சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், டிசம்பர் 21, 2009

சகோதரச்சமுதாய விடியல்

திரேதாயுகத்தில்
ஒரு ராவண வதத்திற்கு
ராமாவதாரம்.
சொட்டிய ரத்தத்துளிகளில்
உடல் வளர்ந்த மகிஷனைப்போல்
கலியுகத்தில்
இலங்கையில் எத்தனை ராவணர்கள்
அசோகவனச்சீதைகளாய் ஈழமக்கள்

இங்கோ
ராமர்களின் கை
விற்களைப்பறித்துக்கொண்டு
விலங்குகளைப் பூட்டிவிட்டார்கள்.
வாலிபப்பிள்ளைகளை வாரிக்கொடுத்து
வார்த்தையற்ற ஊமை அழுகையில்
வாடும் தாய்கள்
எப்படிக் கேட்பார்கள்
கற்பிழந்த கன்னி மகளிடம்
அவளுக்கு நடந்த கொடுமைகளை.

சக உதரச் சமுதாயமே!
தீர்வில்லாத பிரச்சினையில்லை எனும் உலகத்தில்
உமக்கான
தீர்வைக்கேட்டுத்தான்
திரண்டு நிற்கிறது தமிழர் கூட்டம்
நிராயுத பாணிகளை
இன்று போய் நாளை வா என்றது போய்
அங்கே
நித்தம் போர்கள்
நிராயுத பாணிகளுடன்.

ஈழச்சகோதரர்களே!
உமது
உறக்கத்தைத் திருடியவனின்
உறக்கமும் களவு போகும்.
விடியாத இரவுகள் இல்லை.
உலக வரலாற்றில்,
உனக்கான
விடியல் தான் தூரமாகிப்போனது
நிலை மாறும் உலகில் உனது
நெருப்பு நாட்களும் மாறும்.
அராஜக ராஜாங்கங்கள் அழியும் போது
உனது சொப்பனங்களுக்கும் சிம்மாசனம்
அதுவரை காத்திருப்போம் கனவுகளுடன்



0 கருத்துகள்: