சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், ஜனவரி 07, 2010

பேராசை மனிதர்கள்




         பெண்கள் இல்லாத ஒரு உலகை கற்பனை செய்து பாருங்கள். பூக்கள் இல்லாத பூங்கா.அலை இல்லாத கடல்.நீரோடாத ஆறு.இதை எல்லாம் எப்படி ரசிக்க முடியாதோ அப்படி பெண்கள் இல்லாத உலகிலும் வாழும் ஆசை இருக்காது.அப்படி ஒரு தேவதை அம்சம் கொண்ட இறைப்படைப்பு பெண்கள்.சிறகு கொண்ட தேவதைகள் அதிகம் உலவும் ஒரு ஒன்றியப்பகுதி அந்தமான் நிகோபார்.பெண்களே இமைக்க மறக்கும் அழகு கொண்ட பெண்கள்.ஒரே உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்களுக்கான மாறுபட்ட ரசனை,விருப்பங்கள் என்று ஆணுலகம் வேறு.பெண்களுக்கான ரசனைகள்,எண்ணங்கள்,விருப்பங்கள் என்று பெண்களுக்கான உலகம் வேறு.பெண்களுக்கான ரசனையில் அலங்காரம் என்ற ஒன்று இருக்கிறதே அந்த ரசனை இங்கு கொஞ்சம் அதிகம்.இங்கு பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.1942க்கு முன்னால் இங்கு குடியேறியவர்களது வம்சாவளியை "லோக்கல் மக்கள்" என்று அழைக்கிறார்கள்.அந்த மக்களது கலாச்சாரம் நம்மில் இருந்து வேறுபட்டது.இந்த லோக்கல் மக்களில் எல்லா மாநில மக்களும் அடக்கம்.நல்ல அழகான,பொன்னிறமான பெண்கள்.திரை நட்சத்திரங்கள் போல அலங்காரத்துடன் தான் வெளியில் வருவார்கள்.இந்த லோக்கல் மக்களில் தமிழ் லோக்கல் மக்களும் உண்டு. வளையலா? முழங்கை முட்டியில் இருந்து மணிக்கட்டு வரை அணிவார்கள்.முகப்பூச்சு,உதட்டுச்சாயம்,இஸ்திரி செய்த உடை அத்தோடு உச்சி முதல் உள்ளங்காலுக்குப் போடப்படும் மருதாணி(இது தான் இப்ப வண்ண வண்ணமா தயார் நிலையில் கிடைக்குதே!),பாத அணிகள் வரை உடைக்கு இணையாக அணிவார்கள்.தங்கம் அதிகமாக அணியமாட்டார்கள்.

          முதன்முதலில் அந்தமானில் நகர் வலம் (ஊர் சுத்திப்பாக்கறதத் தான் அப்புடி பெருமையா!) வந்த போது இந்த பெண்களைப்பார்த்து (நானும் பெண்தான்) அசந்து விட்டேன்.நம் ஊரில் சாதாரண அலங்காரங்களுடன் பெண்களைப்பார்த்துவிட்டு இந்த அலங்காரமான பெண்கள் ஆச்சர்யம் தந்தனர்.இந்த அலங்காரம் அவர்களிடமிருந்து என்னைத்தள்ளி நிறுத்தியது.அந்நியப்படுத்தியது.இவர்களின் வீடுகளும் அலங்காரமாகத் தான் இருக்கும்.நம் பெண்களும் இவர்களைப் பார்த்து அலங்கரித்துக் கொள்கிறார்கள்.நம்மவர்களுக்குத் தங்கத்தின் மேல் காதல்.நம் பெண்கள் கோவிலுக்கு வரும் போது கூட நகை ஸ்டாண்டுகளாய் வருவார்கள்.எளிமையான மக்களை பக்தி செய்ய விடமாட்டார்கள்.சில பெண்களின் பொது இட விவாதங்கள் புடவைகளாய் அல்லது நகைகளாய்த்தான் இருக்கும்.வீதிக்கு நான்கு அழகு நிலையங்கள்.ஒரு கடைத்தெருவில் இருபது கடை இருந்தால் எட்டுக்கடை நகைக்கடை. பத்துக்கடை துணிக்கடை.பெண்களின் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்தும் வியாபாரிகள்.அந்தமானில் சிலர் வெகுவிரைவில் முன்னேற்றம் கண்டதே நம் பெண்கள் உபயத்தால் தான்.அது தனிக்கதை.

            நம் ஆண்கள் பலர் இந்த "லோக்கல் பெண்கள்" இடம் பழகுவார்கள். நெருங்கிய நட்பு என்பார்கள். கனவுகளை விதைப்பார்கள்.கடைசியில் ஊரில் வந்து மணமுடித்து விட்டு தாயையும் உறவையும் பழி கூறுவார்கள்.இது அதிகம் நடக்கும் ஒரு நிகழ்வு.பல பேர் மணமுடித்து குழந்தைகளுடன் விட்டுவிட்டு தமிழ் நாட்டில் வேறு பெண்ணை மணந்து நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றனர்.ஒரு வேளை இந்தப் பெண்களின் அழகு இவர்களை மிரட்டுகிறதா? இல்லை இந்த அழகை நாம் எப்படி ஆளப்போகிறோம் என்ற பயமா? தெரியாது!.சில காலம் குடும்பம் நடத்தி பின் அவர்களைத்தூற்றி கடைசியில் கப்பலேறிவிடுகிறார்கள். இந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது. இதில் அந்தமான் மழையையும், அந்தமான் பெண்களையும் நம்பக்கூடாது என்று ஒரு பொன்மொழி வேறு உதிர்ப்பார்கள்.அந்தப்பெண்ணின் சிந்தனைகளைக் கலைக்கும் வரை இந்தப் பொன்மொழி மறந்து போவது தான் அநியாயம்.இதுவும் கூட பெண்களுக்கு எதிரான ஒரு சுரண்டல் தான். இதே நிறையத் தமிழ்ப்பெண்கள் லோக்கல் ஆண்களை மணமுடித்து நல்ல விதமாகக் குடும்பம் நடத்திவருகிறார்கள். இங்குள்ள தமிழ்க்குடும்பங்களில் பல மாநில மருமக்கள் சர்வ சாதாரணம்.ஆனால் தனியே பிழைப்பு தேடி வரும் சில ஆண்களின் இந்த தரம் குறைந்த செயல் பாடுகள், அந்தப்பெண்களின் வாழ்க்கையைப் பாழடித்து விடுகிறது.அவர்கள் மறுமணம் செய்து கொண்டாலும் கூட குழந்தைகள் பாதிக்கப்படுவது,அந்தப்பெண்களின் மனதில் ஒரு தீராத வலியினையும் வடுக்களையும் உண்டாக்குவது தவிர்க்கமுடியாது போகிறது.ஒரு உயிரின் வேதனைகளை சிந்திப்பார்களா இந்த மாதிரி ஆண்கள்?

2 கருத்துகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

மிகக்கொடுமையான விசயம்.. :(

தமிழ் உதயம் சொன்னது…

அந்தமானின் வாழ்க்கை சூழலை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. வாருங்கள் என் வலைப்பூவுக்கு.