சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், டிசம்பர் 22, 2009

அந்தமானில் தமிழ்ப் பெண்களின் நிலை


            அந்தமானில் தமிழர்கள் 11ம் நூற்றாண்டில் சோழ மன்னனின் வருகைக்கு முன்னரே வந்திருக்கக் கூடும் என்று 2ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் டாலமி அவர்களின் குறிப்புகளை ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்திய விடுதலைக்கு முன்னர் கைதிகளாகத் தமிழர்கள் வந்திருந்தாலும் இந்திய விடுதலைக்குப்பின் தமிழர்கள் பிழைப்புத் தேடி பெருமளவில் தீவுகளுக்கு வரத்தொடங்கினர். ராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டை,மதுரை மாவட்ட மக்கள் வறுமையின் காரணமாக தீவுகளுக்கு பிழைப்பிற்காக வந்தனர். ஆனால் முற்காலத்தில் ,பர்மா,சிங்கை,மலேயா,ரங்கூன் என்று 'கொண்டுவிற்கப்'போன தமிழர்கள் குடும்பத்தை சொந்த மண்ணில் விட்டுத் தாங்கள் மட்டும் போய் வந்தது போல், தீவுகளுக்கு வருகை தந்த தமிழர்கள் தாங்கள் மட்டுமே தனியாக வந்துள்ளனர்.அப்போது தீவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் குறைவு.குடும்பம் வைத்து காலம் தள்ள முடியாத நிலை.காடுகளும்,நோய்களும் நம்மவர்களை பயமுறுத்த,குழந்தைகளுக்குத் தீவில் தமிழ்க்கல்வி கிட்டாத சூழ்நிலை எல்லாமும் சேர்ந்து குடும்பத்தை தாயகத்தில் விட்டு வரும் நிர்ப்பந்தம்.தீவுகளில் உணவு உற்பத்தி தன்னிறைவு பெறாத சூழ்நிலையில் கப்பல் போக்குவரத்தை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம்.1970ல் இலங்கை அகதிகள் 70 குடும்பத்தினரை கச்சால் தீவிலும்,1972ல் தமிழ் முன்னாள் ராணுவத்தினர் 80 குடும்பத்தினரை கிரேட் நிகோபார் தீவிலும் அரசு குடியமர்த்தியது.இலங்கை அகதிகள் 250 குடும்பத்தினராகப் பல்கி தற்போது அவர்கள் ரப்பர் தோட்டம் பயிரிட்டு வருகின்றனர். இப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள்,அதற்கு முன்னரே தீவுகளில் நிரந்தரக் குடியமர்ந்தவர்கள் மட்டுமே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

        தீவுகளில் தமிழ்க்கல்வி வந்த பிறகு 1970க்கு மேல் தான் தமிழர்கள் குடும்பம், குடும்பமாகக் குடியேறியுள்ளனர்.அப்போதும் கூட வந்தோம்,சம்பாதித்தோம் என்று இருந்து விட்டு தாயகம் திரும்பியிருக்கிறார்கள் தமிழர்கள்.1970களில் தீவுகளுக்குக் குடிவந்த ஒரு தாய் ,"வருஷத்துல பத்து மாசம் மழ பேயும்.குழந்தைக துணியக் காயப்போட முடியாது.காயப் போட்ட துணியில காட்டுப் பூரான் (சுமார் முக்கால் அடி நீளம்,ஒரு இன்ச் அகலம் இருக்கும்) சுருட்டிக்கிட்டு இருக்கும். தெரு விளக்கு இருக்காது. தண்ணி இப்புடிக் கிடைக்காது.ஒரு கப்பல்ல வர்ற சாப்பாட்டு பொருள அடுத்த கப்பல் வர்ற வர பத்திரப்படுத்தனும்.மண்ணெண்ணெய்,அரிசி,சீனி,கோதும இத்தனையும் ரேசன்ல குடுப்பாக.ஆனா பெரிய க்யூ இருக்கும்.காலைல போனா  சாயங்காலம் ஆய்டும்.ஒறவுக யாரும் இங்க இருக்க மாட்டாக.இப்புடி அக்கம் பக்கம்னு ஆளுக அதிகமில்ல.புள்ளைகளப் பாத்துக்க யாருமில்லாம ரொம்ப கஷ்டம்மா! இப்ப மாதிரி போக்கு வரத்தும் அதிகமில்ல.இப்ப என்ன தங்கம்" என்று கூறுகிறார்.

    அப்போது தீவுத்தமிழ்ப் பெண்களிடையே கல்வியறிவு இப்போதைய நிலையைவிடக் கீழான நிலையில் இருந்ததிருக்கிறது. அப்போதெல்லாம் தீவில் தமிழ்ப்பெண்களை அதிகம் வெளியில் பார்க்க முடியாதாம்.அன்னிய பூமி போன்ற ஒரு எண்ணம் வந்திருக்கலாமோ?. ஸ்ரீ வெற்றிமலை முருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருநாளன்று தான் தமிழ்ப் பெண்களை சாலைகளில் காணமுடியும் என்று தீவுத்தமிழர் ஒருவர் கூறுகிறார்.1990 வரை தீவில் பெண்கல்வி, பெண்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றில் போதிய விழிப்புணர்வு இன்றி இருந்திருக்கின்றனர்."நாம என்ன இங்கவா இருக்கப் போறோம்னே இருந்துட்டோம்.நல்ல நல்ல இடம் கம்மி கம்மி விலக்கிக் கிடச்சுச்சு. அதையும் வேணம்னு இருந்து தான் இப்புடி இருக்கோம்" என்று ஒரு நடுத்தர வயதைக் கடந்த பெண் மணி கூறுகிறார்.பெரும்பாலானோரின் நிலை இது தான்.1990 வரை தீவில் பெண்கள் பெரிய அளவில் வியாபாரம், வணிகத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.ஆனால் இன்று அரசு அலுவலங்களில், பள்ளிகளில் என எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் தமிழ்ப் பெண்கள் வலம் வருகின்றனர்.பெரிய வணிக நிறுவனங்களை நிர்வகிக்கும்,சுய தொழில் புரியும் நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.தீவுகளில் சுய உதவிக்குழுக்கள் முழு வீச்சில் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5000 தமிழ்ப் பெண்கள் இதன் மூலம் வங்கி நிதியுதவி பெற்று சுய தொழில் நடத்திவருகின்றனர்.

   சில தமிழ்ச்சகோதரர்களிடம் மது,மாது,சூது போன்ற பழக்கங்கள் காணப்படுகிறது.(தமிழ்ச்சகோதரர்களே! என்னை மன்னியுங்கள்) இதைத்தான் தீவுக்கவிஞர் முனைவர் மா.அய்யா ராஜு அவர்கள் பொன் விழாக் கவியரங்கில் தனது கவிதையில்,
"இந்தத் தேசம்
அவ்வப்போது போடுகிறது ஆட்டம்
நிலநடுக்கம் என்று
நிலநூலார் சொல்லுகிறார்
ஏனிந்த ஆட்டம்?
அந்தப்பூமி தண்ணீரில் மிதப்பதாலா?
இல்லை இந்தப்பூமியர்
தண்ணீரில் மிதப்பதாலா?
எப்படியோ?
ஆட்டத்தைப்பற்றி
ஆடுவோர் அலட்டிகொள்வதேயில்லை"
உண்மை. அலட்டிக்கொள்ளாததால் குடும்பத்தலைவன் நல்ல வளமான பொருளீட்டியும் வறுமையில் துவளும் குடும்பங்கள் கணிசம்.அடி,உதைபடும் பெண்கள் அதிகம்.சில குடும்பங்களில் வாலிப வயதின் தவறுகளால் ஆரோக்கியம் இழக்கும் குடும்பத்தலைவனால் குடும்பமே சிலுவை சுமக்கும் அவலங்கள்,பான்,ஜர்தா என்று சொல்லப்படுகிற வெற்றிலை, புகையிலை பழக்கத்தால் புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயங்கள்.இவற்றால் அமைதி இழக்கும் குடும்பப் பெண்கள் பரிதாபதிற்குரியவர்கள்.

      நாகரீக மேம்பாடு, சுய சம்பாத்தியம் பெற்றிருந்தாலும் கூட இலக்கிய ஈடுபாடு,வெளியுலகத் தொடர்பில் தமிழ்ப் பெண்கள் பின் தங்கியுள்ளனர் என்பது வேதனைக்குரிய உண்மை.தீவுத் தமிழ்ப் பெண்கள் உழைப்பாளிகள்.சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் மிகுதலால் பொழுது போக்குகளுக்கு இடம் தராமல் தான் மேற்கொண்ட தொழிலில் கவனம் குவிக்கும் பெண்களும் உண்டு.புத்தகம், பத்திரிக்கைகள்,வார,மாத இதழ்கள் வாசிக்கும் பெண்கள் மிகக்குறைவு.இங்கு திரையரங்குகள் கிடையாது.(முன்னர் இருந்தது)இங்குள்ள தமிழ்ப் பெண்களின் பொழுது போக்கு கோவில்கள்,தொலைக்காட்சி.தனியார் தொலைக்காட்சியில் இருந்து இவர்களை மீட்டு விட்டால் போதும்.இன்னும் சாதிப்பார்கள்.(யாராவது வாங்கப்பா!)

1 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்வரவு.

நல்ல இடுகை.

இன்னும் எழுதுங்க.