அந்தமான் தீவுகளின் மண்ணின் மைந்தர்கள் என்றால் அவர்கள் பூர்வீகக்குடியினர் தான்.மற்ற மக்கள் எல்லோரும் பின் குடி வந்தவர்கள்.இந்த ஆழி சூழ் மரகதத்தீவுகளில் ஆறு பழங்குடி இனத்தவர் இப்போது வாழ்கின்றனர்.அவர்கள்-1.பெரு அந்தமானியர் 2.ஜரவா 3.செண்டினலியர் 4.ஓங்கே 5.நிகோபாரியர் 6.ஷோம்பென் ஆகியோர். இவர்களில் அந்தமானியர்,ஜரவா,செண்டினலியர்,ஓங்கே மக்கள் நீக்ரீட்டோ இனத்தையும், நிகோபாரியர், ஷோம்பென் மக்கள் மங்கோலாய்டு இனத்தையும் சேர்ந்தவர்கள்.இந்த ஆதிக்குடிகளில் ஜரவா,செண்டினலியர் என்ற இரு பிரிவினர் மட்டுமே ஆபத்தானவர்கள்.ஜரவா மக்கள் கூட இப்போது நட்புறவுடன் பழகுகிறார்கள். ஆனால் சென்டினலியர் பழங்காலத்தில் வாழ்ந்தது போலவே இன்னும் பகையுணர்வுடன் வாழ்கிறார்கள்.
அந்தமான் பழங்குடிகள் அனைவருமே தனித்தனி பேச்சு மொழி கொண்டவர்கள். ஒருவர் பேசும் மொழி ஒருவருக்குப் புரியாது.இவர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது.ஆனால் நிகோபாரி மொழிக்கு ஆங்கில வரி வடிவத்தை பயன்படுத்துகிறார்கள்.பழங்குடி இனத்திலும் பெரு அந்தமானியர்,ஜரவா,செண்டினலியர் மற்றும் ஓங்கே இவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்றும் நிகோபாரியர் மற்றும் ஷோம்பென் இனத்தவர்கள் வந்தேறிகள் தாம் என்கிறார்கள்.சென்டினலியர் தவிர மற்ற பழங்குடியினர் இந்தி மொழி பேசக் கற்று வருகிறார்கள்.நிக்கோபாரியர்கள் நம்முடன் கலந்து பழகுவதால் இந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஆளுமை உடையவர்களாக இருக்கிறார்கள்.
நிகோபாரியர்களில் நிறையப் பேர் வர்த்தக,வாழ்க்கைத் தொடர்புகளை தமிழர்களுடன் ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்கள் தமிழ் மொழியை மிக நன்றாகப் பேசுகிறார்கள். அப்படி தமிழர்களுடன் மணமுடித்த பழங்குடிப் பெண்கள் நமது ஊர்களுக்கு அவ்வப்போது வந்தும் போகிறார்கள், நமது பண்பாடு, பழக்க வழக்கங்களை மேற்கொண்டு ஒழுகுகிறார்கள் என்பது போற்றத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக