அந்தமான் இயற்கை எழில் நிறைந்த அழகுத்தீவுகள். இங்கு பாராடாங் என்னுமிடத்தில் இயற்கை சிற்பி செதுக்கிய சுண்ணாம்புக்குகைச்சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.பாராடாங் என்றால் இந்தி மொழியில் ,'பன்னிரண்டு கால்கள்' என்று அர்த்தம்.தலைநகர் போர்ட் பிளேயரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தத்தீவு 297.80 சதுர கி.மீ பரப்பளவு உள்ளது.அந்தமான் இணைப்புச்சாலையில் அமைந்த ஒரு முக்கியமான தீவு. தென் அந்தமானுக்கும் வட அந்தமானுக்கும் பாலமாக விளங்கும் இந்தத்தீவின் கழிமுகத்தில் மாங்க்ரோவ் காடுகள் இயற்கையின் அற்புதப்படைப்புகளில் ஒன்று
.இந்தத்தீவுக்குச்செல்வதற்கு தலைநகரில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் பேருந்து வசதிகளை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களின் மூலம் செல்வது நமக்கு நல்லது.சில நாட்களுக்கு முன் ஒரு ஆளுக்கு ரூ.500/ வீதம் வசூல் செய்தவர்கள் இப்போது தலா ரூ.1000/ வசூல் செய்கிறார்கள் என்று கேள்வி.நாங்களும் இப்படி ஒரு நிறுவனத்தின் மூலம் தான் ஏற்பாடு செய்து கொண்டோம்.காலை 4 மணிக்கு வாகனம் வந்துவிட்டது. சாப்பாடு தயார் செய்து எடுத்துக்கொண்டோம்.அவர்கள் எப்படித் தருவார்களோ? அதனால் சாப்பாடு வேண்டாம் என்றதும் கட்டணத்தைக்குறைத்துகொண்டார்கள்.தலை நகர் தாண்டி, கிராமங்கள் தாண்டி அடர்ந்த காடுகள். என் வாழ்நாளில் இப்படி ஒரு காட்டை நான் பார்த்ததில்லை. வானுயர்ந்த மரங்கள். 'அடவி' என்பார்களே அப்படி ஒரு அடர் காடு. ஒரு நணபர் சொன்னார்,'நீங்க பாராடாங் போகும் போது பிஸ்கட், வாழைப்பழம் வாங்கிக்கங்க.ஜரவாக்கள்லாம் வண்டி பின்னாடியே ஓடி வருவாங்க.பிள்ளயும் குட்டியுமா.பாக்கப் பாவமா இருக்கும். குடுக்கலாம்'. உடனே என் அம்மா மொத்தவிலைக்குக் கிடைக்கும் பெரிய பையாக ரொட்டி,வாழைப்பழம் கொஞ்சம் வாங்கிக்கொண்டார்கள்.(நாங்க தெனமா குடுக்கப்போறோம். இப்புடி வரும்போதுதானே!) அடர் காட்டுப்பகுதி ஆரம்பித்ததும் திரைப்படங்களில் வருவது போல நான்கைந்து இளைஞர்கள் இடுப்பில் ஒரு சிவப்புத்துண்டு. நெற்றியில் ஒரு சிவப்பு பட்டை,கைகளில் உள்ள கம்புகளில் நுனியில் சிவப்பு துணித் துண்டுகளைக் கட்டி'ஹொஹ்ஹோ,ஹொஹ்ஹோ' என்று சப்தம் எழுப்பியபடி வண்டி,வாகனங்கள்,பேருந்துகள் பின்னால் ஓடி வர நாங்கள் ரொட்டி,பழங்களை வீச எத்தனித்த போது ஓட்டுனர் இளைஞன் பதட்டமாக 'அம்மா! அந்த வேல செய்யாதீங்க. ஃபாரஸ்ட் காரங்க பாத்தாங்க எங்க லைசென்ச கட் பண்ணிருவாங்க' என்றார்.என் அம்மாவோ அடப்பாவமே! அவுங்க பின்னாடியே ஓடி வர்றாங்களே! என்று வருத்தப்பட்டார்.
சாலை முடியும் வரை வாகனத்தில் சென்று பாராடாங் தீவிற்கு கப்பலில் செல்ல வேண்டும்.அந்தக்கப்பலில் (vehicle Ferry) வாகனத்தையும் ஏற்றிச்செல்லலாம்.கப்பலில் பயணிக்கும் போது சுற்றிலும் மாங்க்ரொவ் மரங்களின் பசுமை கண்களுக்கு விருந்து.மனதுக்கு இதம். கப்பல் பாராடாங் தீவின் துறை முகத்தை அடைந்ததும் சுற்றுலா நிறுவனத்தின் இளைஞர்கள் வந்து நம்மை அழைத்துச்சென்று சுண்ணாம்புக்குகைக்கு அழைத்துச்செல்லும் மீனவர்களின் சிறு இயந்திரப் படகுகளில் நம்மை ஏற்றிவிடுவார்கள்.ஒரு படகில் எட்டுப் பேர் பயணம் செய்ய முடியும்.படகில் ஏறியதும் நமக்கு உயிர் காக்கும் Life jacket தருவார்கள்.அதை நாம் அணிந்து கொண்டதும் காவல் துறைப்பணியாளர்கள் வந்து சரிபார்த்து பிறகு படகு கிளம்ப அனுமதி தருவார்கள்.படகில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இரு மருங்கிலும் மாங்க்ரொவ் காடுகள் இடையில் இத்தனை பெரிய சாகரம் தன் உடலைக் குறிக்கிக் கொண்டதோ என்று எண்ணும் படி ஒரு பெரிய ஏரி போன்ற அமைப்பில் கடல் இருக்கும்.அலையற்ற தெளிவான நீரோடைபோன்ற கடலில் பயணம் செய்து பிறகு வளைந்து,நெளிந்து செல்லும் கால்வாய் போன்ற பகுதியில் படகை லாவகமாக செலுத்தி பெரிய,பெரிய கம்புகளைக்கொண்டு மாங்க்ரொவ் சதுப்பு நிலத்திற்குள் குத்தி படகுகளைத்திருப்பி நிலப்பகுதியில் இறக்கி விடுவார்கள்.அங்கு இறங்கி மறுபடி காடுகளுக்குள் நடக்கவேண்டும்.
நிர்வாகம் ஆங்காங்கே பெரிய எழுது பலகைகளில் தீவுகளின் காடுகள் குறித்த விபரங்களை ஒட்டி வைத்திருக்கிறார்கள்.எழுமிச்சை சாற்றில் கருப்பு உப்பும்,சீனியும் கலந்து அந்த ஊர் மக்கள் விற்கிறார்கள்.அந்தத் தொலை தூரத்திலும் தமிழர்கள் நிறையப்பேர் வசிக்கிறார்கள்.அவர்களிடம் விசாரித்தால் தாயகம் போய் வந்து எட்டு,பத்து வருடம் இருக்கும் என்கிறார்கள். சிலர் எங்களுக்கு இங்கிருந்து பழகிவிட்டது. ஊர் பிடிக்காது. அங்கு போய் என்ன செய்வது என்கிறார்கள்.காடு தாண்டியதும் வயல்,வரப்பு, ஆடுகள்,மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் தோட்டங்களைத்தாண்டி குடில்களில் நம்மை அமர வைக்கிறார்கள்.அங்கிருந்து வழிகாட்டிகள் நம்மை குகை காட்ட அழைத்துச்செல்கிறார்கள். கையில் விளக்கு கொண்டு வருகிறார்கள். விளக்கு வெளிச்சத்தில் குகையில் சிற்பங்கள் மின்னுகின்றன. சுண்ணாம்பு குகைக்குள் மழை நீர் கசிந்து மழைநிரில் உள்ள வேதிப்பொருட்கள் சுண்ணாம்புடன் கலந்து,கரைந்து வேதியியல் மாற்றங்களால் சிற்ப உருவங்கள் போன்ற அமைப்பை இயற்கை தந்துள்ளது.அங்கு வைக்கப்பட்டிருக்கும் விபரங்கள் வேதியியல் படித்தவர்களூக்கு நன் கு புரியும்.நமது தமிழகக்கோவில்களின் தூண்களில் புடைப்பு சிற்பம் இருக்குமே அப்படி இருக்கிறது.பொன் போன்ற மினுமினுப்பில் வினாயகர், தாமரை பீடத்தில் தூண் போன்ற அமைப்பு,யானை,சிங்கம் இன்னும் அழகழகான வடிவங்கள்.மிகவும் சிறிய குகை தான்.இதுவும் தற்போது தான் ஆடு மேய்ப்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள்.சாதரணமாக சுற்றுலா நிறுவனத்தின் மூலம் அந்தமானுக்கு வருபவர்களின் சுற்றுலாப்பட்டியலில் இந்த ஊர் இடம் பெறாது. இதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்தி சென்று வரவேண்டும்.என் அம்மா மிகவும் களைத்துவிட்டார்கள்.'ஆத்தா! இங்கயும் சரி,வடக்க (காசி, கயா, அலகாபாத்) போறதா இருந்தாலும் சரி நல்லா நட, உடையா இருக்கையிலயே போய்ட்டு வந்துரனும்' என்றார்கள்.உண்மை.களைப்பு அதிகமானதால் மண் எரிமலை பார்க்க அவர்கள் வரவில்லை.அது என்ன மண் எரிமலை? சேறும் சகதியும் கலந்த குழம்பு அவ்வப்போது வெளிப்பட்டு மலை போன்று குவிந்து வருகிறது.சுற்றிலும் வேலி போட்டு வைத்திருக்கிறார்கள்.இந்தியாவிலேயே இது போன்ற எரிமலை அந்தமானில் மட்டும்தான் உள்ளது.நாங்கள் போய்ப் பார்த்தபோது அடுப்பில் குழம்பு கொதிக்கும் போது குமிழிகள் தோன்றுமே அப்படி குமிழிகள் தோன்றி சகதி பொங்கி வருகிறது. இயற்கை தன்னுள் இப்படி எத்தனை அதிசயங்க்களை உள்ளடக்கி வைத்துருக்கிறதோ? இயற்கை தன்னை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்திக்கொள்கிறது.திரும்பி வந்து வாகனத்திற்காக கழிமுகத்துறையில் அமர்ந்திருந்த போது ஜரவா சிறுவர்களின் ஓ வென்ற கூச்சல். அங்கே தான் ஜரவாக்களின் காப்பகம் இருக்கிறது என்றார்கள். பொழுதெல்லாம் கடல் தண்ணீரில் மீன் குஞ்சுகளைப் போல நீந்திக்கொண்டு,கவலையற்ற அவர்களின் வாழ்க்கை. அவர்கள் தான் வாழும் வகையறிந்தவர்கள் என்று நினைத்துகொண்டேன்.திரும்பி அதே அடவியின் வழி செல்லும் போது ஒரு ஜரவா சிறுமி பதினைந்து வயதிருக்கும் சாலை ஓரம் இடுப்பில் ஒரு சிறிய சிவப்புப்பட்டை கட்டி, நெற்றியில் ஒரு சிவப்புப்பட்டை கட்டி பறவை இறகுகளை அதில் செருகி மேனி ஆடையின்றி, கைகளைக்கட்டி ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தாள். என் தம்பி மனைவி 'ஐயோ! பொண்ணு' என்று சங்கடமாய்க்கூச்சலிட
பெண் குழந்தைக்குத் தாயான நமக்கெல்லாம் சொல்ல முடியாத வேதனை. என் அம்மாவோ ஏத்தா! யாரும் இந்தப்புள்ளைகள ஒண்ணும் பண்ணிட மாட்டாங்களே! என்றார் வருத்தத்துடன்.நிர்வாகம் காவலுக்கு நிறையப் பணியாளர்களை அமர்த்தியிருக்கிறது. ஆனாலும் சுயபாதுகாப்புணர்வு தான் ஒரு இனத்திற்கு அவசியம்.அதற்கு சிந்தனை வேண்டும். அதைச்சொன்னபோது என் தம்பியின் பதில்,"அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மை விரட்டிவிடுவார்களே" உண்மைதானே!
பெண் குழந்தைக்குத் தாயான நமக்கெல்லாம் சொல்ல முடியாத வேதனை. என் அம்மாவோ ஏத்தா! யாரும் இந்தப்புள்ளைகள ஒண்ணும் பண்ணிட மாட்டாங்களே! என்றார் வருத்தத்துடன்.நிர்வாகம் காவலுக்கு நிறையப் பணியாளர்களை அமர்த்தியிருக்கிறது. ஆனாலும் சுயபாதுகாப்புணர்வு தான் ஒரு இனத்திற்கு அவசியம்.அதற்கு சிந்தனை வேண்டும். அதைச்சொன்னபோது என் தம்பியின் பதில்,"அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மை விரட்டிவிடுவார்களே" உண்மைதானே!
3 கருத்துகள்:
அந்தமான் அழகான குட்டித்தீவு சிறு வயதில் என் பெரியப்பா வீட்டுக்கு வந்துள்ளேன்....மீண்டும் வரவேண்டும் என்ற ஆவல் உள்ளது....மறக்க முடியாத தீவு.....நிறைய செய்திகள் எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு!
நல்ல பகிர்வு சாந்தி
கடைசியில் தங்கள் தம்பி சொன்னதும் உண்மை
ஒரு 3 ., 4 முறை வந்து உங்கள் பதிவில் பின்னூட்டமுடியாமல் சென்றேன் தற்போது இட முடிவது குறித்து மகிழ்ச்சி சாந்தி
கருத்துரையிடுக