சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், டிசம்பர் 10, 2009

2.ஜரவாக்கள்






                    ஜரவா என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு நெஞ்சம் பதைக்கும்.ஏனென்றால் நீக்ரீட்டோ இனத்தை சேர்ந்த இவர்கள் கொடூர குணமுடையவர்கள். தம் பகுதிகளில் அத்து மீறி நுழைபவர்களை விஷ அம்பு எய்து கொன்று விடுவார்கள்.1990களில் கூடமீனவர்கள் பலர் இவர்களின் அம்புக்கு இறையாகி உள்ளனர். தென் மற்றும் நடு அந்தமானின் மேற்குக் கடலோரப்பகுதிகளில் நாடோடிகளாக வாழ்கின்றனர்.இவர்களுக்கும் வேளாண்மை செய்யத் தெரியாது.மீன்கள், காடுகளில் கிடைக்கும் கிழங்குகள்,தேன்,தேங்காய்,பழங்கள் ஆகியவற்றை சேகரித்தும்,பன்றிகளை வேட்டையாடியும் உண்பர்.மான்களை இவர்கள் வேட்டையாடுவதில்லை.

       ஆடையின்றி காடுகளில் அலைந்து திரியும் இவர்கள் இப்போது ஓலைகளை வைத்து பருவ காலங்களுக்கு ஏற்ப குடில்கள் அமைக்கக் கற்றுகொண்டுள்ளனர்.அந்தமான் காடுகளில் சாம்பிராணி கிடைக்கும். சாம்பிராணியைச்சேகரித்து அவற்றை வைத்து தீப்பந்தங்கள் செய்து பயன்படுத்துகிறார்கள்.மூங்கில் கூடைகள், மரத்தாலான அம்புகள், ஆகியவற்றைச்செய்து பயன்படுத்துகிறார்கள்.மீன்களைக்கூட அம்பெய்து வீழ்த்தி பிடிப்பார்கள். படகுகள் செய்யத் தெரியாது. காடுகளில் கிடைக்கும் மூங்கில்களை அடுக்கி ஒன்றோடு ஒன்றாகப் பிணைத்து மிதவைகள் செய்து அதில் பயணம் செய்கின்றனர்.சீறிவரும் கடலலையை எதிர்த்து நீந்தும் ஆற்றல் இரு பாலருக்கும் கை வந்த கலையாகும்.

              அந்தமான் நிர்வாகச்செய்திக்குறிப்பின் படி இன்றைய ஜரவா மக்கள் தொகை 341 ஆகும். ஜரவாக்கள் அறிவுகூர்மையும், தந்திரமும் மிக்கவர்கள். பயமறியாதவர்கள். எடுத்ததற்கும் தொடுத்ததற்கும் விற் போர்தான்.தங்கள்
வாழ்விடங்களில் அன்னியர்களை அனுமதிப்பதில்லை. அதற்கு காரணமாக சொல்வது என்னவென்றால் ஜரவாக்கள் சேகரித்து வைத்திருக்கும் சாம்பிராணி,தேன்,அம்பர் எனப்படும் பெரும் விலை மதிப்புள்ள மீனிலிருந்து கிடைக்கும் ஒரு வித மருந்துப் பொருள் இவற்றை நம்மவர்கள் கவர்ந்து வந்துவிடுவதுண்டு. அப்போது ஜரவாக்களின் குழந்தைகள் விஷ அம்பு தொடுக்க இயலாது போக வேண்டி அவர்களது கட்டை விரலை வெட்டிவிடுவதுண்டு என்கின்றனர்.நாகரீகமற்றவர்கள் யாரென்ற கேள்வி எழுகிறது இல்லையா?


            இப்போது அவர்கள் வாழும் பகுதிகளில் வேட்டையாடுதல், மீன் பிடித்தல், ஆகியவற்றை நிர்வாகம் அனுமதிப்பதில்லை.அவை இப்போது கடும் காவல் பகுதிகள்.நாம் சுற்றுலா செல்லும் போது சாலைகளில் வந்து வண்டி, வாகனங்களைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டு கையேந்துவார்கள்.மண்ணின் மைந்தர்கள் கையேந்துவதா? என்று நிர்வாகம் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் தரும் உணவு வகைகள் அவர்களுக்கு ஒவ்வாமல் நோய்களை உண்டு பண்ணி அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்று தீவு அரசாங்கம் ஜரவாக்களுக்கு பொதுமக்கள் உணவு தருவதை தடை செய்துள்ளது. அவர்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடித்தம்.ஆகவே தீவு அரசாங்கம் அவர்களுக்கு சிவப்பு நிற துணி, ஆடைகள்,இயற்கை உணவு வகைகள் மற்றும் தங்குமிடம் தந்துள்ளதால் அவர்கள் இப்போது காடுகளுக்குள் அலைந்து திரிந்து உணவு சேகரிப்பது கிடையாது.

               7ம் நூற்றாண்டில் இத்தீவுகள் வழியாக பயணம் செய்த சீனப்பயணியர்களும், 9ம் நூற்றாண்டில் இத்தீவுவழியாக பயணம் செய்த அரபுப்பயணிகளும் "இத்தீவுகள் கொடியவர்களின் கொலு மண்டபம், ஆடையற்ற நிர்வாணக்கோலத்தில் காணப்படும் இங்குள்ள ஆதிவாசிகள் மனிதர்களை கொன்று குதறி தின்னும் பழக்கமுள்ளவர்கள் என்று தமது நாட்குறிப்பில் குறித்துவைத்துள்ளனர்.இங்கு ஆங்கில அரசு குற்றக்குடியிருப்பை அமைப்பதற்கு முன் எந்தக் கப்பல் புயலில் சிக்கி கரை ஒதுங்கினாலும் அதில் பயணம் செய்த பயணிகளை காடுகளுக்குள் இழுத்துச்சென்று கொன்று சடலங்களை விட்டுச்சென்று விடுவார்கள் என்றும் மனிதர்களை இவர்கள் உண்பதில்லை என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆங்கிலேயர் முதற்கொண்டு நவீன இந்தியாவின் அரசு வரை இவர்களுடன் உறவாட பெரும் முயற்சி எடுத்து இப்போது வெற்றி கண்டுள்ளது தீவு அரசாங்கம்.

        இவர்கள் உணவு வேண்டி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அங்கேயுள்ள தோட்டங்களில் வாழைப் பழங்கள் போன்ற பழவகைகளைக் கவர்ந்து செல்வதுண்டு. அப்படி ஒரு முறை1996ம் ஆண்டில் 'லக்ரா லூங்க்டா' என்ற குடியிருப்பு பகுதியில் உணவுப்பொருட்களைக் கவர்ந்து கொண்டு ஜரவா குழு ஓடிய போது ஒரு இளைஞன் மட்டும் கால் இடறி விழுந்ததில் கால் முறிந்துவிட அவனை அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்கள் ஓடி ஒளிந்தனர்.கால் ஒடிந்த நிலையில் இருந்த அந்த இளைஞனை அரசு மருத்துவமனையில் சேர்த்து அரச மரியாதையுடன் அவனுக்கு சுமார் 6 மாத காலம் சிகிச்சையளித்தது.அந்த 6 மாத கால்த்தில் அவனுக்கு இந்தி மொழிப் பயிற்சி, பொதுமக்களுடன் அறிமுகம் ஆகியன செய்யப்பட்டது. நாங்கள் எல்லோரும் அவனைப் பார்க்கவென்று அரசு மருத்துவமனைக்கு சென்றோம்.அவன் பெயர் 'என்மேய்'. அந்த காலக்கட்டத்தில் இங்குள்ள வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவில் 'என்மேய்' என்ற உரைச்சித்திரம் ஒளிபரப்பப்பட்டு அது விருதும் பெற்றது.சிகிச்சைக்குப்பின் அந்த இளைஞனை அரசு அவன் இனத்தோடு கொண்டு சேர்த்தது, அவர்களுக்குத் தேவையான 
அன்பளிப்புகளுடன்.

       பிறகு அவ்விளைஞன் 1999ம் ஆம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பைக்காண இந்தியத்தலைநகர் தில்லி அழைத்துச்செல்லப்பட்டு அப்போதையக் குடியரசுத்தலைவர் திரு. கே. ஆர். நாராயணன் அவர்களுடன் இரண்டு நிமிடம் இந்தி மொழியில் உரையாடினான்.ஆதிக்குடிகளின் வரலாற்றில் இந்தச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கொடூர குணங்களை விட்டொழித்து அரசாங்கத்தின் விருந்தினர்களாக வாழும் இந்த மக்களைத் தொட்டுத் தொடர்ந்து வாழ பொது மக்கள் முன்வர வேண்டும்.விட்டு விலகுவது என்பது மனித நேயத்திற்கு புறம்பான செயல்.

2 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம் அம்மா
தங்கள் வழியாக அந்தமானின் வரலாறு அறிகின்றோம்.
தங்கள் பணி தொடர்க.
இன்னும் இதுபோன்ற வியப்பான செய்திகளைப் பதியவும்

மு.இளங்கோவன்
புதுச்சேரி

rathinapugazhendi சொன்னது…

ஜராவா பழங்குடிகள் பற்றிய முழுமையான பதிவு உங்களுடையதாகத்தான் இருக்கும் மிக்க மகிழ்ச்சி அம்மக்களைப் பற்றி வெளிவராத பல தகவல்களைத் திரட்டி வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் அவர்கள் என்ன மொழி பேசுகின்றனர் என்பதையும் குறிப்பிடுக நன்றி அம்மா