சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, டிசம்பர் 19, 2009

அந்தமானில் தமிழின் நிலை


         ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டு வந்த தமிழகத்தின் தவப்புதல்வர்களாம் தமிழர்கள் நமக்கு தமிழ் மொழிதான் அடையாளம்.சாதி,மத,நிற பேதங்கள் அற்றுப் போய் அறிவையும்,கல்வியையும் வழிபடும் ஒரு பண்பட்ட நாகரீக இனமான நம் தமிழ் இனம் உணர்வின் வழி செலுத்தப்பட்ட நிலை மறந்து அறிவின் வழி நடையிட்டுக்கொண்டிருக்கிறது. தொன்மையான இலக்கிய வளத்தோடு,புதியனப்புகுதலையும் ஏற்று எந்தக் காலத்திற்கும் ஏற்றபடி மாற்றம் பெரும் எளிமையான, பெருமையானதொரு மொழி தமிழ்.பன்மொழி பேசப்படும் சூழலில் தீவுகளில் தமிழ் இன்றிருக்கும் நிலையைவிட இன்னும் கீழான நிலையில் தான் இருந்தது. அதனைக் கண்டுபொறாது தமிழின் தரம் இத்தீவுகளில் உயர வேண்டும் எனும் அவாவுடன்.
ஆயிரம் அருங்கலைகள் ஆய்ந்து கற்போம்
அனைத்தின் மொழியாற்ற்ல் பெற்று நிற்போம்
வேய்ந்திடுவோம் தமிழுக்குப் பல அணிகள்
வியன் கலைகள் வளம்கொழிக்கச்சார்ந்து நிற்போம்
- என்றும்
துறப்பது தமிழையென்றால்
இறப்பையும் தகர்ப்பேனென்றும் 
சிறப்பது தமிழுக்கென்றால்
இறப்பதும் வருகவென்பேன்

என அந்தமானின் முதுபெரும் பத்திரிக்கை ஆசிரியரும் இலக்கியவாதியுமான தெய்வத்திரு.சுப. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழில் மேம்பட்ட ஓர் உயர்நிலை அடைய தமிழ்ப்பேராளர்கள் பலரும் ஒரணியில் நின்று போராடிய போராட்டங்களின் விளைவு தீவுகளில் தமிழுக்கும்,தமிழால் தமிழனுக்கும் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமை.பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் வழிக் கல்வி தீவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் இன்றும் தமிழ் வழிக் கல்விக்கூடங்களின் வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும்,இந்தியிலும் தரப்படுகின்றன. பதில்களை மாணவர்கள் தமிழில் எழுத வேண்டும்.இதைக்கண்டித்த தீவுக் கவிஞர் அரங்க.சம்பத் குமார் அவர்கள் தம் கவிதையில்,
"பள்ளியிலே பயிற்று மொழி தமிழாய் இருக்க
பரீட்சையிலே ஆங்கிலத்தில் கேள்வித்தாளா?
என்று வேதனையுடன் வினாத் தொடுக்கிறார்.இன்றளவும் தமிழ் வழிப்பள்ளிகளில் வினாத்தாள்கள் தமிழில் வருவதில்லை.ஆதியில் அந்தமானில் தமிழினம் தொழிலாளர்களாகத் தீவுக்கு வந்தனர்.எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. படித்தவர்கள் அவர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி,மொழி குறித்த விழிப்புணர்வைத் தந்துள்ளனர்.தீவுக்கவிஞர் கதி.மாணிக்கம் அவர்கள் கூறுகிறார்.
"தமிழனென்று சொன்னாலே
தலை வணங்கி ஏற்றிடுவேன்
தமிழுக்குத் தொண்டு செய்தால்
தாள் தொட்டு வணங்கிடுவேன்"
தீவின் இலக்கியப் படைப்பாளர்களின் எல்லாப் படைப்புகளிலுமே தமிழருக்கு தமிழுணர்வு நாளுக்கு நாள் குறைந்து வருவதை தவறாமல் சுட்டப்பட்டுள்ளது. தங்கள் ஆதங்கத்தை கவிதைகளின் மூலம் ஈட்டி வார்த்தைகளால் தமிழினத்தை நோக்கி எறிந்து பார்த்திருக்கிறார்கள் தீவுக்கவிஞர்கள். கவிஞர்.முகவை.முத்து அவர்கள் தமது கவிதை ஒன்றில் கனல் வீசும் வார்த்தைகளைக் கையாள்கிறார் இப்படி.

"முந்தானை நிழலிலும்
மூடு பனி இரவிலும்
வியர்வை சிந்தும்
நாட்களா இவை?
வரப்போகும் வசந்தத்தில்
நம் தமிழ் நந்தவனம்
புஷ்பிக்க வேன்டுமானால்
முதலில்
அந்தப் பூச்செடிகளின் வேர்களுக்கு
நமது
ரத்ததைப் பாய்ச்சும்
தோட்டக்காரனாவோம்." 

தன் குடும்ப வாழ்க்கையைக் கூட குப்பையில் போட்டுவிட்டு தமிழைத் தன் தலையில் மகுடமாய் சூட்டிக்கொண்ட இந்த வேர்களால் தான் இன்று விழுதுகள் சுகமானதொரு உல்லாச வாழ்க்கையைத் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.இன்று தமிழ் நாட்டிலிருந்து வருகை தரும் அதிகாரிகள்,விருந்தினர்களாய் வரும் தமிழ்ப் பேராளர்கள்,இந்த மண்ணில் ஐக்கியமான தமிழ் மாந்தர்களின் வழித்தோன்றல்கள் கல்வியில் மேம்பட்டு தமிழின் அருமை,இனிமை புரிந்த கவிஞர்கள் பலர். இவர்களின் தமிழ்ப்பற்றால் தீவுகள் எங்கும் தமிழ் மணம்.தமிழ்நாட்டைப் போல இங்கும் தமிழன்னையை தமிழர்கள் சிம்மாசனத்தில் ஏற்றியிருக்கிறார்கள். நமது தமிழர் சங்கத்தில் விழாக்கள் எடுப்பது போலவோ, தமிழ்நாட்டின் பேராளர்கள்,தமிழறிஞர்கள் வந்து தமிழர்களுக்குத் தமிழுணர்வு ஊட்டி மொழி வளமைக்கு வழி கோலுவது போலவோ மற்ற மாநிலத்தாரின் செயல் பாடுகள் அதிகமில்லை எனலாம்.முன்னாட்களில் இந்தி மொழி அறியாதவர்கள் வீடுகளில் முடங்கும் நிலை இருந்தது. இன்றோ எங்கும் ,எதிலும் தமிழ், தமிழர். 

               தமிழர்கள் பேசும் போது இந்தி மொழி ஆளுமையைத் தமிழில் பயன் படுத்துவது அதிகமுள்ளது.இந்தி மொழி வார்த்தைகளை தமிழில் உபயோகிப்பதால் சில வார்த்தைகள் தமிழ் தான் என்று இளைய தலைமுறை விளங்கிக் கொண்டுள்ளது. அந்த வார்த்தைகளுக்கு தமிழில் எப்படிச்சொல்வது என்பதும் தெரியாது.வருங்காலத்தில் தீவு தமிழ் அகராதியில் இந்த வார்த்தைகளே இடம்பெறும் அபாயமுள்ளது.தீவுகளில் தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக் களங்கள் இப்பொது அரும்பத் தொடங்கியுள்ளது.இங்குள்ள தமிழர்கள் சர்வ சாதாரணமாக ஐந்து மொழி பேசுவர்.அப்படி நம் தமிழ் மற்ற மாநில மக்களின் நாவுகளிலும் குடியிருக்கிறது.அதோடு கல்வி,வேலை வாய்ப்பு என்று தமிழகம் வரும் பிற மொழித் தீவுமக்கள் சரளமான தமிழ் மொழி ஆளுமை பெற்று விடுகின்றனர்.தனியார் பள்ளிகள் சில தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பதால் பிறமொழிக்குழந்தைகளும் தமிழ் கற்று வருகின்றனர். தீவில் தமிழ் சிறப்புடன் உலா வருகிறது. தமிழன் தன்னைத் தீவில் நிலைப்படுத்திக் கொண்டதால் தமிழ் நின்று வாழும்.பிற மொழிக்கலப்பு வார்த்தைகளுடன். இது காலத்தின் கட்டாயம்.

0 கருத்துகள்: