சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், டிசம்பர் 28, 2009

இலக்கியம் என்பது.....


        இலக்கியம் என்பதன் அர்த்தம், அறிவு ஜீவிகளுக்கு ஒன்றாய்,இலக்கியத்தில் தோய்ந்தவர்களுக்கு ஒன்றாய்,இலக்கியத்தை மேடைப் பேச்சுகளுக்கு கருவியாய் உபயோகிக்கும் பேச்சளர்களுக்கு ஒன்றாய், இலக்கியத்தை நுண் கலையாய் அதன் அழகியலை நுகரப் படிக்கும் ஒரு தனிமனிதனுக்கு ஒன்றாய் இருக்கிறது என்பது என் கருத்து. எதெல்லாமும் இலக்கியம்.என் போன்ற ஞான சூனியங்களுக்கு இப்படி ஒரு கேள்வி.நான் இலக்கியம் என்று எதைப் புரிந்து கொண்டேனோ அதைச்சொல்கிறேன். பிறகு இதை ஒரு தமிழறிஞர் பார்வைக்குக் கொண்டு வருவோம்.என் வரையில் இலக்கியம் வாழ்க்கை பற்றிய புரிதலை,வெவ்வேறான பார்வையை,நம் பார்வையில் ஒரு நல்ல பரிமாணத்தை,இந்த இலக்கியத்தின் காலத்தை நம் கண்முன்னே கடைவிரிக்கும் ஒரு ஊடகமாய்,அந்த இலக்கியத்தை உருவாக்கியவன் நம்மோடு உரையாடும் ஒரு பிரமையை உருவாக்குவதெல்லாம் இலக்கியம்.ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். இது ஜனநாயகம். ஆனால் தமிழறிஞர்கள் இலக்கியம் என்பதற்கு என்ன வரையறை சொல்கிறார்கள்.தெரியாது. படிப்பவர்க்கு ஒரு படிப்பினையும்,உயிரைத்தொடும் உணர்வையும்,மகிழ்வையும் தருவதெல்லாம் என் வரை இலக்கியம்.

       "திருக்குறள் ஒண்ணப் படிச்சு அதுபடி நடந்தாப் போதும்.நீ அறிவாளியா,நல்ல குணசாலியா இருக்க முடியும்" என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்கள்.எங்களைத்திட்டுவதோ,அடிப்பதோ கிடையாது.நாங்கள் செய்கிற ஒவ்வொரு தப்பிற்கும் ஒரு குறள் சொல்லி 'புரிஞ்சுக்க! இனி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல' என்பார்கள்.எத்தனையோ குறள் தெரிந்தாலும் கூட ஒரு குறள் நம் வாழ்க்கையின் அடிப்படையை மாற்றும் வித்தை சொல்லும் குறள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க;சூழின் 
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு
படிப்பவர் வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம்.

            ஒரு முறை என் உறவினர் ஒருவர் தன் மகளின் திருமண அழைப்பிதழில் முதல் பக்கத்தில் நடுவில் சங்க இலக்கியத்தில் இருந்து இரண்டே வரிகள்.அழகான அந்த இரண்டு வரிகளின் முழுப்பாடலை அறிந்து கொள்ள வேண்டி ஒரு உறவுப்பெண் இளங்கலை தமிழ் படித்தவர்,அவரிடம் கேட்ட போது புத்தகத்தைப் பார்த்தால்தான் தெரியும் என்று சொல்லிவிட்டார்.பிறகு ஒரு தமிழ் ஆசிரியரிடம் கேட்ட போது அது குறுந்தொகைப்பாடல்.புத்தகம் இருந்தால் தான் பிழை இல்லாது கூறமுடியும் என்றார்.இதற்கிடையில் என் தம்பிக்குத் திருமணம்.அவரது திருமண வாழ்த்தில் கவிதை இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் தங்கைகள் சொல்ல நமது கவிதையை படித்து மற்றவர்கள் துன்பப்படாது இருக்க வேண்டி தேடிச்சலித்து அந்த இரண்டு வரிகளொடு இடைச்செருகலாய் எனது கவிதை ஆறு வரிகளைச்சேர்த்து வாழ்த்து தயார் செய்து அதையும் சொந்தங்கள் முகத் தாட்சண்யத்திற்கு 'சூப்பர்' என்றனர்.தேடுங்கள் கிடைக்கும் என்பதற்கேற்ப அந்தப்பாடல் தினமலரில் ஒரு தமிழறிஞரின் கட்டுரையில் தரப்பட்டிருந்தது.உடனே அதை எழுதிக்கொண்டேன்.(வெட்டி எடுக்கலாம்னா அது அடுத்தவுகவுட்டு பத்திரிக்கையில்ல) அப்படி ஒரு பாடல் தேடலை உருவாக்கவேண்டும்.அந்தப்பாடல்
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே" காதலர், தம்பதியர் அனைவருக்கும் பொருந்தும் அழகான பாடல்.உணர்ந்து படிப்பவர்களுக்கு நாமும் செம்புலப் பெயநீர் போல வாழ வேண்டும் என்ற படிப்பினை தரும்.காதல்,திருமணம் என்ற உறவு உள்ள வரை இந்தப் பாடல் அர்த்தமுள்ளது.

               ஒரு முறை அந்தமான் கம்பன் கழகத்தில் கம்பராமாயணத்தில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என்ற தலைப்பில் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.(இருக்கிற ஆலை பத்தாததால இந்த இலுப்பைப் பூவுக்கும் சில,பல நல்ல உள்ளங்கள் சர்க்கரை அந்தஸ்தைத் தருவதுண்டு) அதன் பிறகு அதே தலைப்பில் கவிதை வாசிக்க ஒரு கம்பன் கழகக் கூட்டத்தில் வாய்ப்புக்கிடைத்தது.உரைக்கு கைகேயியையும்,கவிதைக்கு ராவணனையும் தேர்வு செய்தேன்.அப்போது கம்பன் கழக நிறுவுனர் தெய்வத்திரு.இலஞ்சி.நடராஜன் அவர்கள்,"எல்லாம் வித்தியாசமான சிந்தனை தான். பேசச்சொன்னா கைகேயி.பாடச்சொன்னா ராவணன்" என்றார். "இல்ல சார்! புத்திவானே பலவான். இந்தத் தேவர்கள் எல்லாரும் புத்திமான்கள் சார்.வரத்தையும் கொடுத்துட்டு அதையே சாபமாக்குற கதை தானே நம்ம புராணம் பூராவும்.அசுரக்கூட்டம் எல்லாம், வரம் கேட்டவன்லாம் அழியிறதப் பாத்தும் தவம் இருந்தத நினைச்சா ஆற்றல் இருந்த அளவு புத்தி இல்லையேன்னு நினைச்ச வருத்தம் தான் சார்" என்றதும் எப்படியோ போ என்பது மாதிரி புன்னகையுடன் நகர்ந்துவிட்டார்.அப்போது கம்பராமாயணம் படித்தேன்.அது ஒரு கடல். நான் எனக்குத் தேவையானதை மட்டும் படித்தேன்.

              கம்பனின் பாடலில் ஒன்று.ராமன் வனவாசம் சென்ற பின் பரதன் தன் தாத்தா வீடு சென்று திரும்பியதும் ஏதோ பெருந்தீங்கு என்று உணர்ந்து தாயிடம் வினவ தாய் கைகேயி கூறுவதாய்.
"தானவர் வலிதவ நிமிர்ந்ததானை அத்
தேனமர் தெரியலான், தேவர் கை தொழ
வானகம் எய்தினான்,வருந்தல் நீ என்றாள்".

தசரதச்சக்ரவர்த்தி இறைவனடி சேர்ந்ததை சாதாரணமாகச்சொல்லி மகனுக்கு ஆறுதல் கூறும் பாடல்.பரதன் துடித்ததும் காரணம் கூறும் பாடலாக அடுத்த வரிகள்.
"வாக்கினால் வரம்தரக் கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடை,போக்கி பார் உனக்கு
ஆக்கினேன்,அவன் அது பொறுக்கலாமையால்
நீக்கினான் தன்னுயிர் நேமி வேந்து"

மரபுக்கவிதையின் இலக்கணம் தெரியாது.ஆனாலும் இந்தப்பாடலில் அர்த்தம் வெளிப்படை.ஒரு அழகு.கணவனின் இறப்பை சாதாரண நிகழ்வாய்க் கூறும் அரச தோரணை.இப்படிப்பாடல்கள் இருந்தால் அலுக்காமல் சலிக்காமல் இலக்கியம் படிக்கலாம்.
அடுத்து ஒரு பாடல்.
வாரண பொருத மார்பும்,
வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
வெறுங்கையோடு இலங்கை புக்கான்
இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் ஒரு கதை இருக்கிறது.ராவணன் மாண்பு மிக்கவன். சீதையை சிறையெடுத்த ஒரு குற்றம்,பிறன் மனை நோக்கியதன் விளைவு அவனுக்கு நடந்த இழிவுகள்.அதை அழகாய்ச்சொல்லும் இந்தப்பாடல். எனக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவு தான்.அடுத்து பாரதியின் கவிதைகள்.அது என் சுவாசத்தைப்போல.குறளுக்கடுத்து என் அப்பா அறிமுகப்படுத்தியது பாரதியின் கவிதைகளைத்தான். அப்புறம் ஆங்காங்கே சில சங்க பாடல்கள். அவ்வளவுதான் எனது இலக்கிய அறிவு
(இலக்கியமே வாழ்க்கையா இருக்கிறவங்க இன்னும் நிறைய படிச்சிருப்பீங்க. அப்படி யாரும் இலக்கிய அழகு குறித்து எழுதுன ப்ளாக் முகவரி கொடுத்தா நல்லா இருக்கும்)

1 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

//ஒரு படிப்பினையும்,உயிரைத்தொடும் உணர்வையும்,மகிழ்வையும் தருவதெல்லாம் என் வரை இலக்கியம்.//

நல்ல வரிகள்...இலக்கியத்திற்கு அழகான உவமை....தினமும் இடுக்கை இட்டுவருவது பாராட்டுக்குரியது....