சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், நவம்பர் 26, 2009

வங்கக் கடலில் வசந்தத்தீவுகள்




             அந்தமான் நிகோபார் தீவுகள் வங்கக் கடலில் அமைந்துள்ள அற்புதமான இயற்கை அழகு நிறைந்த பசுமைத் தீவுகள்.2004ம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் தீவுகளும் ஒன்று.அழிவை மறந்து ஆக்கத்திற்கு வழி தேடி, அந்த துர் நிகழ்வுகளில் இருந்து இந்தத் தீவு மக்கள் வெளி வந்து தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


 அந்தமான் தீவுகள் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.அருமையான சுற்றுலாத்தலம். அந்தமானின் கடற்கறைகள் மிகத்தூய்மையானவை. அழகானவை. அந்தமான்,நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.இங்குள்ள மக்களில் த்மிழர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். தீவுத்தலைநகர் போர்ட் ப்ளேயரில் இருந்து மற்ற தீவுகளுக்கு படகு, கப்பல் மற்றும் பேருந்து மூலம் பயணிக்க முடியும்.

   தலை நகரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச்சிறப்பு பெற்ற கூண்டுச்சிறை மற்ற பார்க்கும் இடங்களுக்கு நிலவழிப் பயணம் செய்ய முடியும். மற்ற தீவுகளுக்கு நீர் வழிப்பயணம் தான்.எங்களைப் போல இந்தத் தீவுகளில் குடியிருப்பவர்கள் முக்கிய பூமியில் இருந்து உறவினர்கள் வரும்போது தான் சுற்றுலா செல்வதற்குக் கிளம்புவோம். ஏனெனில் அந்தமான் கடற்கரைகள் தனிமையானவை. கூடிச்சென்றால் கோடி இன்பம்.அப்படி எங்கள் அம்மா, என் தம்பி, தம்பி மனைவி ஆகியோர் தீவுச்சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

  முதல் நாள் போர்ட் ப்ளேயரில் உள்ள கூண்டுச்சிறைக்கு அழைத்துச்சென்றோம். அன்று ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திர தினம்.சுதந்திர தினத்தன்று முப்படை அணிவகுப்பு நிகழும்.அதைப் பார்ப்பதற்க்குப் பிற தீவுகளில் இருந்து மக்கள் அலை அலையாக தலைநகருக்கு வருவார்கள். நுழைவு வாயிலில் அடி எடுத்து வைக்கும் போது என் தம்பி தனது காலணிகளை கழட்டி விட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி எழ பின் தொடர்ந்த மற்றவர்களும் வெளி நாட்டினர் உட்பட வணங்கி எழுந்தனர். எனக்கோ இத்தனை முறை வந்திருக்கும் நமக்கு ஏன் வணங்கத்தோன்றவில்லை என்று யோசனை எழ என் தம்பியோ உங்களுக்கு கோவில்கள் எதற்கு? இந்த சிறை தான் கோவில் என்று கூறி கண் கலங்க நாங்கள் பேச முடியாது நின்றோம்.

அந்தமானில் எந்தப்பக்கம் திரும்பினாலும் கடலைத்தரிசிக்க முடியும். அலைகளற்ற அமைதியான கடல். இந்தக் கடலா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அப்படி தெளிந்த நீரோடையாக இருக்கும்.குழந்தைகளும் கடலாட இயலும்.இங்கு கடலுக்குள் பவளப்பாறைகளைக் கண்டு களிக்கலாம்
   அமைதியான கண்ணைக்கவுரும் இயற்கைப் பேரழகு கொண்ட இந்தத் தீவுகளுக்கு உலகின் எல்லா இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.பெரும் நகரங்களில் சந்தடிகள் நிறைந்த நகரவாசிகள் அந்தமான் போன்ற ஊர்களில் சுற்றுப்பயணம் செய்வது மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியதிற்கும் நல்லது. சுத்தமான காற்று,கண்ணுக்கு இதமான பசுமை, சுத்தமான சுற்றுப்புறங்கள் மன அழுத்தத்திற்கு மாமருந்து. என்னங்க நீங்களும் அந்தமானுக்கு சுற்றுலா கிளம்பிட்டீங்களா? ஏதும் விவரம் தேவைங்களா? இந்த வளைத்தளத்துல உலவுங்க.
www.and.nic.in.

2 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

கூண்டுச்சிறையின் இரவு நேர ஒலி-ஒளிக்காட்சி கண்டு வியந்தேன்.
தங்கள் தம்பியின் நாட்டுப்பற்று பாராட்டுக்கு உரியது.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

கவி.செங்குட்டுவன் சொன்னது…

வணக்கம். தங்களின் வலைப்பூ(அந்தமான் தமிழோசை) முணைவர் மு.இளங்கோவன் அவர்களின் அறிமுகத்தில் இன்று கண்ணுற்றேன். மிக்க மகிழ்ச்சி. அதில் வங்கக் கடலில் வசந்தத் தீவுகள் எனும் கட்டுரை மிக அருமை. ஆழிப் பேரலை ஊழித்தாண்டவமாடிய பின்னர் மீள மலர்ந்துள்ள அந்தமானின் அற்புதம் பற்றிய கருத்துக்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்!

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
9842712109 / 9965634541.
04341 223011 / 223023