சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, டிசம்பர் 13, 2009

அந்தமானில் ஜப்பானியர் ஆட்சி



           அந்தமானில் ஜப்பானியர் ஆட்சி என்று சொல்வதை விட ஜப்பனியர் அராஜகம் என்று சொல்வதே பொருந்தும்.அந்தமானில் மூன்றாண்டு கால ஜப்பானிய ஆட்சி தீவு வரலாற்றில் கறை படிந்த கறுப்பு அத்தியாயம்.சித்திரவதைகளின் சிகரம். கொடுமைகளின் உச்சம்.கொடூரங்களின் அரங்கேற்றம். ஆங்கிலேய அடிமைத்தளை சிறப்பு என்று சொல்லும்படியான அடக்குமுறை அநியாயங்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே இத்தீவுகளைக் கைப்பற்றும் எண்ணம் ஜப்பானியர்களுக்கு இருந்து வந்தது.இத்தீவுகளைக் கைப்பற்ற ரகசியமாக ஆய்வு செய்ய எண்ணி ஜப்பானியக் கடற்படை அதிகாரிகள் மீன் வணிகர்கள் போலவும், கிளிஞ்சல் வியாபாரிகள் போலவும் மாறுவேடத்தில் தீவுகள் முழுதும் நடமாடினர்.1942,பிப்ரவரி மாதம் 7ம் தேதி அந்தமான்,நிகோபார் தீவுகளைப்பிடிக்க வேண்டும் என்று ஜப்பானிய அரசு அறிவித்தது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் கலக்கமடைந்து இங்கிருந்த மக்கள் அனைவரையும் கப்பலேற்றி முக்கிய பூமிக்கு வழியனுப்பினர்.தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஒவ்வொன்றாக ஜப்பானிடம் தோல்வி அடைந்ததை அடுத்து அந்தமான் தீவுகளில் ஜப்பானிய விமானங்கள் கழுகுகளைப் போல வட்டமிட்டது.தாழ்வாகப்பறந்து குண்டுகளைப்பொழிந்தது.அபர்தீன் துறைமுகம் மிக மோசமாக தாக்கப்பட்டது.கப்பலில் இருந்த படி குண்டுகளை வீசி போர்ட்பிளேயரின் நிலைமை உணர்ந்த ஜப்பானியப்படை 1942ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி ஜப்பான் படைகள் தீவின் கிழக்குக் கடற்கரையில் இறங்கி நகரை முற்றுகையிட்டு ஆங்கிலேய அதிகாரிகளையும், அவர்களது உதவியாளர்களையும் கைது செய்தனர்.தீவுகளின் காவல் துறை,துறைமுகப்பணிமனை, சாத்தம் மர ஆலை,தண்டூஸ் முனையில் இருந்த உணவு தானியகிடங்கு ஆகியவற்றைக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.கூண்டுச்சிறையைக்கைப்பற்றி அங்கிருந்த கைதிகளை விடுதலை செய்தது.ஜப்பானியக் கடற்படை அபர்தீனைத் தலைமையகமாகவும்,ராணுவத்தினர் ஹேடோ பகுதியைத் தலைமையகமாகவும் கொண்டு பாசிஸ ராணுவ ஆட்சியை இத்தீவுகளில் அமல்படுத்தியது.ஆங்கிலேய அதிகாரிகள் கொடுமைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

                ஜப்பானியப் படையினர் தங்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தி போர்ட் பிளேயரிலும், கிராமங்களிலும் சுற்றினர்.ஆங்கிலேய விமானங்கள் போர்ட் பிளேயரில் குண்டு வீசின. இதனால் ஆத்திரமடைந்த ஜப்பானிய அதிகாரிகள் ஆங்கிலேய அடிமைதளையிலிருந்து அந்தமான் விடுதலை பெற்றது என்று அறிவித்தனர்.ஜப்பானியப் படைவீரர்களை இத்தீவில் கேட்பாரும், தடுப்பாரும் இல்லை. வீடுகளுக்குள் புகுந்து வேண்டியவற்றைத் தாமாக எடுத்துச்செல்வதும், பெண்களிடம் முறை கேடாக நடந்து கொள்வதும், தடுக்க முற்படுபவர்களை முறியடிப்பதும்,வீடுகளுக்கு தீ வைப்பதும் வாடிக்கையாயின.இந்த முறை கேடுகளைப் பொறுக்கமுடியாது எதிர்த்த சன்னி என்ற இளைஞனை சூ சுட் சூ என்ற சித்திரவதை முறையில் கொன்றனர். அதென்ன? சூ சுட் சூ. சன்னியை ப்ரொனிங்க் திடலில் கட்டிவைத்து ஒரு கையை ஒடித்து,பின் அடுத்த கை, பின் கால், பின் தொடை, கடைசியாக சன்னியைச்சுற்றி நின்று கால்களால் உதைத்து சுட்டுக்கொன்றனர்.சூழ்நிலையின் கனத்தை வார்த்தைகளால் சொல்வது கடினம்.பட்டவர்களின் பாடு, அவர்களின் உறவினர்களின் துக்கம்,அவர்களின் கண்ணீர் இவையெல்லாம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.சன்னியின் சடலத்தைக்கூடத் தர மறுத்து அந்தத்திடலில் அடக்கம் செய்தனர்.ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.பேர்டு என்பவருக்கும் இதே முறையில் தண்டனை தரப்பட்டது.

         தீவின் முக்கியப்பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து ஜப்பானிய ராணுவத்தலைவர் மேஜர் ஹிராகவாவிடம் ஜப்பானிய வீரர்களின் கொடுமைகளைக்கூறி நிறுத்தக்கூறினர்.உடனே இது தொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் படையினர் பார்வைக்காக பொது இடங்களில் ஒட்டபட்டு அத்துமீறல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஜப்பானிய அதிகாரிகள் அந்தமான் கிராமங்களுக்குள் நடமாட முற்றிலும் தடை செய்யப்பட்டது. உடனே கொரிய நாட்டில் இருந்து இளம்பெண்கள் வரவழைக்கப்பட்டு சௌத் பாயிண்ட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.ஜப்பானியப்படைவீரர்களை மகிழ்விப்பதே இவர்களின் வேலை.இரண்டாம் உலகப்போரின் போது இப்படி ஜப்பானியர்களால் பயன் படுத்தப்பட்ட கொரிய இளம் பெண்களின் எண்ணிக்கை சுமார் 200,000 வரை, என்று கொரிய வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதை எழுதும் போதே பெண் என்ற முறையில் நமக்கு ரத்தம் கொதிக்க பாதிக்கப்பட்டோர்,அவர்களின் குடும்பத்தினரின் நிலை என்ன? கற்பனையே பயமுறுத்துகிறது!

       2002ம் ஆண்டில் வானொலி நிகழ்ச்சிக்காக ஒரு மூதாட்டியாரிடம் வெளிப்புற ஒலிப்பதிவு செய்தோம்.அவர் கூறியது,"ஜப்பானியர்கள் தீவுகளில் இருந்த போது ஆண்களை ஒளித்து வைத்து விடுவோம்.காரணம், ஆண்களை சீண்டி,சித்ரவதை செய்வார்கள். பெண்களை உடை உடுத்தத் தடை விதித்திருந்தார்கள்.அதனால் நாங்கள் சணல் சாக்குகளை சுற்றிக்கொண்டு வயல்களில் வேலை செய்வோம்" என்றார்.

               1943ம் ஆண்டு டிசம்பர் 29ம் நாள், தீவின் முக்கியப்பிரமுகர்களை விமான நிலையத்திற்குச்செல்லவேண்டும் என்று ஜப்பானியர்கள் ஆணை பிறப்பித்தனர்.விமானத்தில் இருந்து இறங்கிவர் நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ். ஜப்பானிய அதிகாரிகள் இருபுறமும் சூழ்ந்து கொண்டு இந்தியர்களைப் பேச அனுமதியாமல்,இராஸ் தீவின் விருந்தினர் மாளிகையில் விருந்தினராகத் தங்கவைக்கப்பட்டார்.அன்று நண்பகல் கூண்டுச்சிறை கண்டு நெகிழ்ந்தார்.பிறகு, ஜப்பானிய ஆளுனர்,அதிகாரிகள்,முக்கியப் பிரமுகர்களை நேதாஜி சந்தித்து இந்திய விடுதலை குறித்து பேச்சு, வார்த்தை நடத்தினார்.மறுநாள், போர்ட்பிளேயர் ஜிம்கானா திடலில் (இப்போது நேதாஜி விளையாட்டரங்கம்) இந்திய ராணுவ உடையுடன் கம்பீரமாக, இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றி,'அந்தமான் நிகோபார் தீவுகள் இன்று முதல் விடுதலை பெற்றுவிட்டன.இந்தியாவிலேயே ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியப்பிரதேசம் இது' என்று வீர உரை ஆற்றினார்.அந்தமான் பிரமுகர்கள் எவரையும் நேதாஜி சந்திக்கவிடாமல், ஜப்பானியர்கள் கவனமாகப் பார்த்துகொண்டனர்.அன்று இரவு ஜப்பானிய ராணுவத் தலைவர் ஒருவர் நேதாஜிக்கு விருந்தளித்தார். அந்த விருந்தில் பரிமாற 15 வயது இந்தியச்சிறுவன் ஹரிக்ருஷ்ணா நியமிக்கப்பட்டிருந்தார்.உணவு பரிமாறும் போது மிகுந்த மன தைரியத்தோடு,'தலைவரே! ஜப்பானியர்கள் எங்களைச்சித்ரவதை செய்து, பொய்க்குற்றம் சுமத்தி வதைக்கிறார்கள்.நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று முணுமுணுத்தார்.உடனே நேதாஜி,'மக்களிடம் கூறுங்கள்; நான் சிங்கப்பூர் சென்றதும் அங்கிருந்து இதனைக் கண்காணிக்க அதிகாரிகளை அனுப்புகிறேன்.' என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.இதைப்பார்த்த ஜப்பானியக் காவலன் ஒருவன் ஹரிகிருஷ்ணாவின் சட்டையைப் பிடித்து முரட்டுத்தனமாக இழுத்துக்கொண்டு போய் 'நேதாஜி உன்னிடம் என்ன பேசினார்? சொல்லாதிருந்தால் கடும் விளைவுகளைச்சந்திக்க வேண்டியிருக்கும்' என்று மிரட்ட ஹரி அவர்கள் சமயோசிதமாக,'எல்லா உணவும் ஜப்பானிய முறைப்படி சர்க்கரை சேர்த்து சமைக்கப்பட்டதா? என்று கேட்டார்.அதற்கு நான் இல்லை எல்லாம் இந்திய முறைப்படி உப்பு சேர்த்து சமைக்கப்பட்டது என்று கூறினேன்' என்று கூற சரி போ! என்று அனுப்பி வைத்ததாக அவரே கூறியுள்ளார்.

        நேதாஜி 1944ம் வருடம், ஜனவரி 1ம் தேதி அந்தமானில் இருந்து சிங்கப்பூர் சென்று ஜப்பானியப் படைவீரர்கள் அந்தமானில் இந்தியர்களுக்கு இழைக்கும் கொடுமைகளை ஜப்பானியப்பிரதமர் தொஜோவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.உடனே தொஜோவின் ஆணையின் பேரில் நிலைமைகளை ஆராய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்று போர்ட் பிளேயருக்கு வந்து நேரடியாக நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாக கூண்டுச்சிறையில் பொய்க்குற்றம் சுமத்தி அடைக்கபட்டிருந்த 600 அப்பாவி மக்களைக்காப்பாற்றினர்.தொடர்ந்து இது போல நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ள இந்திய தேசிய ராணுவத்தின் துணைத் தலைவர் ஏ.டி.லோக நாதன் அவர்களை நேதாஜி அந்தமானுக்கு அனுப்பி வைத்தார்.ஜப்பானியர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக ஏ.டி.லோகநாதன் அவர்கள் அந்தமானை விட்டுச்சென்றுவிட்டர்.ஜப்பானியர்கள் தீவு மக்களின் மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.ஒப்பந்தகாரராக இருந்த வி.முத்துச்சாமி நாயுடு என்ற தமிழர் ஒருவரை ஆங்கிலேயருக்காக வேவு பார்த்ததாக வழக்கு தொடரப்பட்டு மூன்று நாள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டுசிறைக்குள்ளேயே இறந்துவிட்டார். இந்த வழக்கு தான் முதலாவது வேவு வழக்கு என்று சித்தரிக்கப்படுகிறது.

        இதைத்தொடர்ந்து கைதுகளும், சித்ரவதைகளும், சாவுகளும் தொடர்கதை ஆயின. இப்படி உளவாளிகளாக சந்தேகத்தில் பிடித்து வரப்பட்ட நூற்றுக்கணக்கானோரில் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 44 பேரைத் தெரிவு செய்து 1944,ஜனவரி,30ம் நாள் இவர்களை லாரிகளில் ஏற்றி தலைநகருக்கு அருகில் உள்ள ஹம்ஃப்ரிகஞ் என்ற சிற்றூரின் புறப்பகுதியில் 
குன்றின் உச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டு கிழே வெட்டியிருந்த குழிக்குள் விழுமாறு நிறுத்தப்பட்டு சுட்டு வீழ்த்தினர்.இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும்,கேள்விப்பட்டவர்களும் இனி என்ன நேருமோ? என்று அஞ்சி அஞ்சிச்செத்தார்கள்.(இன்று இந்த ஹம்ஃப்ரிகஞ்சில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பபட்டு, நினைவு நாளில் வணக்கம் செலுத்தப்படுகிறது) நிகோபார் தீவிலும் ஜப்பானியர்களின் அட்டகாசத்தால் உயிர் துறந்த நிகோபாரிகள் எண்ணிலடங்காதவர்கள்.1945, அக்டோபர், 10ம் நாள் ஜப்பானியப்படை பிரிட்டிஷ் படையிடம் சரணடைந்தது.ஜப்பானிய அடக்குமுறை அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

        கொரியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக கொரியக் குடியரசுத்தலைவரிடமும், தீவு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சுதந்திர இந்தியாவிடமும் ஜப்பானிய அரசு மன்னிப்புக் கோரியது. உலக அரங்கில் தலை குனிந்து மன்னிப்பு கோருவதால், இழந்த உயிர்களை மீண்டெழுப்ப இயலுமா? வலிகளுக்கு நிவாரணத்தைத் தரும் வலிமையோ, ரணங்களின் வடுக்களை மறைக்கும் வலிமையோ அந்த வார்த்தைகளுக்கு இருக்கிறதா?.


நன்றி - 'அழகிய அந்தமான்' ஆசிரியர் நல்லாசிரியர் திரு.சி.சக்திவேல் அவர்கள்

3 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்களுக்கும் திரு.சக்திவேல் ஐயாவுக்கும் நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

படிக்கவே மனது கனக்கிறது.

அநியாயம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.