதாங்க... விஷயம் அதேதான் ஆனா ஒவ்வொருத்தர் பார்வையும், அதே விஷயத்த ஒவ்வொரு விதமா காட்டும்..

நல்லா இருக்கு...:))

கமெண்ட்ல இந்த பெயரில்லா வசதிய நீக்கிடுங்களேன்..ஏதாவது வைரஸ் வரப்போகுது.

vidivelli சொன்னது…

மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

சந்தனமுல்லை சொன்னது…

வாவ்! சிறந்த கவிதை! கடைசி பாரா வெகுவாக பிடித்திருந்தது எனக்கு!