சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, டிசம்பர் 12, 2009

சுனாமி - ஒரு அனுபவம்



                         கடற்கோள் என்பது பூமியில் இயல்பான ஒன்று. உயிரினங்களுக்கு வளர் சிதை மாற்றம் எப்படி இயல்பானதோ அப்படி என்கிறார்கள் விஞ்ஞானிகள். முதல் தமிழ்ச்சங்கம் உருவான லெமூரியாக் கண்டம் கூட கடற்கோளால் அழிந்தது என்கிறது வரலாறு.ஆதியில் பூமிப்பந்தில் நிலமற்று நீர் சூழ்ந்து இருந்தது எனவும் இந்த கடற்கோள் மற்றும் எரிமலை இயக்கங்களினால் தான் நிலப்பகுதி உருவானது என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.ஆனால் சுனாமி இந்தியாவிற்குப் புதிது.அந்தமான் தீவுகள் இரண்டு பூமித்தட்டுகளும் சேருமிடத்தில் அதாவது fault line என்று சொல்லப்படுகிற இடத்தில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் இயல்பானது.அதனால் தான் இங்கு பலகை வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது. சமீப காலமாகத்தான் இங்கு சிமெண்ட் கட்டிடங்கள் கட்டப்பட்டன.அடிக்கடி இங்கு நில நடுக்கம் உணரப்பட்டது.ஆனால் அந்தக்கருப்பு தினம் 2004ம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் நாள்,சுதந்திர பூமியில் இயற்கை தந்த சோகத்தின் சிகரம் அரங்கேறிய அந்த நாள் இங்கு ஒவ்வொரு மனதிலும் ஒரு ஞாபகத்தை, ஒரு கசப்பான அனுபவத்தை விதைத்து வைத்துள்ளது. அப்படி எனது அனுபவத்தை இந்த வலைப்பூவின் மூலம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

                         பொழுது புலர்கையிலேயே, பொல்லாப்பொழுதாய் விடிந்ததோ? அன்று காலை 6.30 மணியளவில் நான் தேநீர் தயாரித்துகொண்டிருந்தேன். என் கணவர் கண்ணாடி முன் நின்றுதலைவாரிக்கொண்டிருந்தவர் 'யாருடா இது? தட்டிட்டுப் போறது! என்றார். குழந்தைகள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். யார் இவரைத் தட்டி விடுவது? என்று நினைத்து திரும்பிப் பார்த்தால் நாங்கள் தண்ணீர் வைத்திருக்கும் பெரிய பெரிய பிளாஸ்டிக் டிரம்கள் நிறைந்த தண்ணீருடன் யாரோ பிடித்து உலுக்கினால் தளும்புமே அப்படித்தளும்புகிறது.எனக்குப் புரிந்து விட்டது.சரி! சிறிது நேரத்தில் நின்றுவிடும் என்று தேநீரை அடுப்பிலிருந்து இறக்கி பால் பொடி, சீனி கலந்து ஆற்றியபடி முன்னறைக்கு வர வேகமாக ஆட ஆரம்பிக்க என் கணவர் வெளியில் ஓடி அக்கம் பக்கத்தினரையும் எச்சரிக்கை செய்து எல்லோரும் வெளிவர நான் மட்டும் உள்ளேயே உயரத்தில் உள்ள பொருட்கள் உடையும் பொருட்களை கீழே எடுத்து வைத்துக்கொண்டிருக்க 'அம்மா ஜான்சி ரானி வெளியே வா! அது போனாப்போகுது' என்று அதட்டலாய்க் குரல் கொடுக்க வெளியில் போனால் நடக்க முடியாது சறுக்கி சறுக்கி  விடுகிறது.யாரோ நமது காலுக்குக் கீழ் உள்ள பூமியைப் பிடித்து உலுக்குவது போல உலுக்க அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். சிறிது நேரத்தில் ஆட்டம் நின்றது. ஆனால் எல்லோரின் உள்ளுணர்வும் இது ஏதோ விபரீதம் என்று உணர்த்தியது.வானொலி,தொலைக்காட்சி சட்டென்று நின்று போக சிறிது நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட,செய்திகளையும் அறியமுடியாது போனது.

               தேநீர் ஆறிவிடுமே என்று எடுத்துவர போன போது பக்கத்தில் இருக்கும் (வேற்று மொழி நண்பர்கள்) நண்பர் குடும்பம் இரண்டும் அப்போது தூக்க கலக்கத்தில் 'எங்களுக்கும் சாய் ப்ளீஸ்! ' என்றனர். பிறகு உள்ளே சென்று பெரிய பாத்திரத்தில் தேநீர் போட்டு எடுத்துவந்து கொடுத்தால் தமிழ் நண்பர்கள் குடும்பம் (மொத்தம் ஐந்து குடும்பங்கள் எங்கள் வரிசையில்) 'உங்க தலையில விழுகாத கூர எங்க தலையில விழுந்துருமா?நாங்க போட்டுக்குறோம்! என்று சொல்லி அருந்த மறுத்துவிட்டார்கள்.7மணி. எல்லோரும் வாசலில் குழுமிக் குழந்தைகளை மடியில் கிடத்தி அவர்களுக்கு தைரியம் சொல்லி கொண்டிருக்கையில் மேலே ஒரே கூக்குரல். எங்கள் வீட்டின் உரிமையாளர் சகோதரரின் மனைவி கதறி அழ நாங்கள் அனைவரும் ஓடினோம்.அந்தசகோதரரோ உடை சொட்டச்சொட்ட நனைந்து நின்று கொண்டு மனைவிக்கு ஆறுதல் கூற எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கூறினார் 'ஒண்ணுமில்லப்பா! ஜங்க்லிகாட் (நாங்கள் இருக்கும் பகுதி) துறை முகத்தில ட்ரம் அடுக்கி வச்சிருந்தோம்ல. ஆடுனதுல அதெல்லாம் கடல்ல விழுந்திருச்சின்னாங்க! அதப்பாக்கப்போனனா,தண்ணி அடிச்சு என் கார் மெதக்குது.பாக்கு மரத்துல இங்குட்டும், அங்குட்டுமா அலபாயுது.கார் கதவ தெறக்க முடியல.ஐயனார் பேரச்சொல்லி சன்னல தொறந்து ஒரு வீட்டு மாடியில குதிச்சு தப்பி வந்தேன்'. 'இதுஒண்ணுமில்லையா? நல்ல வேல' என்று சொல்லும் போதே எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது. மிகவும் தண்மையான மனிதர்களுக்கு கடவுள் துணை நிச்சயம் உண்டு.

         பிறகு நாங்கள் காலை உணவு தயாரித்து உண்டோம். பக்கத்து வீட்டு தமிழ்க்குடும்பம் மற்றவர்களுக்கு சப்பாத்தி வழங்கினார்.பிறகு மதிய உணவு தயாரிக்கும் போது தமிழரல்லாத இரு குடும்பமும் அவர்களுக்கும் சேர்த்து செய்யச்சொன்னார்கள்.அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் வாங்கி வந்து குளிர் சாதனப்பெட்டியில் இருந்தது.ஆடிக் கொண்டே இருந்ததால் வேகமாக சமையல் முடித்து வெளியில் வந்து அமர்ந்தோம்.சிறிய வானொலிப் பெட்டியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கேட்க முடியும். அதில் செய்தி வருகிறது. இதற்குப் பெயர் சுனாமி என்றும் கடலலை ஏற்படுத்திய நாசம் குறித்த தகவ்ல்களை அறிந்து துக்கம் தாள முடியாது அழுகிறோம்.அப்போது ஒரு செய்தி."அந்தமான் நிகோபார் தீவுகள் பெரும் சேதத்திற்குள்ளாயின,நிகோபார் தீவுகள் முழுமையாக அழிந்துவிட்டது" இந்தச் செய்தி எங்களைத் துவட்டிவிட்டது.இதோடு அந்தப்பகுதியில் ஒருவர் வீட்டிலும் தொலை பேசி வேலை செய்யவில்லை.எங்கள்வீட்டில் மட்டும் வேலை செய்தது.என் அம்மா, தம்பிக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் திருத்தல யாத்திரை சென்றிருந்தார்கள்.என் கணவரின் அண்ணன் கள், என் சகோதரியர் குடும்பங்கள், நண்பர்கள் என்று அனைவரும் அழுதபடி தொலைபேசியில் பேசுகிறார்கள். அந்தமானே வேண்டாம். வந்து விடுங்கள் என்பது தான் அந்தப் பேச்சின் சாரமாக இருந்தது.

             நாங்கள் திரும்ப தைரியம் சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.வெளிநாட்டு உறவினர்கள் அனைவரும் தங்கள் நாட்டில் தொலைக்காட்சியில் சொல்லப்பட்ட ஆருடங்களைக் கூறி எங்களை அதைரியப்படுத்துவதில் முனைந்து தோற்றனர். ஆடியதில் ஏற்பட்ட குளறுபடியால் எங்கோ செல்ல வேண்டிய அழைப்புகள் எங்கள் தொலைபேசியில் வருகிறது.அழுதபடியும்,பதட்டத்திலும் இருந்தன குரல்கள். நிதானமாக ஆறுதல் கூறி எந்தப் பகுதி என்று விசாரித்து அந்தப்பகுதியில் பாதிப்பு இல்லை பயப்படாதீர்கள் என்று சொன்னோம். மதிய உணவு எல்லோருக்கும் வாசலில் கொண்டு வந்து பரிமாறினேன்.என் கணவர் மட்டும் 'நான் அப்புறம் சாப்பிடுகிறேன்' என்றார்.நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் அவர்
வெறும் சோற்றில் தண்ணீர் விட்டு உப்புப் போட்டு, ஊறுகாய் கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டார்.பக்கத்தில் இருந்த வேற்று மாநில நண்பர்கள் சாப்பாடு நன்றாக இருக்கிறதே! ஏன் ஊறுகாய்? என்று கேட்க சிரித்துமழுப்பி விட்டார்.வீட்டுக்குள் வைத்து நான் கேட்ட போது 'செத்த மக்கள பொதைக்க வழியில்ல.ஒங்களுக்கு அசைவம் கேக்குதா?' என்றார். 'சே! அப்படியில்ல! கரண்ட் எப்ப வருதோ?ஃப்ரிஜ்ல வச்சாலும் கெட்டு தான் போகும் அதான்' என்றேன்.

               என் கணவர், குழந்தைகள் அனைவருக்கும் மரக்கட்டைகளை அடுக்கி அதன் மேல் தகரத்தை பரப்பி, நான்கு மூலையிலும் கம்பு நட்டு கயிறு கொண்டு பிளாஸ்டிக் விரிப்பு கொண்டு கூரை கட்டி கொடுக்கக் குழந்தைகள் அதிலேயே பொழுதைக் கழித்தனர். மறுநாள் காலை என் அம்மாவும், தம்பியும் திருத்தல யாத்திரை முடிந்து வீடு வந்து வேலைகள் முடித்துதொலைக்காட்சி முன் அமர்ந்தால் என் அம்மாவுக்கு மயக்கம் வந்துவிட்டது. உடனே தொலைபேசியில் என் தம்பி தொடர்பு கொண்டு என்னோடு பேசி நிலைமை புரிந்து என் அம்மாவிடம்கொடுக்க என் அம்மாவோ பெரிய ஒப்பாரிப்பாடலோடு அழுகிறார்கள். எனக்கும் அழுகை வந்தது. என் நிலைமை நினைத்து அல்ல. என் அம்மாவின் ஒப்பாரி அழுகை கேட்டு.எங்கள் உறவினர் அனைவரும் துக்கம் விசாரிக்க என் அம்மாவிடமும், என் மாமனாரிடமும் வர அவர்கள் உண்மையைக் கூற 'அட நீங்க வேற! அங்க தான் பொணம் மெதக்குதே. இதுக பொய்சொல்லுதுக நீங்க அத நம்பிக்கிட்டு. இன்னிமே அந்தமான்லாம் ஒருகாசுக்கும் ஆகாதாம். வரச்சொல்லு'(எப்பேர்ப்பட்ட விஞ்ஞானிகள்) என்று கூற என் அம்மாவும் எங்களை வரச்சொல்லிபிடிவாதம் பிடிக்க நானோ 'என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு அங்கீகாரம் கொடுத்த இந்த பூமியை, இந்த மண்ணை விட்டு நா வரமாட்டேன்.என் பொணம் இந்த பூமிக்கு உரமானாலும் பரவால்ல'என்றேன்.(என் அம்மா இன்றும் என் தங்கை தம்பிகளிடம்,' உங்க அக்கா ஒரு டய லாக் அடிச்சாளே!' என்று கேலி செய்வார்கள்) என் அம்மாவும் பிடிவாதம் தளர்த்தி குழந்தைகளை அனுப்பி வை என்று சொல்ல என் குழந்தைகளை அனுப்பி வைக்க விமான நிலையம் சென்றால் அங்கே ஒரே கூட்டம். குடும்பம், குடும்பமாகபயணச்சீட்டு பெற்று முக்கிய பூமிக்குப் பயணப்பட இருக்கிறார்கள்.கூடுதல் விமான வசதி செய்யப்பட்டிருந்தது. பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் விமான நிலையப் பணியாளர்கள் பணத்தை வைக்க பெட்டிகளில் இடமில்லாது அட்டைப் பெட்டியில் அடுக்கி வைக்கின்றார்கள்.எனக்கு தொலைபேசி அழைப்பு. என் கணவர் தான். குழந்தைகள் எங்கே? விமானத்தில் ஏற்றிவிட்டாயா? என்று கேட்க நானும் ஆமாம்! என்றேன். அப்பாடா! என்றார்.எனக்கு ஒன்றும் புரியாது ஏன் என்று கேட்க வா! சொல்கிறேன்! என்று சொல்லி தொடர்பைத் துண்டித்துவிட்டார்.என் குழந்தைகளைப் பிரியும் சங்கடத்தில் நானும் விட்டுவிட்டேன். வீடு வந்தால் வரும் வழியில் மக்கள் கூட்டம் கூட்டமாக மேடுகளை நோக்கி ஓடுகிறார்கள். ஊரெல்லாம் கடல் தண்ணீரில் மூழ்குகிறது என்ற ஒரு தவறான தகவலின் விளைவு.இதை நேரடி ஒலிபரப்பு செய்கிறது,சமூக அக்கறையற்ற புகழ் பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி. இங்கிருக்கும் மக்களின் உறவினர்கள் பட்ட பாடு கடவுளே அறிவார்.

            தலை நகரில் அனைத்துப் பள்ளிகளும் உள்தீவுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது.அத்தனையும் இழந்து உயிரை மட்டும் சுமந்துவந்திருக்கும் அவர்களின் முகம் எதிர்காலப் பயத்தால் உறைந்து போயிருந்தது.எங்கள் நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து துணிமணிகள் கொண்டு சென்றோம். நான் சிறிய குளியல் சவர்க்காரம், சிறிய பற்பசை, சிறிய துணி துவைக்கும் சவர்க்காரம் கொண்டுபோய்க் கொடுத்தேன்.நாங்கள் மதிய உணவு கொடுக்கும் பள்ளியில் இருந்த மக்களுக்கு உணவு தரும் படி எங்களை பணித்தது பள்ளி நிர்வாகம். சந்தோசமாக கொண்டு சென்றோம்.சோறு, பருப்பு,பட்டாணி-கிழங்கு மசாலா கொண்டு கொடுத்த போது தமிழ் மக்கள் 'அப்பாடி! இன்னிக்குத்தான் நல்ல சாப்பாடு; என்று சாப்பிட நிறைந்து போனது மனது. சோறு போதாமல் மறுபடி ஓடிப்போய் ஒரு உணவகத்தில் சோறு வாங்கிவந்தால் மிஞ்சிப் போனது.அந்தமக்களிடம் 'சோறு வீணாப்போயிடும்.பாத்திரம் இருந்தா வாங்கி வச்சுக்கங்க' என்றேன்.பெண்கள் ஓரிருவர் குழந்தைகளுக்காக கொஞ்சம் வாங்கிக்கொள்ள ஒரு பெரியவர் வந்து 'ஏம்மா? போதும்மா! நாளைக்கு வேணும்னு வயித்துக்குக்கூட சாப்பிடாம, சேத்து வச்சதெல்லாம் போதும்.ராத்திரி சாப்பாடு யாராவது கொடுப்பாகம்மா! போங்க, நீங்க சாப்பிடுங்க' என்று சொல்ல மீந்த சோற்றை வீட்டுக்கு கொண்டு வந்து என்னுடைய உதவியாளர்களைக் கொண்டு போகச்சொல்லிவிட்டு நாங்கள் வீட்டில் எங்களுக்கு தனியாக சமைத்து உண்டோம். என் கணவர் கேட்டதற்கு ' தர்மத்திற்கு வாங்கியதை தர்மம் தான் செய்யவேண்டும்' என்றேன்.(கவனிக்கவும்! இந்தக் பாராவில் இரண்டு பன்ச்!) வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகள், பக்திப்பாடல்கள் ஒலிபரப்பினோம்.யாரைப் பார்த்தாலும் அவரவர் அனுபவங்கள். நகரமெங்கும் வெளி நாட்டாரும், வெளி மாநிலத்தாரும் கையில் புகைப்படக்கருவிகளுடன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து நிவாரணப்பொருட்கள் விமானங்களிலும், கப்பல்களிலும் வந்து குவிகிறது.குடி தண்ணீர் கொள்கலங்கள் முதல் உணவுப்பொருட்கள்,பண்டபாத்திரங்கள்,ஆடை அணிகள், போர்வைகள் இன்னும் இன்னும் எத்தனையோ! இவை அத்தனையும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போயிருந்தால் அவர்களின் வறுமை அன்றே ஒழிக்கப்பட்டிருக்கும்.எங்கள்வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு.ராமசுவாமி சுதர்சன் அவர்கள் 'அவரவர் கொண்டு வந்த மூட்டைகளை அவரவர் தான் கரைக்க வேண்டும். அது சாம்பல் மூட்டையோ அல்லது தங்க மூட்டையோ.கரைத்தவர்கள் போய் விட்டார்கள்.கரைக்காதவர்கள் இருக்கிறோம். இவர்களோ தங்களது மூட்டைகளில் இன்னும் சுமை ஏற்றுகிறார்களே!" என்று வருத்தப்பட்டார்.உண்மையிலேயே ஓடி ஓடி உதவி செய்த மக்களின் சேவைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேவைகள் விலை மதிப்பற்றவை.மனித நேயம் இன்னும்மிச்சமிருக்கிறது என்று உணர்த்திய நாட்கள் அவை.

          ஒரு சுனாமி முகாமில் இருந்த ஒரு பெண் ,'அடப்பாவிகளே! இப்பிடி கொள்ளை அடிக்கிறாய்ங்களே! இவனுகளக் கொண்டு போக இன்னொரு சுனாமி வரும்' என்று தரையில் அடித்து சாபமிட்டார்.என் காதுகளில் ஒலித்த இந்தக் குரல் ஞாபகம் வந்துவிட்டால் மனம் கனத்துத்தான் போகிறது. தர்மத்தை, நியாயத்தை நிலை நாட்ட இயற்கை அவ்வப்போது கொடுக்கும் எச்சரிக்கைக்குரல் இந்த இயற்கைச்சீற்றங்கள். இதன் அர்த்தம் புரிந்து வாழ்பவர்களை இயற்கை கைவிடுவதில்லை. புரியாதவர்களின் நிலை?

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

nicely written.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

மீண்டும் அந்தச் சோகச்சுமையைப் பக்குவமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

அமுதா கிருஷ்ணா சொன்னது…

மனதுக்கு கஷ்டமாக உள்ளது..நகைச்சுவையாக எழுதி சுமையை குறைத்து உள்ளீர்கள்...

Karthikeyan Rajendran சொன்னது…

இன்று முதல் முறையாக உங்கள் தளத்துக்கு வந்து பல பதிவுகளை படித்தேன்இ மிக அருமை
இன்னும் பல பதிவகள் கொடுத்து உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,

அந்த 5 பழங்குடி மக்களை பற்றி மிக விரிவாக சொல்லியுள்ளீர்கள், கேள்விபடாத பல தகவல்கள், மிக்க நன்றி சகோதரி,,,,,,