அந்தமானில் எங்களுக்கு அண்டை மாநிலங்கள் அடுத்த வீட்டில்.கற்காலத்திற்கும் தற்காலத்திற்கும் சில காத தூரம் தான். தமிழன்பர்களே! என்ன உளறல் என்கிறீர்களா? எங்களுக்கு அடுத்த வீட்டில் ஒரு மலையாளி அல்லது ஒரு வங்காளி அல்லது ஒரு தெலுங்கர் அல்லது ஒரு கன்னடியர் என்று அனைத்து மாநில மக்களுடன் இணக்கமாக இருந்து வருகிறோம். அந்தமான் ஒரு குட்டி இந்தியா.கற்காலத்தினின்று இன்னும் வெளிவராத, உடை பற்றிய எண்ணம் கூட இல்லாத, ஜரவா என்ற பழங்குடியினர் இங்கு வசிக்கின்றனர். இன்னும் பல பழங்குடியினர் இங்கு வசித்தாலும் அவர்கள் நம்மைப் போல நாகரீக மனிதர்களாய் வலம் வர இந்த ஒரு இனம் மட்டுமே நிர்வாணமாகக் காடுகளில் வசிக்கின்றனர்.இது பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் பதிவு செய்வோம். இப்போது தலைப்பிற்கு வருவோம்.
தமிழர்களைப் பொறுத்தவரை வயதானதும் தங்கள் கடைசி காலத்தை தமிழகத்தில் கழிக்க விரும்பி மீண்டும் தமிழகம் திரும்புவதையே விரும்புகிறார்கள்.அந்தமானில் பல பண்பாடு, பழக்க, வழக்கங்கள் கொண்ட மக்கள் இருந்தாலும் தங்களது தாய்த்தமிழ் நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்களில் மாற்றமின்றி அவரவர் பின்பற்றுகின்றனர். தமிழர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இங்கு வெற்றிமலை முருகன் கோவில்,கணபதி,ஆஞ்சனேயர்,சமயபுர மாரியம்மன், பாகம்பிரியாள், முனீஸ்வரர்,காளி,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்று அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் வசதிக்கேற்ப கோவில்கள் அமைத்து, திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நிறையத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் தமது முன்னோர்களின் பூர்வீகம் தெரியாது.சொந்த ஊர் மறந்து, சாதி அறியாது, தமிழ் மொழி மறந்து இந்த மண்ணின் மைந்தர்களாக வாழும் தமிழர்களும் உண்டு. இங்குள்ள தமிழர்கள் சாதியின், இனத்தின் அடிப்படையில் பிரிந்து நிற்பதோ, சாதிகளைச்சொல்லி சண்டையிடுவதோ கிடையாது.இங்குள்ள தமிழர்களின் அடையாளம் தமிழ். இங்கு தமிழர்களிடையே ஏற்ற, தாழ்வு எண்ணங்களும் இல்லை.
உணவுப் பழக்கம் என்று எடுத்துக்கொண்டால் சப்பாத்தி, உருளைக்கிழங்கு கறி வட இந்தியர்களைப்போல பெரும்பான்மையான தமிழர்களின் அன்றாட உணவுப்பட்டியலில் உண்டு. இங்கு மீன் அதிகம் கிடைப்பதால் மீன் அதிகம் உட்கொள்கின்றனர்.உணவுப்பஞ்சம் இங்கு கிடையாது.இங்கு எந்தப் பொருளும் உற்பத்தி கிடையாது என்றாலும் கூட நமது தமிழ் வணிகப்பெருமக்கள் முக்கிய பூமியினின்று அனைத்துப் பொருட்களையும் தருவித்து மலையெனக்குவித்து விடுவார்கள்.மற்ற மாநில மக்களும் வசிப்பதால் அவரவர் சொந்த மாநிலங்களில் கிடைக்கும் பொருட்களையும் தருவிப்பதால் இங்கு காசைக்கொடுத்தால் கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.இங்கு தனிமனித வருமானம் ஒரளவு அதிகம் என்பதால் வறுமை மிகக் குறைவு.வந்தாரை வாழவைப்பது தமிழகத்தின் தன்மையென்றால் வந்தாரையெல்லாம் வளமுடன் வாழ வைப்பது இந்த அந்தமான் தீவு.உழைப்பாளிகளின் சொர்க்கபூமி இந்த ஸ்வர்ண பூமி.
எல்லோரும் தாய்த்தமிழ் நாட்டை விட்டு தொலைவில் இருப்பதால் எல்லா மக்களுடனும் மனித நேயத்துடன், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குறிப்பறிந்து உதவும் பண்பாடு அதிகம் உண்டு. பண உதவிகள், கடனுதவிகள் சுலபமாகப் பெறமுடியும். நாணயமற்ற செய்கைகளை தமிழர்கள் மன்னித்துவிடுவார்கள். ஆனால் அடுத்த முறை தலை கீழாக நின்றாலும் உதவி பெற முடியாது. ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் நம் தமிழகத்தில் இருந்து தாய் மாமன் வருவதற்குள் அந்தக் குழந்தை எத்தனை பேரை மாமா என்று அழைக்கிறதோ அத்தனை பேரும் மாமன் சீர் கொண்டு வருவார்கள். அண்டை மாநில நண்பர்கள் அவர்கள் பழக்கப்படி நம் குழந்தைகளை சீராட்டுவார்கள். இங்கு தமிழ் மக்களிடையே கலப்பு மணம், காதல் மணம் பரவலாகக் காணப்படுகிறது. சீர் வரிசைகள்,மணமக்களுக்கு திருமண சடங்குகள், மணமக்களுக்கு விருந்து உபசாரங்கள் எல்லாம் தமிழகத்தைப் போலவே இங்கும் உண்டு. ஆனால் திருமணத்தை அவரவர் விருப்பப்படி கோவிலிலோ,வீட்டிலோ முடித்துகொண்டு வரவேற்பு வைபவத்தை மண்டபத்தில் வைப்பர். சிலர் முக்கிய பூமியில் திருமணம் முடித்து இங்கு வந்து வரவேற்பு நடத்துவர். நம் ஊரைப்போல இங்கு வாழை இலை போட்டு விருந்து வைப்பதில்லை.ஒரு புலவு சாதம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மசாலா குழம்பு வகைகள் (சைவம்/அசைவம் அவரவர் வசதிப்படி) கீர் (அரிசி,பால்,சீனி,முந்திரி,திராட்சை கலந்து குழைய வேகவைத்து நம் ஊர் பாயாசம் போன்றது) வைத்திருப்பார்கள்.தட்டுகள் அடுக்கி இருக்கும்.மண்மக்கள் கைகளில் பரிசு அல்லது பண முடிப்பைக் கொடுத்துவிட்டு சாப்பாடு பரிமாறும் இடம் வந்து நாமே தட்டு எடுத்து வேண்டும் அளவு உணவு பெற்று உண்டு களிக்க வேண்டியது தான்(!) இங்கு கேள்விப்பட்ட அளவு வரதட்சணைக் கொடுமை கிடையாது.
சென்னையில் பேசுவது தமிங்கிலிஷ் என்றால் இங்கு பெரும்பாலான தமிழர்கள் தமிந்தி (தமிழோடு இந்தி கலந்து) பேசுவார்கள். சிலர் இந்தி மட்டுமே பேசுவதும் உண்டு. இதில் பெருமை அடையும் தமிழர்களும் உண்டு என்பது தான் தமிழ் பற்றுக் கொண்டோர்களின் வருத்தமும் கூட.அந்தமான் தமிழர் சங்கத்தில் எந்த விழாவாக இருந்தாலும் சரி,தமிழர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறும் பெருமக்கள் வலியுறுத்துவது வீட்டில், தமிழர்களுடன் கலந்துரையாடும் போது தமிழில் அளவளாவுங்கள் என்பதைத்தான்.
பண்டிகைகள் என்று எடுத்துகொண்டால் நமது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளோடு வட இந்தியரின் துர்க்கா பூஜை (நவராத்ரி),ஹோலி பண்டிகை,ராக்கி(சகோதரர்களின் நலம் வேண்டி அவர்களின் கையில் ரட்சை கட்டுவது) ஆகியவற்றைக் கொண்டாடுகிறார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ் நாட்டின் அதே உவகையோடு கொண்டாடுவோம். இங்கு வயல் வரப்பு, தோட்டம் துரவு, மாடு,கன்று,ஆடு,கோழி வளர்க்கும் தமிழ் விவசாயக்குடும்பங்கள் நிறைய உண்டு. அவர்கள் மாட்டுப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவர். நண்பர்களுக்கும் அழைப்பு உண்டு.தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா கொண்டாடுவோம். முக்கிய பூமியினின்று பேச்சாளர் பெருமக்களை அழைத்து வந்து விழாவிற்கு சிறப்பு சேர்ப்பர் சங்க நிர்வாகிகள்.
உடை அலங்காரத்தைப் பொறுத்தவரை பெண்கள் பெரும்பாலும் தமிழகத்தைப்போலவே சேலை,சுடிதார்,சல்வார் தான். மிகச்சிலர் மேனாட்டு உடைகள் அணிவதுண்டு. பெரும்பாலும் விமர்சிப்பது கிடையாது. இங்கு தமிழ்ப் பெண்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். நல்ல ஆடை அலங்காரத்தை விரும்புகின்றனர். பல வகை மக்களுடன் வசிப்பதால் அடுத்தவர்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்களை,உணவு முதல் நடை, உடை, பாவனை,இசை, வீட்டுப்பராமரிப்பு,குழந்தை வளர்ப்பு வரை சுலபமாக எடுத்துக்கொள்கின்றனர்.
அந்தமான் தமிழர் நமது வாழ்க்கைக்குத் தேவையற்ற மரபுகளை கட்டிப்பிடித்துக்கொண்டு தம்மை வருத்திக்கொள்வதில்லை. நல்லதுதானே? இயல்பான நீரோட்டம் போல தமது வாழ்க்கையை அனுபவித்து தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடும் மேலான குணங்களுடன் இங்கு தமிழர் வாழ்கின்றனர். இந்தக்கட்டுரையை எனக்கு தெரிந்த வரையில் பதிவு செய்துள்ளேன். அந்தமான் தமிழ் நண்பர்கள் படிக்கும் போது எனது தவறுகளை சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். தவறுகள் அறிய வரும் போது கட்டுரை திருத்தப்படும்.
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
8 கருத்துகள்:
அன்புள்ள அம்மா வணக்கம்.
தங்களால் அந்தமான் தமிழர் வாழ்வு எங்களுக்குத் தெரிய வருகிறது.பல தலைப்புகளில் அந்தமானை எங்களுக்கு அறிமுகம் செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்,
புதுச்சேரி,இந்தியா
+9442029053
அந்தமானில் தமிழர் வாழ்வியல் பற்றி அறிந்துகொள்ள, இந்தப் பதிவு மிகவும் உதவுகிறது. வந்தாரையெல்லாம் வளமுடன் வாழ வைக்கும் அந்தமானை அழகுறப் பதிந்த க.நா.சாந்தி லெக்ஷ்மணனுக்கு நல்வாழ்த்துகள்.
அந்தமான் தமிழர்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றிய சிறந்த பதிவு.
உணவுப்பழக்கம் குறித்து தனியே விரிவாக எழுதுங்கள் அம்மா.
அந்தமான் தமிழர்களைப் பற்றிய பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
பாடசாலைகளில் எந்த மொழியில் படிக்கவேண்டும் போன்ற விபரங்களைத் தரமுடியுமா? பிள்ளைகள் தமிழ் படிக்கவேண்டும் என்றால் அவற்றுக்காய்த் தனியே பாடசாலைகள் நடக்கிறதா?
......
முக்கியமாய் எங்கு போனாலும் எதைக் கொண்டுபோக மறந்தாலும் சாதியைக் கொண்டு போகமட்டும் தமிழர்கள் மறப்பதில்லை. சாதி வகையாக அந்தமானில் தமிழர்கள் பிரிந்திருக்கவில்லை என்பதை அறிய இதமாய் இருக்கிறது.
.......
உங்கள் வலைப்பதிவுகளிலிருந்து அந்தமான குறித்து நிறைய விடயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி.
வணக்கம், நானும் அந்தமானில் பிறந்தவன்தான்..! இன்றுதான் இந்த தளத்தை காண நேர்ந்தது மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது நன்றி ...!
நான் கடந்த 2009 டிசம்பர் மாதம் அந்தமான் வந்துஇருந்தேன். என்ன
வியாபாரம் செய்யலாம் என்று ஒரு சர்வே செய்ய. இறைவன் நாடினால் இந்த பூமிக்கு கண்டிப்பாக வருவேன்.
முகம்மது ஷம்சுல்
கல்கத்தா
+919883124454
அந்தமான் தீவு தமிழர் வாழ்க்கை முறை,பண்பாடு பற்றிய நல்ல தகவல்களை எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.நன்றி.
கருத்துரையிடுக