சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, டிசம்பர் 12, 2009

அந்தமான் பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள்



                அந்தமான் காடுகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் அன்னியர் வருகைக்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே ஒழிய அவர்களுக்குள் இணக்கமான வாழ்க்கையை, நட்புறவைப் பேணி வருகிறார்கள்.இவர்கள் அன்று கிடைத்த உணவை அன்றே உண்டு, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தமது வாழ்க்கையை இலகுவாக ஒரு நீரோடை போல் இயற்கையோடு இணைந்து தமது காலங்களைக்கடத்தி வருகிறார்கள்.நாளைக்கென சேமிக்கும் பழக்கம் இவர்களுக்கு இல்லை(நிகோபாரிகளைத்தவிர) இவர்களுக்கு வாழ்வளிக்கும் காடுகள் தாம் இவர்களது தெய்வம்.இவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளை தம் உயிரினும் மேலாகக்கருதியதால் தான் தீவில் கால் வைத்த அன்னியர்களை காவு கொடுத்தனர் இந்தப் பழங்குடிகள்.

                இங்கு வாழ்ந்த பழங்குடியினரிடம் ஆண்டான், அடிமை இல்லை. சுதந்திர உண்ர்வோடு இன்று வரை வாழ்கிறார்கள்.விழாக்காலங்களில் ஒரு பழங்குடி இனத்தினர் மற்றொருவரது இருப்பிடத்திற்கு சென்று கலந்து மகிழ்கின்றனர்.இச்சந்திப்புகளின் போது விருந்துகளில் கலந்து கொள்வதும், பண்டங்களை மாற்றிக்கொள்வதும், எல்லோரும் சேர்ந்து நடனமாடுவதும் இன்று வரை தொடர்கிறது.ஒரு இனத்தைச்சேர்ந்த பழங்குடி மக்கள் மற்ற இனத்தாருடன் திருமணத்தொடர்பும் வைத்துக்கொள்கின்றனர். தத்து எடுத்துக்கொள்ளும் முறையும் இவர்களிடையே இருந்து வருகிறது.
விழாக்காலங்களிலும், திருமணக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் நடனமாடி மகிழ்கிறார்கள்.ஆடவரின் ஆட்டத்திற்கு மகளிர் தமது பாதங்களாலும்,தமது தொடைகளில் கைகளால் தாளமிட்டும் குழுவாகச்சேர்ந்து பாடுகிறார்கள்.நிகோபாரிகள் நவீன இசைக்கருவிகள் கொண்டு தாங்களே பாடல் எழுதி,இசைஅமைத்துப் பாடுகிறார்கள். இவர்களது பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பப் படுகிறது. இங்குள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்படும் ஒரே பழங்குடி மொழி நிகோபாரி என்பது குறிப்பிடத்தக்கது.

               பழங்குடியினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மொழி உண்டு. அவர்களுக்குள் பேசும் போது தத்தமது மொழிகளிலேயே உரையாடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று கூடினால் தங்களுக்குள் தொடர்பு மொழியான 'ஜெரோ' என்ற அந்தமானிய மொழியில் பேசிகொள்கிறார்கள்.மண்ணின் மனம் மாறாது, நாகரீகப் போர்வையில் தங்களை மூடி இயல்பு மறந்து உள்ளொன்றும் புறமொன்றுமான வாழ்க்கையில்லாது,இயற்கையை காயப்படுத்தாது, இயற்கையோடு கலந்து வாழும் இவர்களின் வாழ்க்கை போற்றுதலுக்குரியது.அறிவியல் கண்டுபிடிப்புகளின் எந்த வசதியையும் பயன் படுத்தாது இந்தக்காலத்திலும் வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டும் இவர்கள் நமது ஆசான் கள்.இவர்களைப் போல உலகம் பழமைக்குத் திரும்புமானால் உலகின் இன்றைய பிரச்சினைகளுக்கு விடிவு ஏற்படும்.

             ஒன்று தெரியுமா?சுனாமியால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படவில்லை என்பது தீவு நிர்வாகம் வெளியிட்ட செய்தி.அப்போது நம்மவர்கள் கூறுகிறார்கள். சுனாமி நாளின் முதல் நாள் மாலை நிகோபாரிகள் தவிர மற்ற பழங்குடி மக்கள் தமக்குத் தேவையானவற்றை மூட்டையாகக் கட்டி தோள்களில் சுமந்து கொண்டு, தங்களுக்குள் பேசி சிரித்தபடி மலைஉச்சிக்கு பயணப்பட நம்மவர்கள்,'இதுக எதுக்கு இப்டி தூக்கிக்கிட்டு கெளம்பிருச்சுக!' என்று பரிகாசம் செய்திருக்கிறார்கள்.நாகரீகம் இதைத்தான் கற்றுக்கொடுத்திருக்கிறது-எளியவர்களை எள்ளி நகையாடும் உயர்ந்த பண்பை.சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் நம்மவர்கள்.கடற்கரை நாரை, கொக்குகள் கூட நில நடுக்கத்திற்குப் பிறகு கடற்கரையில் இல்லையாம்.நிகோபாரிகள் இயற்கையின் பாதையை விட்டு நம்மோடு நாகரீகப் பாதையில் பயணித்ததற்கு அவர்கள் கொடுத்த விலை அதிகம்.அவர்கள் இயற்கையின் மடிக்குத் திரும்பி போக இயலாத அளவுநாகரீகப்பாதையில் வெகு தூரம் வந்துவிட்டார்கள். இயற்கையின் மொழி அறிந்த பழங்குடிகளின் இயற்கை குறித்த அறிவு தான் தன்னை, தன் சுற்றுப்புறத்தை அறிந்த மேலான அறிவு.இயற்கையைப் படிக்கும் வித்தையை நாம் இவர்களிடம் இருந்து கற்க வேண்டும் இல்லையா? தமிழன்பர்களே!

0 கருத்துகள்: