சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, டிசம்பர் 19, 2009

ஈழத்தமிழினமே! நீங்கள் தேவர்கள்

கனத்த உறக்கத்தின்
கனவுகளில் லயித்த இரவில்
தலையணை பிடுங்கப்பட்டாலே
தகிக்கும் கனலாய்
வெடிக்கும் ஒரு யுத்தம்

புன்னகை உறைந்த இதழோடு
மழை இரவின் ரசித்த உறக்கத்தில்
உயிர் மட்டும் எங்கோ முகாந்திரத்தில்
உலவிக் கொண்டிருக்க
போர்வை இழுக்கப்பட்டாலே
போர்க்களம் உருவாகும்.

அப்படி இருக்க
ஒரு இனம் விழித்திருக்கையிலேயே
அவரின்
பாதங்களுக்குக் கீழான பூமியே
பறிக்கப்பட்டது.
அதற்கு சாட்சிகளாய் மட்டுமே நாங்கள்

இன்றைப்பற்றிய நிலையே
நிச்சயமில்லாத போது அவர்களின்
நாளையக்கனவுகளுக்குப் பேச்சு வார்த்தைகள்
அதற்கு பார்வையாளர்களாய் மட்டுமே நாங்கள்

காடழித்து நாடாக்கிய தொன்மையினம் ஒன்று
நாடிழந்து முகவரியற்ற கடிதங்களாய் இன்று
முகாமுக்கு முகாம்
உதைக்கப்படும் இவர்களின் முகவரி கேட்கும்
உரிமைப் போராட்டப் போராளிகள் நாடு கடத்தப்படுகிறார்கள்
அதற்கு சூழ்நிலைக் கைதிகளாய் நாங்கள்

ஈழத்தமிழினமே! நீங்கள் தேவர்கள்
ஒரு உல்லாச புரியை உருவாக்கி
ஒரு அசுர குலத்தின் ஆட்சிக்குக் கொடுத்துவிட்டு அகதிகளாய்...
ஈழத்தமிழினமே! நீங்கள் தேவர்கள்
அபயம் தரத்தான் இல்லை அவதாரங்கள்

வெட்கமாகத்தான் இருக்கிறது
பழம் பெருமைகளைப் பட்டியலிட.
தமிழனின் வரலாற்றில்
போராட்டங்கள் தொடர்கிறது
போர்க்களம் தான் வேறு
அகதிகள் என்ற பெயர்ச்சொல்லோடு
முன்னினைப்பாய் நாடுகள் மட்டும் மாறும்
இலங்கை அகதிகள்,பர்மா அகதிகள் இப்படி.

1 கருத்துகள்:

+Ve Anthony Muthu சொன்னது…

மனம் கனக்க வைத்து...
கண்ணீரை வரவழைத்த கவிதை.

//அப்படி இருக்க
ஒரு இனம் விழித்திருக்கையிலேயே
அவரின்
பாதங்களுக்குக் கீழான பூமியே
பறிக்கப்பட்டது.//

எத்துணை நிஜம். ஆ...


நான் வெறும் சாட்சியாய், பார்வையாளனாய்...

ஆம்...
இதைவிட நாகரீகமாய் என் சுயத்தை...
காறி உமிழ முடியாது அம்மா.

என் ஈழச் சகோதரர்களின் நிலையுடன் ஒப்பிடுகையில்...

நான் வாழ்வது ராஜபோக வாழ்வு.
இதைச் சொல்லவும் வெட்கப்படுகிறேன்.

மனம் மிக மிக வலிக்கிறது.