சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, டிசம்பர் 11, 2009

6.நிக்கோபாரிகள்.

 




              நிக்கோபாரிகள் மங்கோலிய இனத்தைச்சேர்ந்தவர்கள்.இவர்கள் பர்மா,மலேயா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சொல்லப்படுகிறது. மஞ்சள் நிறம், அடக்க குணம்,திடமான உடல்,அகன்ற முகம், சிறிய கண்கள், சப்பை மூக்கு, கரிய கூந்தல், இடர்பாடுகளை எதிர்கொள்ளும் மன உறுதி கொண்டவர்கள். பழங்குடி இனத்தவருள் விரைந்து முன்னேறி நாகரீகம் அடைந்தவர்கள்.நடை, உடை, பாவனை அனைத்திலும் மாற்றம் கொண்டவர்கள்.
  
               இவர்கள் தங்கள் பண்பாடு, மரபுகளுடன் நமது உணவு, உடை, பண்பாடுகளை சுலபமாக ஏற்று நம்மைவிட நாகரீகத்தில் முன்னேறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். நல்ல இசை ஞானம்.நடனம் ஆடுவார்கள்.கடலோர கிராமங்கள். கலை உணர்வோடு அமைக்கப்பட்ட வட்டக்குடில்கள்.கலை ஆர்வமிக்கவர்கள்.இவர்களுடன் பழங்குடியல்லாத அனைத்து மாநில மக்களும் வியாபாரம், நட்பு,வாழ்க்கைத் துணை ஆகிய உறவுகளை மேற்கொண்டுள்ளார்கள்.விருந்தோம்பல் பண்பும்,பிறருடன் அன்பாய், எளிமையாய்ப் பழகும் குணமும் கொண்டவர்கள். இப்போதுநம்மைப்போல் கட்டடங்களும் கட்டி வசிக்கின்றனர்.நிகோபார் தீவில் பெருமளவு வசித்தாலும் இவர்கள் தீவு முழுவதும் காணப்படுகிறார்கள். ஆண்,பெண் இரு பாலரும் கல்வி கற்கிறார்கள். சொத்து,வீடு,வாகனங்கள் என்று வசதியான வாழ்க்கை வாழும் திவுகளின் ஒரே பழங்குடிகள் இவர்கள் தான்.

                இவர்கள் ஆரம்பத்தில் எந்த மதத்தையும் சார்ந்து இல்லை. இவர்கள் இறந்த தங்களது முன்னோர்களை வணங்கி வந்தனர். ஆவிகளின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். தற்போது இவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்துவ மதத்தைச்சார்ந்து காணப்படுகிறார்கள்.எனினும் இவர்களில் இந்து, முஸ்லீம் மதத்தைப் பின்பற்றுபவர்களும் உண்டு. இவர்களுக்குத் தீவு அரசாங்கம், வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை அளிக்கிறது. இவர்களுக்கென தனியான சமுதாய அமைப்பும், ராணியின் தலைமையில் அனைவரும் கட்டுபட்டும் இருந்தனர். இப்போது 'கேப்டன்' முறை உள்ளது. இவகளுக்குல் ஏற்படும் சச்சரவுகளை இந்த கேப்டன் மூலம் தீர்த்துகொள்கிறார்கள்.இவர்களில் பெண்களுக்குத்தான் அதிகாரம் அதிகம். நம்மவர்கள் திருமணம் ஆனதும் பெண்கள் புகுந்த வீடு செல்வதைப்போல் இவர்களில் ஆண்கள் புகுந்த வீடு செல்கிறார்கள். வீட்டு நிர்வாகம் முதல் அனைத்தும் பெண்கள் கையில்.

         இவர்களும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் கொடூர குணமுடையவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். வழி தவறிய கப்பல் பயணிகள், இந்தத் தீவுகளுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் கப்பலில் உள்ள பயணிகளை நடுக்கடல் வரை நீந்திச்சென்று அவர்களை இழுத்து வந்து கொன்று விடுவார்கள். அதன் பின் 1895ல் தமிழ் நாட்டைசேர்ந்த கிற்ஸ்துவப் பாதிரியார் வேதப்பன் சாலமன் அவர்கள் நிக்கோபாருக்கு ஆங்கில அரசுப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இவர் தான் அவர்களை சீர்திருத்தி, மனித நேயம் கற்றுக் கொடுத்து படிப்பறிவும் சொல்லித் தந்தார்.1896ம் ஆண்டு சாலமன் அவர்கள் நிகோபாருக்கு வந்து காடுகளை அழித்து முதல் பள்ளிக்கூடத்தை இங்கு நிறுவினார்.அதற்கு 'டெம்பிள் வில்லா' என்று பெயரிட்டார்.கட்டுக்கடங்காத நிலைமைகளை சமாளித்த அறிவுத்திறன் மிக்க சாலமன் அவர்களுக்கு 'ஹச்சாவ்கே' என்ற பணிவன்பான மாணவன் கிடைத்தார். அவருக்கு ரிச்சர்ட்சன் என்று சாலமன் அவர்கள் பெயர் சூட்டினார்.இவர்தான் பின்னாளில் நவீன நிகோபாரிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.இந்த ஆயர் ஜான் ரிச்சர்ட்சன் மேற்படிப்பிற்காக ரங்கூன் அனுப்பப்பெற்றார். 1909ல் சாலமன் அவர்கள் காலமானதும் ஆயர் ரிச்சர்ட்சன் பள்ளியின் நிர்வாகத்தை மேற்கொன்டு தனது பயன் கருதப்பணியாலும் கடுமையான உழைப்பாலும் நிகோபாரிகளை நாகரீக உலகிற்குக் கொண்டு வந்தார். நிகோபாரிய மொழிக்கு ஆங்கில வரிவடிவம் தந்தவரும் இவரே!

                  இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியப்போர்க்கப்பலான 'எம்டன்' ஒரு முறை கார் நிகோபார் தீவுக்கு வந்தது. அப்போதைய நிகோபார் ராணி ஐலோன் அவர்கள் இதனைக் கண்டதும்ஆங்கில ஒன்றியக் கொடியை உடனே ஏற்றினார்.இதனைப் பார்த்த அந்தக்கப்பலின் கேப்டன், ஆங்கிலப்படைகள் தீவின் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று எண்ணி அங்கிருந்து கப்பலைக் கிளப்பிச்சென்று விட்டார்.ராணியின் இந்த சமயோசித வீரச்செயலைப் பாராட்டி ஆங்கில அரசினர் மிக உயர்ந்த விருதுகளை அளித்து சிறப்பித்தனர். அன்று முதல் இன்று வரை நிகோபாரைக்கடந்து செல்லும் எல்லா பிரிட்டிஷ் கப்பல்களும் நிகோபாருக்கு அருகில் வரும் போது சங்கொலி எழுப்பி மரியாதை செலுத்திச்செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.

0 கருத்துகள்: