சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், டிசம்பர் 16, 2009

ஒரு ஜப்பானியனின் தமிழ்ப்பற்று ( ! )




          என் மகளுக்கு அந்தமான் தீவுகளின் நிர்வாக கல்வி இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வருகிறாள். பெற்றொரை விட்டு தொலை தூரத்தில் வந்து படிக்கிறாளே என்று உறவுகள் அவ்வப்போது அவளைப்பார்த்து வருவதுண்டு. அப்படி எனது கணவரின் அண்ணன் மகன் சென்னையில் 'ஹோன்டா சிட்டி' கம்பெனியில் பொறியாளராக இருக்கிறார். பணி நிமித்தம் அடிக்கடி கோவை போக வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் என் மகளைப் பார்த்துவிட்டு வருவதுண்டு.அப்படி ஒரு தரம் தனது ஜப்பானிய நண்பரையும் கூட அழைத்துச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். பிள்ளை என்ன நினைத்ததோ இது விபரத்தை தங்கைக்கும் தொலை பேசியில் சொல்லி ஆயிற்று.கல்லூரி விடுதியில் ஏகக் களேபரம்.அப்படியா! ஏப்பா நீ ஜப்பானி கிட்ட எப்படிப் பேசுவ? ஏய் இந்த டிரஸ் போடு! ஏய் இதச்செய் அதச்செய் ஒவ்வொரு மாணவியும் வித விதமாக சொல்ல ஒரு கூட்டமே கிளம்பி பார்வையாளர் அறைக்கு வந்திருக்கிறது. என் மகளிடம் அவள் அண்ணன் ஜப்பானிய இளைஞனை அறிமுகப்படுத்த இவள் தனது வலது கையை உயர்த்தி'ஹாய்' என அவரோ தனது வலது கையை மடித்து இடுப்பு வரை தலை வணங்கி 'மாலை வணக்கம் சகோதரி' என்று சொல்லி தமிழில் ஒரிரு வார்த்தை சம்பிரதாயமாக பேச, வேடிக்கை பார்த்த மாணவிகள் கட்டை விரலை தரை நோக்கிக் காட்டி ஒரே சிரிப்பு.

       பிறகு அவர்கள் போனதும் என்னம்மா? ஜப்பானி உன்ன இப்புடிக் கவுத்துட்டான்!ச்சோ என்று ஒரே கேலி! என்னப்பா அப்படியாம்ல என்று ஏகத்துக்கும் கலாய்க்க என் மகளோ 'ஏம்ப்பா! நான் அந்தமான்ல பொறந்து வளந்து நான் நல்லா தமிழ் பேசறேன். எங்கியோ ஜப்பான்ல பொறந்துட்டு அந்த அண்ணா இவ்ள அழகா தமிழ் பேசறான்.உங்களுக்கு இங்க்லீஷ் கலக்காம தமிழ் 
வரமாட்டேங்குது.உங்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றே இல்லை. பெருசா பேசறாங்க' என்று போட மாணவிகள் கப்சிப்.என்னிடம் ரகசியமாக தொலை பேசியில் அழைத்து 'ஜப்பானி அண்ணன் என் ப்ரிஸ்டிஜையே டேமேஜ் பண்ணிட்டான்.இப்டிலாம் பேசி நிலமைய சமாளிச்சேன்' என்று தாளிக்க எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.ஏண்டி தமிழ்நாட்டுல நிறையப் பேர தமிழ்ப் பற்றுங்கற வார்த்ததான் காப்பாத்திக்கிட்டு இருக்குதுன்னா உன்னையுமா? ஹா ஹாஹ் ஹா.

1 கருத்துகள்:

தமிழன் சொன்னது…

பல தமிழர்கள் தமிழ் பேசுவதையே தவறான செயலாக நினைப்பதுதான் வேதனையான உண்மை. தாய் மொழியில் பேசுவதில் என்ன வெட்கம் அல்லது தரக்குறைவு?